இன்றைய இலக்கியம் என்ற தொடரில் ‘இன்றைய’ என்ற பகுதியின் கால வரையறைப் பொருள் பலராலும் தவறாகக் கணிக்கப்படுகிறது. உள்ளபடியே இன்றைய தமிழ் இலக்கியம் என்பது ஆற்றலுடன் வெளிப்பட்டு வரும் தலித் இலக்கியத்தையும் பெண்ணிய இலக்கியத்தையும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையுமே குறிக்கும்.

‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்று உள்ளபடியே ஆகிவிட்ட உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் ‘இன்றைய தமிழ் இலக்கியம்’ என்ற புலத்தை அதற்குரிய எல்லா வாழ்க்கைத் தகுதிகளுடன் நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தோரே. ‘புலம் பெயர்ந்தோர்’ என்போரும் இரண்டு வகைமாதிரிகளாகப் பகுக்கப்பெறுகிறார்கள். முதல் வகையினர், ஈழதேசியப் போர்களில் பல்வேறு இழப்புகளுக்கு உள்ளாகி உலகத்தின் வேறு புலங்களில், அதிலும் குறிப்பாக அதிகமாக ஐரோப்பாவில் இப்பொழுது உழைத்து வாழ்ந்து கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இரண்டாம் வகையினர், இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து வேறு புலங்களில் போய் உழைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இந்த இரண்டு வகைமாதிரிகளில் முதல் வகையினருக்குச் சான்றுகளாக ‘எஸ்.பொ.’ என்றழைக்கப்பெறும் எஸ். பொன்னுத்துரை, சி. புஸ்பராஜா, ‘சோலைக்கிளி’ என்ற புனைபெயருடைய யு.எல்.எம். அத்தீக் முதலானவர்களையும்; இரண்டாம் வகையினருக்குச் சான்றுகளாக நாகரத்தினம் கிருஷ்ணா[கடல்கடந்து வாழும் தமிழர்களின் ஆகச் சிறந்த படைப்பாகத் தன் ‘நீலக் கடல்’ புதினத்துக்குத் தற்பொழுது விருது பெற்றுள்ளவர்] அபுல் கலாம் ஆசாத்[தமிழில் கானாப் பாடல்கள் பதிவு; கஜல் பாடல்கள் மொழியாக்கம் செய்துள்ளவர்] முதலானவர்களையும் குறிப்பிடலாம்.

இவர்களுள் பிரான்சில் பல ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சென்னைக்கு மருத்துவ உதவி பெற வந்து பிரான்சுக்கு மீண்டபின் மறைந்த சி. புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’[வெளியீடு:அடையாளம், 1204-05[இரண்டாம் தளம்], கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310] என்பது உன்னதமானதொரு தன்வரலாற்று இலக்கியம் என்பதை விடவும் மிகவும் சிறப்பான ஆவணம் என்பதே பொருந்தும். இருப்பினும் அதன் 632 பக்கங்களையும் வாசிக்கும் பொழுது புலனாகும் - எதார்த்தமானதும், ஒருவரைத் தமது சொந்த வாழ்க்கைக்கே அன்னியப்பட்டுப் போகவைக்கின்றதும் ஆன பெருந்தேசியவாதிகளின் பேரினவாத ஒடுக்குமுறை குறித்த நுணுக்கமான சித்திரிப்பு அப்படைப்பை இலக்கியமாக்கி விடுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வசதியான பதவியையும் வாகான சமூக உறவுகளையும் வைத்திருப்பவர் இத்தகையதொரு படைப்பை உலகுக்கு வழங்க முடியாது. இத்தகைய படைப்பிலக்கியம் பெருந்தேசியவாதம் என்பது பேரினவாத ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல்(micro politics) உண்மையை முன்வைக்கிறது.

எஸ்.பொ.’வின் விரிவானதும் நுட்பம் மிக்கதுமான தன்வரலாறான ‘வரலாற்றில் வாழ்தல்’ என்பது படைப்பாளியை உள்ளடக்கிக் கொண்டுவிடுகிறது. அகன்றதொரு புலமாகவும் ‘அகண்ட பிரபஞ்சம்’ போலவும் சமூக மனிதனாக வாழும் ஒருவனுக்கு நேரக்கூடிய எல்லா வகைமாதிரியான பிரச்சினைகளையும் அது முன் வைக்கிறது. வெளியே சொல்லக் கூசுகின்ற வயணங்களைக்கூட அது விட்டு வைக்கவில்லை. தன் தேசமே பேரினவாதத்தால் செயற்கையாக எல்லைகள் அழித்து மறைக்கப்படும் பொழுது எப்படிப்பட்ட இழப்புகளை, பிரிவுகளை, சொந்த அடையாளமிழத்தல்களை, புலப்பெயர்வுகளை ஒரு சமூக மனிதன் எதிர்கொள்கிறான் என்ற மனித அனுபவத்தை வாசிப்பில் உருவாக்குகிறது.

‘காகம் கலைத்த கனவு’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதையான ‘காகம் கலைத்த கனவு’ என்பது புலம்பெயர்ந்தோர் இலக்கியமே இன்றைய இலக்கியமாகும் தன்மைக்கு ஒரு சான்று.

காகம் கலைத்த கனவு

கைவேறு
கால்வேறாய்
அங்கங்கள் பொருத்திப் பொருத்தி
மனிதர்கள் தயாரிக்கப்படுவதை
நேற்று என் கனவில் கண்டேன்.

கண்கள் இருந்தன ஒரு பைக்குள்
மூக்கும் இருந்தது இன்னொன்றில்
முழங்கால் பின் மூட்டு
விலா குதி எல்லாமே
ஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-
தம்பதியார் வந்தார்கள்
புரட்டிப் புரட்டிச் சிலதைப்
பார்த்தார்கள் பின்னர்
விரும்பியதை எடுத்தார்கள்
கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள்.

வானம் புடவையாய் வெட்டுண்டு
கிடந்தது வீதியாய்
நான் நின்ற பாதை.

ஒருவன் வந்தான்
துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்
பார்த்துப் புன்னகைத்தான்
அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்து
காலில் இருந்த இருதயத்தைக் கழற்றி
மனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான்.

வெயிலோ கொடுமை
எரிச்சல் தாங்கவில்லை
அவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்த
பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.
இரவு!
உடனே சூரியன் மறைந்தது
நிலவு!

நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால்
ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்து
தன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்
மனிசி!
காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லை
எங்கிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்
கத்தியது
இடையில் நின்று முக்கியது
கா.....கா....

இதைவிடவும் கூடுதலாகவும் ஆகக் கூர்மையாகவும் போரின் உக்கிரத்தை, இனப் படுகொலைகளைத் தொலைநோக்குடன் கண்டிக்கும் மனச்சாட்சியுள்ள கவிதை இன்னொன்றும் இத்தொகுதியில் உள்ளது. அது -

தொப்பி சப்பாத்துச் சிசு
தொப்பி
காற்சட்டை சப்பாத்து
இடுப்பில் ஒரு கத்தி
மீசை
அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து
குதிக்கின்ற ஒருகாலம் வரும்.

அந்த
தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்
பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.
எல்லாம்
தருணத்தில் ஒத்தோடும்.

சோளம் மீசையுடன் நிற்காது.
மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற
துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.

வெள்ளை சிவப்பு
இளநீலம் மஞ்சள்
என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்ற
பூமரங்கள் கூட
சமயத்திற்கொத்தாற்போலத் துப்பாக்கிச் சன்னத்தை
அரும்பி அரும்பி
வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்.

குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்
இளநீர் எதற்கு?
மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற
தலைமுறைக்குள் சீவிக்கும்,
கொய்யா முள்ளாத்தை
எலுமிச்சை அத்தனையும்
நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்
இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது.

வற்றாளைக் கொடி நட்டால்
அதில் விளையும் நிலக்கண்ணி
வெண்டி வரைப்பீக்கை
நிலக்கடலை தக்காளி
எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,

முகர்ந்தால் இறக்கும்
நச்சுப் பொருளாக
எடுத்தால் அதிரும்
தெருக்குண்டு வடிவாக
உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...

உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்
மனிதர் எவரிருப்பார்?
கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்
ஆட்கள் அன்றிருக்கார்!

இவர்கள்
பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்
புராதன மனிதர்களாய்ப் போவர்.

இவ்வாறாக புலம்பெயர்ந்தோர் படைப்பிலக்கியம், பேரினவாத எதிர்ப்புக் கொள்கையையும் பெருந்தேசியவாதம் என்பது பின்னொருநாள் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல் உண்மையையும் இவற்றை ஆதரிக்கும் இலக்கியவாதிகள் உட்பட எவரும் போரழிவாம் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாமல் “பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப் புராதன மனிதர்களாய்ப் போவர்” என்ற எச்சரிக்கையையும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

நன்றி: cOlaikkiLi (U. L. M. Atheek), kAkam kalaitta kanavu (in Tamil Script, Unicode format). E-text Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany & R. Padmanabha Iyer, London, UK. PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland Source acknowledgement: Suvadugal Pathippagam, Herslebs GT-43, 0578 Oslo 5, Norway) *********************

- தேவமைந்தன்