மத்திய அரசு ஐ.ஐ.டிகள், ஐஐஎம்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்பட்ட ஜாதிகளை சேர்ந்தவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு தர முடிவு செய்துள்ளது. இதனை மருத்துவர்கள், மாணவர்கள் உட்பட சமூகத்தின் பல பிரிவினர் விமர்சித்துள்ளனர், எதிர்த்துள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டினை நியாயப்படுத்த அரசு, அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இன்னொரு புறம் பத்திரிகையாளர்கள் பலரும் இதை நியாயப்படுத்த முயல்கின்றனர். இவ்வாறு நியாயப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக ஞாநி எழுதியுள்ளதை எடுத்துக் கொள்கிறேன். அவர் கேள்வி பதில் வடிவத்தில் தன் கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஞாநி எழுதியுள்ளது ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது. (1) மேலும் அவர் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள், போராட்டத்தின் நியாயங்களை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழக் காரணம் பா.ஜ.க அளித்த ஆதரவினை விலக்கிக் கொண்டது, மண்டல் கமிஷன் சிபாரின் அடிப்படையிலான அரசு ஆணை எதிர்ப்பு போராட்டங்களால் அல்ல. காங்கிரஸ் அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்தது. பா.ஜ.க வெளியிலிருந்து ஆதரவு தந்தது. தேசிய முண்ணனி அரசினை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்கஸிஸ்ட்) ஆதரித்தது. அத்வானியின் ரத யாத்திரை தடை செய்யப்பட்டது, பா.ஜ.கவின் இந்த்துவா நிலைப்பாடுகளை ஆதரிக்க தேசிய முண்ணனி மறுத்தது ஆகிய காரணங்களால் பா.ஜ.க ஆதரவினை விலக்கிக் கொண்டது. காங்கிரஸ் அப்போது வி.பி.சிங் அரசு பிற்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு தருவதை எதிர்த்தது.

இந்த இட ஒதுக்கீடு 93வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இனாம்தார் வழக்கில் அரசிற்கு, அரசிடம் இருந்து நிதி உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோர உரிமையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த இட ஒதுக்கீடும் இதன் அடிப்படையில் செய்யப்படுகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு என்றால் அதற்கு ஒரு அரசாணை போதும், அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை. மேலும் இத்தகைய இட ஒதுக்கீட்டினை அதனடிப்படையில் செய்து இருந்தால் இதற்குள் செய்திருக்கலாம். இந்த சட்ட திருத்ததில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது எந்த விதமான இட ஒதுக்கீட்டினையும் அக்கல்வி நிறுவனங்கள் செய்யத் தேவையில்லை. உண்மையில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடுதான் அரசின் குறிக்கோள் என்றால் எதற்காக இந்த விலக்கு அவைகளுக்கு தரப்பட வேண்டும். ஞாநி இந்த உண்மைகளைக் குறிப்பிடவே இல்லை. பழைய மண்டல் கமிஷன் கதையைக் கூறுகிறார்.

இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்து இடம் பெற முடியாது. மேலும் இங்கு இப்போது தலித், பழங்குடியினருக்கு 22.5% இட ஒதுக்கீடு இருக்கிறது. 27% இட ஒதுக்கீட்டினையும் சேர்த்தால் இது 49.5% ஆகிறது. அதாவது ஜாதி அடிப்படையிலேயே 50% இட ஒதுக்கீடு என்றாகிறது. இது தங்கள் வாய்ப்பினை பாதிக்கும் என்பதால் மாணவர்கள் எதிர்க்கின்றனர். ஒருவரின் ஜாதிதான் ஒருவர் உயர்கல்வி பெறுவதை தீர்மானிக்க வேண்டுமா என்பதே கேள்வி. இவ்வொதுக்கீடு அனைத்து நிலைகளிலும் வரும் என்றாகும் போது மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ள மருத்துவ மேற்படிப்பில் பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் பயன் பெறுவர், முற்பட்ட ஜாதிகள், இட ஒதுக்கீட்டின் கீழ் வராதோருக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்றாகி விடும்.

27% இட ஒதுக்கீடு தவிர பொதுப்பிரிவில் பிற்பட்ட ஜாதிகளைப் சேர்ந்தவர்கள் இடம் பிடிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க. இட ஒதுக்கீட்டினை இப்படி அனைத்து கல்விப் பிரிவுகளிலும் விரிவுபடுத்த என்ன நியாயம் இருக்கிறது. எம்.பி.பி.எஸ், பி.ஈ போன்றவற்றை முடித்த பின்னரும் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா. ஞாநி இந்தக் கேள்விக்கு பதில் சொல்வாரா?

இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் பணக்காரர்கள் பணம் கொடுத்து இடம் பிடிப்பதை எதிர்க்கவில்லை என்பது தவறு. அரசு நிர்வாக இட ஒதுக்கீட்டினை தடை செய்யவில்லையே, மேலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து முற்றிலும் விலக்களித்துள்ளதே. ஆகவே அரசுதான் கல்வி வியாபாராமவதை ஊக்குவித்துள்ளது, ஊக்குவிக்கிறது. போராடும் மாணவர்கள் அல்ல. இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கும் கட்சிகள் நிர்வாக இட ஒதுக்கீட்டினை, கல்வி வியாபாரமவதை எதிர்த்து ஏதாவது செய்திருக்கின்றனவா. அவைதானே மத்தியிலும், மாநிலங்களிலும் ஆள்கின்றன. இதை விமர்சிக்காமல் ஞாநி மாணவர்கள் மீது பழி போடுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் மிக அதிகமாக உள்ள தென்னிந்திய மாநிலங்கள் நான்கிலும், மகாராஷ்டிராவிலும் அவற்றை நடத்துவது யார், நடத்தும் அமைப்புகள் எவை - பிற்பட்ட ஜாதிகள், சிறுபான்மையினர் அல்லது அவர்களின் அமைப்புகள்தானே. அப்படியிருக்கும் போது மாணவர்கள் எதிர்க்கவில்லை என்ற வாதத்தில் அர்த்தமில்லையே. மாணவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களிலும் ஜாதி அடிப்படையில் 27% இட ஒதுக்கீடு என்பதை பிரதானமாக எதிர்க்கிறார்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரையின் பேரில் இடப்பட்ட ஆணை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்பதை ஆய்ந்து, அந்த விலக்கு ஏன் தேவை என்பதையும் குறிப்பிட்டுள்ளது. நடைமுறையில் இது இல்லாத மாநிலம் தமிழ்நாடு. இங்கு பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எவ்வளவு பணக்காராக இருந்தாலும், கல்வி, சமூக ரீதியாக முன்னேறியிருந்தாலும் அவர் இட ஒதுக்கீட்டால் பயனடைவார். அதே சமயம் முன்னேறிய ஜாதியைச் சேர்ந்தவர் எவ்வளவு வறியவராக இருந்தாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தாலும் அவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இதைத்தான் ஞாநி ஆதரிக்கிறார்.

அதாவது பணக்காரன் பலன் பெறலாம், ஏழை பலன் பெறக்கூடாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஏழை செத்தாலும் பரவாயில்லை, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தராதே. பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தவிர வேறு பல சலுகைகள், வாய்ப்புகள் அரசால் தரப்படுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள முற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்று பார்த்தால், கிட்டதட்ட எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். பிற்பட்டோருக்கு வேலை வாய்ப்பில், விண்ணப்பிக்க வயது உச்சவரம்பில் விதி விலக்கு உண்டு. அதே போல் கல்வியில் இட ஒதுக்கீடு தவிர பல சலுகைகள் உள்ளன. எனவே இட ஒதுக்கீடு தவிர பிற்பட்ட ஜாதிகளுக்கு உள்ள சலுகைகள், முன்னுரிமைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஜாதிய அடிப்படையிலான பல ஏற்றதாழ்வுகள் அரசால் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

ஒரு புறம் முற்பட்ட ஜாதிகளில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடே கிடையாது, அவர்களில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது, இன்னொரு புறம் பிற்பட்ட ஜாதிகளில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் பல சலுகைகள் என்று அரசு செயல்படுவது என்ன நியாயம். முற்பட்ட ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன. ஞாநியின் வாதப்படி இட ஒதுக்கீடு கூடாது, வேறு திட்டம் வேண்டுமாம், அது என்ன திட்டம்.

பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மொத்த ஜனத்தொகையில் எத்தனை % என்பது கேள்விக்குறி. இது குறித்து முழுமையான புள்ளிவிபரங்கள் இல்லை. சில கணக்கெடுப்புகள் இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 28% முதல் 33% வரை இருப்பதாக கூறுகின்றன. எப்படியாயினும் வட இந்தியாவில் முற்பட்ட ஜாதிகள் மொத்த மக்கள் தொகையில் 10%த்தினை விட அதிகம். மாநிலங்களைப் பொறுத்து இது 30% அல்லது 40% இருக்கலாம். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடின் வருவோரின் சதவீதம் 88% என்று கொள்ள முடியும். இட ஒதுக்கீட்டில் வராதோரின் சதவீதம் 12% , 5% அல்ல. குறைந்தது 10% இட ஒதுக்கீட்டின் கீழ் வருவதில்லை என்று கூறலாம். இது குறித்து ஞாநி குறிப்பிடும் தகவல்கள் தவறானவை.

சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மட்டும்தான் உள்ளனவா, வேறு ஏற்றத்தாழ்வுகள் இல்லையா. பாலின ரீதியாக, வர்க்க ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவித ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது ஜாதி ஒன்றினை மட்டும் எப்படி முற்பட்ட, பிற்பட்ட என்பதை வகுக்க அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியும். அமெரிக்காவில் இனம் என்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் சம உரிமைக்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அவை வேறு அளவு கோல்களையும் (உ-ம்: பாலினம், சிறுபான்மை) கணக்கில் கொள்கின்றன. ஞாநி உட்பட இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளோரில் பெரும்பான்மையோர் ஏன் ஜாதி தவிர பிற பாகுபாடுகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஏன் பிற்பட்டோரில் வசதி படைத்தவர்கள் பயனடைந்தாலும் சரி, ஆனால் முற்பட்ட வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடே கூடாது என்கிறார்கள். எந்த வர்க்கத்தின் நலனை இவர்கள் ஆதரிக்கிறார்கள், பிற்பட்ட ஜாதிகளில் உள்ள பணக்கார வர்க்கத்தின் நலனைத்தான் என்பது வெளிப்படை. இங்கு சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டினால் ஏற்பட்ட ஏற்றதாழ்வுகளை மறைக்கவும், புதிய ஏற்றதாழ்வுகளை நியாயப்படுத்த உதவும் கருத்தாக இருக்கிறது. இதை சமூக அநீதி என்று சொல்வதே சரியாகும்.

ஐஐஎம்களில் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தினை அரசு முயன்ற போது கல்வியாளர்கள் உட்பட பலர் எதிர்த்தனர்.அதற்கு காரணம் ஐஐஎம் மில் சேரும் மாணவர்கள் படிப்பு முடித்த உடன் பெரும் சம்பளத்தில் வேலையில் அமர்கிறார்கள். அவர் பெறும் துவக்க நிலை சம்பளத்துடன் ஒப்பிட்டால் கூட அவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணம் மிக குறைவு. மேலும் ஐஐஎம்களில் சேர்வோருக்கு வங்கி கடன்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன, நிதி உதவி, கல்விக்கான தொகையில் சலுகை பெற பல வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர்களுக்கான கல்விக் கட்டணத்தினை குறைப்பதில் அர்த்தமில்லை என்று வாதிடப்பட்டது. அதாவது அரசு அவர்களுக்கு தரும் கல்விக்கான மான்யத்தினை குறைப்பதில் தவறில்லை. ஐஐஎம் களில் நுழைவுத்தேர்வு எழுதி, நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் படிப்பினை தொடர தேவையான நிதி உதவி/கடன் நிச்சயம் கிடைக்கிறது. ஆகவே பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை அங்கு இல்லை. ஞாநிக்கு ஒன்று இந்த உண்மை தெரியவில்லை, அல்லது தெரிந்தே இதைத் திரித்துக் கூறுகிறார்.

பிற்பட்ட ஜாதிகள் உண்மையில் இன்று இட ஒதுக்கீடு பெற வேண்டிய நிலையிலா உள்ளன. இவற்றில் எத்தனை ஜாதிகள் உண்மையிலேயே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியுள்ளவை என்று கருத வேண்டிய நிலையில் உள்ளன. இத்தனை ஆண்டுகள் அமுலில் உள்ள இட ஒதுக்கீடு முறையை ஆராய்ந்து, அதனை சீர்படுத்தினால் என்ன. எந்த வித ஆய்வும் இல்லாமல் இதை விரிவாக்க வேண்டிய தேவை என்ன. இட ஒதுக்கீடு வெற்றிகரமாக அமுல் செய்யப்பட்ட தமிழ்நாட்டில் இதன் முழுப்பயனைப் பெற்றவர்கள் பிற்பட்ட ஜாதிகள். பாதிக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வராதோர், குறிப்பாக அவர்களில் ஏழைகள், பெண்கள்.

தலித்கள் இட ஒதுக்கீடு தங்களுக்கு முழுப்பயனும் தரும் வகையில் அமுல் செய்யப்படவில்லை, பாரபட்சம் உள்ளது, பிற்பட்ட ஜாதியினரே மிக அதிகமாக பலன் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர்(2). இப்படி இருக்கும் போது இந்த இட ஒதுக்கீடு முறையை எந்த ஒரு ஆய்விற்கும் உட்படுத்தாமல் விரிவுபடுத்துவதை மாணவர்கள் எதிர்த்தால் அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்.

இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் என்னென்ன என்பதை தெளிவாகக் எடுத்துரைத்திருக்கிறார்கள்.அவற்றை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்

http://www.youth4equality.org/charter-of-demand.jsp
http://www.youth4equality.org/expert-commission.jsp

இதிலிருந்து மாணவர்கள் எதை எதிர்க்கிறார்கள், எதை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். ஞாநி மாணவர்களின் நிலைப்பாடுகளைக் குறித்து எழுதியிருப்பது எந்த அளவு உண்மை என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

(1) http://www.keetru.com/dheemtharikida/index.php
(2) http://www.keetru.com/dalithmurasu/mar06/kanakamuthu.php

- கே. ரவி ஸ்ரீநிவாஸ்