அன்பின் சினேகத்திற்கு,

வணக்கம், வாழிய நலம், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப் பணியிடங்கள் நிரப்புதல் அரசு பொறியியற் கல்லூரிகளில் என்பது பட்டியலினத்தவரைப் பொறுத்த வரை ஒரு கண்துடைப்பு என்பது பெரும்பாலோருக்கு தெரியாத ஒரு விசயம், எப்படி என்று கேட்கின்றீர்களா? முன்னேறிய வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒரே அளவில் சமத்துவத்தினை நிலை நாட்டி சரித்திரத்தில் இடம் பெற நினைக்கின்றது தமிழக அரசு. அரசு பொறியியற் கல்லூரிகள் ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒரு பெரிய அநீதி இழைத்துள்ளது, மத்திய அரசிலும் மற்றைய மாநில அரசுகளிலும் அரசுப் பணிகளுக்கான குறைந்த பட்ச தகுதியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளுக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இருக்கின்றது, ஆனால் தமிழக அரசு தேர்வாணையத்தில் மட்டுமே , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு பெரிய தடை கல்லை போட்டு பட்டியலினத்தவரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு மேல்தட்டு வர்கத்தினருக்கு வசதி செய்து கொடுத்துள்ளது இந்த அரசு.

இதனால் தகுதியோடு இருக்கும் எத்தனையோ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கின்றனர், தமிழ் போதனா வழிக்கல்வியில் பயின்று விட்டு அந்த மிரட்சி தீர்வதற்குள் இறுதியாண்டு கல்லூரிப் படிப்பையும் முடிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவன், முதல் நிலையில் தேர்ச்சியுறுவான் என்று எந்த நிச்சயமும் இல்லை, ஆனால் அதனால் மட்டுமே அவன் அறிவற்றவன் அவன் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? , மத்திய அரசிலும் மற்ற மானில அரசுகளிலும் அளித்திருக்கும் சலுகையினைப் போல் தேர்வெழுத அந்த மாணவனை அனுமதிக்கலாமே? அதில் அவன் திறமையை காண்பித்து ஒரு தலை சிறந்த ஆசிரியனாக வர வாய்ப்புகள் உண்டு அல்லவா? அந்த வாய்ப்பினை தட்டிப் பறிக்கின்றதா தமிழக அரசு?

இதனால் பாதிக்கப்படுவது முற்றிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களே, முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் அனைவரும் அறிவாளிகள், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் எல்லாம் முட்டாள்கள் என்பது போலல்லவா உள்ளது இந்த நியாயம்? அவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை இந்த அரசு அளித்துப் பார்த்தால் தானே தெரியும்? அதிலும் எத்தனை அறிவாளிகள் உள்ளனர் என்று? சமூக நீதி, சமூக நீதி என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே? இதை யாரேனும் கவனிப்பீரா? பொறியியல் கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற தடையை நீக்க்கி தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்தாலே அவர் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர் என்று ஒரு வாய்ப்பினை அனைத்து தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்திற்கும் வழங்கி பெருமை தேடிக் கொள்ளுமா இந்த மானில அரசு? அவர்களை நேரடியாக பதவி தரச்சொல்லி கேட்கவில்லை, விண்ணப்பித்து அவர்களின் தகுதியை நிலை நாட்ட ஒரு வாய்ப்பினை மட்டுமே கேட்கின்றனர் அவர்கள், அரசு இந்த விசயத்தில் எந்த அளவிற்கு செயல்படுகின்றது என்று கவனிப்போம், இணையத்தில் எழுதும் இந்த எழுத்து அரசாங்கத்தினை சென்றடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...

சமூக அக்கறையுடன், 
-
ஒரு சேவகன்