“மருத்துவ நுழைவுத் தேர்வு முறை வந்து விட்டால் தரவரிசைப்படிதான் (rank wise) கல்வியிடங்கள் நிரப்பப்படும். மேலாண்மை ஒதுக்கீடு (management quota) எனும் பெயரில் கல்வியிடங்களை இலட்ச இலட்சமாய் விற்றுக் கொள்ளையடிக்க முடியாது. அதனால்தான் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றை நடத்துபவர்களான எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்வு முறையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்; மாணவர் நலன், அது, இது எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்” என்பது இந்த நுழைவுத்தேர்வு முறையை ஆதரிப்பவர்களின் முதன்மையான குற்றசாட்டு.

புரியாமல்தான் கேட்கிறேன், கல்விக் கொள்ளையை ஒழிக்க வேண்டுமானால் அதற்கென ஒரு தனிச் சட்டம் கொண்டு வர முடியாதா? அதற்கு ஏன் புதிதாக ஒரு தேர்வைக் கொண்டு வந்து மாணவர்கள் உயிரை எடுக்க வேண்டும்?

neet exam 2

இவர்கள் நாடு முழுவதற்கும் ஒரு கட்டாயத் தேர்வைக் கொண்டு வருவார்களாம்... வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களிடம் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வி கேட்பார்களாம்... படிக்காத பாடமுறையிலான அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் நம் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டு சாவார்களாம்... ஏனடா கொடுமைக்காரர்களே, இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டால் கல்விக் கொள்ளையை ஒழிக்கிறோம், ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பார்களாம்! யார் காதில் பூச் சுற்றுகிறீர்கள்! எங்களையெல்லாம் பார்த்தால் உங்கள் கண்ணுக்கு எப்படித் தெரிகிறது?

மருத்துவக் கல்வியிடங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது எனும் அக்கறை அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத்தானே எடுக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு நாடு முழுக்க ஒரு தேர்வு, அதற்கென நூற்றுக்கணக்கில் தேர்வு மையங்கள், அதை நடத்த ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், இவர்களுக்கான செலவு என ஏன் இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்? ஏன், கல்விக் கொள்ளையர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்குத் துணிவு இல்லையா? அதற்காக அந்தக் கொள்ளையினால் பாதிக்கப்படும் மாணவர்களே நடவடிக்கையின் சுமையையும் ஏற்க வேண்டுமா? உங்களுக்குப் பிடிக்காத மூட்டைப் பூச்சிகளைக் கொளுத்த எங்கள் வீடுகளில் தீ வைப்பீர்களா?

கல்லூரிப் பேராசிரியர்களைக் கேட்டால், “இப்பொழுதும் மேலாண்மை ஒதுக்கீட்டு முறையின் அடாவடி ஒன்றும் ஒழிந்ததாகத் தெரியவில்லை” என்கிறார்கள்.

ஒருவேளை அப்படி ஒரு நன்மை இதனால் ஏற்படும் என்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதன் பலன் யாருக்குக் கிடைக்கும்?

இந்தத் தேர்வே நடுவண் இடைநிலைக் கல்விப் பாடத் திட்டப்படிதான் (CBSE syllabus) நடத்தப்படுகிறது. எனவே, அந்தப் பாடத்திட்டத்தில் படிக்கும் அளவுக்கோ, இந்தத் தேர்வுக்கெனச் சிறப்பு வகுப்புகளில் சேர்கிற அளவுக்கோ வசதி இல்லாத மாணவர்கள் இந்தத் தேர்வு மூலமாகவே வடிகட்டப்பட்டுத் தூக்கி எறியப்பட்டு விடுகிறார்கள். எனில், இதில் தேர்ச்சி அடைந்து மருத்துவக் கல்வியைப் பெறுகிறவர்கள் யார்? அத்தனை பேரும் நடுவண் இடைநிலைக் கல்வியில் படிக்கிற அளவுக்கு அல்லது சிறப்பு வகுப்புகளில் பயிலும் அளவுக்கு ஓரளவாவது வசதியான மாணவர்கள்தாமே?

ஆக, ஒருவேளை இந்தத் தேர்வு முறையால் கல்விக் கொள்ளை ஒழியும் என வைத்துக் கொண்டாலும், அது வசதியானவர்களுக்கான சலுகையாகத்தானே அமைந்திருக்கிறது? ஒரு மாதக் கட்டணத்தை மொத்தமாகச் செலுத்தி விட்டால் இரண்டு மாதங்களுக்குப் பேசிக் கொள்ளலாம் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகை தருவது போல, பள்ளிக் கல்விக்காக இலட்சக்கணக்கில் செலவு செய்து விட்டால் கல்லூரிப் படிப்புக்குச் செலவு செய்யத் தேவையில்லை என்பது போலத்தானே இருக்கிறது இது? மாறாக, பொன்னாரும் பா.ஜ.க., அடிப்பொடிகளும் சொல்வது போல் இதில் ஏழைகளுக்கோ நடுத்தர மக்களுக்கோ என்ன பலன் இருக்கிறது? எந்த வகையில் இது ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்கிறது? எந்த ஏழை வீட்டுப் பிள்ளை நடுவண் இடைநிலைக் கல்வியில் படிக்கிறார், இதன் மூலம் பலனடைய?

இது தவிர, மருத்துவ நுழைவுத் தேர்வு முறையால் சமூகநீதி (reservation) பாதிக்கப்படவில்லை என்கிற பொய்யும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது.

“இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் (reservation) அடிப்படையில்தானே கல்வியிடங்கள் வழங்கப்படுகின்றன? அப்படியிருக்கும்பொழுது சமூக நீதி எப்படிப் பாதிக்கப்படும்?” எனக் கேட்கிறார்கள் இந்தக் குள்ளநரிகள்.

அடக் கொலைகாரர்களே, இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி அடைய முடியாதபடிதானே இந்தத் தேர்வே வடிவமைக்கப்பட்டிருக்கிறது? அப்புறம் எப்படி அவர்களுக்கு சமூகநீதிப்படி இடம் ஒதுக்குவார்கள்? தேர்ச்சி அடைந்தால்தானே இடம் ஒதுக்குவதற்கு?

ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மிகப் பெரும்பாலானவர்கள் இன்னும் பொருளாதார அளவில் பின்தங்கியவர்களாகத்தாம் இருக்கிறார்கள். அன்றாடக் கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டடத் தொழிலாளிகள், துப்புரவுப் பணியாளர்கள் எனக் கடைமட்டத் தொழில் செய்பவர்களாகத்தாம் இருக்கிறார்கள். இவர்களால் எப்படிப் பிள்ளைகளை நடுவண் இடைநிலைக் கல்விப் பள்ளிகளிலும் (CBSE Schools) சிறப்பு வகுப்புகளிலும் படிக்க வைக்க முடியும்? இவை இரண்டுமே இல்லாமல் இவர்களின் பிள்ளைகள் எப்படி உங்கள் மருத்துவத் தகுதித்தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற முடியும்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடக்க முடியாதபடி ஒரு தேர்வைக் கொண்டு வந்து வைத்து விட்டு, அதைக் கடந்து வந்தால் சமூகநீதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு தருகிறேன் என்பது “நெருப்பாற்றில் நீந்தி வா! அதன் பிறகும் நீ உயிரோடிருந்தால் கேட்பவையெல்லாம் தருகிறேன்” என்பது போன்ற கொடூரம் இல்லையா?

ஏழைகள் மருத்துவராகவே முடியாதபடி ஓர் ஏற்பாட்டைச் செய்து விட்டு, “அதன் பக்க விளைவாகக் கல்விக் கொள்ளை ஒழியும். அதனால் இது ஏழைகளுக்கான திட்டம்” என்பது உச்சக்கட்டக் கேடித்தனம் இல்லையா?

முழுக்க முழுக்க வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பலனளிக்கிற இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்தி விட்டு, “பணக்காரர்கள் போதுமான கல்வித் தகுதி பெறாமலே, விலை கொடுத்தே மருத்துவக் கல்வி இடங்களை வாங்கி விடுகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் மேலாண்மை ஒதுக்கீட்டு முறையை (management quota system) ஒழிக்கிற இப்படி ஒரு தேர்வைக் கொண்டு வருகிறோம்” என்பது உலகப் பெரும் பொய் இல்லையா?

நீங்கள் கேட்கலாம், “ஆக மொத்தம், பணம் படைத்தவர்களாக இருந்தாலும், இனி தகுதியை உயர்த்திக் கொண்டால்தான் மருத்துவராக முடியும் என்கிற கட்டாயத்தை இந்தத் தேர்வு முறை ஏற்படுத்தியிருக்கிறது, இல்லையா?” என்று. அதுவும் இல்லை. அங்கேயும் இருக்கிறது ஒரு குறைபாடு.

இது இந்திய அரசின் அமைப்பான நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) நடத்தப்படுகிற தேர்வாக இருந்தாலும், அந்த வாரியமே நேரிடையாக முன்னின்று இதை நடத்தவில்லை. ‘புரோமெட்ரிக்’ எனும் அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஒன்றிடம்தான் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தெருவுக்கு நான்கு பொறியாளர்கள் உரிய வேலையின்றித் தவிக்கும் ஒரு நாட்டில் – அந்த அளவுக்குப் பொறியாளர்கள் நிறைந்த ஒரு நாட்டில் – எதற்காக இவ்வளவு பெரிய தேர்வை நடத்தும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனத்திடம் தர வேண்டும், என நான் கேட்கப் போவதில்லை. ஒப்பந்தப்புள்ளி (tender) அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் எந்த அடிப்படையில் இந்தப் பணி இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்பதையும் நான் கேட்கப் போவதில்லை. இவையெல்லாம் மேக் இன் இந்தியா, பாரத் மாதா கீ ஜே என முழக்கமிடுபவர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

நான் கேட்பது, மாநில அரசு நடத்தும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் போன்றவையெல்லாம் ஏதோ நம்பிக்கைக்குரியவையே அல்ல என்பது போல, “இது நடுவணரசே நடத்தும் தேர்வு. நம்பகத்தன்மையானது, நடுநிலையானது” என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்தீர்களே! கடைசியில் பார்த்தால், போயும் போயும் ஒரு தனியார் நிறுவனம்தான் இதை நடத்துகிறது. இதற்கு உங்கள் மறுமொழி என்ன?

மேலும், யாராவது இந்நிறுவனத்தின் இணையத்தளத்திற்குள் கள்ளத்தனமாகப் புகுந்து (hack) தங்களுக்கு வேண்டியவர்களுடைய (அல்லது வேண்டாதவர்களுடைய) தேர்வு முடிவுகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைப்பது பெரிய கடினமில்லை எனவும் அச்சம் தெரிவிக்கிறார்கள் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஆர்வலர்கள்.

ஆக, பணத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் தேர்வு முடிவுகளைத் தங்கள் விருப்பம் போல மாற்றிக் கொள்வது என்பது இந்தத் தேர்விலும் நடக்கக்கூடியதே! சொல்லப் போனால், பணக்காரர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இனி அதைச் செய்ய முடியும் எனக் கூடுதலாக ஒரு கதவு இதன் மூலம் திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை (இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும்பொழுதே 2016ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வில் இப்படிப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக புரோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிந்திருக்கிறது தில்லிக் காவல்துறை). எனவே, இனி யாராக இருந்தாலும் தகுதியை உயர்த்திக் கொண்டால்தான் மருத்துவராக முடியும் என்பது போன்ற இன்றியமையா நிலைமை எதையும் இந்தத் தேர்வு உண்டாக்கி விடப் போவதில்லை.

ஆனால், இப்படி எவ்வளவு சொன்னாலும் இவை எதையும் நீங்கள் மதிக்கப் போவதில்லை. “ஆயிரம் இருந்தாலும், மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் தூண்டி விடப்படுபவைதாமே?” என அடுத்த கேள்வியை வைப்பீர்கள். உங்களுக்குத் தெரிந்தது கேள்வி எழுப்புவது மட்டும்தான். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எவ்வளவு அதிர்ச்சிகரமானவை என்பது பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. என்றாலும், பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை என்பதால் அதற்கும் பதில் இதோ.

எனக்குத் தெரிந்து, இந்த நுழைவுத் தேர்வு முறையை முதன் முதலாக எதிர்க்கத் தொடங்கியவர்கள் இதழாளர்கள்தாம். அவர்கள்தாம் இது தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரைகளை முதலில் இதழ்களில் எழுதத் தொடங்கினார்கள். அதன் பின், இதழ்களின் நேர்காணல்கள் போன்றவற்றில் கல்வியாளர்கள் இது குறித்துப் பேசலானார்கள். அதற்குப் பின், மருத்துவ மாணவர்கள், மே பதினேழு போன்ற மக்கள் இயக்கத்தினர் போன்றோர் போராடத் தொடங்கினர். பின்னர், தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களில் விவாதங்கள் சூடு பிடித்தன. சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் வலுத்தன. இவற்றுக்கெல்லாம் பின்னர்தாம் கட்சிச் சார்பானவர்களின் தலைகளே தென்படத் தொடங்கின.

உண்மை இப்படியிருக்க, எதிர்க் கட்சிகள்தாம் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் என ஆளுங்கட்சியினர் மீண்டும் மீண்டும் ஏன் புகழ்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. அவர்கள் செய்யாத ஒரு நன்மையை, செய்ததாக நீங்களே ஏன் ஏற்றி விடுகிறீர்கள்? எதிர்க் கட்சிகளின் செல்வாக்கை ஏன் ஆளுங்கட்சியினரே உயர்த்தி விடுகிறீர்கள்? முதலில் அவரவர் கட்சிக்கு நல்ல பெயர் வாங்க முயலுங்கள்! நடப்பது முழுக்க முழுக்க மக்கள் போராட்டம். இதற்கான பெருமையை எதிர்க் கட்சியோ ஆளுங்கட்சியோ தட்டிச் செல்வதை ஒருபொழுதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அது மட்டுமின்றி, அப்படியே இது எதிர்க்கட்சிகளால் தூண்டி விடப்பட்ட போராட்டமாகவே இருந்தாலும் அதனால் என்ன தவறு என நான் கேட்கிறேன். மக்கள் தாங்களாகவே முன்வந்து நடத்துவதுதான் நல்ல போராட்டம் என உங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர் யார்?

அட அறிவிலிகளே! மக்கள் போராட்டம் என்பதே பெரும்பாலும் யாராவது தனிமனிதராலோ கட்சியாலோ இயக்கத்தாலோ தூண்டி விடப்பட்டுத்தான் நடக்கும்; அதுதான் காலங்காலமாக உலக வழக்கம். இரசியாவின் நவம்பர் புரட்சி எப்படி நடந்தது? இலெனின் தூண்டி விட்டுத்தானே? இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி நடந்தது? பாரதியார், திலகர், வ.உ.சி, காந்தியடிகள் எனத் தலைவர்களும் கட்சிகளும் தூண்டி விட்டதால்தானே? அப்படியானால், அவையெல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லையா? மக்கள் போராட்டங்கள் இல்லையா?

இப்படி, வரலாறும் தெரியாமல் நாட்டில் நடப்பது பற்றியும் புரியாமல் என்ன தெரியும் என “இந்தத் தேர்வு நல்லது… நல்லது” எனப் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

சரி, தமிழர்கள்தாம் அரசியல் ஆதாயத்துக்காகவும் கட்சிக்காரர்கள் தூண்டி விட்டும் எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். நாட்டின் மிகப் பெரிய கல்வியாளர்களில் ஒருவரான அனில் சடகோபால் அவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்? அவர் ஏன் இந்தத் தேர்வு முறை தவறானது என விழிப்புணர்த்துவதற்காக இந்தியா முழுதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்? அவர் என்ன தமிழரா? தமிழ்நாட்டுக் கட்சிகளிலோ இயக்கங்களிலோ உறுப்பினரா? அல்லது, இங்குள்ள கட்சியினரால் தூண்டி விடப்படுகிற அளவுக்குச் சொந்தச் சிந்தனை இல்லாதவரா?

பொதுவாக எல்லாரும் இந்தத் தேர்வினால் ஏழைகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் மருத்துவக் கல்வியை எட்ட முடியாமல் போவது பற்றித்தான் பேசுகிறோம். அனில் சடகோபால் போன்ற கல்வியாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இன்னும் தீவிரமானது.

இந்திய நல்வாழ்வுத் (health) துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது முதலான பல ஏற்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டு இந்தியா உலக வணிக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் இப்படி ஒரு தேர்வைக் கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரையான கல்வி முறைப்படி, மருத்துவம் படித்தவர்கள் சிறிது காலம் நாட்டுப்புறப் பகுதிகளில் (கிராமங்களில்) பணியாற்ற வேண்டும் எனவும் அப்படிப் பணியாற்றினால் மேற்படிப்பில் அதற்கென அவர்களுக்கு ஒதுக்கீடு (reservation) உண்டு எனவும் ஒரு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மேலும், இந்தச் சலுகை மூலம் மருத்துவராகிறவர்கள் 58 வயது வரை அரசு மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றும் ஒரு கட்டுப்பாடு உண்டு. அப்படிப் பணியாற்ற விருப்பமில்லாவிட்டால் அந்த மருத்துவர் ஒரு பெரும்தொகையை அரசுக்குத் தண்டமாகச் (penalty) செலுத்த வேண்டியிருக்கும்.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் மூலம் நாட்டுப்புறப் பகுதிகளுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் கிடைத்து வந்தார்கள். அரசு மருத்துவமனைகளின் தரம் அவ்வளவு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குக் குறைந்தது மருத்துவர்களையும் அடிப்படை மருத்துவச் சேவையையுமாவது இதுவரை தமிழ்நாடு அரசு அளித்து வந்தது.

ஆனால், இந்த மருத்துவத் தகுதித் தேர்வில் (NEET) இப்படியெல்லாம் எந்த நெறிமுறையும் இல்லை. ஏற்கெனவே இருக்கிற இத்தகைய நெறிமுறைகளும் இந்தப் புதிய தேர்வு முறையால் மொத்தமாக அழித்து அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் ஊராட்சி மருத்துவமனைகள் தொடங்கி மாநகர அரசு மருத்துவமனை வரைக்கும் எதிலுமே பணியாற்ற இனி மருத்துவர்கள் கிடைக்கா நிலை ஏற்படும். பொது நல்வாழ்வுச் சேவை (Public Health Service) என்பதே ஒட்டுமொத்தமாகச் சீர்குலையும். தனியார் மருத்துவமனைகள் மட்டும்தாம் ஒரே தீர்வு எனும் நிலை ஏற்படும். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்தான் இந்திய நல்வாழ்வுத்துறையைத் தனியார்மயமாக்குவதாக உலக வணிக அமைப்பிடம் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் நிறைவேறும்.

அதற்காகத்தான் இப்படி ஒரு தேர்வு முறையே கொண்டு வரப்படுகிறது என அனில் சடகோபால் போன்ற கல்வியாளர்கள், திருமுருகன் காந்தி போன்ற தமிழ்ப் போராளிகள், அரசியல் திறனாய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் என அனைவரும் கூறுகிறார்கள். இந்த மருத்துவ நுழைவுத்தேர்வை ஆதரித்துப் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிற, ஊடகங்களில் எக்காள முழக்கமிடுகிற ஆளுங்கட்சியின் அடிவருடிகளோ மருத்துவ நுழைவுத் தேர்வின் ஆதரவாளர்களோ இன்று வரை இதற்கு எந்த ஒரு மறுமொழியும் அளித்தாகத் தெரியவில்லை.

இவ்வாறு, சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் மருத்துவக் கல்வி, அவர்களுக்கான மருத்துவம் என அனைத்தையும் சிதைத்துப் போடுவதாகத்தான் மருத்துவத்துக்கான இந்தத் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறை (NEET) அமைந்திருக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டில் பொதுவாகவே மருத்துவர் எண்ணிக்கை குறையும் என்பதால் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமில்லை பொதுவாக அனைவருக்குமே மருத்துவம் என்பதே இனி அவ்வளவு எளிதில் கிடைக்க முடியாத ஒன்றாக மாறப் போகிறது என்பதுதான் உண்மை.

இவையெல்லாம் தெரியாமல், புரியாமல் இங்கே சில தவளைகள் தத்துப்பித்தெனக் கத்தித் துள்ளுகின்றன. அவை நினைத்துக் கொண்டிருக்கின்றன, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகக் கத்தினால் கடைசி வரை பாதுகாப்பு என்பதாக. ஆனால், அதிகாரத்தின் பெரும் பசி இறுதி வரை அடங்காதது. எல்லாரையும் விழுங்கிய பின் அது தன்னைச் சேர்ந்தவர்களையும் சுவை பார்க்காமல் விடாது. அப்படி விழுங்கப்படும்பொழுதுதான் அந்தத் தவளைகளுக்கு உரைக்கும், அதற்கு முன்பு வரை அதிகாரத்துக்கு இரையானவர்களின் வலி.

- இ.பு.ஞானப்பிரகாசன்