காலை 5:30 மணிக்கெல்லாம் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பறக்கும் கூட்டத்தைக் கடக்கையில் , வண்டியை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் , “இந்த நேரத்துலயும் இவ்ளோ அவசரமா எங்கதான் போறீங்க?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. கதிரவனது உறக்கம் கலைவதற்கு முன்னான இருளில் அப்பெருநகரை ரசித்தவாறே தியோசஃபிகல் சொசைட்டியை அடைந்தோம். மரங்களும் செடிகொடிகளுமாய் மலர்களின் சுகந்தத்தைக் காற்றில் குடிகொள்ளச் செய்த அந்த அழகிய வனம் மனதிற்கு அமைதியையும் முற்றிலும் வேறோர் உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையும் தந்தது. மனோகரன் மாமா நடைப்பயிற்சியைத் துவக்க, அவர்களுக்கு ஈடு கொடுக்க அண்ணன், மதினி, நான் – மூவரும் ஓட வேண்டியிருந்தது. 58 வயதின் நடைவேகத்தை 26 வயதின் ஓட்டம் கூட முந்த முடியாத அவலத்தை உணர்ந்த போது வெட்கம் பிடுங்கித் தின்றது. போகும் வழியில் தூங்கு மூஞ்சி மரத்தை எழுப்பிவிட்டு, கீழே உதிர்ந்து கிடந்த மரமல்லிகைகளைச் சேகரித்து என் கையில் நுகர்வதற்கெனத் தந்து, புன்னை, பப்பாரப் புளி, மகிழம், சந்தன மரங்களை நலம் விசாரித்தவாறே வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள் மாமா. இடையிடையே கேட்ட சத்தங்களையும் அந்த நேரத்தையும் வைத்து அவற்றின் சொந்தக்காரர்களான பறவையினங்களையும் பூச்சியினங்களையும் எங்களுக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி வந்து, காயலில் நீந்திக் கொண்டிருந்த ஃபேல்கன்களை மரச்செறிவின் ஊடாக ரசித்தவாறே கடற்கரைக்குச் சென்றோம்.

மாமாவிற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல் பகலவன் மெல்ல மெல்ல துயில் கலைந்தான். தன்னை ரசிப்பதற்கும் வரவேற்பதற்கும் மிகச் சிலரே இருப்பது கண்டு சினத்தில் அளவிற்கதிகமாகவே சிவந்திருந்த வெய்யோனின் எழில்மிகு எழுச்சியில் அவனது சினத்தை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆதவனை ஆகாயத்தில் ஓரிடத்தில் இழுத்துப் பிடித்து நிறுத்திவிட்டு நடை/ஓட்டப் பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். வீட்டின் பின்புறம் ஓடும் நதி, இரவியைத் தனது நீரோடு குழைத்துக் கொண்டுவிட்டதா என தங்க நிறத்தில் மினுங்கி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றைக் கண்டு சிறிது நேரம் களித்துக் கிடந்து பின்னர் தோட்டத்தில் வெண்டைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், முள்ளங்கி ஆகியவற்றின் விளைச்சலைக் கணித்து விளைந்தவற்றைப் பறித்து வீட்டிற்குச் சமைக்க கொடுத்தனுப்பவதும் இடையிடையே களையெடுப்பதுமாக அம்மண்ணை மட்டுமல்லாது மண்ணுடனான தமது உறவையும் பராமரித்துக் கொண்டார்கள் மாமா. 7:30 மணியானவுடன் குளித்துக் கிளம்பி அன்றைய நாளுக்கான அலுவல்கள், சந்திப்புகள் ஆகியவற்றின் அட்டவணையை தொலைபேசியில் கேட்டவாறே எங்களுக்கு ‘டாட்டா’ சொல்லி விடைபெற்றுக் கொண்டார்கள்.

ஒவ்வொரு நாளும் பணியின் பரபரப்பை உள்வாங்கிக் கொள்ளும் முன் காலை இரண்டு மணி நேரத்தைத் தமக்கானதாக்கி அந்நாளுக்குத் தேவையான புத்துணர்வை உள்ளமெங்கும் பரப்பி நாளைத் துவக்குகிறார்கள். நகரின் பேரிரைச்சலுக்கும் அலையின் ஓசைக்கும் நடுவில் காரணமே இல்லாமல் வலுக்கட்டயமாகச் சிரித்து ( ‘மக்கள் போதுமான அளவில் அழாததே பல மனச்சிக்கல்களுக்குக் காரணம்’ என வரப்போகும் மனோதத்துவ அறிக்கையைத் தொடர்ந்து, அதிகாலையிலேயே ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது மூளையின் சுரப்பிகளைச் சமன் செய்ய முயலும் நாள் வெகு தூரத்தில் இல்லை ! ) மன அழுத்தத்தை வெளியேற்ற முனைபவர்கள் பலரைப் பெற்ற இப்பெருநகரத்தில், இவ்வளவு ரசனையான ஒரு காலைப் பொழுதா?

                        அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், உணவகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என வெவ்வேறு பெயர்களில் வானுயர ஓங்கி நிற்கும் கட்டிடங்கள்; புல்டோசர் மற்றும் எலிகளின் உதவியோடு மிக அழகான (!) சிகையலங்காரங்களோடு வலம் வரும் பெரும்பாலான யுவன்கள்; லெகிங்ஸ், குட்டைச் சட்டை, காற்றில் பறக்கும் குழல் எனப் பெண்ணியத்தின் (!?) வீரியத்தைப் பறைசாற்றிச் செல்லும் பெரும்பாலான யுவதிகள்; (அய்யய்யோ! இதெல்லாம் நல்லா இருக்குதுன்னுதான் சொல்றேன். வேற எந்த அர்த்தமும் இல்ல); ‘தமிழ் தெரியுமா?’ என்ற கேள்விக்கு, ‘தமிழ் மாலும் ஹே!’ என தாய்மொழிப் பற்றோடு மறுமொழியுரைத்து, பெரிய பெரிய கடைகள் மற்றும் உணவகங்களில் அம்மண்ணுக்குரிய வாடிக்கையாளர்களை எக்கச்சக்கமாக நெளிய வைக்கும் கிழக்கு மற்றும் வட இந்திய சகோதரர்கள்; விடுமுறை நாட்களில் கடற்கரையை நிறைத்திருக்கும் மனிதக் கடல்; எங்கெங்கு காணினும் கூட்டம்; போக்குவரத்து நெரிசல் ; 10 மணிக்கு மேலான தமது நேரம் முழுவதையும் பணியின் காரணமாகப் பன்னாட்டு முதலாளிகளுக்கென தானம் செய்து விட்டதால் அலுவலகத்திற்குச் செல்லும் அந்த பயண நேரத்தை இளையராஜா மற்றும் ரஹ்மானின் உதவியோடு இனிமையாக்க முயலும் வண்ணம் காதின் ஆழ்துளை வரை செல்லும் கேட்பொறியோடு கண்களை மூடி ஜன்னலோரம் சாய்ந்திருப்போர் - சூரிய சந்திரனின் வருகையையோ மறைவையோ கண்டுகொள்ளாது / கண்டுகொள்ள நேரமில்லாது பகலிரவு பேதமின்றி விழித்திருந்து முழுவீச்சில் இயங்கும் பெருநகரத்தின் சில அடையாளங்கள் இவை.

                        “இன்று எங்கு/எப்படி பொழுதைக் கழிக்கலாம் ?” – ‘வாழ்வா? சாவா?’ என்பதற்கு ஈடான இக்கேள்விக்கு நல்லதொரு பதிலாகவும் அடைக்கலமாகவும் அமையும் ‘மால்’ எனப்படும் உன்னத கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் பண்பாட்டுப் பெட்டகங்களான பெருநகரங்களில் மனது அடையும் பரிணாம வளர்ச்சி சிக்மண்ட் ஃப்ராய்டின் (!) வார்த்தைகளில்….. ‘சும்மா போய்ச் சுற்றிப் பார்ப்போம்’ என்று கிளம்பும் போதுள்ள மனநிலை, உள்ளே சென்று சரியாக மூன்றாவது நிமிடத்தில் ‘ஏதாவது பிடித்திருந்தால் வாங்கலாம்’ என்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதே ஆரோக்கியமான மனதிற்கான அடையாளம். முதல் கடைக்குள் சென்று ஒவ்வொரு பொருளையும் அலசி ஆராய்ந்து, ‘வேண்டுமா? வேண்டாமா?’ என்ற இரண்டும் கெட்ட நிலையில் ‘வேண்டாம்’ என்னும் கஞ்சாம்பட்டி நிலையைத் துறந்து, சில பல பொருட்களை அள்ளி எடுத்த பின், இறுதியாக வெகு சிலருக்கு ‘இவ்வளவும் வேண்டுமா?’ போன்ற மனக்குழப்பம் ஏற்படுவது மிகச் சாதாரணம். பெண்களின் இளகிய மனதில், அந்த பன்னாட்டு விற்பனைக் கூடத்தின் பாவப்பட்ட முதலாளிகளது வறுமை நிலையை எண்ணி (இதைவிட உருப்படியான வேறு என்ன பெரிய காரணம் இருக்க முடியும்?), அவர்களது ஒரு வேளை வயிற்றுப்பசியைத் தீர்க்கும் நோக்கில் கருணை ஊற்று பெருக்கெடுத்து அருவியாகக் கொட்டி ஆறாக ஓடிக் கடலில் கடந்து சுனாமி வந்து ……. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், எல்லாத்தையும் கொஞ்சம் சீக்கிரம் பேக் பண்ணித் தொலைங்கப்பா ! உதவி பண்றதுன்னு முடிவு பண்ணதுக்கப்புறம் மொரட்டுத்தனமா களத்துல எறங்கீற வேண்டியதுதானே ? எனவே கொள்வனவை இத்தோடு முடித்துக் கொண்டால் எப்படி ? அந்த ஒரு முதலையின் ….. மன்னிக்கவும், அந்த ஒரு முதலாளியின் வீட்டில் மட்டும் அடுப்பு எரிந்தால் போதுமா ? அந்த மாலில் கடை விரித்திருக்கும் மற்றவர்கள் ? அதுமட்டுமல்லாமல் ஒருவரிடம் மட்டுமே பணம் சேர்ந்து கொண்டு போனால் அது மந்தமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் ஆதலால் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயத்தை உணர பெண்களால் மட்டுமே முடியும். எனவேதான் கால் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் எல்லா கடைகளுக்கும் சென்று ஒரு கைக்குட்டையேனும் வாங்கிச் சம பங்கீட்டுப் பணியைச் செவ்வனே செய்து ஆத்ம திருப்தியடைகிறார்கள். ‘பொருட்கள் தேவையின் அடிப்படையில்தான் வாங்கப்பட வேண்டும்’ அப்டிங்குற கல் நெஞ்சக்காரங்க எல்லாம் கொஞ்சம் ஓரமா போய் நில்லுங்கப்பா. காத்து வரட்டும்.

    மேலோட்டமாக அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துக் கொள்வதைப் போன்ற பிம்பத்தைத் தந்தாலும் எளியவர்களிடம் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் பெருநகரங்கங்களோடு எவ்வளவுதான் முயன்றாலும் ஒட்ட மறுத்தது மனது. முட்டுக்கட்டை போட்டுத் தடுக்கும் செயற்கையான பலவற்றையும் மீறி அப்பெருநகரங்களுக்கென ஓர் அழகிய முகம் உண்டு என்பதை அந்நகரின் எளிய மனிதர்கள் உணர்த்தினார்கள். ஆட்டோவிலோ டாக்ஸியிலோ செல்லும் போது அந்த ஓட்டுனர்களிடம் உரையாட பிடிக்கும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு குட்டி புத்தகத்தை வாசித்த உணர்வைத் தந்துவிட்டுச் செல்வார்கள். ஒவ்வொருவருள்ளும் அவ்வளவு கதைகள் புதைந்திருக்கும். அவர்களுடனான உரையாடலைப் பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிப்பேன். “அண்ணா ! உங்களுக்கு சொந்த ஊரே இதுதானா ?”  

         இதற்கான அனைவரின் பதில்களும் சுவாரஸ்யமானதுதான் என்றாலும் கூட அவற்றின் பிரதிநிதிகளாய் இரண்டு பதில்கள் : 

                        “ஆமாங்கண்ணு ! பொறந்தது வளந்தது வெளாண்டது எல்லாம் இத்தே ஊர்தான். நான் பாக்க ரொம்பவே வளந்துடுச்சுமா. ஒரு பக்கம் சந்தோசம்னாலும்…….. (இந்த அரை நொடித் தடுமாற்றம் என்னென்னவோ சொல்லிற்று)……. அட ! சந்தோசந்தாம்மா…. வர்றவங்க அல்லார்க்கும் கஞ்சி ஊத்துற ஊராச்சே ! அத்த வுடு….. நீ படிக்கிறியாம்மா?” என்று சட்டென பேச்சை என் பக்கம் திருப்பினார் ரமேசு (இப்படித்தான் தன் பெயரை உச்சரித்தார்) அண்ணன். “வெளியூர்காரங்க ரொம்ப பேர் வந்து நெறச்சுட்டாங்கல்ல?” என்ற கேள்விக்கு “பொழப்புக்கோசரம் வர்றாங்க. இந்த எழவு புடிச்ச துட்டு படுத்துற பாடு…. சம்பாரிக்க எங்க வழி இருக்கோ அங்கதானம்மா வருவாங்க பாவம்…” என்று வழக்கம்போல் வெளியூர்காரர்களைக் குறை சொல்லாமல் அவர்களுக்காக அவர் இரக்கப்பட்டது விசித்திரமாய் இருந்தது. அப்படியே தொடர்ந்த உரையாடலில், “என்ன ஒண்ணு ? நான் சின்ன புள்ளயா இருந்தப்போ மழ வர்றதுக்கு முன்னாடி மண் வாசன அப்பிடியே மண்டைக்குள்ள எறங்கி கெறக்கும் பாரு….. இப்போ மண்ணையும் காணோம்; வாசனையவும் காணோம்” என்று மிகச் சாதரணமாகச் சொல்லி அவர் சிரித்த போது சிறு வயதில் உருண்டு புரண்டு மகிழ்வோடு தன் உடம்பில் பூசிக்கொண்ட அவ்வூரின் மண்ணுக்கும் அதனை ஆசைதீர நுகர்ந்து களித்த வாசனைக்குமான ஏக்கம் வெளிப்பட்டது.

                        “இல்லம்மா…. சொந்த ஊரு தெக்கு பக்கம் ஒரு கிராமம். இங்க ஆட்டோ ஓட்டுறேன். இந்த நாப்பதஞ்சு வயசுல திரும்பிப் பாத்தா வெறும் எந்திரத்தனமான வாழ்க்கைதான். இந்த வயித்துப் பசின்னு ஒண்ணு மட்டும் இல்லேனா நானெல்லாம் ஏன் இந்த ஊருக்கு வாறேன்? மழ இல்லாம தண்ணி இல்லாம வெளநிலம் அவ்வளவும் பாளம் பாளமா வெடிக்கிற வரை குத்த வச்சுக் காத்துக் கெடந்து வேற வழி இல்லாமத்தான் இங்க வர வேண்டியதா போச்சு. அப்பப்ப ஊர் பக்கம் போகும் போதுதான் ‘நீயும் மனுசந்தாண்டா’ன்னு மனசு ஞாபகப்படுத்துது. நான் பரவால்லம்மா. இந்த மண்ணுக்காரங்க மனச லேசாக்க எங்க போவாங்க?” என்று முதலில் அவ்வூரின் மேலான வெறுப்பையும் தனது நிலையின் மீதான விரக்தியையும் வெளிப்படுத்திய பாண்டியன் அண்ணன் இறுதியாக அவ்வூர்க்காரர்களின் மீதான கரிசனத்தை வெளிப்படுத்தி புல்லரிக்க வைத்தார்.                       

     ரமேசு அண்ணனுக்கும் பாண்டியன் அண்ணனுக்கும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெளிப்படுத்திய பச்சாதாபம் அந்த ஊரை மனதிற்கு நெருக்கமாய் இழுத்து வந்தது. வண்டியில் இருந்து இறங்கிய போது “இவர்களைப் போன்றோரால்தான் நானெல்லாம் இதையும் ஊருன்னு மதிச்சு இங்க வாறேனாக்கும்” – கன்னத்தில் விழுந்த மழைத்துளி காதோரமாய்ச் சொல்லியது.

            பறவை வலம் பாயும்; இடம் பாயும். நகர்‘வலம்’ பாயும் போது மனப்பறவை ‘இடம்’ பாய்வதென்ன?

- சோம.அழகு