பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் மீது வைரமுத்துவின் அடிப்பொடிகள் சமூக வலைத்தளங்களில் ஆபாச அர்ச்சனைகளை சகட்டுமேனிக்கு நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். சிலர் 'நீ யோக்கியமா?' என்றும், சிலர் 'நீ பத்தினியா?' என்றும், சிலர் அவரை 'ஒழுக்கம் கெட்டவள்' என்றும், இன்னும் சிலர் 'அவர் தெலுங்குப் பாப்பாத்தி, அதனால் தான் ஆண்டாள் விவகாரத்தில் பழிவாங்க வைரமுத்து மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்' என்கின்றார்கள். இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சினையை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது, அவர் விளம்பரத்துக்காகவே இது போன்று நடந்துகொள்கின்றார் என்கின்றார்கள். எந்தவித சித்தாந்த அறிவும் இல்லாத கழிசடைகளின் வெற்று உளறல்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் சமூக நீதி, பெண்ணியம் பேசும் சில முற்போக்காளர்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கும் பாப்பாத்திகள், சங்கராச்சாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றார்கள்.

vairamuthu 297சின்மயி பிரச்சினையில் இரண்டுவிதமான கருத்து முகாம்களை நம்மால் பார்க்க முடிகின்றது. ஒன்று வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசும் பிற்போக்குவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள். மற்றொன்று வைரமுத்துவுக்கு எதிராகப் பேசும் பிற்போக்குவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள். வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசும் பிற்போக்குவாதிகளில் அவரின் ஆபாசக் கவிதை மலங்களைத் தின்றுவிட்டு, அந்தப் போதை இன்னும் தெளியாமல் இருப்பவர்களும் , முற்போக்குவாதிகளில் சில பெரியாரிஸ்ட்களும் உள்ளார்கள். அதே போல எதிர்ப்பவர்களில் வைரமுத்துவின் மீதான வன்மத்தை தீர்த்துக்கொள்ள ஏதாவது காரணம் சிக்காதா என தேடிக்கொண்டிருந்த பார்ப்பனக் கும்பலும், அதே போல பெண்ணியம் என்றால் அது பார்ப்பனப் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை சரியாகப் புரிந்துகொண்ட பெரியாரிஸ்ட்களும் தான். நாம் பிற்போக்குக் கும்பலின் வெற்று உளறல்களை புறந்தள்ளிவிட்டாலும் முற்போக்குவாதிகளான பெரியாரிஸ்ட்களின் நிலைப்பாட்டில் ஏன் சின்மயி ஆதாரவு, எதிர்ப்பு என்ற இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டது என்பது நம்மில் பலருக்கு குழப்பமாக இருக்கின்றது. இதில் குழப்பமடைய எதுவுமில்லை. வைரமுத்துவை ஆதரித்த சில பெரியாரிஸ்ட்கள் திமுகவின் பிரச்சாரப் பேச்சாளர்கள் என்பதையும், திமுகவைச் சேர்ந்த வைரமுத்துவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாகவே அவர்கள் அதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உண்மையான பெண்விடுதலையை விரும்புபவர்கள் யாரும் சின்மயின் குற்றச்சாட்டை மிக எளிதாகக் கடந்துபோய்விட மாட்டார்கள். காரணம் இந்தப் பிரச்சினை வைரமுத்துவைத் தாண்டி பல பேரிடம் செல்கின்றது. தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், கல்வியாளர் ரமேஷ் பிரபா, கர்நாடக சங்கீத வித்துவான்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், அமைச்சர் எம்.ஜே அக்பர், தொழிலதிபர் மகேஷ் மூர்த்தி, பேராசிரியர் சரவணப் பெருமாள் என பல பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகின்றர்கள். இவர்களில் பல பேர் பார்ப்பனர்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால் பிரச்சினையின் தீவிரத்தை நாம் உணரலாம்.

இந்தியா போன்ற பிற்போக்கு ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் பொதுவெளிக்கு வந்து பகிரங்கமாகப் பேசுவது என்பது கடந்த காலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். அதற்கான சமூக வெளியும் அன்று கிடையாது. ஆனால் இன்று நிலை மாறியிருக்கின்றது. சமூக வலைத்தளங்கள் அதற்கு பெரிய வெளியை அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றன. அவர்கள் சுதந்திரமாக தங்களின் கருத்துக்களை இன்று வெளியிட முடிகின்றது. அதன் பின்புலத்தில் இருந்துதான் நாம் சின்மயி அவர்களின் குற்றச்சாட்டைப் பார்க்க வேண்டும்.

வைரமுத்து போன்றவர்கள் தங்களுடைய பிரபலத்தையும், அரசியல் ஆதரவையும் பயன்படுத்தி இது போன்று நடந்திருக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. வைரமுத்து ஒரு கேடுகெட்ட ஆபாசக் கவிஞர் என்பதற்கு அவரின் நூற்றுக்கணக்கான திரைப்பாடல்களே சாட்சியாக இருக்கின்றன. மனதில் வக்கிரமும், ஆபாசமும் நிறைந்து வழியும் ஒருவனால்தான் பெண்களை மிக இழிவுபடுத்தும் கீழ்த்தரமான பாடல்களை எழுத முடியும். வைரமுத்து அவரளவிலேயே ஆபாசமானவராக இருப்பதால் நிச்சயமாக சின்மயிடம் மட்டும் அல்லாமல், பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. மேலும் வைரமுத்து காசுக்காக எழுதும் கூலிக் கவிஞனே தவிர, கொள்கைக்காக எழுதும் மக்கள் கவிஞன் கிடையாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் பார்ப்பனப் பெண் என்பதாலேயே அவர் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சொல்வது மிகக் குறுகிய மனப்பான்மையில் இருந்து பிரச்சினையை மதிப்பிடுவதாகும். பார்ப்பனியத்தால் பார்ப்பனப் பெண்களும் மிக இழிவுபடுத்தப்படுகின்றார்கள் என்பதையும், மற்ற சாதிப் பெண்களுக்கு பார்ப்பனியம் எப்படி உரிமைகளை மறுக்கின்றதோ அதே போலத்தான் பார்ப்பனப் பெண்களின் உரிமைகளையும் மறுக்கின்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தைரியமாக பொதுச் சமூகத்தின் பெண்கள் முன்வைக்கும் போது அதில் இருக்கும் நியாயங்களை கண்டுகொள்ளாமல் அவர்களின் சாதியைக் காரணம் காட்டி புறந்தள்ளுவது எந்தவகையிலும் முற்போக்கான அணுகுமுறையாக இருக்காது.

‘Me too’ இயக்கத்தின் மூலம் இன்று பொது வெளியில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களுக்கு ஆண்களால் இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறல்களை பகிர்ந்துகொண்டாலும், அவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு என்ன பலன் கிடைத்திருக்கின்றது என்பதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். இதை சமூக வலைதளங்களில் பகிரங்கப்படுத்துவதால் குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட ஆண்களை அம்பலப்படுத்துதல், அசிங்கப்படுத்துதல் என்பதைத் தாண்டி வேறு எந்த நிகழ்வுகளும் நடந்துவிடவில்லை. வெறும் குற்றச்சாட்டை வைப்பதை மட்டும் செய்யாமல், சம்மந்தப்பட்ட ஆண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போராட வேண்டும். அதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து பெரும் பேராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஆண்கள் மீது வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டை இந்த சமூகம் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் தாண்டி, அது போன்ற நபர்கள் கொண்டாடப்பட்டும் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். சங்கராச்சாரி, நித்யானந்தா, ஆசாராம் பாபு, ராம் ரஹிம் சிங் போன்ற பொறுக்கி சாமியார்கள் இன்றளவும் மக்களால் வழிப்பாட்டுக்குரியவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். ஸ்ரீரெட்டி என்ற நடிகை பல நடிகர்களும் , இயக்குநர்களும் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் இந்தப் பொதுச்சமூகம் அதைப் பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளவில்லை. ‘ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்’ என்ற சமூகத்தின் ஆணாதிக்க பொதுப்புத்தியே இதற்குக் காரணமாகும்.

அதனால் சின்மயின் குற்றச்சாட்டை ஏதோ விளம்பரத்துக்காக சொல்லப்பட்டது என்று புறம்தள்ளிவிடாமல், அதில் இருக்கும் உண்மைத்தன்மையை கண்டறிய நீதி விசாரணைக்கு உத்திரவிடக்கோரி முற்போக்கு பெண்கள் அமைப்புகள் அனைத்தும் கைகோர்த்துப் போராட வேண்டும். இந்த இடத்தில் சின்மயி முற்போக்கானவரா, பிற்போக்கானவரா, பாப்பாத்தியா, சூத்திரச்சியா என்ற கேள்விகளும், பார்வைகளும் தேவையற்றவை. முற்போக்கு அமைப்புகள் அனைத்துத் தரப்பு பெண்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையை நாம் எல்லா தரப்பு பெண்களிடமும் ஏற்படுத்த வேண்டும். பணியிடங்களிலும், குடும்பத்திலும் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக பெண்கள் ஒருங்கிணைந்து ஓர் அமைப்பாக போராடுவதன் அவசியத்தை நாம் பெண்களுக்கு உணர்த்த வேண்டும். அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் இன்றைய தேவையாக உள்ளது.

- செ.கார்கி