பாஜக எதிர்ப்பை முன்னிருத்தி, சிறுபான்மையினரை ஒரே ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக அறிவிக்காமல், சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய நினைக்கிறது திமுக.

சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் பெரும்பாலானவை தனது அடையாளத்தையும், இருப்பையும் தொலைத்துவிட்டு திமுகவை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை நசுக்கும் திட்டங்களை திமுக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

stalin and rahulஎவ்வளவு பட்டாலும் தெளிவடையவே மாட்டோம்.என இஸ்லாமியர்கள் ஏதேனும் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாமியர்களுக்கு தங்களை ஆதரிப்பதை விட வேறு வழியேதுமில்லை என்ற திமுகவின் ஆணவத் துணிச்சல், அத்துமீறிய போக்கு இவற்றிற்கெல்லாம் சரியான பாடம் புகட்டாமல் இருந்தால் இந்நிலையே தொடர்நிலையாகும். இஸ்லாமியத் தலைவர்களின் நோக்கம் சரியாக இருக்கலாம். பாதை என்பதோ, படுபாதாளம்.. தன்மானத்தை இழந்த அரசியல் என்பது சாக்கடைக்கு சமமானது.

இந்துத்துவா என்ற கொடிய சித்தாந்தத்தின் எதிரிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸ் கொள்கைப் புத்தகத்தில் விரட்டியடிக்கப்பட வேண்டிய சக்திகளாகக் குறிப்பிடும் மூன்றில் கம்யூனிஸ்ட்களும் அடக்கம்..

இஸ்லாமியர்கள் எந்தளவிற்கு மோடியையும், பா.ஜ.கவையும் எதிர்க்கிறார்களோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமான எதிப்புகள்தான் கம்யூனிஸ்டுகளிடமிருந்து வெளிப்படும். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு பா.ஜ.க. எதிர்ப்பென்பது, வெற்று அரசியல் முழக்கம்தானே தவிர கொள்கை, கோட்பாடென்றெல்லாம் ஒன்றுமேயில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்கள் தத்துவப் பிசகின்றி நிற்பவர்கள். தன்மானத்தை ஒருபோதும் இழந்துவிட மாட்டார்கள் என்பதற்கு மானமிகு போராளி, தோழர் பினராயி விஜயன் அவர்களின் இன்றைய கர்ஜனையே மிகப்பெரும் சாட்சி..!

காங்கிரஸ் கட்சி, மோடி எதிர்ப்பென்னும் முகமூடி அணிந்து தங்களின் அதிகாரத்தைப் பரவலாக்கும் உத்தியை முன்னெடுத்துள்ளது. மோடி எதிர்ப்புப் போர்வையில் தங்களைவிட மோடியை பலமாக எதிர்க்கும் கட்சியின் கோட்டைக்குள் நுழைந்து, தங்கள் கட்சிக்கான வெற்றியை சாதகமாக்கத் துடிக்கிறது.

இந்தியாவின் வடக்கில் தொகுதிகளே இல்லாமலா "வயநாட்டில்" போட்டியிடுகிறார் ராகுல்? அதுவும் கம்யூனிஸ்ட்கள் வலிமையாக இருக்கும் தொகுதியில்.. ரேபரேலியிலும், அமேதியிலும் இதே நிலையை கம்யூனிஸ்ட்கள் எடுத்திருந்தால், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து மோடி அரியணை ஏறுவதற்கு கம்யூனிஸ்ட்கள் மறைமுக ஆதரவளிக்கிறார்கள் என்று கூக்குரல் இட்டிருப்பார்கள்.

ராகுலின் இந்தச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியில் நிச்சயம் அவரைத் தோற்கடிப்போம் என்று துணிச்சலாக அறிவித்த தோழர் பினராயி விஜயனின் துணிச்சல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

பாசிசத்தை வேரறுப்போம். அவரவர்கள் அவரவர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் இழுக்கு ஏற்படாத அளவிற்கு கரம் கோர்ப்பதுதான் சிறந்த ஜனநாயகப் பண்பாகும். அரியணை ஏற நினைப்பவர்களுக்கு ஆற்றலும், வேகமும் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றே அரவணைப்பும், சம மரியாதையோடு அணுகுவதும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

- ஆழ்வை சம்சுதீன்