இந்தியாவில் இதுவரை நடந்த வருமானவரி சோதனைகளில் மிகப் பெரிய சோதனையைத் தமிழ்நாட்டில் மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு எதிராக மோடி அரசு இறக்கிவிட்டிருக்கின்றது. 180 இடங்களில் 1800 அதிகாரிகளைக் கொண்டு கிளீன் பிளாக் மணி சோதனையை நடத்தி இருக்கின்றனர். மன்னார்குடி மாஃபியா கும்பல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்திருக்கின்றது என்பதும், ஒரு பக்கா ரவுடிக் கும்பல் என்பதும் யாருக்கும் தெரியாத ஒன்றல்ல. மோடி இந்தியாவின் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று அறிவிப்பதற்கு முன்னும், மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று இந்திய மக்களை நாயைவிட கேவலமாக அலைக்கழித்த டிமானிடைசேஷன் நிகழ்வு தொடங்கி இன்றுவரையிலும் இந்தக் கும்பல் எந்தவித தயக்கமும் இன்றி கொள்ளையில் ஈடுபட்டுதான் வந்தது. ஜெயலலிதா பிணம் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் இரங்கல் தெரிவிக்கவந்த மோடி, சசிகலாவின் தலையில் கைவைத்து அன்போடு ஆறுதல் கூறிய போதும், சசிகலா ஒரு மோசடிப் பேர்வழி என்பதும், ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல் பெருச்சாளி என்பதும் மோடிக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பாம்பின் கால் நிச்சயம் பாம்பறியும்.

Paradise Papers

ஆனால் இத்தனை நாட்களாக இந்தக் குற்றகும்பலின் மீது கைவைக்கத் திராணியற்று, அரசியல் ஆதாயத்திற்காக அதை அனுமதித்த மோடி, இன்று அதிமுகவை கபாளீகரம் செய்யும் திட்டத்திற்கு மன்னார்குடி கும்பல் தடையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்டு, தனது ஏவல் துறையான வருமானவரித்துறையை ஏவிவிட்டு, மன்னார்குடி மாஃபியா கும்பலை ஓட ஓட விரட்டி விரட்டிக் கடிக்கின்றது. நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் இந்த வருமானவரி சோதனையை மகிழ்ச்சியாகத்தான் பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்தக் கும்பல் தமிழ்நாட்டில் கொட்டம் அடித்திருக்கின்றது. ஆனால் இந்தச் சோதனை நிச்சயம் கிளீன் பிளாக் மணி செய்வதற்கான சோதனை இல்லை என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையும், ராமமோகன் ராவ் வீட்டில் நடந்த சோதனையும், இன்னும் சேகர் ரெட்டி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களின் வீட்டில் நடந்த சோதனைகள் எல்லாம் என்ன ஆனதும் என்பதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் இதுவரை யாருக்குமே தெரியப்படுத்தப்படவில்லை. இதில் இருந்தே இந்தச் சோதனைகள் எல்லாம் திட்டமிட்டே மிரட்டுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்பதும், சோதனையின் நோக்கம் கறுப்புப்பண ஒழிப்பெல்லாம் அல்ல என்பதும் அப்பட்டமாகத் தெரிகின்றது.

இன்று கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகின்றேன் என்று 1800 அதிகாரிகளை மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு எதிராக களத்தில் இறக்கிவிட்டிருக்கும் மோடி அரசு பனாமா லீக்ஸ் அம்பலப்படுத்திய மோசடிப் பேர்வழிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைப் பார்த்தாலே நாம் தெரிந்துகொள்ளலாம். மொஸாக் பொன்செகா என்ற லெட்டர்பேட் நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட 2.6 டெராபயிட்டுகள் அளவுள்ள 11.5 மில்லியன் தகவல்களை வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேசப் புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கம் (ICIJ) வெளியிட்டு உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 500 நபர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. அமிர்தாப்பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் 9 பேர்கள், மோடியின் கூட்டாளி கெளதம், அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டார் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டார் போன்றவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். பனாமா லீக்ஸ் வெளியான போது அருண்ஜெட்லி பனாமா பட்டியலில் உள்ள யாரும் தப்ப முடியாது என வாய்ச்சவடால் அடித்தார். ஆனால் இன்று அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மோடி ஒரு மோசடிப் பேர்வழி என்பதும், கறுப்புபண முதலைகளின் உற்ற நண்பன் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து இன்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் காறித் துப்பும் அளவிற்கு அது அம்பலமாக நாறிக்கிடக்கும் இந்தச் சமயத்தில் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நாடகத்தின் யோக்கியதை மேலும் அம்பலப்படுத்தும் விதமாக பாரடைஸ் பேப்பர் என்ற ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. இதையும் சர்வதேச புலனாய்வுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்புதான் வெளியிட்டு இருக்கின்றது. ஒரு கோடியே முப்பத்து நான்கு பக்கங்கள் கசியவிடப்பட்டு இருக்கின்றன. பனாமா லீக்ஸ் பனாமாவில் இருந்த மொஸாக் பொன்செகா என்ற லெட்டர்பேட் கம்பெனியில் இருந்து திருடப்பட்டது போன்று, பாரடைஸ் பேப்பர் பெர்முடாவின் ஆப்பிள்பை நிறுவனம், சிங்கப்பூரின் ஏசியாசிட்டி நிறுவனம் போன்றவற்றில் இருந்து திருடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனம் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கறுப்புப் பண முதலைகளின் கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கின்றன. பனாமா லீக்ஸில் இடம் பெற்ற அமிதாப் பச்சன், சஞ்சய்தத்தின் மனைவி தில்னாஷின் தத், மத்திய இணையமைச்சர் ஐயந்த் சின்ஹா, பாஜக எம்.பி ரவிந்திர கிஷோர் சின்ஹா, விஜய் மல்லையா போன்றவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 180 நாடுகளைச் சேர்ந்த கறுப்புப்பண முதலைகளின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 19 வது இடத்தில் உள்ளது.

சர்வதேச அளவில் பார்த்தால் இங்கிலாந்து மகாராணி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் செளகத் அஜிஸ் போன்றவர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றது. பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீஃப் அவர்கள் பனாமா லீக்ஸில் மாட்டி இப்போதுதான் பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தால் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார் என்பதையும், ஐஸ்லேண்ட் பிரதமர் அவராகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் கறுப்புப்பண ஒழிப்பு வீரர் மோடியின் ஆட்சியில் இவ்வளவு பெரிய முறைகேடுகள் அம்பலமான பின்பும் அதற்கு எதிராக ஒரு சிறு சலசலப்பு கூட எழவில்லை என்பதைப் பார்க்கும் போது பிரகாஷ்ராஜ் சொன்னது போல மோடி ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதுதான் ஊர்ஜிதமாகின்றது.

தான் பதவில் வந்து உட்கார தனக்காக பல ஆயிரக்கணக்கான கோடிகளை வாரிவழங்கிய இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் அவர்களின் பங்காளிகளின் நம்பிக்கையான அடியாளாக செயல்படுவது மட்டுமே தன் வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் என்ற மன உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி, உண்மையில் தான் பதவிக்கு வந்ததில் இருந்து கறுப்புப்பணத்தை பெருக்குவதிலும், அதை வெள்ளையாக்கும் தரகன் வேலை பார்ப்பதிலுமே முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டு இருக்கின்றார். அமித்ஷா மகன் ஜெய்ஷா சொத்துமதிப்பு 16 ஆயிரம் மடங்கு பெருகியதற்கும், இந்தியப் பெருமுதலாளிகள் உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருவதற்கும் மோடியின் இந்தக் கடுமையான உழைப்புதான் காரணம். இப்படி இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகளும் தனது அல்லக்கைகளும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்க முழு உதவி புரிந்த மோடி சாமானிய மக்களை நாய்களைப் போல ஏடிஎம் வாசலில் நிற்கவைத்து சாகடித்துத் தனது வெட்கம்கெட்ட கறுப்புப்பண ஒழிப்பு போரை நடத்தினார். இன்றும் நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

மோடி இன்னும் கறுப்புப் பணத்தை ஒழிப்பார் ஒழிப்பார் என சூடுசுரணையே இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி அடிமைகள் பனாமா லீக்ஸ் மற்றும் பாரடைஸ் பேப்பர் சம்மந்தமாக இதுவரை எத்தனை பேரின் வீடுகளில் வருமானவரி சோதனைகள் நடைபெற்றது என்பதையும், இல்லை என்றால் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் விஜயபாஸ்கர், நத்தம்விஸ்வநாதன், சேகர்ரெட்டி, ராமமோகன்ராவ் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலை என்னவென்றாவது சொல்வார்களா?. நிச்சயம் அவர்கள் சொல்லமாட்டார்கள். அவர்களின் நோக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலை வலுவாக காலூன்ற வைப்பதுதான். அதற்காக அவர்கள் சி.பி.ஐ, வருமானவரித்துறை போன்ற ஆளும்வர்க்கத்தின் ஏவல் நாய்களை ஏவுவார்கள். நீங்கள் பணிந்தால் உங்களது கறுப்புப் பணத்துடன் நிம்மதியாக வாழலாம். அதை இன்னும் பல ஆயிரம் மடங்கு பெருக்கிக் கொள்ளலாம். எதிர்த்தீர்கள் என்றால் இன்று நடக்கும் இந்த வரலாறு காணாத சோதனைகள் போன்ற பல சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ப்பனியமும், கறுப்புப் பணமும், முதலாளித்துவமும் ஒரே வயிற்றில் பிறந்த கள்ளக்குழந்தைகள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டால் மோடியின் இந்த அபத்த நாடகத்தை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

- செ.கார்கி