மனதுக்குள் ஒரு சிறுவனையோ சிறுமியையோ சுமந்து கொண்டே அலைகிறோம்.

எனக்கு இரண்டு வயது இருக்கும் போது அணிந்திருந்த ஸ்வெட்டர் இன்னும் வைத்திருக்கிறேன். அது என் பாட்டி(அப்பாவின் அம்மா) தன் கையாலேயே பின்னிய பச்சை வண்ண ஸ்வெட்டர். கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும். ஆனாலும் எனது சிறு குழந்தை வாசத்தை இன்னமும் அதில் நான் உணர்கிறேன். அதில் என் பாட்டியின் வாசமும் கலந்திருப்பதை என்னால் யூகிக்க முடிகிறது.

3 வயது இருக்கும் போது என் சித்தப்பா என்னைக் கூட்டிக் கொண்டு சென்று "கணாரிஸ் ஸ்டுடியோ"வில் எடுத்த போட்டோ காலத்துக்கும் என்னை குழந்தையாகவே வைத்திருக்கிறது. இரண்டு காப்பிகள். ஒன்று என் சித்தப்பா வீட்டில் இருக்கிறது. இன்னொன்று இங்கே... இதோ என் அருகே. என் வாழ்வே போட்டோக்களால் ஆனவை போல தான்.

அதன் பிறகு ஐந்து ஆறு வயதில் ஒரு பச்சை வண்ண குரங்குத் தொப்பி வைத்திருந்தேன். எப்போது பனி அடிக்கும் என்று காத்திருந்து போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டில், வீதிகளில் விளையாடுவது அப்படி இருக்கும். என் அடையாளமே பச்சை தொப்பி என்ற காலமும் உண்டு. ஒரு ரெயின் கோட்டு கூட வைத்திருந்தேன். அதற்கு ஜிப் போடத் தெரியாமல் என் ஆத்தா (அம்மாவின் அம்மா) என்னை மழைக்குள் அதன் சேலை தலைப்பை என் தலையோடு மூடிக் கொண்டு மேல் வீட்டு சின்னப்பண்ணன் அக்கா வீட்டுக்காரரிடம் சென்று ஜிப்பை போட செய்து தூக்கிக் கொண்டு வந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சிரிக்கும் வெகுளியான என் ஆத்தா இறந்து இன்றோடு 34 வருடங்கள் ஆகி விட்டன.

ஆத்தா இறந்த அன்று வீட்டில் பரணில் அடிப்புறத்தில் நாலரை வயதில் நான் சாக்பீஸால் கிறுக்கிய சில வார்த்தைகள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. மரணங்கள் அழித்து போவது உடல்களை மட்டும் தான். அதையும் தாண்டி சொல்லொணா ஒன்று நம்மிடையே உலவுகிறது. அது தான்... இங்கே கிடக்கும் மிச்ச வாழ்க்கை. 

தொடரும்...

- கவிஜி