சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியிடம் 17 பேர் 7 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலேயே குற்றவாளிகளை கடுமையாகத் தாக்கி தங்கள் எதிர்ப்பையும் காட்டியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி வெளியே சொல்லித்தான் இந்தப் பிரச்சினை தற்போது தெரிய வந்திருக்கின்றது. இல்லை என்றால் இன்னும் இந்தப் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கும். குற்றச்செயலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர், காவலாளி, பிளம்பர், வீட்டு வேலைக்காரர், எலக்ரீஷியன்கள், தோட்ட வேலை செய்பவர்கள் என அனைவரும் மிக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சமூகம் எந்தளவிற்கு மனித விழுமியங்களை தொலைத்துவிட்டு நிற்கின்றது என்பதைக் காட்டுகின்றது. பாலியல் வல்லுறவுக்கு ஆதரவான ஒரு கூட்டு மனநிலை இவர்கள் அனைவரிடமும் செயல்பட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதைப் பற்றி தெரிந்த ஒருவர் கூட இதை அந்தச் சிறுமியின் பெற்றோருக்கோ, இல்லை காவல் நிலையத்துக்கோ சொல்லாமல் இத்தனை மாதங்களாக மூடி மறைத்தது மட்டும் அல்லாமல், வாய்ப்பு கிடைத்த போது தங்கள் பங்கிற்கு அந்தச் சிறுமியை வன்புணர்வு செய்தது, இந்தச் சமூகம் ஒட்டுமொத்தமாக மனிதத் தன்மையை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

rape criminals

12 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அண்மையில்தான் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக ஆக்கப்பட்டாலும், சமூகத்தின் பொதுமனசாட்சி சீரழிந்து கோரமாகக் காட்சி அளிக்கும் போது சட்டங்களால் எப்படி குற்றங்களைக் குறைக்க முடியும்? திருடக்கூடாது என்பதும், பொய் பேசக் கூடாது என்பதும், ஊர்க்குடியை கெடுத்து உயிர் வாழக்கூடாது என்பதும், இன்னும் இது போன்ற எவ்வளவோ அறநெறியை போதிக்கும் இலக்கியங்கள் நம் சமூகத்தில் உள்ளன. ஓர் இலட்சிய சமூகத்தை வடிவமைப்பதற்கான எல்லா சித்தாந்தங்களும் நம்மிடம் உள்ளன. ஆனால் வாழ்வில் தவறாமல் தம்முடைய எல்லா செயல்பாடுகளிலும் அறத்தைக் கடைபிடிப்பது என்பது எல்லோரும் கடைபிடிக்கும் ஒன்றாக எப்போதுமே அமைவதில்லை. பெரும்பாலும் இந்தச் சமூகம் அறத்தைத் துறந்த சமூகமாகவே எப்போதும் இருந்துள்ளது. ஆனால் ஏன் மனிதன் அறத்தைத் துறந்து பிழைப்புவாதியாகவும், அற்பவாதியாகவும், குறுகிய மனம் படைத்தவனாகவும், தன் சக மனிதனை அழித்து அவன் இரத்தத்தில் சுகபோகமாக வாழ்பனாகவும் இருக்கின்றான் என்று எப்போதுமே இந்தச் சமூகம் சுயவிமர்சனம் செய்து கொள்வதில்லை. அப்படி செய்து கொள்ளக்கூட ஒரு சமூகத்துக்கு மேம்பட்ட அறச் சிந்தனை வேண்டும்.

ஆதி பொதுவுடமை சமூகத்தில் மனிதன் கும்பலாவே விலங்குகளின் மீது வன்முறையைப் பயன்படுத்தினான். அது தன்னைவிட வலிமை மிகுந்த விலங்குகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், வேட்டையை உறுதிபடுத்தவும் ஆதிமனிதனுக்குப் பயன்பட்டது. கும்பலாக சேர்ந்து இயங்குதல் என்பது அசிங்கமான ஒன்றல்ல. மனிதன் சேர்ந்து இயங்கும் போதுதான் சிந்தனைப் பரிமாற்றம் நடைபெற்று உற்பத்தியிலும், அதைத் தொடர்ந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும், அறிவியலிலும் வளர்ச்சி ஏற்பட முடியும். மனிதன் கும்பலாக சேர்ந்து இயங்கும்போதுதான் தன்னை எதிர்த்து நிற்கும் அனைத்திற்கு எதிராகவும் போராடும் தைரியத்தைப் பெறுகின்றான். அனைத்து சமூக மாற்றங்களும் மனிதர்களின் ஒருங்கிணைவின் வழியாகவே நடைபெற்று வந்துள்ளதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

ஆனால் வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு மோசமான, அனைத்து வகையிலும் அற்பத்தனமாக மாறிய ஒரு சமூகத்தையோ, மனிதர்களையோ நாம் எங்கேயும் பார்க்க முடிவதில்லை. குறிப்பாக இந்திய சமூகம் பல ஆண்டுகளாக பார்ப்பனியம் கட்டமைத்த ஆணாதிக்க வக்கிரத்தையும், முதலாளித்துவம் உருவாக்கிய பெண்சார்ந்த வக்கிரங்களையும் முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு மிகக் கீழ்த்தரமான தரங்கெட்ட சமூகமாக மாறியிருக்கின்றது. இன்று பெரும்பான்மையான இந்திய ஆண்களின் மனங்கள் ‘போர்னோ’ என்னும் ஒற்றைப் புள்ளியில் வக்கிரத்துடன் ஒன்றுபட்டு செயலாற்றும் தர நிலையை எட்டியிருக்கின்றன. இது ஒரு சமூகம் பண்பாட்டு ரீதியில் மிகவும் கீழிறங்கி அழிந்து போவதற்கான சமிக்ஞைகள்.

உணவுக்காகவும், தன்னை காத்துக் கொள்வதற்காகவும், உரிமைகளைப் போராடிப் பெறவும் கும்பலாக ஒன்றிணைந்த மனிதன், இப்போது தன்னுடைய சக மனிதனை அடித்துக் கொல்லவும், வயது வித்தியாசம் இன்றி பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்யவும் கும்பலாக ஒன்றிணைகின்றான். இந்திய சமூகம் சாதியின் பெயரால் அடித்துக் கொல்வதை எப்போதுமே கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தி வரும் சமூகம். இந்துக்களின் சிந்தனையை வடிவமைக்கும் பார்ப்பனியத்தில் இதற்கான வரலாற்று வேர்கள் உள்ளன. நாம் மனுவைப் படித்தால் தெரியும், ஒவ்வொரு சாதிக்கும் எப்படி மனு வேறுபட்ட தண்டனைகளை வரையறுத்தான் என்று. இந்தியாவில் பன்னெடுங்காலமாக பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட மன்னர்கள் மனுவையே சட்டப் புத்தகமாக வைத்து ஆட்சி செய்தார்கள் என்பதுதான் வரலாறு. அதே போல இந்திய சமூகம் எப்போது தாய்வழி சமூக அமைப்பில் இருந்து தந்தைவழி சமூக அமைப்பிற்கு மாறியதோ, அன்றில் இருந்து பெண்கள் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உடைமையாகவே கருதப்பட்டு வந்தார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது என்பது பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் வளர்த்தெடுத்த ஒன்று. அதனுடன் 'தன்னுடைய வளர்ச்சிக்காக யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம் , பெண்களின் உடல் ஒரு நுகர்வுப் பொருள்' என்ற கோட்பாட்டை கொண்ட முதலாளியமும் இயல்பாகவே ஒன்றிணைந்து விடுகின்றன. பார்ப்பனியத்தின் சித்தாந்தமும், முதலாளியத்தின் சித்தாந்தமும் அதனதன் கருத்தியல் அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒற்றுமையானவை.

இப்படி மனித மனங்களை நச்சாக்கி வக்கிரத்தாலும், ஆபாசத்தாலும் கட்டமைத்துள்ள இந்தச் சமூகத்திற்குள்ளேயே அதற்கான தீர்வை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். முதலாளியம் கட்டமைத்துள்ள சட்டங்கள் நாகரிகமாக தோன்றினாலும் அது கட்டமைத்துள்ள பண்பாடு மிக அகோரமாக அருவருப்பூட்டுவதாக உள்ளது. நாம் நம்முடைய மனங்களை ஆபாசம் நிறைந்த பார்ப்பனியத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் அர்ப்பணித்த பிறகு அதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி அதன் உடன் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய கடவுள்கள் ஆபாசக் கூத்துக்களை நடத்துவதையே வாடிக்கையாகக் கொண்டவை என்று தெரிந்தபோது, நாம் அந்தக் கடவுள்களையோ, அதை நியாயப்படுத்தும் கதையாடல்களையோ குப்பையில் வீசி எறியவில்லை. மாறாக நாம் மிக அர்ப்பணிப்போடு கடவுளின் ஆபாச அயோக்கியத்தனங்களை லீலைகள் என்ற பெயரால் ஏற்றுக்கொண்டோம். பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஒரு நேர்மையான இந்து சிவனையோ, விஷ்ணுவையோ, கிருஷ்ணனையோ வழிபடமாட்டான். கடவுளுக்கு ஊர் மேய்வதற்கு உரிமை உண்டென்று ஏற்றுக்கொள்ளும் மனம் எந்த யோக்கியதையின் அடிப்படையில் அதையே மற்றவர்கள் செய்யும் போது எதிர்க்கின்றது? பெண்களின் பாதுகாப்பைப் பேசும் அதே சமூகம் தான் போர்னோ வழிபாட்டிலும் முழ்கிக் கிடக்கின்றது. இந்த முரண்பாடுகள் உள்ளவரை இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் சமூகத்தில் உருவாவதை நாம் எந்தச் சட்டத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஒரு பெரியாரியவாதியை நம்பியோ, பொதுவுடமைவாதியையை நம்பியோ, அம்பேத்கரியவாதியை நம்பியோ உங்களின் பெண்களை நீங்கள் தைரியமாக விட்டுச் செல்லமுடியும். ஆனால் தீவிர ஆன்மீகம் பேசும் ஒரு சாமியாரை நம்பி உங்கள் பிள்ளைகளை நீங்கள் விட்டுச் செல்ல முடியுமா? நிச்சயமாக பெரும்பாலான பெற்றோர்கள் முடியாது என்றுதான் சொல்வார்கள். சாமியாரை மட்டும் அல்ல, ஆன்மீகவாதி எவனையும் நம்பி உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் விட்டுச் செல்ல முடியாது என்பதுதான் உண்மை. அப்படி என்றால் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் சித்தாந்தம் எது என்பது சொல்லாமாலேயே விளங்கும். இந்தச் சமூகத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றால் நாம் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியில் இந்தச் சமூகத்தின் பண்பாட்டை மாற்றியமைப்பதுதான் ஒரே வழி. சட்டங்களை எவ்வளவுதான் வலிமையாக இயற்றினாலும், அடிப்படையில் நாகரிக மனநிலைக்கு மாறாத சமூகத்தில் அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.

- செ.கார்கி