வழக்கம் போல காதலர் தினம் பெரும் மனக்கிளர்ச்சியுடன் காதலர்கள் மத்தியில், மழையோடு கலந்த மண்வாசமும், செடிகொடிகளின் பச்சை வாசனையும் சேர்ந்து மயக்கும் மனநிலையாய் உருப்பெற்று மூச்சிக்குழாய் முழுவதும் படர்ந்து, சுவாசிக்க சுவாசிக்க அதன் நறுமணத்தில் கிறங்கிப் போய் கிளர்ச்சி அடைந்து, இடம் பொருள் மறந்து, அவர்களை திக்குமுக்காடச் செய்துகொண்டு இருக்கின்றது. காதலர்கள் தங்களது கைபேசிகளை கூடுமானவரை இன்று மட்டுமாவது பெற்றோரின் பார்வையில் இருந்து மறைந்துபோகச் செய்ய படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த நொடியிலும் வரும் தன் காதல் இணையின் வாழ்த்துகளுக்காக தூக்கத்தை எல்லாம் இரவிற்கே பரிசாகக் கொடுத்துவிட்டு ஓர் அழகான கவிதைக்காக காத்துக் கிடப்பார்கள். எந்த நொடியிலும் காதலை சுமந்துவரும் அந்தக் குறுஞ்செய்தி இரவின் நீளத்தை உடைத்து நொறுக்கிவிட, ஒரு சம்மட்டியாய் காத்துக் கிடக்கின்றது. நாசிதுவாரங்களில் மிக சிரமப்பட்டு சென்றுவரும் காற்று, நுரையீரல் முழுவதும் நிரம்பி இருக்கும் காதலின் நறுமணம் உறைந்த காற்றுப்பைகளை கடந்துசெல்ல மனமில்லாமல் தங்கிப் போக கொஞ்சம் கூடுதல் அவகாசம் கேட்கும். எல்லையற்ற வானம் இன்றுமட்டும் ஏனோ இலவசமாக தன்னைக் கடந்துபோக இறகுகளை காதலர்களுக்கு மட்டும் கள்ளத்தனமாக பரிசளித்து விடுகின்றது.

lovers 640

எல்லாம் தவறாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருந்தாலும் எது சரி, எது தவறு என்று கண்டுபிடிக்கும் கருவிகள் இன்று ஒரு நாள் மட்டும் மூளைக்குள் வேலை நிறுத்தம் செய்து வேண்டியபடி தப்புகளையும், சரிகளையும் தாராளமாக சரிகளாக மாற்றித் தந்து காதலின் கரங்களை வலுப்படுத்துகின்றது. கரம் கோர்த்து, காதலை வெளிப்படுத்தலாம்; தீராத அன்பின் மிகுதியை வெளிக்காட்ட முத்தம் கூட தரலாம்; உலக காதல் இலக்கியங்கள் பற்றி உணர்ச்சிப்பெருக்குடன் உரையாடலாம்; ஆனால் எங்கே கரம் பற்றுவது, எங்கே முத்தம் கொடுப்பது, குறைந்த பட்சம் உரையாடவாவது இந்தச் சமூகம் காதலர்களை அனுமதிக்கின்றதா? ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து நடந்தாலே சமூகத்தின் பண்பாட்டையே கெடுத்து குட்டிச்சுவராக்க புறப்பட்ட இரண்டு குட்டிச்சாத்தான்களை பார்ப்பது போலத்தானே தனது வக்கிரம் நிறைந்த சனாதனக் கண்களால் அவர்களைப் பார்க்கும் சமூகத்தில் அல்லவா நாம் வாழ்கின்றோம்! காதலைக் கொண்டாட நாம் என்ன குறுந்தொகை காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலப்பதற்கு. இது சாதிவெறி பிடித்த நாய்களும், மதவெறி பிடித்த நாய்களும் ரத்தம் தோய்ந்த தனது நாக்குகளை சுழற்றியபடி காதலர்களைக் கடித்துக் குதற டிராகுலா பற்களுடன் வீதியில் உலாவும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். கன்னித்திரைகளுக்குப் பின்னால் தங்களின் குடும்ப மானத்தை மறைத்துவைத்த சாதியத்திற்கு தங்களை ஒப்புவித்த பெற்றோர்கள் கன்னித்திரையின் வாசலில் கடும் ஆயுதங்களுடன் காவல் இருக்கின்றார்கள்.

அந்த வாசலில் நுழைவதற்கான குறிகளை அவர்கள் ஜோசியக்காரனின் கட்டங்களில் இருந்து கண்டுபிடித்து, கடவுளின் பெயரால் தங்களின் காவலை விலக்கிக் கொள்கின்றார்கள். நேற்றுவரை யார் என்றே தெரியாத ஒருவனுடன் படுத்து, குடும்பம் நடத்து என்று கற்புப் பெற்றோர்கள் கட்டளை இடுகின்றார்கள். இதைப் பிற்போக்குவாதிகள் ஆங்கிலத்தில் arranged marriage என்கின்றார்கள். ஆனால் முற்போக்குவாதிகளோ பெத்த பொண்ணை கூட்டிக்கொடுக்கும் விபச்சார திருமணம் என்கின்றார்கள். களவுக் காதலை கைப்பற்றிய கற்புக் காதல், அதை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை காட்டேறிகளின் துணையுடன் அழித்தொழித்து கன்னித்திரையை காசுகொடுத்து விற்பனை செய்வதே கற்பு என்ற இலக்கணத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் குறுந்தொகையை ரசிப்பவர்கள், அகநானூறைப் படித்து அகமகிழ்பவர்கள். இருப்பினும் சாதி என்று வந்துவிட்டால், கற்பு என்று வந்துவிட்டால், சாக்கடையில் படுத்துருளவும் தயங்காதவர்கள். ஆதித்தமிழனின் அறுசுவை உணவை மறந்து, வந்தேறி பார்ப்பனக் கும்பலின் சாதிய வர்ணாசிரம மலத்தை தன்னுடைய உணவாக வரித்துக்கொண்டவர்கள். இவர்களின் மத்தியில் இருந்துதான் காதல் பிரசவிக்க வேண்டி இருக்கின்றது. பிணந்தின்னும் கழுகுகள் மத்தியில் இருந்து கோழிக்குஞ்சுகளை பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.

காதலுக்காக உருகி, உருகி கவிதை எழுதும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சாதி ஆணவப் படுகொலைகளைப் பற்றிய எந்தப் பதைபதைப்பும் இருப்பதில்லை. அவர்களுக்கு இளவரசனைத் தெரியவில்லை, கோகுல்ராஜையும், உடுமலை சங்கரையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இவர்கள் ஏன் இந்தச் சமூகத்தால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் ஒதுக்குவதில்லை. அவர்கள் காதலை அந்தரத்தில் உருவான அதிசயமாகப் பார்க்கின்றார்கள். ஆனால் அது வளர வேண்டுமா அல்லது வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டுமா என்பதை இந்தச் சாதிய சமூகம்தான் தீர்மானிக்கின்றது என்ற எளிய கணக்கைக்கூட தெரிந்துகொள்ளாமல் கற்பனையில் கோட்டை கட்டி இறுதியில் சாதியாலும், மதத்தாலும் உருக்குலைக்கப்பட்ட தங்களுடைய காதலை தூக்கிக்கொண்டு ஆற்றாமையில் கண்ணீர்விட்டு கதறுகின்றார்கள்.

காதலில் அரசியல் இல்லை, கொஞ்சம் கூட சமூகம் சார்ந்த புரிதல் இல்லை. திரையிசைப் பாடல்களுக்கும், காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கும் அப்பால் இடைவிடாமல் ஒலிக்கும் சாதிய ஓநாய்களின் வன்மம் நிறைந்த ஊளையை அவர்கள் செவிமடுப்பதில்லை. தக்கையான, தட்டையான காதல் எதைச் சாதிக்கின்றதோ, இல்லையோ, தனது சாவை அது நிச்சயம் வெகு சீக்கிரமாக சாதித்துக் கொள்ளும். எந்தக் காதல் சாதி ஒழிப்புடனும், மத ஒழிப்புடனும், சமூக மேம்பாட்டுடனும் பின்னிப் பிணைந்து உருவாகின்றதோ, அந்தக் காதல்தான் தன் வாழ்நாளை நீட்டித்துக்கொண்டு வாழும் தகுதியைப் பெறுகின்றது.

ஆதி தமிழ்ச்சமூகம் காதலைக் கொண்டாடிய சமூகம், களவுக்காதலை தன்னுடைய வாழ்வியல் நெறியாய் வரித்துக்கொண்ட சமூகம். இன்று அந்தக் காதலை அறமற்ற கற்பு நெறி கரையானாய் அரித்து தின்றுகொண்டு இருக்கின்றது. இதை அழித்து, ஒழிக்காமல் தமிழன் என்றுமே மானமுள்ள மனிதனாய் இயற்கையோடு இயைந்த காதலை ஏற்றுக்கொண்டவனாய் வாழ முடியாது. ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைத்திருப்பவனும், இருக்கும் ஒரு பொண்டாட்டியையும் வைத்து வாழத் துப்பில்லாமல் துரத்திவிட்டவனும் காதலைப் பற்றி கண்ணியக்குறைவாகப் பேசுகின்றார்கள் என்றால் சாதிய, மதவாதிகளின் கற்புக்காதல் என்பது பாஞ்சாலியையும், தசரதனையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கற்புக்காதல் என்பதாகப் புரிந்துகொள்க.

காதலர்கள் தங்களுக்குள் ரோஜாவைவோ, இல்லை வாழ்த்து அட்டைகளையோ, பரிசுப்பொருட்களையோ பரிமாறிக் கொள்வதைப் போன்று பெரியாரையும், மார்க்சையும், அம்பேத்கரையும் பரிமாறிக் கொள்ளுங்கள். அது இன்னும் உங்கள் காதலை வாசமுள்ளதாக மாற்றும். ரோஜாவை வைத்து வீழ்த்த முடியாத சாதியையும், மதத்தையும் பெரியாரையும், மார்க்சையும், அம்பேத்கரையும் வைத்து வீழ்த்த முடியும். காதலை முற்போக்காகக் கொண்டாடுங்கள். அதைச் சமூக மாற்றத்தைச் சாதித்துக் காட்டும் மிகப்பெரும் சக்தியாக உருமாற்றுங்கள். ஒரே சாதிக்குள் பெண் எடுப்பதையும், பெண்கொடுப்பதையும் அவமானமாகக் கருதுங்கள். காதலுக்குள்ளாக இருந்து முகிழும் உணர்வை வெளிக்காட்டத் தெரியவில்லை என்றால், அதை இப்படி புரிந்துகொள்ளுங்கள். சாதிக்கு எதிராகவும், மதத்திற்கு எதிராகவும் போராடவில்லை என்றால் அந்தக் காதல் அழிந்து, சாதியையும், மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் பிற்போக்குவாதிகளின் கரங்கள் வலுப்பட்டுவிடும் என்பதைத்தான் உங்களால் சொல்லமுடியாத அந்த உணர்வு உணர்த்துகின்றது. உண்மையைத்தான் சொல்கின்றேன், தோழர்களே... நம்புங்கள்!!

- செ.கார்கி