நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜனநாயகத் திருவிழா கோலாகலத்துடன் தொடங்கி விட்டது. நேற்றுவரை மாறி மாறி காறித் துப்பிக் கொண்டவர்கள் இன்று எச்சிலைத் துடைத்துவிட்டு ஆரத் தழுவி, தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். மாறி மாறி குழி பறித்துக் கொண்டவர்கள் மம்மட்டியை தூக்கிக் கொண்டு மக்களை நோக்கி கிளம்பி இருக்கின்றார்கள். 'அன்பான வாக்காளப் பெருமக்களே!' என்ற குரல் செவிப்பறையைத் தாண்டி மூளையில் வந்து முட்டுகின்றது. கிறங்கடிக்கும் அலங்காரச் சொற்களும், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வெற்று வாக்குறுதிகளும் மக்களின் மனங்களை கிளர்ச்சி கொள்ளச் செய்கின்றன. ஓவ்வொரு தேர்தலுக்கும் கரை வேட்டியின் நிறம் மட்டுமே மாறுகின்றது. ஆனால் ஊரை அடித்து உலையில் போட்டு, துட்டு தேத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என மனதில் அண்டிக் கிடக்கும் கறை மட்டும் ஒரு நாளும் மாறுவதில்லை.

modi ramadoss eps‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ என்று பெருங்குரலெடுத்துப் பேசுவதற்கு முன்பே கேட்க வந்த கூட்டம் கொட்டாவி விடுகின்றது. குவாட்டரும், கோழி பிரியாணியும், சேலையும், வேட்டியும் கையில் திணிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களும் தேர்தல் ஜனநாயகத்தின் அம்மணத்தை அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்டிருக்க, மேடையேறிய மன்னர்களும், அவர்களின் பாதார விந்தங்களில் விழுந்து அடி தொழுத சித்தாந்த நிர்வாணிகளும் கூச்சமின்றி கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஓர் அற்புதமான கனவு வாழ்க்கையைப் பற்றி. ஆனால் வாங்கிய துட்டுக்கு நன்றி மறவாமல் எசமானனின் வெற்று ஜம்ப பேச்சுக்களுக்கு கைவலிக்க கரகோசம் எழுப்பி, கலைந்து செல்கின்றது மானமுள்ள தமிழினம். எதைப் பற்றியும் கவலைப் படாத கூட்டம், அன்றாட வயித்துப்பாடே பெரும்பாடாக இருக்கும்போது அரசியல் ஆராய்ச்சி செய்ய அவகாசம் ஏது? நல்லது, கெட்டது, நல்லவன் கெட்டவன் எல்லாமே ஒன்றுபோலக் கருதும் எளிய மக்களின் மூளைகளை சின்னங்கள் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கின்றன. அந்தச் சின்னங்களில் பன்றி நின்றாலும், நாய் நின்றாலும் அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்.

எதைச் சொல்லியும் இந்த மக்களைத் திருத்த முடியவில்லை என்பதுதான் மாற்று அரசியல் பேசுபவர்களின் மன சஞ்சலமாக இருக்கின்றது. நோட்டுக்கு விலை போகின்றார்கள், அரசியல் அறிவில்லை என்று சொல்லி ஆறுதல் பட்டுக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறு எதையும் தற்போதைக்கு செய்ய முடியவில்லை. கருத்து மக்களை பற்றிக் கொள்ளும்போது அது ஒரு பெளதீக சக்தியாக மாறிவிடும் என்பார் மார்க்ஸ். ஆனால் சீழ்பிடித்த பார்ப்பனிய அடிமை சித்தாந்தத்துக்கு ஆட்பட்ட மக்களை எந்த ஒரு முற்போக்குக் கருத்தும் பற்றிக் கொள்ள முடியாமல் தோல்வியடைந்து கொண்டே இருக்கின்றது. முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இந்த கார்ப்ரேட் கட்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, சாமானிய மக்களின் நலன்களை முன்னிறுத்தும் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்த மக்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாமல், சமூக மாற்றத்தை முன்நிறுத்தும் சக்திகள் போராடிப் போராடி தோற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

கொள்ளையடித்தவன், கொலை செய்தவன், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவன் என அனைவருமே யோக்கியன் அரிதாரம் பூசி ஜனநாயகத் திருவிழாவில் ஓட்டுக் கேட்க வருகின்றார்கள். அவர்களை அம்பலப்படுத்தி அரிதாரத்தைக் கலைக்க வேண்டியவர்கள் பேயைக் காட்டி பிசாசுக்கு ஓட்டு போடு என்கின்றார்கள். கூச்சமும் இல்லை, குற்ற உணர்வும் இல்லை. மாற்று அரசியல் என்று மயிர்பிளக்கும் விவாதம் செய்தவர்கள் மண்டியிட்டு, மானங்கெட்டு நடக்கும் கூத்துக்களை கூனிக் குறுகி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்களின் கோபத்தை மாற்று அரசியலை நோக்கித் திருப்ப வேண்டியவர்கள் அதை சாக்கடையை நோக்கி திருப்பி விட்டுவிட்டு திருப்தியடைந்து கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. புரட்சியைப் பேசுவதற்கும் ஒரு விலை உண்டு, அதைப் பேசாமல் இருப்பதற்கும் ஒரு விலை உண்டு. எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடியே நிகழ்கின்றன என்று சொன்னால் அது கருத்து முதல்வாதம். ஆனால் அதுதான் அரசியலில் ‘பொருள்’ முதல்வாதம்.

சமூகத்தில் மட்டுமே சனாதனம் இல்லை. இங்கே அரசியலிலும் அது காலூன்றி உள்ளது. போஸ்டர் ஒட்டியவன் கடைசி வரை போஸ்டர் மட்டுமே ஓட்ட வேண்டும், பிரச்சாரம் செய்தவன் கடைசி வரை பிரச்சாரம் மட்டுமே செய்ய வேண்டும், எலும்புகள் தேய, சதைகள் உருக, ரத்தம் சுண்ட தலைவனைப் பற்றி ஊர் முழுவதும் புகழ்பாட வேண்டும். அதுதான் அவனது பிறவிக் கடமை. பிச்சைக்காரர்கள் கனவுகளில் மட்டுமே தங்களை அரசர்களாக முடிசூட்டிக் கொள்ள முடியும். முதலாளித்துவ ஜனநாயக அரசியலில், பன்றிக்குப் பிறந்து பன்றியாகவும், நாய்க்குப் பிறந்து நாயாகவும் இருப்பது போல அரசியல்வாதிக்குப் பிறந்தது அரசியல்வாதியாகவே இருக்கும். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாக்களிப்பதுதான் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த விழுமியம்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்தவிட்ட பின்னும் 100 சதவீத கல்வியறிவு இல்லை, 100 சதவீத ஊட்டச்சத்து இல்லை, 100 சதவீத வேலை வாய்ப்பு இல்லை, 100 சதவீத இலவச தரமான மருத்துவம் இல்லை. ஆனால் 100 சதவீத ஓட்டுப்பதிவை மட்டும் கேட்கின்றது மானங்கெட்ட போலி ஜனநாயகம். பொறுக்கிகளும், புறம்போக்குகளும், கார்ப்ரேட் கைக்கூலிகளும், மாஃபியாக்களும், சாராய, கல்வி, மணல் கொள்ளையர்களுமாக பங்கெடுக்கும் ஒரு தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவு என்பதே இதற்கெல்லாம் அங்கீகாரம் வழங்குவதைத் தவிர வேறென்ன? நாட்டில் எல்லோருமே குற்றக்கும்பல்களின் ஆட்சியை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, போலி ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என கார்ப்ரேட் கைக்கூலிகள் உபதேசம் செய்கின்றார்கள்.

மாற்றத்துக்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. தங்களை அறிவுஜீவி என்று இதுநாள் வரை சொல்லிக் கொண்ட கும்பல்கள் பகிரங்கமாகவே மிரட்டுகின்றார்கள் - 'சாதிவெறியர்களுக்கும், சாராய வியாபாரிகளுக்கும், கல்விக் கொள்ளையர்களுக்கும் ஓட்டு போடுவதால் பாசிசம் முறியடிக்கப்படும்' என பச்சையாகவே சொல்கின்றார்கள். அயோக்கியர்களின் அம்மணத்தைவிட புனிதர்களின் ஆடைகள் ஆபாசமாக உள்ளன. பொதுவுடமை சமூகத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்ல யாராவது வருவார்களா என மனம் ஏங்கிக் கிடக்கின்றது. சிலர் நினைத்தது போலவே வந்தார்கள், ஆனால் அழைத்துச் சென்று பன்றிகள் உருளும் சாக்கடையைக் காட்டி நம்மையும் அதில் முழ்கி ஞானஸ்நானம் அடையச் சொன்னார்கள்.

ஜனநாயகத் திருவிழாவின் யோக்கியதையைத் தெரிந்துகொண்டு அதில் நீதியையும் நேர்மையையும் தேடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.. ஆனால் நம்மால் இந்தக் கருமத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையே! போலி ஜனநாயக அமைப்பில் பங்கேற்பாளராய் இருப்பவர்களை விட பார்வையாளர்களாய் இருப்பதுதான் மிகவும் வலியானது ஆகும். நம்மை ஏதோ ஒன்றுதான் இந்தக் கூத்தில் பங்கேற்பதில் இருந்து தடுத்துக் கொண்டே இருக்கின்றது. ஒருவேளை அது தன்மானம், சுயமரியாதை போன்றவையாக இருக்கலாம்.

- செ.கார்கி