“அவ வாயில மூத்திரம் பேயிடா...” குழந்தையின் பாட்டி வாயெல்லாம் பல்லாக சொன்னாள். “பேயிடா... பேயிடா... பேயிடா...” சொல்லிக்கொண்டே வள்ளி முத்தம் கொஞ்சுவதை நிறுத்தவில்லை.

வள்ளி எப்போதும் இப்படித்தான். ஆண் குழந்தைகளை குஞ்சாமணியில் முத்தம் கொடுத்து கொஞ்சுவதே அவளது இயல்பு. “இது அவளையறியாமலே அவளுக்குள்ளிருக்கிருக்கும் பாலியல் பிரச்சினை...” என யாராவது வாயைத் திறக்கும் முன்பே சொல்லிவிடுகிறேன். வள்ளி மட்டுமல்ல பெரும்பாலான பெண்களும், ஆண்களும் இயல்பாக இப்படித்தான் கொஞ்சுவார்கள். பெண் குழந்தைகளை தொப்புள் துளைக்க முத்தமிட்டு கூசச் செய்வார்கள். ஆணோ, பெண்ணோ குழந்தைகளை உதட்டில் முத்தம் கொடுப்பது உறவின் அன்யோன்யம்.

child abuse 620

அஞ்சு வயசுக்கு மேலேயும் அம்மணமா திரியிற குழந்தைகள்தான் அதிகம். வெயில்காலம் தொடங்கிவிட்டால் பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஆடைகள் அணிவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள்.

“இங்கேரு... ஓங் குஞ்சாமணிய அறுத்து காக்காவுக்குப் போடல...

டேய்... ஓட்ட குண்டி, தபால் பொட்டி...

ஏண்டி! ஆட்டிமால, பொட்டச்சிதான நீயி... இப்புடி பொறந்தமேனிக்கு அலையிற...” இவையெல்லாம் குழந்தைகளை பெரியவர்கள் சீண்டி விளையாடும் வார்த்தைகள்.

சீண்டப்படும் குழந்தைகளும் கையை வைத்து பொத்திக்கொண்டு நாணிக் கோணி செல்லும் அழகில் அகிலத்து அதிசயமெல்லாம் தோற்றுப்போகும்.

எட்டு, பத்து வயதுவரை படுக்கையில் மூத்திரம் பெய்வதும், ஊரே சொல்லி சிரிப்பதும் சாதாரணம். திருவிழா, பண்டிகை, விடுமுறை காலங்களில் சின்ன வீடுகள் சொந்தங்களால் பிதுங்கும். தூக்கத்துல டவுசர் கழண்டு போறவனின் குஞ்சில் கயிறு சுருக்கு மாட்டப்படும். பாவாடை மேலேற தூங்குபவளுக்கு குண்டியில் சந்தனம் பூசப்படும்.

இவையெல்லாம் விளையாட்டுதான். ஆனால், இவைதான் குழந்தைகளை இயல்பாக இருக்கச் செய்து, விகல்பம் இல்லாமல் வளர்த்தெடுக்கும் முறை. வயதுக்கு மீறின கெட்ட எண்ணங்களில் விழாது தடுக்கும் செயல். குழந்தைகளை பாலுறுப்புகளின் மீது அக்கறை கொள்ள வைக்கும் அதேநேரத்தில் அதுகுறித்த கவர்ச்சியும், பாலுணர்வும் மேலோங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை.

பிரச்சினைக்கு வருவோம்!

அசீஃபா நமது எட்டு வயது குழந்தை. அவளை சில மிருகங்கள் குதறிக் கொன்றன. அசீஃபா மட்டுமல்ல, இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 5 குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதிலும் 46 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நன்கு தெரிந்தவர்கள் மூலமே நிகழ்கிறது என்பதுதான் கொடுமை.

இப்படி உலகம் கண்டும் கேட்டுமிராத வகையில் கெட்டுக் கிடப்பதைக் கண்டு பெற்றோர்கள் பரிதவித்து துடிக்கும் போதுதான் நமது முதலாளித்துவ முட்டாள்கள் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ கற்றுக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

இதைப் பேச்சின் ஊடாக இயல்பாக சொல்லிக் கொடுக்கணுமாம். “உனக்கு அம்மா ஒரு புது பேபி சோப் வாங்கியிருக்கேன். அப்புறம் செல்லம்... நீ குளிக்கும்போது அம்மா, அப்பாவைத் தவிர வேற யாரையும் பாத்ரூம்குள்ள விடக்கூடாது சரியா? கன்னம், கை, உச்சந்தலைன்னு இங்கயெல்லாம் உன்னை யாராச்சும் செல்லமா, சாஃப்ட்டா, ஒரே ஒரு தடவை தொட்டா அது குட் டச். அதுக்கு மேல மறுபடியும் மறுபடியும் தொட்டுட்டே இருந்தாலோ, மார்பு, இடுப்பு, பின்பக்கம், பிரைவேட் பார்ட், தொடையில் எல்லாம் யாராச்சும் உன்னைத் தொட்டாலோ அதெல்லாம் பேட் டச். அப்படி யாராச்சும் செய்தா, சட்டுனு அவங்ககிட்ட, ‘நீங்க என்னை பேட் டச் செய்றீங்க. எங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்’னு கோபமா சொல்லிடணும். அப்படி செஞ்சவங்களை வந்து அம்மாகிட்ட உடனே சொல்லணும். உனக்கு நல்லா தெரிஞ்ச பக்கத்து வீட்டு அண்ணா, ஸ்கூல் ஆட்டோ டிரைவர், எதிர்வீட்டுத் தாத்தா, சொந்தக்கார மாமான்னு யாரா இருந்தாலும், எல்லாருக்கும் இதே ரூல்தான்.

உன்னோட பிரைவேட் இடத்தை யாரையும் தொடவிடக்கூடாது. யாரையும் உதட்டுல முத்தம் கொடுக்கவிடாதே. உன்ன யாராவது டிரெஸ் கழட்டச் சொன்னா அதை செய்யவே கூடாது. கஷ்டப்படுத்தி கட்டிப்புடிச்சா ‘காப்பாத்துங்க’ன்னு கத்தணும். யாரையும் உன்னைத் தொட்டுப்பேச அனுமதிக்கக் கூடாது. உன் கையைப் பிடிச்சு இழுத்து அவங்களைத் தொட வெச்சா, தொடாதே. தெரியாதவங்க யாராச்சும் உன்னைத் தொட்டுப் பேசினா, ‘என்னைத் தொடாதீங்க’ன்னு அவங்ககிட்ட சத்தமா சொல்லணும்; ‘பாப்பா இங்க வாங்க’ன்னு தனியா கூப்பிட்டா போகவே கூடாது. இதெல்லாம்தான் பேட் டச். இதெல்லாம்தான் மிஸ்பிஹேவ் பண்றது...” இப்படி நீள்கிறது அந்தப் பிதற்றல்.

இதன் முதல் அபாயம் என்னவென்றால், பாலுணர்வு மேலோங்காமல், பாலுறுப்புகளின் மீது கவர்ச்சி மேலிடாமல், இயல்பாக, விகல்பம் இல்லாமல் வளர வேண்டிய குழந்தைகளிடம் வயதுக்கு மீறின கெட்ட எண்ணங்களையும் பாலியல் சார்ந்த சிந்தனையையும் நாமே தூண்டி விடுகிறோம் என்பதுதான். இப்படி பயிற்றுவிக்கப்படுகிற குழந்தைகள் தம்மீதான தொடல்கள் குறித்த பயம் மேலோங்கி தமக்குள் சுருங்குவதோடு, பெரியவர்கள், பெற்றோர்கள் உட்பட மற்றவர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் தொடல்களின் அர்த்தம் என்ன? என்கிற சிந்தனையில் மூழ்கும்; சீரழியும்.  

இந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் குழந்தைக்கு தேவைப்படுவது அவர்களின் உலகம்; பல குழந்தைகள் கூடி களிக்கும் குழந்தைகளுக்கான உலகம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விளையாட்டு; அதுவும் கூடி விளையாடும் விளையாட்டு. இப்படி ஒரு உலகம் வாய்க்கப் பெற்றக் குழந்தைகள் தங்களுக்கு சம்பந்தமில்லாத, தங்களுக்கு ஒத்துவராத நபர்களோடு இணங்குவதில்லை. விளையாட்டாக இல்லாதவகையில் எது நேர்ந்தாலும் அவர்கள் எதிர்ப்பு காண்பிப்பார்கள். அதை தங்களது பெற்றோர்களிடத்தில் அவர்களே இயல்பாக தெரிவிப்பார்கள். எனவே குழந்தைகளைப் பாதுகாக்க அவர்களுக்கு அவர்களின் உலகத்தை மீட்டுக் கொடுப்பது ஒன்றே வழி.

இன்னொரு வேலை என்னவென்றால், குழந்தைகள் என்றும் பாராமல் வேட்டையாடுகிற மிருகங்களை எதிர்கொள்வது. நமது முதலாளித்துவ மூடர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்றால், காப்பாத்துங்கன்னு சத்தமா கத்தணுமாம். அட அறிவாளிகளே! கத்துவதுதான் காப்பாற்றுமென்றால், ஆபத்திற்குள்ளாகிற வளர்ந்த பெண்கள் எல்லாம் கத்தாமலா இருந்திருப்பார்கள்? அவர்களது குரல் சிறுமிகளைவிட சத்தமாக கேட்குமே!

இதற்கு ஒரே வழி சாதாரண மனிதனை மிருகமாக மாற்றும் சூழலை மாற்றுவது. விரக்தியையும் வேதனையையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்குகிற வாழ்க்கையை மாற்றுவது. விரக்தியும் வேதனையும் நம்பிக்கையின்மையும் கொண்ட மனிதனுக்கு போதையையும், சீரழிவையும் வழங்கி மிருகமாக்குகிற சமுதாயத்தை மாற்றுவது.

இவையெல்லாம் இல்லாமல் நல்ல நிலையிலிருந்தாலும் கூட சிலர் மிருகங்களாகவே இருப்பர். அது விதிவிலக்கு. விதிவிலக்குகளை ஈவு இரக்கமில்லாமல் அழித்துவிடலாம்.

அப்புறமென்ன, குழந்தைகள் அச்சமின்றி வளரலாம்!

- திருப்பூர் குணா