திருவிழாக்கள் தேசிய இனங்களின் பண்பாட்டுச் சின்னம். பண்பாடானது மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை. அது மொழியாக, அறிவியலாக, தொழிலாக, கலையாக, விழாவாக வெளிப்படுகிறது. அவ்வகையில் பொங்கல் திருநாள் தமிழ்த் தேசிய திருநாள்.

பண்பாட்டு அடையாளங்கள் அந்த தேசிய இனங்களின் வரலாற்றைக் குறிப்பது. அவ்வகையில் பொங்கலை தமிழர் திருநாள் என்று குறிக்காமல் திராவிடர் திருநாள் என்று குறிப்பது மிகப்பெரிய திரிபு வேலை.

pongal dk invitationபொங்கல் திருநாள் மட்டுமே தமிழனின் உழைப்பையும், அறிவையும் உலகிற்கு உணர்த்தும் தமிழ்த்தேசிய திருநாள். தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வாழ்வியல் திருநாள். இரவும், பகலும் உழைத்து வயலில் செழித்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் உழவர் திருநாள். உழைப்புக்கும், உழைப்புக் கருவிகளுக்கும் நன்றி செலுத்தும் உழைப்புத் திருநாள்.

சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவம் கூறும் ஏர்த்தொழில் திருவிழா. பொங்கலன்று வீடுகளைப் புதுப்பித்து, புத்தாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து, புதுப்பானையில் இஞ்சி, மஞ்சள் கட்டி பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி தெரிவித்து, உழவு மாடுகளுக்கு உணவு அளித்து கொண்டாடப்படுகிறது.

தமிழர் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரித்து மருதத்தில் என்று உழவு செய்யத் தொடங்கினானோ அன்றே தொடங்கியது இந்தத் திருவிழா. இதில் எங்கே புகுந்தது திராவிடம்?

திராவிடம் என்கிற சொல் உருவம் கொள்வதற்கு முன்பாகவே தமிழர்களால் உருவம் கொடுத்து பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலுக்கும், வண்டி இழுக்கவும் பயன்படும் எருது ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரப்பா, மொகஞ்சதரோ தமிழர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னமாக இருப்பதே இதற்குச் சான்று.

தமது நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களை பச்சையாகவோ நெருப்பில் சுட்டோ சாப்பிட்டு வந்த காலத்தில் நெய்யும் பாலும் தேனும் கலந்து சுவையாகவும், இஞ்சி ஏலம் சுக்கு பட்டை சேர்த்து நோய் வராது தடுக்கும் உணவாகவும் உண்டுவந்த பெருமை தமிழனையே சேரும்.

மருத்துவ அறிவையும், உடல்நல உணர்ச்சியையும் ஒருங்கே காட்டும் சமையல் நூல்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழன் இயற்றியுள்ளான்.

"கந்தக கருத்தும் மடைநூல் செய்தியும் " என்று 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணிமேகலை இதைத் தெளிவாக்குகிறது (மடை - சோறு)

"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி" என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியமும்,

"பழஞ்சோற்றுப் புக வருத்தி " என்று புறநானூறும்,

"பூவும் புகையும் பொங்கலுஞ் சொறிந்து" என்று சிலப்பதிகாரமும் கூறுகின்றன.

வேளாண்மை தொடங்கிய காலத்திலிருந்து பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலானது ஆயிரமாயிரம் ஆண்டுகாலப் பழமையும் பெருமையும் உடையது .

பொங்கல் விழாவன்று உடுத்தும் புத்தாடை நெசவுத் தொழிலையும், பானை குயவுத் தொழிலையும் கதிரவ வணக்கம் வானியல் அறிவையும், வீடுகள் புதுப்பிக்கப்படுவது பொறியியல் கலையையும் எடுத்தியம்புகிறது.

"பருத்திப் பெண்டிர் பனுவலென்ன" என்கிற புறநானூற்றுப் பாடல் வரிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பருத்தி ஆடைகளை நெய்து தமிழன் உடுத்தி உள்ளான் என்பதை பறைசாற்றுகிறது .
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுட்ட செங்கற்களால் சுவர் எழுப்பி கதிரடித்து கிடைத்த வைக்கோலால் கூரை வேய்ந்து வாழ்ந்திருக்கிறான் .

"சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் சொடுங்கும் கடிமனை" என்கிற சிலப்பதிகாரம் தமிழனின் பொறியியல் அறிவை விளக்குகிறது

கதிரவன் வணக்கம் என்பது கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அது தமிழனின் வானியல் ஆய்வை வெளிப்படுத்துவது. நெற்பயிர்கள் மட்டுமின்றி இயற்கை பயிர்கள் செழித்து வளர கதிரவன் பயன்படுகிறது என்ற உண்மை தெரிந்தவன் தமிழன்.

"விசும்பின் துளி வீழும் அல்லாமல் பசும்புல் தலை காண்பது அறிவு" என்கிறது வள்ளுவம்.

செந்நிறம் உடைய கோளுக்கு செவ்வாய் என்றும், கரிய நிறமுடைய கோளுக்கு காரி (சனி) என்றும், பெரிய அகன்ற கோளுக்கு வியாழன் என்றும் பெயரிட்டவன் தமிழன்.

இத்தகைய தமிழனின் அறிவை, பண்பாட்டை, வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ள பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்ற பெயரால் இந்துத்துவ விழாவாக மாற்றிக் கொண்டிருக்கிறது பார்ப்பனக் கும்பல் .

நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் மகர சங்கராந்தியாக கொண்டாடி வருகிறார்களே தவிர, பொங்கல் விழாவாகக் கொண்டாடுவதில்லை.

"பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்" என்று பெரியார் முன்மொழிந்த ஒரே திருவிழா இது மட்டும் தான்.

அப்படி இருக்க தமிழனின் திருவிழாவை திராவிடர் திருநாள் என்று திராவிடர் கழகம் சொல்வது தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றை, பண்பாட்டை அழிப்பதற்கு ஒப்பான வேலையைச் செய்வதாகும்.

- செந்நிலா