நேரமிருந்தால் கொஞ்சம் பேசலாமா தோழர் மார்க்ஸ்? நீட் தேர்வு எழுதும் மகனுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்குச் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மகன் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு உயிரிழந்து விட்டாராம்.

karl marx 379இந்த பரிதாபத்தை ஊடகங்கள் தியாகங்களாக்கத் தொடங்கிவிட்டன. இனி நரம்பு புடைக்க நாங்கள் பேசாவிட்டால் நல்லாயிருக்காது. ஒருவகையில் ஊடகங்கள்தான் எங்களைத் தூண்டிவிடுகின்றன.

இதேபோல்தான் சற்று நாட்களுக்கு முன் ஒரு சம்பவம். கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்கள் பிளம்பர் ராமச்சந்திரனும் இவரது மனைவி வெங்கடேஸ்வரியும். இருவரும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது விபத்துக்குள்ளானதில் சிகிச்சையின்போது வெங்கடேஸ்வரி இறந்துவிட்டார். தாயின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைத்திருந்தபோது அவரது மகன் அன்புச்செல்வன் எஸ்.எஸ்.எல்.சி ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வை எழுதினான்.

நல்லவேளை, அது அவ்வளவு பெரிய செய்தியாக்கப்படவில்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம்.

இப்போது அப்படி அல்ல. செய்தி பெரிதாகிவிட்டது. அதிர்ச்சி என்னவென்றால், திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான துரித முயற்சியில் மாநில அரசு இறங்கியதுதான். இது எங்களது வீராவேசப் பேச்சுக்களின் சுதியை அப்படியே குறைத்துவிட்டது.

இப்படித்தான்...

கடந்த ஆண்டு, அரியலுார் அனிதாவின் மரணத்தின் போது அப்படி பொங்கினோம்.  அதுவே, புதுவை அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த சிவசங்கிரி (17) தூக்கில் தொங்கியபோது அமைதியாகிவிட்டோம். ஒரே மாதிரியான சம்பவங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவது ரசிக்கும்படி இருக்காது.

சில நாட்களுக்கு முன்புதான் 12-ஆம் வகுப்பு முடித்து மருத்துவப் படிப்பிற்கு ஆயத்தமாகி வந்த தினேஷ் என்ற மாணவன், தன் தந்தையின் அளவு மீறிய குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்தான்.

நாங்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் மதுவிற்கு எதிரான போராட்டத்தில் எவ்வளவு நீண்ட நாட்களை செலவிட்டுள்ளோம். மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான சம்பவங்களில் ஈடுபட முடியாது.

சாதிப் பிரச்சினைகள் மட்டும் விதிவிலக்கானது. ஒரேயொரு சம்பவத்தோடு விடுபட்டு விடமுடியாது. தொடர்ச்சியாக எல்லா சம்பவத்திலும் தலையிட வில்லையென்றாலும் சிறிது இடைவெளி விட்டாவது செயல்பட வேண்டியிருக்கும். தருமபுரி இளவரசனுக்குப் பிறகு எல்லாவற்றையும் எளிதாக கடந்து சென்றாலும் பின்னர் உடுமலை சங்கர் மரணத்தில் தலையிட்டதைப்போல.

மரணத்தில் தொழில் பழகி...

1967 என கேள்வி. அப்போது தேர்தல்கள் அனல்பறக்குமாம். தேர்தல் பணிமனைகள் என்று மூலைக்கு மூலை குடில்கள் முளைக்குமாம். அப்படித்தான் நாகர்கோவிலில் ஒரு தி.மு.க தேர்தல் பணிமனை. இரவில் நல்ல போதையில் அக்கட்சிக்காரர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களுக்குள் தகராறு வந்து, கத்தியால் குத்திக் கொண்டதில் கிட்டு என்கிறவர் செத்துப்போனார். செய்தி கட்சித் தலைமைக்கு போக, இரவோடு இரவாக பெரிய தலைவர் ஒருவர் வந்தார்.

காலையில் “சிட்டென பறந்து கழகத்திற்குப் பணியாற்றிய கிட்டினைக் கொன்றனர் பாவிகள்!” என்ற பதாகையோடு மாபெரும் அமைதி ஊர்வலம் பெரிய தலைவரின் தலைமையில் நடந்திருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், இதேபோல் ஒரு முயற்சியை காங்கிரசார் மேற்கொள்ள முயன்றதுதான்.

ஆக, மரணத்தில் தொழில் பழகிய எங்களது பாரம்பரியம் நீண்ட மரபுடையது. இதில் நடராசன், தாளமுத்து என இந்தி எதிர்ப்பு தியாகிகளின் நீண்ட பட்டியல்தான் ரொம்ப நாள் பிழைப்பிற்குத் துணைசெய்தது. அதன்பிறகு ஈழத்திற்கான தியாகம். அப்துல் ரவூப்பில் அது தொடங்கியது.

இதுவரை எங்கள் தொழிலில் பெரிய போட்டிகள் இல்லாமலிருந்தது. 2009-லிருந்து நிறைய போட்டியாளர்கள் உருவாகிவிட்டார்கள். முத்துக்குமார் மரணத்தில் இருந்து உருவாகிய இப்போட்டியில் நிலைத்திருப்பதே பெரும்பாடு.

நல்லவேளை...

தொழிலில் போட்டியிருப்பது உண்மைதான். ஆனால் போட்டி ஒன்றும் கடுமையானது அல்ல. எல்லாரும் ஒரேமாதிரியான சரக்கைத்தான் வைத்திருக்கிறோம். பேச்சு... பேச்சு... பேச்சுதான் அது.

“இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்!” என ஒருவர் சொல்வோம். “இதற்கெல்லாம் பதில் சொல்ல வைப்போம்!” என்று இன்னொருவர் சொல்வார். “இந்த இழப்பிற்கு கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்!” என மற்றொருவர் சொல்வார். “பழிக்குப் பழி வாங்குவோம்” என வேறொருவர் சொல்வார். எல்லாம் ஒன்றேதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வோம். 

எங்கள் அதிர்ஷ்டம் என்னவென்றால், சொன்னதைச் செய்கிற செயல்பாட்டாளர்கள் இல்லாததுதான்.   

1943-இல் “அடித்தால் திருப்பி அடி” எனும் முழக்கத்தோடு தோன்றியவர்கள் இல்லை. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்! உழைப்பவருக்கே அதிகாரம்!” என்று - வாய்ப்பாடு போல் முழக்கமிடுகிறவர்கள் அல்ல - புரட்சிகர முழக்கமிடுகிறவர்கள் இல்லை. பாலியல் வெறியர்களும், சாதி கொடூரர்களுமான நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியார், நாகரசன்பட்டி தருமலிங்க செட்டியார் ஆகிய நிலச்சுவன்தார்களை 1970-களில் கொன்றொழித்த தோழர் அப்புவின் தலைமையிலானவர்கள் இல்லை. இப்படி நாள் குறித்து கணக்கு தீர்ப்பதற்கு அவருக்குப் பின் வந்த தோழர் பாலன் தலைமையிலானவர்கள் இல்லை. அவர்களின் வாரிசான தோழர் தமிழரசன் தலைமையிலானவர்கள் இல்லை.

ஆதலால்...

ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூதான் சர்க்கரையென்று தடையில்லாமல் போகிறது எங்கள் பிழைப்பு. அவ்வளவு சீக்கிரத்தில் பெரிய பாதிப்பொன்றும் வந்துவிடாது. ஏனெனில், சண்டையிடும் தைரியம் யாருக்குமில்லை. அதிரடித் தாக்குதல்கள் நடத்தி இந்த அரசை எதிர்க்க முடியுமென மக்களிடம் நம்பிக்கையை விதைப்பவர்கள் யாருமில்லை.

அரசு என்பது எல்லோருக்குமானது இல்லை, நமக்கான அரசை நம்மிலிருந்து நாமேதான் உருவாக்க வேண்டும், அது தேர்தல் மூலம் சாத்தியப்படாது என்று நிரூபிப்பவர்கள் இல்லை. சொத்துடைய வர்க்கங்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களையும், சொத்துடைய வர்க்கங்களை பாதுகாக்கிற காவல்துறை மற்றும் இராணுவங்களையும், அந்த சொத்துடைய வர்க்கங்களுக்கு சேவகம் செய்கிற ஐ.ஏ.எஸ் முதல் பியூன் வரையிலுமான அதிகார வர்க்கங்களையும் வைத்துக்கொண்டு நமக்கு எந்த விடிவும் கிடையாது என்று இன்றையத் தலைமுறைக்கு உணர்த்துகிறவர் எவரும் இல்லை.

இன்றையத் தலைமுறை எங்களுக்கான மிகப் பெரிய பலம். அதிலும் ஏதோ ஒருவகையில் தங்களை வெளிக்காட்டிக் கொள்கிற வாய்ப்புடைய பிரிவினர் முக்கியமான பலம். நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இப்பிரிவினர் தமது வர்க்க நிலைமைக்கேற்ற சின்ன பட்ஜெட் போராட்டங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இடர்பாடுகளுக்கு உதவுதல், இறந்தவர் குடும்பத்திற்கு உதவுதல், ஒரு சில நாட்களை தியாகம் செய்தல் என்கிற போராட்ட வடிவங்கள்தான் இவர்களின் எல்லை.

இவர்களின் குரல்தான் பேரிரைச்சலாக இன்றைக்கு சமூகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த சின்ன பட்ஜெட்காரர்கள் எங்களுக்கு மிக சாதகமானவர்கள். ஏதோ முடிந்தவரையில் செய்தோம் என்று நிறைவடைந்து கொள்கிறவர்கள். இவர்களுக்கு நிலையான தீர்வு எதுவும் தேவையில்லை. ஏனென்றால் இவர்களுக்கு எதிர்காலத்தின் மீதான அக்கறையைவிட இப்போதைய வாழ்வை இழந்துவிடக்கூடாது என்னும் கவலையே அதிகம். ஆதலால், ஏதோ முடிந்தவரை செய்தோம் என நிறைவடைகிற இவர்கள், எங்களையும் ஏதோ முடிந்ததை செய்கிறார்கள் என சகித்துக் கொள்கிறார்கள்.

இப்படி இவர்களின் ஆதரவோடுதான் மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி எந்த சேதாரமும் இல்லாமல் வாழ்கிறோம் தோழர் மார்க்ஸ். 200 ஆண்டுகளைக் கண்ட உங்களிடம் பொய் சொல்லக்கூடாதல்லவா! உள்ளதை சொல்லிவிட்டேன். நன்றி தோழர் மார்க்ஸ்.

- திருப்பூர் குணா