Narmada damவனங்கள், காற்று, தண்ணீர், நதிகள் என வாழ்வின் ஜீவாதாரங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாய் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு பெரும் அதிகார பீடங்களின் சொத்தாய் மாற்றப்பட்டு வருகிறது. சொந்த மண்ணில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகதிகளாய் உருமாறி வருகிறார்கள். பூமியில் உள்ள எல்லா இயற்கை வளங்களையும் பெரு வணிகம் சந்தை கண்ணோட்டத்துடன் தான் அணுகுகிறது. இயற்கை வளங்களை அபகரிக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படும் எல்லா திட்டங்கள் பற்றியும் அரசாங்கமும் சரி சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் சரி என்றும் உண்மையை பேசியதில்லை. பச்சை பொய்கள் பேசிக் கொண்டு சுதந்திர இந்தியாவின் பல அரசாங்கங்கள் இதுவரையிலும் பல கோடி மக்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளது. அப்படி நம் காலத்து மிகப் பெரிய சாட்சியாய் விளங்குகிறார்கள் நர்மதா அணையினால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சம் குடும்பங்கள். அணைகள், சுரங்கங்கள், பெரிய தொழிற்சாலைகள், அணு ஆயுத சோதனை என ஏராளமான தலைப்புகளில் மக்கள் தங்கள் சொந்த பூமியிலிருந்து பெயர்த்து எறியப்படுகிறார்கள். இப்படி பெரிய திட்டங்கள் அனைத்தும் வெளிப்படையான திட்டமிடுதல்களோடு நடப்பதில்லை. நர்மதா அணை கட்டத் துவங்கிய காலத்தில் அரசாங்கம் வெறும் 20,000 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று தான் திட்டத்தை துவங்கியது. சுதந்திர இந்தியாவில் இப்படி அகதி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டுகிறது.

பெரிய அணைகள் கட்டுவதில் உள்ள ஆபத்தை நன்கு உணர்ந்த வளர்ச்சி அடைந்த நாடுகள், பெரிய அணைகள் கட்டவதை கை கழுவி நாற்பது வருடங்களாகிவிட்டது. பெரிய அணைகளுக்கு நாம் கொடுக்கும் இயற்கை மற்றும் மனித விலைகள் கடுமையானவை. அதனால் பூகம்பம் ஏற்படும் மற்றும் ஆறுகளின் போக்கை திசைமாற்றியதில் பல ஆறுகள் வறண்டு போயின. முட்டாள்தனங்கள் நிறைந்த அறிவியல் நடைமுறைகளை பின்பற்றியதில் பல கடல்கள் பூமியில் அழிந்து போன வரலாறு நம் முன் உள்ளது. இயற்கை நமக்கு சதா பாடம் கற்பித்தும், அதிலிருந்து தொழிற்துறையும், உலக அரசாங்கங்களும் எந்த பாடத்தையும் கற்கவில்லை.

தங்களின் ரத்த கறை படிந்து கோரப் பற்களுடன் லாப வெறி பிடித்து உலகை வலம் வருகிறது உலகமயமாதல். உலகமயத்தால் ஏற்படும் நன்மைகளைவிட மூன்றாம் உலக நாடுகளுக்கு பாதிப்பு தான் அதிகம். உலக சூழலின் பின்புலமாய் இருக்க நாம் சற்று நர்மதை பள்ளத்தாக்குக்குள் இறங்கி செல்லலாம்.

மத்திய பிரதேசத்திலிருக்கும் அமர்கந்தக் மலை தொடரிலிருந்து கிளம்பும் நர்மதா ஆறு அரபிக் கடலில் கலப்பதற்கு முன்பு மத்திய பிரதேஸ், மகாராஷ்டிரா, குஜ்ராத் மாநிலங்களின் வழியாக 1300 கி.மீ. பயணிக்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் அதை சூழ்ந்த வனங்களில் இயற்கையுடன் தீராத உரையாடலில் உள்ளவர்கள் இரண்டரை கோடி. 1946 வாக்கிலேயே அணை கட்டுவதற்கான பேச்சு துவங்கியது. 1961ல் நேரு குஜராத்தில் கோராவில் 49.8மீட்டர் உயர அணைக்கான அடிக்கல் நாட்டினார். 1969ல் மத்திய அரசு நர்மதா நதி நீர் ஆணையத்தை உருவாக்கியது. அணையின் நீர் கொள்ளளவு மற்றும் கட்டுமானம் தொடர்புடைய விசயங்களில் மட்டுமே ஆணையம் கவனம் செலுத்தியது. அதனால் ஏற்படவிருக்கும் அழிவுகள் மற்றும் துயரங்கள் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை அரசுகள். அந்த பகுதியின் மழை அளவு, அந்த ஆற்றின் நீர் ஓட்டம் என எந்த அடிப்படை தரவுகள் கூட இல்லாது கட்டுமானத்திற்கான வேலைகள் மட்டும் தீர்மாணிக்கப்பட்டது.

அந்த திட்டத்தி‎ன் படி மொத்தம் 3200 அணைகள் கட்டுவது என முடிவெடுத்தார்கள். இதில் 30 பெரிய அணைகள், 135 நடுத்தர அணைகள் மற்றும் 3000த்திற்கும் மேற்பட்ட சிறிய அணைகள். அணைகள் அந்த மூன்று மாநிலங்களில் விரவிகிடக்கும். மூன்று மாநிலங்களை சேர்ந்த இரண்டரை கோடி பேர் இதனால் பாதிப்படைவார்கள் என்றது அரசாங்கம், சம்பந்தப்பட்ட மக்களிடம் கூட தெரிவிக்கவில்லை. 1987ல் தான் இந்த திட்டத்தை மத்திய சுற்றுபுறச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்தது, ஆனால் அதற்கு முன்பே 1985ல் இந்த திட்டத்திற்கு 450 மில்லியன் டாலர் கடனளிக்க உலக வங்கி முன் வந்துவிட்டது. திட்டத்தால் பாதிப்படைய இருப்பவர்கள் பற்றிய பேச்சுக்கள் துவங்கிய நேரத்தில், அது வரையிலும் இல்லாத புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

அது குஜராத்தின் வறண்ட பகுதிகளான கட்ச், மற்றம் சவுராஸ்டிராவுக்க குடிநீர் அளிக்கும் திட்டம். இதற்கு அடுத்த மொத்த குஜராத்தை திசை திருப்ப கட்ச, சவுராஸ்டிரா என்ற வார்த்தைகள் மந்திரம் போல் உருமாறியது. ஆனால் வேடிக்கை அந்த பகுதிகளுக்கு மிகவும் நெருக்கமாக ஓடும் சபர்மதி மற்றும் மாகி நதிகளின் நீரை அணைகட்டி அகமதாபாத், கேதா, மேக்சானா நகரங்களுக்கு அரசாங்கம் திசை திருப்பியிருந்தது. 1979 வரையிலும் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் யோசனையே இல்லை, 1980களில் 4719 கிராமங்கள், 90ல் 7234 கிராமங்கள் என 91ல் அது 8215 கிராமங்கள் என அதுநிலை கொண்டது. இந்த பட்டடியலில் குஜ்ராத் அரசு மக்கள் வசிக்காத 236 கிராமங்களை சேர்த்திருந்தது.

1979ல் அணையினால் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டியவர்களின் 6,000 குடும்பங்கள் அறிவிக்கப்பட்டது. 1987ல் 12,000, 1991ல் 27,000, 1992ல் 40,000. ஆனால் களத்தில் அது இரண்டு கோடியை நெருங்கியது.

திட்டம் துவங்கிய காலத்தில் அதன் செலவு 6,000 கோடியில் துவங்கி இன்று 40,000 கோடி என வளர்ந்து நிற்கிறது. எல்லா அணைகளும் இயங்கத் துவங்கினால் 1450 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்பது பூர்வாங்க அறிவிப்பு. ஆனால் 1999 வரை 50 மெகாவாட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

1990ல் ஜபல்பூர் அருகில் உள்ள பார்கி அணை கட்டப்பட்டது. 162 கிராமங்களில் வசித்த 70,000 மக்கள் எலிகளை போல விரட்டியடிக்கப்பட்டார்கள். ஆனால் வேடிக்கை பல புனரமைப்பு முகாம்களும் இதில் மூழ்கியது. இப்பொழுது மொத்தத்தில் இந்த ஒரு அணை மட்டுமே 1,14,000 பேரின் வாழ்வை நிர்முலமாக்கியது.

1988ல் மேதா பட்கர் என்ற வீரமங்கையின் பெயர் உலகளாவிய ஊடகங்களில் அடிபட துவங்குகிறது. இந்த அணையின் கட்டுமானத்தை நிறுத்த புறப்பட்ட சூறாவளியாய் அவர் நர்மதை பள்ளத்தாக்குக்குள் பயணித்து மக்களை அணி திரட்ட துவங்கினார். நர்மதா பாதுகாப்பு இயக்கம் (நர்மதா பச்சாவோ ஆள்தோலன்) உருபெற்றது. 1989ல் 50,000 பேர் ஹர்ஸதில் திரண்டார்கள். தொடர்ந்து 1990ல் பாட்வானியில் பெரிய அளவில் மக்கள் திரண்டு தங்கள் ஊர்களிலிருந்து வெளியேறப் போவதில்லை என சூளுறைத்தார்கள்.

Protestersஉலகம் முழுவதிலுமுள்ள சுற்றுபுறச்சூழல் இயக்கங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். உலக வங்கி இயங்கும் கட்டிடம் முன் போராட்டங்கள் வெடித்தன. ஜப்பானிய புவியின் நண்பர்கள் இயக்கம் கொடுத்த நெருக்கடியின் காரணமாக இந்த திட்டத்திற்கு ஜப்பான் அரசு அளித்து வந்த 27 பில்லியன் யென் கடனை அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். மொத்த திட்டத்திலிருந்து பின் வாங்கினார்கள்.

மேதா பட்கரின் போராட்டங்களை அரசாங்கம் காவல்துறை மூலம் கடுமையான ஒடுக்கியது. ஊடகங்களின் வாயிலாக நகர்புற மத்திய தர வர்க்கத்தை இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சி தொடர்புடையது என நம்பத் துவங்கின. போராடும் மக்கள் மீது தடியடி, பொய் வழக்குகள் என வழக்கம் போல் அரசு தன் சேவையை துவங்கியது. சர்வதேச ஊடகங்களின் நெருக்கடியால் உலக வங்கி இந்த திட்டத்தை ஆராய பரிசீலனை குழு அமைப்பதாக அறிவித்தது. ப்ராட்ஸ்பர்டு மூர்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் 1991 செப்டம்பரில் இந்தியா வந்து சேர்ந்தார்கள்.

மொத்த திட்டத்தை அணு அணுவாய் ஆய்வு செய்தார்கள். கிராமம் கிராமமாக பயணித்தார்கள். மக்களை சந்தித்துப் பேசினார்கள். அணையின் இருபுறமும் பல பயணங்கள். 1992 ஜுன் மாதம் 357 பக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை நர்மதா திட்டம் மிகவும் ஆபத்தானது. எந்தவித அடிப்படை தகவல்கள் கூட திரட்டப்படாமல் கட்டுமானத்தை அரசு துவக்கியுள்ளது. சுற்றுப்புறச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. நடப்பு சூழலில் எந்த புனரமைப்பும், மறுவாழ்வழிப்பும் சாத்தியமில்லை என பகிரங்கப்படுத்தியது. அதனால் பணம் விரயமாவதை தடுக்க உடனடியாக திட்டம் கைவிடப்பட வேண்டும் அந்த பகுதியின் மனித வாழ்வை கேள்விக்குறியாக்கும் இந்த திட்டத்தை உலக வங்கி கடனளித்திருக்க கூடாது, நடந்துள்ள சேதாரங்களுக்கு உலக வங்கியும் பொறுப்பேற்க வேண்டும் என திடமாக அறிக்கை முன்வைத்தது.

உலக வங்கி இந்த அறிக்கையில் திருப்திப்படவில்லை. தொடர்ந்த இரண்டு மாதங்களில் அடுத்த ஆய்வுக்குழு வந்தது, அது பமேலா ஃபாக்ஸ் குழு. 1992 அக்டோபரில் அந்த குழு சில இடைக்கால திட்டங்களை கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்த பரிந்துரைத்தது. அதை கூட மூன்று மாநில அரசுகளால் செய்ய முடியவில்லை. 1993 மார்ச் 30ஆம் தேதி உலக வங்கி இந்த திட்டத்திலிருந்து பின்வாங்கியது. அதற்கு ஒரு நாள் முன்பு 29 மார்ச் 1993ல் இந்திய அரசு உலக வங்கியை நர்மதா திட்டத்திலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டது. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி பள்ளதாக்கின் மக்கள் மனங்களில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

1993 ஆகஸ்டில் இந்திய அரசு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய ஐவர் குழு அமைத்தது. அந்த குழுவின் உறுப்பினர்களை குஜராத் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் விரட்டியது மாநில அரசு. 1994 மே மாதம் அணையின் கட்டுமானத்தை நிறுத்தக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

1994 மழை காலத்தில் சர்தார் சரோவர் அணையின் 65,000 கனமீட்டர் கான்கிரீட்டை அடித்து சென்றது அணை நீர், 30,000 கன மீட்டர் பாறைகளும் அடித்து செல்லப்பட்டது. இதை அரசாங்கம் பல மாதம் ரகசியமாக வைத்திருந்தது. 1995ல் உச்சநீதிமன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது. மத்திய பிரதேசத்தில் நர்மதா சாகர் மற்றும் மகேஸ்வர் அணையின் கட்டுமானம் துவங்கியது. வேடிக்கை மகேஸ்வர் அணையிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை எஸ்.குமார்ஸ் ஜவுளி ஆலைக்கு மட்டுமே வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

உச்சநீதி மன்றத்தின் நெருக்கடியால் குஜராத் அரசு மறுவாழ்வளிப்பு, புனரமைப்பு என்ற பெயரில் மக்களை சின்னாபின்னப் படுத்தியது. 19 கிராமங்களை சேர்ந்தவர்களை 175 முகாம்களுக்கு பிரித்து அனுப்பியது. அந்த சமூகத்தின் எல்லா உறவுகளையும் சிதைத்தது. அகதி முகாம்களாய் மாறியது புனரமைப்பு மையங்கள். பல குடும்பங்கள் கூட பிரித்து லாரிகளில் ஏற்றி நினைத்த முகாம்களில் கொட்டிவிட்டது அரசு.

தகர கொட்டகைகளில் அடைப்பட்டார்கள் மக்கள். இது கூட பாதிக்கப்பட்ட 20% பேருக்கு கூட கிடைக்கவில்லை. சுகாதார கேடு, மின்சாரம், சாக்கடை என அடிப்படை வசதிகள் கூட இல்லாத முகாம்கள். மகாராஸ்டிராவில் மணிபேலி முகாமில் 40 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். ஓராண்டுக்குள் அந்த முகாமில் 38 குழந்தைகள் இறந்தனர். நதியை அபகரித்துக் கொண்டு அவர்களுக்கு அடி குழாயை வழங்கியது அரசு. மலேரியா, காலரா என இலவச இணைப்புகள் வேறு, கூட்டம் கூட்டமாக மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு பிழைப்பு தேடி செல்லத் துவங்கினர். பம்பாய், தில்லி வரை பஞ்சம் பிழைக்க இவர்கள் பயணமானார்கள்.

வாழ்கையை முற்றிலும் புதிதாய் துவக்க வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு. புதிய சூழல், புதிய மொழி, பணம், வேலை, மலம் கழிப்பது, மூத்திரம் பெய்வது வரை புதிதாய் கற்றுக்கொள்ள நேர்ந்தது. இடமின்றி புதுதில்லியின் சாலைகளில் மலம் கழித்த இருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பல கிராமங்களிலிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்கள் இப்பொழுது அரசாங்கம் பல மதவாத தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்தளித்தது. சுவாமி நாராயன் ட்ரஸ்டுக்கு 11 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன் வேலிக்கு வெளியே நிலத்தின் உரிமையாளர் தேவி ஃபேகன் நிற்கிறார். தண்ணீரில் மூழ்கிய சோப்ளனேஸ்வர் கோவிலின் மாதிரியை 30 ஏக்கர் நிலத்தில் உருவாக்குகிறது பொதுபணித்துறை. இல்லாத கோவிலை கட்ட மசுதியை இடித்த பெருமைக்குறியவர்கள்.

அணையின் மறுபுறத்தில் இருந்த கிராமங்களில் பல வதந்திகளை பரப்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நில முதலைகள் கைப்பற்றிவிட்டனர். இதில் பி.ஜே.பி, காங்கிரஸை சேர்ந்தவர்கள் மற்றும் குஜராத்தின் பெரும் முதலாளிகளின் கூட்டு மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்பட்டது. இவர்கள் தான் குஜராத் முழுவதும் அணை சர்ச்சையை அடிப்படைவாத விசயமாக உருமாற்றியவர்கள்.

அணை தண்ணீரை பல இடங்களுக்கு கொண்டு செல்ல கால்வாய்கள் அமைக்க தோண்டினார்கள், இந்த கால்வாய் அந்த வழியில் வந்த பல கிராமங்களை பெயர்த்து எறிந்தது. மொத்தம் 75,000 கி.மீ. நீளம் குஜராத்தின் குறுக்கும் நெடுக்குமாக கால்வாய்கள், அவைகளில் 1,000 கி.மீ. நீள கால்வாய்கள் கூட இன்று தண்ணீரின் ஓட்டத்தை ஸ்பரிசிக்கவில்லை.

கேரளாவில் பெரியார் அணையின் உயரம் அதிகரிப்பை முன்வைத்து எந்த கட்சியும் அரசியல் நடத்த இயலாது. அதுபோல் கர்நாடகத்தில் காவிரி நீர், குஜராத்தில் நர்மதா. இவையெல்லாம் இந்திய அரசியலின் சாபக்கேடுகள். மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாய் கிடக்க அதை பற்றிய எந்த கவலையும் இல்லாது அணையின் உயரத்தை 110.64 மீட்டரிலிருந்து 121.92 மீட்டராக உயர்த்த அனுமதியளித்தது நர்மதா அதிகார ஆணையம். ஏற்கனவே 110 மீட்டர் உயரத்திற்குள் பாதிப்படைந்த 40,000 குடும்பங்கள் கதியற்று கிடக்க அணையின் உயரத்தை கூட்ட முடிவு செய்தது பொறுப்பற்றது. இந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வளித்துவிட்டு உயரத்தை கூட்டும் பணியை துவக்க வேண்டும் என குரல் எழுப்பினர் மேதா பட்கர். எல்லாவித ஜனநாயக வழிமுறைகளிலும் அவர் முயற்சி செய்துவிட்டு கடைசியாக புதுதில்லி ஜந்தர் மந்தர் அருகில் தனது உண்ணாவிரதத்தை துவக்கினார். அவருடன் அணையால் பாதிக்கப்பட்ட ராஜா பாய், பானாபாய் இருவரும் பேரும் இணைந்து கொண்டு சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினர்.

அருந்ததி ராய், வந்தனா சிவா, வி.பி. சிங், குல்திப் நய்யார், சுவாமி அக்னிவேஷ், பிரிந்தா காரத் என சரம் சரமாய் உண்ணாவிரதத்தை ஆதரித்து இந்தியாவின் அறிவு ஜீவிகளும், மக்கள் இயக்கங்களும் முன்வந்தனர்.

மறுவாழ்வளிப்பை துரிதப்படுத்தாமல் நீர்வளத்துறை அமைச்சர் சயிப்-உத்-தின்-சோஸ் தினமும் பழச்சாறுடன் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும் படி மன்றாடினார். பிரதமர் அலுவலகம் ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சகத்தை நர்மதா பள்ளத்தாக்குக்கு சென்று நிலைமையை ஆராய, உத்தரவிட்டிருந்தது. கடும் நெருக்கடிகளுக்கு பின் அந்த அமைச்சகக்குழு மூன்று மாநிலங்களுக்கும் பயணித்து உண்மை நிலையை அறிந்தது. மாநில அரசுகள் தயாரித்திருந்த போலி ஆவனங்களின் அம்பலமாயின.

இந்த மோசடியை மூடி மறைக்க தனது உண்ணாவிரதத்தை துவக்கினார் குஜராத் முதல்வர் மோ(ச)டி. உண்ணாவிரதத்தை ஆதரித்த அமீர்கானின் திரைப்படம் திரையிடப்பட்ட திரை அரங்குகளை சேதப்படுத்தினார்கள். (அமீர்கான் கூட ரங்தே பசந்தி திரைக்கதையின் பாதிப்பில் தான் வந்திருப்பார் போல் தோன்றுகிறது.)

மேதா பட்கர் எந்த வாக்குறுதியையும் ஏற்றுக் கொள்ளாது அணை கட்டுமானம் மறுவாழ்வளிப்பு பணிகள் நிறைவடையும் வரை நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மன்மோகன் சிங் அரசு நர்மதை அணை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையை பொறுப்புடன் அனுக மறுத்தது. பிரதமர் அலுவலகம் சர்ச்சையை உச்சநீதிமன்றத்து பக்கம் நகர்த்தியது. உச்சநீதிமன்றமோ பழைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பேச்சு வார்த்தை மூலம் பிரதமர் தான் இதை தீர்க்க வேண்டும் என நழுவிக் கொண்டது.

இருவரும் பொறுப்பேற்க மறுத்ததை - நாடு தலைகுனிந்து நின்றது.

அடுத்த வேடிக்கை சிறப்பு வாழ்வளிப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட லட்சம் ரூபாய்க்கு பத்தாயிரம் வருமான வரியாக பிடிக்கப்பட்டதாம். 40,000 குடும்பங்களுக்கு மறுவாழ்வளிப்பு காகித அறிக்கைகளில் மட்டும் வழங்கப்பட்டிருந்தது. எந்த கிராமசபையும் கடந்த பத்தாண்டுகளில் கூட்டப்படவில்லை.

ஏற்கனவே பழைய கொள்ளளவு படி உள்ள தண்ணீரையே முறையாக அரசுகள் பயன்படுத்தவில்லை என்று கடும் கண்டனங்களை குஜராத் தணிக்கை குழு தெவித்திருந்தது. குறைநீக்க குழுவிடம் இதுவரை 5,000 மனுக்கள் குவிந்துள்ளனர். அதில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. அந்த குழுவை சேர்ந்த எவரும் நர்மதா பள்ளத்தாக்குக்கு கடந்த 6 வருடங்களாக சென்றதேயில்லை.

Medhaசமீபத்தில் அங்கு மக்களுக்கு ஆறுதலாக மறுவாழ்வளிப்பு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் எதுவும் புலப்படவில்லை. உண்ணாவிரதத்துக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வந்தது. தினமும் உண்ணாவிரத தளத்தில் மக்கள் தங்கள் கண்ணீர் கதைகளை எடுத்துரைத்தார்கள். மேதா மற்றும் அவரது சகாக்கள் ஜாம்சிங் நர்கவே, பகவதிபாய் படிதரின் உடல் நலம் நலிவடைந்தது.

நர்மதா நதிநீர் ஆணையம் தனது சட்டங்களை மிகத் தெளிவாக வகுத்து வைத்துள்ளது. நம் நாட்டு சட்டங்களும் மிகத் தெளிவாகவே விசயங்களை வரையறுத்துள்ளது. நர்மதா அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று மாநில அரசுகளும் எல்லா சட்டங்களையும், நீர் ஆணைய உத்தரவுகளையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் இந்திய அரசியல் சாசனததின் அடிப்படை உரிமைகளை கூட நடைமுறைப்படுத்த தவறியுள்ளது. ஆனால் இந்த அரசாங்கங்கள் எந்த நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படவில்லை. மறுவாழ்வளிப்பு முறையாக அமுல்படுத்தப்படாவிட்டால் அணையின் கட்டுமானத்தை நிறுத்திடலாம் என உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

மூன்று மாநிலங்களுக்கும் சென்று வந்த குழு பிரதமரிடம் அளித்த அறிக்கையும் பத்திரிகைகளில் வெளியானது. பாதிக்கப்பட்ட பலருக்கு விவசாயம் செய்ய இயலாத நீர் கோர்த்த நிலம் வழங்கப்பட்டது தெரிய வந்தது. தீர்ப்பாணயத்தின் விதிகளுக்கு மாறாக சிறப்பு திட்டத்தின் பெயரில் பலர் கட்டாயப்படுத்தப்பட்டு மறு வாழ்வளிப்புக்கு பதில் ரொக்கம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஐந்து ஹெக்டேர் நிலம் வழங்கப்பட வேண்டியவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கூட வாங்க முடியாத சொர்ப்ப தொகை தான் வழங்கப்பட்டிருந்தது. அதிலும் ஒவ்வொரு குடும்பத்திடமும் லஞ்சமாக 20,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டதை மக்கள் அம்பலப்படுத்தினர்.

ரோமிலா தாப்பர், பிபின் சந்திரா, பிரபாத் பட்நாயக், சுமித் சர்கார், ராஜேந்தர் சிங், மேகினி கிரி, ஐயதி கோஷ், ஷப்னம் ஹஸ்மி, நந்திதா தாஸ் என தினம் தினம் இந்தியாவில் பிரபலங்கள் மற்றும் தலைசிறந்த அறிவு ஜீவிகள் உண்ணாவிரத பந்தல் நோக்கி படையெடுத்தார்கள். சர்வதேச எழுத்தாளர்கள் இந்திய பிரதமரை உடனடியாக தலையிடுமாறு வற்புறுத்தினார்கள்.

திடீரென ஒரு நாள் நள்ளிரவில் பந்தலில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தொண்டர்களை துன்புறுத்தி மேதா பட்கர் மற்றும் உண்ணாவிரதமிருந்தவர்கள் இந்திய மருத்துவக் கழக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். தில்லி போலீஸ் அவர்கள் மேல் தற்கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்தது. 300 பேரை கைது செய்தது, பெண்கள் பலரை அடித்து துன்புறுத்தியது. அறப்போரில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய கோரி நாடு முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அருந்ததி ராய் அடுத்த நாள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். மருத்துவமனையில் மேதா பட்கரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்படுவதை மறுத்தார் மேதா. அதை மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர். மருத்துவமனையில் தனது தோழர்களுடன் மேதா பட்கர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இடதுசாரிகள் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி அரசாங்கத்தை நிர்பந்தித்து அறிக்கை வெளியிட்டார்கள்.

நான்கு மாநில முதல்வர்களின் கூட்டம் தில்லியில் நடந்து எந்த முடிவையும் எட்ட முடியாது தோல்வியில் முடிந்தது. மோடியின் நாவு பாசிச வார்த்தைகளை உச்சரித்தது. மொத்த மத்திய அரசில் அதை கண்டிக்க எவருமில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே மறுவாழ்வளிப்பு என்ற சட்டங்களை உதாசினப்படுத்தினார்கள் முதல்வர்கள். எங்களால் இயன்றதை மட்டுமே செயவோம் யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. அணை கட்டுமானம் எந்த காரணத்தை முன்னிட்டும் நிறுத்தப்பட மாட்டாது என கர்ஜித்து சென்றார் மோடி.

சபர்மதி கரையில் தனது 51 மணி நேர மோசடி உண்ணாவிரதத்தை துவக்கினார் மோடி. அசிங்கமான அரசியல் நாடகம் அரங்கேற்றி பிரச்சனையை கொச்சைப்படுத்தினார். நீதிக்கான உண்ணாவிரதத்தை மேதா பட்கர் மேற்கொண்டார் என்றால், மோடியோ அநியாயத்திற்கு ஆதரவாக தனது உண்ணாவிரதத்தை துவக்கினார்.

உச்சநீதி மன்றம் தனது முந்தைய தீர்ப்புப்படி பிரதமர் தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றது. பிரதமர் மன்மோகன்சிங் தீர்வு காண்பார் என வாக்குறுதியை அடுத்த மேதா பட்கர் மற்றும் தோழர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்கள்.

இருப்பினும் அரசாங்கம் சத்யாகிரஹ வழிகளில் அமைதியான முறையில் போராடுபவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அரசாங்கங்களால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுகிறார்கள். இது அபாயகரமான சமிக்ஞை, என வேதனையான குரலில் சொன்னார் அருந்ததிராய். போர் இன்னும் முடியவில்லை. நம் பயணம் இன்னும் தொலை தூரம் செல்ல வேண்டும் என 21வது நாளில் உடல் சோர்ந்த நிலையிலும் தளராதிருந்தார் மேதா பட்கர். பாசிச, மதவாத சக்திகளுக்கு பிரதமர் அடிபணிய கூடாது என்றார் மேதா பட்கர்.

1950களில் நாடு வளர்ச்சியுறும் என்ற நம்பிக்கையுடன் நூற்றுக்கணக்கான திட்டங்களுக்கு கோடிக் கணக்கில் மக்கள் மனம் உகந்து இடம் பெயர்ந்து சென்றனர். 2006ல் கூட அவர்கள் எதிர்பார்த்த எந்த வளர்ச்சியையும் நாடோ, அவர்களது சொந்த வாழ்க்கையோ இந்திய கிராமப்புறமோ மேன்மை அடையவில்லை. இத்தனை கோடி மக்களின் வாழ்க்கை துவம்சம் செய்யப்பட்டது பிரச்சனை இல்லை என்றால் பின்பு எது தான் பிரச்சனை? ஏன் இந்த பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து செல்வதில்லை? அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் புதுதில்லியில் நடைபெறவிருக்கிறது. அதற்காக புதுதில்லி நகரத்தில் வசிக்கும் 30 லட்சம் பேர் இது போல் அகதிகளாக மாறவிருக்கிறார்கள்.

நர்மதா ஆறு கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை தழுவி விட்டது. ஆற்றின் போக்கை தடுத்து நிறுத்துவதன் கோரத்தை ஆற்றங்கரையில் வாழாமல் புரிந்து கொள்ள இயலாது.

நர்மதா ஆற்று படுகையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தங்கள்விட்டு திருமண வைபவத்தின் முதல் பத்திரிகையை ஆற்றுக்கு தான் கொடுப்பார்கள்.

ஆற்றில் திருவிழா நடந்து கொண்டிருக்க திடீரென அறிவிப்பின்றி திறந்து விடப்பட்ட தண்ணீர் 100 பேரை அடித்துச் சென்றது.

ஆறு குறித்த மக்களின் ஞாபகங்கள் சிதிலமடையத் துவங்கியது.

மச்சுவீட்டுக்குள் குழந்தைக்கு பால் கொடுத்த பெண்மணி இன்று நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலையின் சிக்னல் கம்பத்தில் சாய்ந்து குழந்தையை பசியாற்றுகிறார். தினக்கூலி வேலை கூட கிடைக்காமல் பகல் எல்லாம் அலைந்து விட்டு, வீட்டுக்கு எப்படி திரும்புவது என தெரியாமல் குழம்பித் தவிக்கும் பிரம்மை பிடித்த மனம். நடைபாதைகளில் தான் இவர்களது தொகை குறைந்த கூலிக்கு இவர்களை வேலையில் அமர்த்திக் கொள்கிறது நகரம். ஆனால் பொதுவாக இன்றைய பெரு நகரங்களில் இவர்களை வேண்டாதவர்களாகவே கருதுகிறது. சமீபத்தில் இவர்களின் குடிசைகளை அகற்றுவதில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் காட்டுகிறது பல நகர மாநகராட்சிகள். இவர்களை துடைத்தெரிந்து விட்டால் நகரங்கள் பச்சை பசேல் என பூத்துக் குலுங்குமாம். உபரியாய் குறைந்த சம்பளத்திற்கு கிடைக்கும் இவர்களது உழைப்பை வைத்து டைடல் பார்க்குகள் மேகங்களுடன் கொஞ்சுகிறது. அது வரையிலும் மாநகராட்சி நிர்வாகத்தை தாஜா செய்து வைக்கிறது கட்டுமான நிறுவனம். கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாக்கள் நடைபெறுவதற்கு முன்பே டைடல் பார்க்கு நிர்வாகம் அசுத்தத்தை அகற்றுங்கள் என பணக் கவர்களுடன் மனுக்களை அரசாங்கத்திற்கு அனுப்புகிறது.

- அ. முத்துக்கிருஷ்ணன்