காட்சி #1: (சோழ புரம் அரச சபை - எல்லா அமைச்சர்களும் தூங்கிக் கொண்டும் சிலர் பணிப் பெண்களிடம் சில்மிஷம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

அவையை தலைமை தாங்கி நடத்தும் புலவர் பானபத்ர ஒனாண்டியும், அரசன் துன்பமணியும், தளபதி மெலிந்த முத்துவும் வெகு மும்மரமாக விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவை நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்களும் அனுமதிக்கப் பட்டிருந்தனர். இனி அவர்களின் உரையாடல்...)

தளபதி மெலிந்தமுத்து: மன்னா!... நாடு இருக்கும் நிலைமையில் அக்காமாலா, கப்ஸி போன்ற நச்சு பானங்கள் தேவையா?

இம்சை அரசன் துன்பமணி: நச்சு இருக்கிறதா இல்லையா என்று ஆய்வு செய்ய ஒரு குழுவை போட்டுள்ளோம் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் சங்கதி தெரிந்து விடும்...

தளபதி மெலிந்தமுத்து: மன்னா!.. அது தெரியும் வரை மக்கள் நஞ்சை குடித்துக் கொண்டிருப்பதா?

இம்சை அரசன் துன்பமணி: லகுட பாண்டியா.... மண்டை மேல் மண்டை இருந்தால் மட்டும் போதாது மதி வேண்டும். மக்கள் நச்சு பானம் குடிக்ககூடாது என்று தெரிந்துதான் பஞ்சாயத்துக்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி ஓலைகளை அனுப்பியுள்ளோம். சோழபுர சட்டம் 7ன் படி பஞ்சாய்த்து புளியமரங்களுக்கு நச்சு பானங்களை தடை செய்ய உரிமை உள்ளது. அப்புறம் அது அவர்கள் பொறுப்பில் உள்ள விசயம். மன்னர் செய்வதற்க்கு ஒன்றுமில்லை.

தளபதி மெலிந்தமுத்து: அதே சட்டத்தின் சரத்துக்கள் மன்னரே நாடு முழுவதும் அக்காமாலா, கப்ஸ“யை தடை செய்ய வழி சொல்கிறதே... அதன்படி மன்னர் தடை செய்யலாமே?

இம்சை அரசன் துன்பமணி: யோவ்.. தளபதி.... உனது அப்பா போன முறை ஆட்சியிலிருந்த போது தடை செய்தாரா? இப்பொழுது மட்டும் என்னை கேட்கிறீர்கள்.... கிராதகா.... மூக்குக்குள் மீசையை விட்டு மூளையை குதறி விடுவேன்... ஜாக்கிரதை...

தளபதி மெலிந்தமுத்து: எனது தந்தையின் ஆட்சியின் பொழுது மொச(rabit) மூத்திரமும், பாம்பு புழுக்கையும் அந்த பானங்களில் இருந்ததாக நிருபிக்கப்படவில்லை. தற்பொழுதுதான், போன வாரம்தான் உங்க ஆட்சியிலதான் கண்டுபிடிச்சாங்க. நாங்க எங்க கிராம பஞ்சாயத்துலகூட தடை போட்டுட்டய்ம்.

தலைமைப் புலவர் பானபத்திர ஓனாண்டி: ஆமாம், ஆமாம்... தடை போட்டீர்கள் பிறகு அதை தூக்கி விட்டீர்கள்....

இம்சை அரசன் துன்பமணி: ஆமாம்... அவர்கள் எதை தடுத்தார்கள், எதை தூக்கினார்கள் என்று தெரியாதா?... இது பல பிரச்சனைகள் சம்பந்தப்பட்டது... விவசாய நெறிமுறைகளும்கூட இதில் சம்பந்தப்பட்டுள்ளது.....(தளபதி குறிக்கிடுகிறார்.... ஒரே சலசலப்பு).

தலைமைப் புலவர் பானபத்திர ஓனாண்டி: அரசவை இன்று ஒத்தி வைக்கப்படுகிறது.

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குடிமகன்: என்னடா இது..... கடைசி வரைக்கும் நாடு முழுவதும் தடை செய்றத பத்தி மன்னரும் ஒன்னும் சொல்லல... புலவரும் ஒன்னும் சொல்லல... தளபதியும் ஒன்னும் சொல்லல.... கடசில விவசாயத்தில ஏதோ பிரச்சனன்னு சம்பந்தமில்லாம ஒரு வார்த்த விடுறாரு..... எல்லாரும் வெள்ளிப் பணத்த எண்ணி வாங்கிட்டாங்களோ..... வேற வழியில்லை உக்கிரபுத்திரன்ட்ட போயி சேர்ந்திர வேண்டியதுதான்...

*****************

மேலே காணப்படும் உரையாடலுக்கும் நாடாளுமன்றத்தில் நடந்த கோக் ஆதரவு சதியாலோசனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

*********

காட்சி #2:(அரண்மனை உள்ளே போர்க்கள உடையுடன் ஆயுதம் தரித்து இம்சை அரசன் துன்பமணியும், அவரது அல்லக்கை மொக்கைப்பாண்டியரும்)

துன்பமணி: அமைச்சரே.. தொட்டுப் பாருங்கள். காய்ச்சல் அடிப்பதுபோல் தெரிகிறதா?

மொக்கைப்பாண்டி: ஆமாம் மன்னா, எனக்குக்கூட அப்படித்தான் உள்ளது.

துன்பமணி: என்ன தங்களுக்குமா?.... ஏன் அமைச்சரே நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது? ஒரு அக்காமாலாவுக்காக போரா?

மொக்கைப்பாண்டி: உக்கிரபுத்திரன் ஓலை அனுப்பினானே.... அக்காமாலா, கப்ஸியை தடை செய் இல்லையின்னா மக்களோட கோபத்துக்கு ஆளாவன்னு... கேட்டீர்களா?..... அனுப்பிய ஓலையை கிழித்துவிட்டு. புறாவை வறுத்து அக்காமாலவுடன் கலந்து ஒரு பிடி பிடித்தீர்களே..... இப்பொழுது வருத்தப்பட்டு என்ன செய்வது....

மொக்கைப்பாண்டி: உக்கிரபுத்திரனின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... அவன் வாசலை உடைத்து மக்கள் உள்ளே வரும்முன்......(துன்பமணி அமைச்சரின் வாயை பொத்துகிறார். கண்களில் நீர் கோர்க்க கண்ணீர் வடிக்கிறார்).

துன்பமணி: அய்யோ!... அய்யோ! ஒரு இழவும் புரியவில்லையே...... ஏன் அமைச்சரே இப்படி செய்துவிட்டால் என்ன?..... சமணச் சாமியார்கள் வேசம் போட்டு சந்தடி செய்யாமல் தப்பிவிடலாமே?

மொக்கைப்பாண்டி: சிரிக்கிறார்.....

தொடர்ந்து சிரிக்கிறார்......

துன்பமணி: ஏனய்யா சிரிக்கிறீர்.... மொக்கை..... சொல்லித் தொலையுமய்யா... மணிக்கொருதரம் மொக்கை என்பதை நிரூபித்துக் கொண்டே இரும்...

மொக்கைப்பாண்டி: நம்மை சமணச் சாமியார்கள் போல கற்பனை செய்து பார்த்தேன்... அம்மணமாக... சிரிப்பை அடக்க முடியவில்லை...

துன்பமணி: அமைச்சரே.... அது என்ன சத்தம்?......

மொக்கைப்பாண்டி: ஜங்கு சத்தம்.... மக்கள் கிளர்ந்து விட்டனர். மன்னா கிளம்புங்கள்..... உங்கள் உத்தியையே செய்லபடுத்துவோம்....

(அங்கே மக்கள், கோட்டை வாசலை உடைத்து கொண்டு பெருத்த ஆராவாரத்துடன் உள் நுழையும் பெரும் ஓசை கேட்கிறது.....)


- அசுரன்

Pin It