இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சமூகநீதிக்கான உரிமையை வழங்கியுள்ளது. அரசியல் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையைப் பறிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ நிச்சயமாக இல்லை.

இடஒதுக்கீடு சட்டமானாலும் முற்போக்கான சட்டங்களானாலும் அவை நீதிமன்றங்களால் தடுக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன், ஒன்பதாவது அட்டவணை ஒன்றை உருவாக்கி, சமூக-பொருளாதார நீதியைத் தரும் அத்தகைய சட்டங்களை அந்த அட்டவணையுடன் இணைத்துவிட்டால் அத்தகைய சட்டங்கள் நீதிமன்றங்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டதாகிவிடும் என்று ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால் இதைப்பற்றிக் கொஞ்சமும் பொருட்படுத்தாது 9-வது அட்டவணையில் கடந்த 12 ஆண்டு காலமாக இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் 69 சதவீத சட்டத்தின் மீது - சட்டத்திற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதே அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். இந்தச் சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழு அண்மையில் அளித்த தீர்ப்பு சமூக நீதியின் ஆணிவேரையே அறுப்பதாகும்.

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வு தருவது, பாக்கியுள்ள இடங்களை நிரப்புவது போன்றவைகளுக்காக தனியே கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லும் என்று சொல்லிவிட்டு, ஆனால் அந்தச் சலுகையை அவர்கள் அனுபவிக்க முடியாத அளவுக்கு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இத்தகைய தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்குவது முதல்முறையல்ல. பல கட்டங்களில் இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்பட்டு சமூக நீதி முடக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று வழி என்ன? சமூக நீதியையும் அதன் வழிப்பட்ட இடஒதுக்கீட்டையும் நிரந்தரமாக்கவேண்டும் என்பதில் முற்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தில் உள்ள கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. எனவே அத்தகைய கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி அரசியல் சட்டத்தில் கீழ்க்கண்ட திட்டத்தை உள்ளடக்குவதற்கான ஏற்பாட்டில் முனைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

'இடஒதுக்கீடு என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்களின் எண்ணிக்கை என்பது வேறுபடுகிறது. எனவே அந்தந்த மாநிலங்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு செய்யப்படுவதே உண்மையான சமூக நீதியாகும். எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களின் எண்ணிக்கை 1 சதவீதம் மட்டுமே. ஆனால் நாகாலாந்து, மிசோராம் போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் எண்ணிக்கை 95 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ளது போல அந்த மாநிலங்களில் மலைவாழ் மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு செய்வது என்பது அநீதியாகும். எனவே அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்துகொள்ளும் உரிமை மாநில சட்டமன்றங்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசுக்கு உட்பட்ட கல்விநிலையங்களிலும் வெறும் 27 சதவீத ஒதுக்கீடு என்பது சரியானதல்ல. இதைக்கூட ஆதிக்கச் சாதியினர் எதிர்க்கிறார்கள் என்பது வேறு. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், கல்விநிலையங்கள் ஆகியவற்றில் அந்த மாநில சட்டமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேலேகண்ட இருஅம்சக் கொள்கையைக் கடைப்பிடிப்பது தான் இடஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை அளிக்கும். 

(தென்செய்தி நவம்பர் 1, 20006 இதழ் தலையங்கம்)