இந்திய அளவில் கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் தவிர்த்த பிற மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. அதிலும் தற்போது மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரசிடம் பறி கொடுத்துவிட்டு, மீட்க வழியற்ற நிலையில் சிபிஎம் உள்ளது. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால ஆட்சியை இழப்பதற்கு முக்கிய காரணம் நந்திகிராம் சம்பவம் என்பதை அவர்களே தற்போது சுயவிமர்சனமாக ஏற்றுக் கொள்கின்றார்கள். மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை அவர்களின் அரசியல் பலம் என்பது மிக பலவீனமாகவே உள்ளது. அவர்கள் பலமாக உள்ள பகுதிகளைப் பற்றியதல்ல இப்போதைய விமர்சனம். கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் தவிர்த்த பிற மாநிலங்களில் ஏன் கட்சியால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்பதைப் பற்றியதுதான் தற்போதைய விமர்சனம்.

MK Stalin with communists

சிபிஎம்மின் கட்சி பலத்தைப் பார்த்தோம் என்றால் “விவசாய சங்கத்தில் 22 மில்லியன், DYFI இல் 14 மில்லியன், மாதர் சங்கத்தில் 11 மில்லியன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் 5 மில்லியன், சிஐடியு 5 மில்லியன், மாணவர் சங்கம் 4 மில்லியன் என மொத்த வெகுஜன அமைப்புகளையும் சேர்த்தால் 61 மில்லியன் மக்கள் உறுப்பினராக உள்ளனர்”.(இடது திருப்பம் எளிதல்ல- விஜய் பிரசாத்) இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ், பிஜேபி போன்றவற்றை ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதிலும் சிபிஎம் வலுவாக உள்ள மூன்று மாநிலங்களையும் தவிர்த்துவிட்டு பார்த்தால், மற்ற மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த வகையிலும் தேர்தலின் வெற்றி, தோல்விகளைப் பாதிக்கும் அளவுக்கு இல்லை என்பது தெளிவு. அவர்களிடம் இருக்கும் குறைவான வாக்கு சதவீதம் ஏதோ ஒருவகையில் மற்ற கட்சிகளின் வெற்றிக்கு கொசுறாக உதவும் என்பதால்தான் பிற மாநிலங்களில் இருக்கும் முதலாளித்துவக் கட்சிகள் அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்கின்றன. அவர்களும் விரும்பி சேர்ந்து கொள்கின்றார்கள்.

மூன்று மாநிலங்களைத் தவிர்த்து மீதமுள்ள 26 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பலவீனமாகப் போனதற்கு என்ன காரணம்?. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகப் போகின்றது. ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? பிரகாஷ் காரத் அவர்கள் சொல்வதுபோல 'ஸ்தாபன ரீதியான தேய்மானம்'. அதுதான் போராட்டங்களை முன்னெடுக்கவும், இயக்கங்களைக் கட்டவும் தவறியதற்கு இட்டுச் சென்றது. "மாறுதலின்றி ஒரே மாதிரியாக செயல்படுவது, மக்களோடு உயிரோட்டமான தொடர்புகளை வைத்திருக்கத் தவறியது ஆகியவையும் பிரச்சனைகள்” (மே.படி நூல்) இது மட்டும் தான் காரணமா? நிச்சயமாக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி மக்களின் மனங்களை தங்களின் நேர்மையான செயல்பாடுகளால், தனித்தன்மைகளால் வென்றெடுக்கத் தவறிவிட்டனர். மற்ற முதலாளித்துவ, மதவாத சாதியவாத கட்சிகளைப் போல என்ன வேண்டுமென்றாலும் செய்து ஆட்சியைக் கைப்பற்றினால் போதும் என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட முடியாது.

தனக்கென ஒரு சிந்தாந்தத்தை வலுவாகப் பெற்றிருக்கும் கட்சி, அதுவும் இந்தியா போன்ற மிகப் பெரும்பான்மையான மக்கள் வறியவர்களாய் இருக்கும் ஒரு நாட்டில் வறியவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு கட்சி ஏன் பிரகாசிக்க முடியவில்லை என்றால், அவர்கள் ஏற்றுக்கொண்ட சிந்தாந்தத்திற்கு நேர்மையாக நடக்கவில்லை என்பதைத்தான் இது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இந்திய மக்களை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடனான அதன் கூட்டணி ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை மிகப்பெரிய அளவிற்கு கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.மத்தியில் காங்கிரசோடு மட்டும் அல்லாமல் மாநில அளவில் பல முதலாளித்துவ சீரழிவுக் கட்சிகளுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்த அதன் உத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் மற்ற முதலாளித்துவ கட்சிகளைப் போலத்தான் என்ற எண்ணம் வலுவாக ஏற்படக் காரணமாகிவிட்டது. முதலாளித்துவ கட்சிகளைப் போல சுயவிமர்சனம் செய்துகொள்ளாத கட்சி அல்ல கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால் இத்தனை ஆண்டுகால தோல்வியில் இருந்து அவர்கள் சரியான காரணத்தைக் கண்டும், காணாமல் கடந்துபோக நினைப்பதுதான் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கூட திமுக, அதிமுக, தேமுதிக என தொடர்ச்சியாக கூட்டணி வைத்து, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்கள் என்றாலே அணிமாறிகள் என்ற அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்கள். நேற்றுவந்த கட்சிகள் எல்லாம் தங்களால் தனித்து நிற்க முடியும் என்று களம் காணும்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து நிற்க அஞ்சுவது அதன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. பலவீனமாக உள்ள மாநிலங்களில் தனித்து நின்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்கு ஒரு மாற்று சக்தி இருக்கின்றது என்று உத்திரவாதப்படுத்த வேண்டியது அதன் தலையாய கடமை என்ற உணர்வு, அதன் தலைமையில் உள்ளவர்களிடமே பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.

வரலாற்று ஆசிரியர் இர்ஃபான் ஹபீபிடம் ஆங்கில இந்து நாளிதழ் சார்பாக எடுக்கப்பட்ட பேட்டியில், அவரிடம் "பா.ஜ.கவை எதிர்க்கும் காங்கிரசும், இடதுசாரிகள் முதலானவர்களும் ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "இது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகின்றேன். குறிப்பாக நீங்கள் மாநில அரசுகளை நடத்தும்போது ஒரு சிலர் சோசலிசப் பிரச்சினைகளில் ஒத்துப்போகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மதச்சார்பின்மையில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், சிலவகையான மக்கள் நல அரசில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் மக்கள் நலப்பணிகளில் ஒத்துப் போக முடியும். இத்தகைய கூட்டணிக்கான சாத்தியங்கள் கண்டறியப்பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இடதுசாரிகள் வலுவாக இல்லாவிட்டாலும், அங்கு அவர்களது 2-3 சதவீத வாக்குகள் சிறிது வித்தியாசங்களை ஈடுகட்ட உதவும். இது முக்கியமானது. இடதுசாரிகளும் கூட இந்தப் பொறுப்பைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த அணிக்கு தீங்குசெய்யும் எதையும் செய்யக்கூடாது. எனது கருத்தின்படி இந்த அணியில் காங்கிரஸ் பங்கு பெறக்கூடாது என்று நாம் பிரச்சினையாக்கக் கூடாது” என்கின்றார். மேலும் இடதுசாரிகள் பீகாரில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியதையும் மாபெரும் தவறு என்கின்றார். (வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை:செ.நடேசன்)

இர்ஃபான் ஹபீப் அவர்களின் கருத்தை நாம் ஒட்டுமொத்த இடதுசாரிகளின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு எப்போதுமே காங்கிரசின் மீது ஒரு பச்சாதாபம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. இதை அவர்களே ஒப்புக் கொள்கின்றார்கள் “நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்களுக்கு கணிசமான வாக்குகள் இருந்தன என்றாலும், அவை சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு இல்லை. இந்த வாக்கு சதவிகிதத்திற்காகத்தான் பல சட்டசபைகளிலும் ஒரிரு இடங்களை வெல்வதற்காக, சற்று குறைந்த தீமையான ஏதேனும் ஒரு கட்சியுடன் சிபிஐயும், சிபிஎம்மும் கூட்டணி அமைக்க நேர்ந்தது" (இடது திருப்பம் எளிதல்ல- விஜய் பிரசாத்).

அவர்களைப் பொருத்தவரை காங்கிரசுடனோ, இல்லை மாநில அளவில் செயல்படும் வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுடனோ கூட்டணி வைப்பது என்பது அவை குறைந்தபட்ச தீமையான கட்சி என்பதால்தான். இப்படியான ஒரு விளக்கத்தைக் கொடுக்கும் கம்யூனிஸ்ட்களிடம் போய் "வெற்றியோ, தோல்வியோ நீங்கள் தேர்தலில் தனித்து நின்று மக்களிடம் 'ஒரு மாற்று அரசியலை முன்னிறுத்தும் கட்சி உள்ளது' என அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை விதையுங்கள்" என்று சொன்னால் அவர்கள் கேட்பார்களா? நிச்சயம் அதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். தமிழ்நாட்டைப் போன்றுதான் அவர்கள் வலுவாக இல்லாத பிற மாநிலங்களிலும் தேர்தலில் ஒரிரு இடங்கள் கிடைத்தால் போதும் என்ற முடிவோடு தங்களை நம்பியுள்ள குறைந்தபட்ச நம்பிகையாளர்களின் கனவுகளில் கூட அவர்கள் நெருப்பை வைக்கின்றார்கள். கட்சி நிச்சயம் வலுப்பெற்று பாராளுமன்றப் பாதையின் மூலமாகவாவது சோசலிசத்தை அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்ற சிந்தனையுடன் கட்சிக்குள் வரும் நபர்களை அவர்கள் குறைந்த தீமை உள்ள கட்சிகளுக்காக பரப்புரை செய்ய கட்டாயப்படுத்துகின்றார்கள்.

1957 ஆம் ஆண்டு கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியை சோசலிச வேடமிட்ட நேரு அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு கலைத்தது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதன் பிறகும்கூட பலதடவை காங்கிரசுடன் கூட்டணி வைத்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார்கள். இதை மிக எளிமையாக இந்தியாவில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற அவர்களின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு என்று சுருக்கி புரிந்து கொள்ளக் கூடாது. இயல்பிலேயே அவர்களிடம் இந்திய அளவில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வலுவான சக்தியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருந்திருந்தால் பல பிற்போக்கு கட்சிகளுடன் மாநில அளவிலும், மத்திய அளவில் இந்துமத வெறியர்கள், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளுடன் கொஞ்சிக் குலாவும் காங்கிரசுடனும் அவர்கள் கூட்டணி வைத்திருக்கவே மாட்டார்கள்.

2014 தேர்தலில் இடதுசாரிகளின் செயல்பாடு பற்றிய சிபிஎம்மின் மதிப்பீட்டில், "18 முதல் 25 வயது வரையுள்ள 'புதிய தலைமுறை வாக்காளர்களை' கம்யூனிஸ்ட்களால் ஈர்க்க முடியவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் பகுதிகளிலும் வாக்கு சதவிகிதத்தில் ‘முன்னேற்றம்’ இல்லை. இடதுசாரிகளின் அரசியல் கோஷங்கள் இளைஞர்களுக்குப் பொருந்தவில்லை. சமயங்களில் இந்த இளைஞர்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் பிற பூர்ஷ்வா கட்சிகளிடமிருந்து மாறுபட்டவையாகத் தெரியவில்லை. மாற்றத்திற்கான ஓர் அரசியல் மேடைக்கு வரவேண்டுமென்றால் அவர்கள் நம்பிக்கை தரும், வெற்றி பெறும் ஒரு மேடைக்குச் செல்வார்களேயன்றி, தோற்கும் இயக்கத்திற்கு அல்ல…..", “பொதுவாக பூர்ஷ்வா கட்சிகளுடனான நடைமுறைக் கூட்டணி கம்யூனிஸ்ட்களின் சுயமான பலத்தைக் குறைத்துவிட்டது என்றும் மக்கள் போராட்டங்களையும், இயக்கங்களையும் வாக்குகளாக மாற்றுவதில் இருந்த பலவீனம், கம்யூனிஸ்ட்களின் அரசியல் செல்வாக்கைக் குறைத்து விட்டது என்றும் மத்தியக்குழு கூறியது”.(மே.படி நூல்) மத்தியக் குழுவால் முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனம் ஒரளவிற்கு நடப்பு உண்மைகளை பிரதிபலித்தாலும், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்ட பிறகு கூட தமிழகத்தில் சிபிஎம்மும், சிபிஐயும் திமுகவுடன் கூட்டணி வைத்ததானது அவர்கள் தங்கள் சுயவிமர்சனத்தை எந்த அளவிற்கு நேர்மையாக கடைபிடிக்கின்றார்கள் என்பதைக் காட்டியது.

அவர்கள் தங்கள் தவறுகளை தெரிந்தே செய்கின்றார்கள். அவர்களை மற்ற பிற்போக்குவாத கட்சிகளுடன் நாம் ஒப்பிட முடியாது. மற்ற கட்சிகளைக் காட்டிலும் அவர்கள் அறிவு மட்டத்திலும், சமூகத்தை மதிப்பிடுவதிலும் உயரிய இடத்தில் இருப்பவர்கள். அனைத்தையும் பற்றிய அறிவை வைத்திருப்பவர்கள். ஆனால் கட்சி அணிகளை அந்த அளவிற்கு முற்போக்காக சித்தாந்தத் தெளிவுடன் வளர்த்தெடுக்க தவறிவிட்டார்கள். அதற்குக் காரணம் ‘சித்தாந்தத் தெளிவு’ இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்திவிடும். திமுகவுடனோ, அதிமுகவுடனோ, தேமுதிக, இல்லை காங்கிரசுடனோ கூட்டணிவைக்க மார்க்சியமோ, லெனினியமோ தெரிந்து வைத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நிச்சயம் 2014 ஆம் ஆண்டு சிபிஎம் தங்களின் படுதோல்வி குறித்து செய்து கொண்ட சுயவிமர்சனம் அவர்களை 2019 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் இருந்து எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. இதுபோன்ற பல சுயவிமர்சனங்களை அவர்கள் இதற்கு முன்பும் செய்திருக்கின்றார்கள். மீண்டும் 2019 ஆம் ஆண்டு அவர்கள் அனைவரும் தேர்தல் தோல்வி குறித்து இதுபோன்றதொரு சுயவிமர்சனக் குறிப்பை வெளியிடுவார்கள். அநேகமாக அது இப்போதே தயாராக இருந்தாலும் இருக்கலாம். ஏனென்றால் அதன் சில முக்கிய தலைவர்களிடம் இப்போதே காங்கிரசு மீதான பாசம் பீறிட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது. கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு உண்மை கம்யூனிஸ்ட்களின் தலையாய கடமையாகும். இன்குலாப் சிந்தாபாத்.

- செ.கார்கி