இந்தியாவில் கல்வியறிவும் அதன் தரமும் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. கல்வி நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு தங்கள் நிறுவனங்களின் கல்வி பயில்வதற்கான வசதிகளை விளம்பரத்தின் மூலம் வெளிப்படுத்தி, மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஈர்க்கின்றனர். இது பள்ளியில் தொடங்கி பல்கலைக் கழகம் வரை பொருந்தும். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த கல்வி நிறுவனமும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இருக்கின்றது என்று தங்களின் விளம்பரங்களில் சொல்வதில்லை. காரணம், கழிப்பறை என்பது அவர்களுக்கு அறுவருப்பான விசயமாக இருக்கலாம் அல்லது அது சொல்லுகின்ற அளவிற்கு முக்கியத்துவம் இல்லாததாககூடக் கருதலாம். ஆனால், கழிப்பறைவசதி விசயத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்குழந்தைகள்தான். குறிப்பாக பள்ளிகளில் எல்.கே.ஜி யில் ஆரம்பித்து இந்த பிரச்சனை பண்ணிரெண்டாம் வகுப்புவரை தொடந்துகொண்டுதான் இருக்கின்றது.

            அரசு பள்ளிகள், அரசு உதவிபெரும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என இப்படி அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைவசதி விசயத்தில் பெண்குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, கழிப்பறை வசதி பள்ளி வளாகத்தில் இல்லாமல் இருப்பது, இருந்தாலும் பராமரிப்பின்றி இருப்பது, போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பது, தண்ணீர் இல்லாமல் இருப்பது, வாளி, கப் இல்லாமல் இருப்பது, துர்நாற்றம் அடிப்பது, கதவில் தாழ்பாள் இல்லாமல் இருப்பது, பள்ளியில் இருந்து தூரத்தில் தனியாக இருப்பது, இப்படி பல்வேறு காரணங்களினால் கிராமப் பள்ளி அல்லது நகரப் பள்ளி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் இந்த பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தமல்ல, பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகளின் நிலை இப்படித்தான் இருக்கின்றது.

            இதுபோன்ற கழிப்பறை வசதி பிரச்சனையினால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் பெண்குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை அடக்கிக்கொள்கின்றனர். காலையில் 7 மணிக்கும் முன்பாக வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தபிறகுதான் சிறுநீர் கழிக்கின்றனர். சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்கின்றனர். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் தண்ணீர் குடிப்பதில்லை. காரணம், சிறுநீர் கழிக்கவேண்டிவரும் என்பதால். இதனால் குழந்தைகள் ஆரோக்கிய குறைபாடிற்கு ஆளாகின்றனர். காலையில் இருந்து மாலை வரை தண்ணீர் குடிக்காமல் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்கின்றனர். மேலும், சிறுநீர் கழிப்பதை அடக்கியும் பழகிக்கொள்கின்றனர். இதனால் பள்ளி நாட்கள் தவிர மற்ற நாட்களிலும் இதையே செய்கின்றனர். சிறுநீர் கழிப்பதை அடக்குவதைவிட வேறு வழியில்லாமலேயே பெண்குழந்தைகள் பள்ளி சென்றுவருகின்றனர்.

            இயற்கை உபாதைகளை அடக்குவது ஆரோக்கியத்திற்கு பெரும் பிரச்சனையாகும். தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் கழிக்காமல் பலமணி நேரம் அடக்குவதாலும், பெண்குழந்தைகள் சிறுநீர் தொற்று நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் பலவேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இது உடல் ரீதியான பாதிப்புகளை மட்டுமல்லாமல் மன ரீதியான பாதிப்புகளையும் அவர்களிடத்தில் ஏற்படுத்துகின்றது. பள்ளிசெல்ல வேண்டும் என்றாலே, அவர்கள் இந்த அவஸ்தைகளை நினைத்து பள்ளியை வெறுக்கின்ற சூழல் ஏற்படுகின்றது. உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் போது அவர்களால் படிப்பில் போதிய கவனம் செலுத்த இயலாமல் போகின்றது. கழிப்பறைவசதி பிரச்சனையால் பெண்குழந்தைகளின் உடல் நலமும் மன நலமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

            தங்கள் குழந்தைகள் பெரிய பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலையில் அமரவேண்டும் என்று எண்ணி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான சிறந்த பள்ளியைத் தேடுகின்றனர். பள்ளியின் வாயிலில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பப் படிவம் பெறுகின்றனர். பள்ளியைத் தேர்வு செய்வதில் அவர்கள் காட்டும் அக்கரையில் கொஞ்சம்கூட அப்பள்ளியில் அடிப்படைவசதியான கழிப்பறை எவ்வாறு உள்ளது, தங்களின் பெண்குழந்தைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்று அவர்களின் நலன்கருதி பார்ப்பதுமில்லை. பள்ளிகளுக்கான வசதிகள் பட்டியலில் கழிப்பறை அவர்களின் மனதில் வருவதுமில்லை. கடந்த ஆண்டுகளில் பள்ளி நல்ல தேர்ச்சி பெற்றுள்ளதா, சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றனவா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, ஆய்வுக்கூடம் உள்ளதா, படிப்பைவிட வேறு என்ன விசயங்கள் கூடுதலாக சொல்லிக்கொடுக்கின்றனர், என்று மட்டுமே பார்த்து தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால், கழிப்பறை உள்ளதா, பராமரிப்பில் இருக்கின்றதா, போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் உள்ளதா என்ற பார்வையோ, கவனிப்போ இல்லாமல் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் பிள்ளைகளை சேர்த்துவிடுகின்றனர். பிற்காலத்தில் கழிப்பறைவசதி பற்றிய விசயம் பெற்றோர்களுக்குத் தெரியவந்தாலும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிடுவதில்லை. மதிப்பெண்குறைந்தால் ஆசிரியர்களிடம் முறையிடும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் குறைவு விசயத்தில் முறையிடுவதில்லை. காரணம் ஒன்றுதான், குழந்தைகளின் ஆரோக்கியதைவிட மதிப்பெண் தான் முக்கியம். இது நகரத்தில் மட்டுமல்ல கிராமங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்தப் பிரச்சனை பெரிதாகத் தான் உள்ளது. கழிப்பறைவசதி விசயத்தில் கிராமம் நகரம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஆரோக்கியம் சம்பந்தமான பேச்சுக்கே இங்கு இடமில்லை. சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தினால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கெளரவம் போன்றவை பாதிக்கப்படுகின்றன.

            எல்லாவற்றிலும் பெண்கள் முதலிடம் என்று வகுப்பறையில் அவர்களைப் போற்றிப் புகழும் நாம், கழிப்பறை வசதி விசயத்தில் அவர்களை வஞ்சிக்கின்றோம். பெண்குழந்தைகள் பள்ளிகளில் கழிப்பறைப் பயன்பாட்டில் தங்களின் மானம் காக்கப்படுவதில்லை என்றே உணர்கின்றனர். நம் வீட்டில் மட்டும் கழிவறை வசதி வைத்துக்கொண்டால் போதாது. பெண்கள் புழங்கும் பொதுவெளிகளிலும் அவர்களுக்கு வேண்டும். அது முதலில் பள்ளியாக இருக்கட்டும். அதற்கு அரசும் நாமும் சேர்ந்து செயல்படவேண்டும்.

சி.வெங்கடெஸ்வரன்முனைவர்பட்ட ஆய்வாளர்அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி