1947இல் விடுதலை அடைந்த போது, இந்திய நாட்டின் முதல் பட்ஜெட் 100 கோடி, இந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு லட்சம் கோடி என்று கடந்த மாதம் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மத்திய நிதியமைச்சர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த முதல் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டதும், இந்த பட்ஜெட் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய திட்டமிடுவதும் அவர்களது கொள்கைக்கு எத்தனை பின்னடைவு என்பதை அவர் சொல்லவில்லை. இடதுசாரிகள் கடந்த தேர்தலில் சில இடங்களை இழந்ததும், இனி இந்தியா உலகிலேயே உச்சத்தை தொடுகின்ற நாடாக மாறப்போகிறது என்று பல பத்திரிக்கைகள் உற்சாகமாக அறிவித்தன. அவர்கள் விரும்பியது போல இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

அதாவது, அவர்களது கடந்த ஆட்சி காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை 80 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானத்தில் உழல்கிற நிலையை உருவாக்கியதுதான். இடதுசாரிகள் இல்லையென்றால், இந்த இருபது ரூபாயும் திண்டாட்டம்தான். ஆதாவது 100 நாள் வேலை உறுதி சட்டத்தை கொண்டுவர அவர்கள் போராடவில்லை எனில் இந்த நிலையும் மோசமாக போயிருக்கும். ஆனால், இதை பற்றி கொஞ்சமும் கவலைப் படாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. ஆனால் இந்த பட்ஜெட் யாரை பற்றி கவலைப்படுகிறது எனில்...

கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி ஆட்சி பொறுப்பை ஏற்ற போது இந்தியாவில் 9 கோடீஸ்வரர்கள்தான் இருந்தனர். அவர்கள் ஆட்சியைவிட்டு இறங்கும் போது 53 கோடீஸ்வரர்களை உருவாக்கினர். அவர்கள் கடந்தமுறை ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களின் சொத்து மதிப்பு 3 லட்சத்து 54 ஆயிரம் கோடி, அவர்கள் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது அந்த 10 நிறுவனங்கள் சொத்து மதிப்பு 10 லட்சத்து 34 ஆயிரம் கோடி. இப்படிபட்ட பணிகளில் கவனம் செலுத்தவே காங்கிரஸ் விரும்புகிறது. இல்லை என்றால் சர்சார்ஜ் ஒழிப்பும், வருமானவரி உயர்பட்ச வரம்பை அதிகரித்து இருக்க மாட்டார்கள். இதனால் மட்டும் ஆண்டுக்கு அரசுக்கு 10 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்படும். அதாவது நமது நாட்டின் பணமுதலைகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி லாபம். இந்த சலுகை காரணமாக கடந்த ஆட்சிகாலத்தில் அரசுக்கு 4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இப்போது புரிகிறதா பணக்காரர்கள் உருவாகும் கதை.

இதை குறிப்பிட அடிப்படையான காரணம், பல பத்திரிக்கைகள் புலங்காகிதம் அடைந்து எழுதுவது போல, அறிவுஜீவிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் எழுதுவதுபோல இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் அல்ல. ஏனெனில் அரசு என்றால் அதற்கு என்று ஒரு வர்க்க நலன் இருக்கும். இந்திய அரசு அதன் வர்க்க நலன் சார்ந்துதான் எந்த ஒரு காரியத்தையும் செய்யும். இதில் பட்ஜெட் மட்டும் விதிவிலக்காக இருக்காது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானங்களுக்கான செலவே முக்கியமானது. அதற்கு தன்னுடைய பட்ஜெட்டில் பெரும் பகுதியை செலவழிக்காத எந்த அரசும் மக்கள் நலன் அரசாக இருக்க முடியாது. அதேபோல் அரசு நிறுவனங்களை அதிகப்படுத்தி அதில் தனது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாகும் அரசே இளைஞர் நலன் சார்ந்த அரசாக இருக்க முடியும். ஆனால் நமது நாட்டில் மீண்டும் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதாக தெரியவில்லை, தேசிய புனல் மின்நிலைய கழகம், இந்திய எண்ணெய் கழகம், இந்திய நிலக்கரி கழகம், பாரத் மிகுமின் நிறுவனம், தேசிய கனிமவள நிறுவனம், தேசிய அனல் மின் நிலைய கழகம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்திய உருக்கலை கழகம், தேசிய உர நிறுவனம் என இந்திய நாடு விடுதலை அடைந்த போது எந்தெந்த நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என கனவு கண்டார்களோ அந்த நிறுவனங்களை எல்லாம் விற்பனை செய்யும் ஏல ஒப்பந்த பிரசுரமாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

ஊடகங்கள் தங்களது லாபம் மட்டுமே இலக்கென, அரசு விளம்பரங்கள் தேவையை கருதி இந்த நிதிநிலை அறிக்கையை வாழ்த்துவது வேண்டுமானால் தார்மீகமாக கருதலாம். ஆனால் வாழ்க்கையை இழந்து வீதியில் நிற்கும் நாம் எல்லோரும் என்ன செய்ய போகிறோம்? “வீதியில் இறங்கி போறாடாமல் விதி மாறாது புரிகிறதா?’’

- ஆசிரியர் குழு

Pin It