ஒரு நாட்டில் கொடுக்கப்படும் கல்வியானது அனைத்து வகுப்பினரையும் சென்று அடையக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது ஏழை, பணக்காரன், தாழ்த்தப்பட்டவர், உயர்வானவர் என அனைவருக்கும் சேர வேண்டிய ஒன்றானதாக இருக்க வேண்டும். அந்தக் கல்வி தான் சமூக நீதியை நிலைநிறுத்தும் கல்வி முறையாக அமையும். ஆனால் தற்போது மருத்துவத்துறையில் நடைமுறையில் இருக்கும் நீட் நுழைவுத்தேர்வு இந்த சமூக நீதியை அடியோடு பெயர்த்தெடுக்கிறது.

anitha ariyalurதமிழகம் தொடர்ச்சியாக இந்த நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்குக் காரணம் இதுதான். இது இந்நாள் வரை தமிழகத்தில் பின்பற்றுபட்டு வந்த சமூக நீதியின் அடிப்படையிலான கல்வி முறையை தகர்ப்ப‌தோடு மட்டுமல்லாமல் தமிழகம் அடைந்து கொண்டிருந்த வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

2016க்கு முன் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை, தமிழக கல்வி முறையில் பயிலும் 12 வது வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 'நீட்' நுழைவுத்தேர்வின் மூலம் இந்தச் சேர்க்கை நடந்து வருகிறது. இது தமிழகத்தின் திராவிட சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட கல்வி அமைப்பு மூலம் தமிழகம் அடைந்து வந்த வளர்ச்சியையும், சமூக நீதியையும் குலைத்திருக்கிறது. இதனை இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் உணர்த்தியிருக்கிறது.

தமிழகம் நீட்'டிற்குப் பிறகு பின்தங்கியிருக்கும் புள்ளிவிவரங்கள்

தமிழகத்தில் மட்டும் தான், இந்தியாவிலேயே அதிகப்படியான மருத்துவத்துறையின் சிறப்பு சிகிச்சைகளுக்கான உயர்மேற்படிப்பில் 195 சீட்டுகள் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் ஒரு சீட் கூட இல்லாத நிலையும், 10 மாநிலங்களில் பத்துக்கும் குறைவான சீட்டுகளே இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட NEET-SS நுழைவுத்தேர்வில் வெறும் 19 பேர் தான் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், தேர்வான மற்றவர்கள் எல்லாம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். . இது தொடர்ந்தால் மருத்துவத்துறையிலும், சிறப்பு சிகிச்சை முறையிலும் பேர் பெற்றிருக்கும் தமிழ்நாடு அந்த நிலையை இழக்க நேரிடும் என்கிறார்கள் தமிழக மருத்துவர்கள்.

MBBS சேர்வதற்கு நடத்தப்படும் நீட் தேர்விலும் இதே நிலை தான். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு 420 க்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ்நாட்டில் வெறும் 470 பேர் மட்டும் தான். ஆனால் அதுவே கேரளாவில் 4000 மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தில் 11900 மாணவர்கள், டெல்லியில் 9000 மாணவர்கள் 400 க்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். ( 07-08-17) TOI, mdu.)

தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2447 MBBS சீட்கள் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டில் அரசுப் பள்ளியிலிருந்து நீட் தேர்வின் மூலம் வெறும் 4 பேருக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவே 2017ல் 2 பேர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிப்படையில் நடந்த மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் தேர்வாகியிருந்தார்கள். இந்த எண்ணிக்கை போதாது எனும் நிலையில் கூட, முன்னேறிக் கொண்டிருந்த வளர்ச்சியையும் அழித்து தமிழகத்தைப் படுபாதாளத்தில் தள்ளியிருக்கிறது மத்திய அரசு கொண்டு வந்த 'நீட்' நுழைவுத் தேர்வு. - TOI 21-08-18.

மருத்துவத் துறையில் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சி

உலகத்தரத்தில் WHO விதி, 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என சொல்கிறது. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகம், டெல்லி போன்ற மாநிலங்களில் இதை விட அதிகமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்று மருத்துவத்துறையின் உச்சியை தொட்டிருப்பதாக சொல்லப்படும் மேலை நாடுகளுக்கு நிகராகவும், அதிகமாகவும் தமிழகத்தின் வளர்ச்சி இருக்கிறது.

1000 பேருக்கு 4 மருத்துவர்கள் என்பது தமிழகத்தின் நிலை. இது நார்வே(4.3), ஸ்வீடன்(4.2) ஆகிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியாகும். இதுவே டெல்லியில் 1000:3, UK, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு இணையான வளர்ச்சி. கேரளா மற்றும் கர்நாடகாவில் 1000:1.5 எனவும் பஞ்சாப் மற்றும் கோவா 1000:3 என்ற அளவிலான வளர்ச்சியையும் பெற்றிருக்கின்றது.( - TOI 02-09-18)

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்ததற்கான காரணம், இங்கிருந்த திராவிட சித்தாந்த சிந்தனையாளர்களே. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்களில் 4 பேரில் ஒருவர் மட்டுமே எழுத, படிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் தமிழகம் மற்றும் கேரளாவில் இது 100% ஆக இருக்கிறது. உயர் படிப்பிற்கு செல்வோர்கள் விகிதம் தமிழகத்தில் 44.3% ஆக இருக்கிறது. இது தேசிய அளவில் இருப்பதை விட இருமடங்கு அதிகம். உலக அளவில் 10% அதிகம். .( wire 05-09-2018 )

உயர்நீதிமன்றம் vs உச்சநீதிமன்றம்

2018ம் ஆண்டு நடந்த நீட் நுழைவுத்தேர்வில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தமிழக மாணவர்கள் அதிகமாகவே மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.

தமிழகத்திலிருந்து நீட் தேர்வை எழுத 1500 பேருக்கு கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான் என வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனை ஒட்டி மதுரை உயர்நீதிமன்றம் தமிழகத்திற்குள்ளேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை நம்பி முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுகளையும் ரத்து செய்தனர் பல மாணவர்களின் பெற்றோர்கள். ஆனால் இறுதி நேரத்தில் உச்ச நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என உத்தரவிட்டது. இதில் தமிழக மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தேர்வு மையத்திற்குச் சென்றார்கள்..( the week04 05 18)

நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகள் தவறாக கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 198 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் ஆறுதலைடந்த மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தைத் தந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து CBSE உச்சநீதிமன்றத்தில் முறையிட்டபோது, எந்த மதிப்பெண்ணும் வழங்க முடியாது இது தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களின் குற்றம். ஆங்கிலத்தில் சரியாகவே இருந்தது. மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்ற சிபிஎஸ்இ தரப்பின் வாதத்தை ஆமோதித்து உச்ச நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியது. - TOI 21-08-18.

தமிழகமே நடத்தட்டும்

தமிழகம் மற்ற மாநிலங்களை விடவும் பெரும் வளர்ச்சியை அடைந்த நிலையில் சில கிராம சுகாதார மையங்களில் இன்னமும் தட்டுப்பாடு நிலவவே செய்கிறது. ஆனால், இந்த நிலையில் தமிழகத்திலிருந்து வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை பகுதியாகக் குறையும் போது தமிழகம் மருத்துவத் துறையில் பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

சமூக நீதி மூலம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த அரிய வாய்ப்பை பிடுங்கியிருக்கிறது 'நீட்'. அதனால் தான் பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் வாங்க முடிந்த அனிதாவால் நீட் தேர்வில் 720க்கு வெறும் 86 மதிப்பெண் மட்டும் பெற முடிந்தது. ஒரு ஏழை மாணவியை மருத்துவராக்கும் சமூக நீதி முறையை ஒழித்து விட்டு, அனைவரும் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்தில் கல்வியை வைத்திருக்கும் 'நீட்' நுழைவுத்தேர்வை நடைமுறைப் படுத்தியது தான் அனிதாவின் தற்கொலைக்குக் காரணம். அனிதாவையும் சேர்த்து தமிழகம் தனக்கான உரிமையையும், வளர்ச்சியையும் மத்திய அரசிடமிருந்து இழந்து வருகிறது. இதை மீட்டெடுக்காமல் போனால் தமிழகத்திற்கு பேரிழப்பாக மாறும் அபாயம் இருக்கிறது.

இங்கே 12வது மதிப்பெண் தான் பிரச்சனை என்றால் தமிழகமே நுழைவுத்தேர்வை நடத்தட்டும். இதில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் ஒரே தேர்வு என்பதெல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் செயல் என்கிறார்கள் மருத்துவ அமைப்புகள். ( 07-08-17) TOI, mdu.)

- அபூ சித்திக்