சென்ற வாரத்தில் நண்பர்களைக் காண நாகூர் சென்றிருந்தேன். மத்திய விருந்துக்குப் பிறகு எங்களுக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் களைக்கட்டத் தொடங்கியது.

Mindநாங்கள் நண்பர்கள்தான் என்றாலும், பாதிக்குப்பாதி என்ற அளவில்தான் ஒத்தக் கருத்து கொண்டவர்கள். எந்த ஒன்றை விவாதத்திற்குள் இழுத்து வைத்துப் பேசியப்போதும் ஒத்தத் தீர்வு ஏற்பட நேரம் பிடித்தது. அதற்காக பேச்சில் கொஞ்சம் சுற்றி வர வேண்டிய நிலை. தவிர, நிறைய விட்டுக் கொடுத்தலும் / மௌனம் செய்தாலும்கூட அவ்வப்போது தேவையாக இருந்தது. நட்பைப் பேண நினைக்கிறபோது அவைகள் தவிர்க்க முடியாதது. விவாதங்களோ ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் எங்கள் விவாதம் 'Mind and Brain' யென கிளைத்தது.

இங்கே, 'நாங்கள்' என்பது நான்கு பேர்கள். இருவர் Mind. அது ஒரு தனிச்சையான செயல்பாடு என்றார்கள்! Brain-தான் எல்லாம் என்பது என் கட்சி! இன்னொரு நண்பர் ஆரம்பம் தொட்டே மெளனம் செய்துவிட்டார். எங்களை வேடிக்கைப் பார்ப்பதே அதிகமென நினைத்திருக்கலாம். அல்லது அவரும் நட்பைப்பேண அதிகத்திற்கும் அதிகமாய் முனைந்திருக்கலாம்.

Mind-யைப் பற்றி பேசிய நண்பர்கள் மனம், இதயம், ஆன்மா (soul) போன்ற பதப் பிரயோகங்களை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தில்தான் புழங்கினார்கள். ஆன்மாவைப் பற்றி பேசுகிறபோது மட்டும், சற்று வித்தியாசமான கோணத்தில், மதவழிச் சுற்றில் அர்த்தப்படுத்தி பேசினாலும், கடைசியில் அதை மனதோடுதான் சம்பந்தப்படுத்தி பேசினார்கள்.

Mind என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. அது செய்வதாக கருதும் பணிகளை செய்வதெல்லாம் Brain தான்! ‘மூளையை முன்வைத்தே, மாயையாக நாம் நமக்குள் ஒர் நீதிதுறையை ஆக்கி வைத்திருக்கிறோம். அதில் கீழ்கோர்ட் மேல்கோர்ட் போன்ற அடுக்குகள், எதிர்எதிர் வழக்காட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என்பன எல்லாம் உண்டு. நாம் நமது செயல்பாடுகளை அங்கே ஒவ்வொரு கணமும் நிறுத்தி தீர்வுகாண தவறுவதில்லை. அந்த தீர்வின் அடிப்படையில்தான் இலகுவான, கனிந்த அல்லது கடினமான செயல்பாடுகளை நாம் தீர்மானமாகப் பெறுகிறோம். இதையேதான் மனதின் தீர்வாக பிரித்துப் பேசுகிறோம்.

இதயம்/ மனம்/ ஆன்மாயென நாம் குறிப்பிடும் அத்தனையும் நம்மால் உருவகிக்கப்பட்ட உருவகமே. காலாதி காலமாக இந்த உருவகத்தை மனிதகுலம் பல்வேறு நிலைகளில் உபயோகித்து, காபந்து செய்தப்படியே இருக்கிறது. நிஜத்தில் அப்படியான கூறுகள் நம் உடம்பில் இல்லை. இதயத் துடிப்பின் செயல்பாடு, சுவாச மண்டலச் செயல்பாடு, என்பதான ஒரு சில அனிச்சை செயல்பாடுகளைத் தவிர, மற்றைய உடல் இயக்கங்கள் அத்தனைக்கும் மூளைதான் பிரதானம். அதன் கட்டளைதான் எல்லாம். அப்படிதான் விஞ்ஞானம் சொல்கிறது. நான் நின்றதும் அங்கேதான்!

வாதிட்ட நண்பர்கள் என்னை ஒப்புக் கெள்ளவில்லை. மேலும்மேலும் அழகாக, கவிதை நயத்துடன் தங்களது பக்கத்தை விவரித்தார்கள். அதற்கு மேலே என்னால் முண்ட முடியவில்லை. எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது, கூடவே புகைப் பிடித்தால் தேவலாம். எழுந்து பொடிநடையாக வீட்டின் பின்புறம் போய்விட்டு வந்தேன்.

இப்பொழுது என் நண்பர்கள் மூவரையும் 'கஜல் புகழ்' குலாம் அலி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அங்கே குலாம் அலி இல்லை! அவர் இசையும் எதிரொலிக்கவில்லை! குலாம் அலி குறித்த அவர்களது பேச்சே அவர்களை சொக்க வைப்பதாகவும், ஆட்டிப் படைப்பதாகவும் இருந்தது. மூளை மகா கில்லாடி! இப்பொழுது நான், அவர்களை வேடிக்கைப் பார்ப்பவனாக அமர்ந்தேன்.

***

குறிப்பு: இந்த கட்டுரையை எழுதுகிறபோது Oxford mini dictionaryயைப் பார்த்தேன் அதில் 'Mind' என்பதற்கு Ability to be aware of things and to think and reason, originating in the brain என்று இருந்தது. பின், க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியை புரட்டினேன். அதில் 'இதயம்' என்பதற்கு மென்மையான உணர்வுகளுக்கு இருப்பிடமாக கூறப்பட்டிருந்தது. 'மனம்' என்பதற்கு ஒருவரின் எண்ணம், உணர்வு பேன்றவற்றிக்கு காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது என்கிறது. மேலும், 'மூளை' (Brain) என்ற பதத்திற்கு உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும், தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவ்வளவுதான்.
என் கட்சி சரியென்பர்கள் கைத்தூக்கலாம்.
நன்றி.

***
- தாஜ்

Pin It