இந்திய வரலாறு அன்னியர்களால் எழுதப்பட்டது என்று இந்தியர்களால் வெறுக்கப்படும் அன்னியர்கள் வெகு காலமாய்ப் புனைந்துரைத்துப் பொய் விரித்துப் புலம்பி வருகிறார்கள். இந்தியாவுக்குள் ரோமானியர் வந்திருக்கிறார்கள்; பாரசீகர் வந்திருக்கிறார்கள்; மங்கோலியர் வந்திருக்கிறார்கள்; போர்த்துக்கீசியர் வந்திருக்கிறார்கள். துருக்கர், சீனர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என்று எத்தனையோ அன்னியர்கள் வந்திருக்கிறார்கள். அரசதிகாரத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். இங்கே அவர்களுடைய ஆட்சி முறையை எதிர்த்துக் கிளர்ச்சிகளும், விடுதலைப் போர்களும்கூட நடந்ததுண்டு. ஆனால், அந்த இனத்தவரை இந்தியர்கள் வெறுத்ததில்லை.

மங்கோலிய, மொகலாய, பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்த மக்கள், மொகலாயர்களையோ, ஆங்கிலேயர்களையோ, பிரெஞ்சு மக்களையோ வெறுத்ததில்லை. இந்திய மண்ணில் மதக் கலவரங்கள் நடந்திருக்குமானால் அந்தக் கலவரங்களுக்குப் பின்னால் அன்னிய சக்திகள் இருந்தனவே தவிர இந்திய மக்கள் அதில் ஆர்வம் காட்டியதில்லை. இந்திய மக்கள் மதமற்றவர்கள். உலக மக்கள் அனைவரையும் உறவினராய்ப் பாவித்தவர்கள். பிறப்பால், இனத்தால், நிறத்தால் யாரும் மேலானவர்களும் அல்லர்; கீழானவர்களும் அல்லர் என்று மானுடம் போற்றியவர்கள். இவ்வாறு பண்பட்டவர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்க நேர்ந்ததே!

ஆரியர்கள் இன்று வரையிலும் தங்களை இந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் திராவிட - ஆரியப் போராட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் வந்துதான் இந்திய மக்களிடம் திராவிட - ஆரியப் பேதங்களையும் கோபங்களையும் விதைத்து விட்டார்கள் என்று ‘சங்கப் பரிவாரங்கள்’ சாமர்த்தியமாய் சரித்திரப் புரட்டுரை பரப்பினாலும் திராவிட - ஆரியப் போராட்டம் அணையா நெருப்பாகவே கனன்று கொண்டு இருக்கிறது. ஆரியர்கள் போற்றிப் புகழும் வேதங்களில், இதிகாசங்களில் திராவிட - ஆரியப் போராட்டங்கள் இல்லையா? புத்தர்கள் நடத்திய பகுத்தறிவு இயக்கங்களும், அறவழிப் போராட்டங்களும் அன்னிய ஆரியர் கொடுமைகளுக்கும் தத்துவங்களுக்கும் எதிரானவை அல்லவா! இந்திய வரலாறு என்பதே திராவிட - ஆரியப் போராட்டங்களின் வரலாறுதான்; மறுக்க முடியுமா? ஆனால், நாடற்றவர்கள், பார்பரியன்கள் என்கிற முத்திரை தம்மீது படிந்து விடக் கூடாது என்பதில் இந்த அன்னியர்கள் மிகக் கரிசனமாகவே இருக்கிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டில் மாக்ஸ் முல்லர் என்கிற எழுத்தாளர் வந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் பண உதவி பெற்றுக் ‘கதை’ எழுதிய பிறகுதான் இந்திய வரலாறே திசைமாறிப் போனதாக ஆடிட்டர் குருமூர்த்தி இப்போது ஆராய்ச்சிக்(!) கதை எழுதுகிறார். மாக்ஸ் முல்லரைப் பற்றியே அவர் தெரிந்திருக்கவில்லை என்பதை படிக்கும் பழக்கமுள்ள எவரும் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும். மாக்ஸ் முல்லர் ஆரிய அன்னியர்களுக்கு மிக நெருங்கிய ‘அத்திம்பேர்’ என்பதைச் ‘சோ’வானவராவது சொல்லியிருக்கக் கூடாதா? குருமூர்த்தி ஒருநாள் பி.பி.சி. ஒலிபரப்புக் கேட்டாராம். அது ஆரியர் பரப்பும் வரலாற்றுப் புரட்டுக்கு ஆரத்தி எடுக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை ‘ஓசைப் படாமல்’ கூறியதாம். அறிவெல்லை கடந்த ஆர்ப்பாட்டத்துடன் குருமூர்த்தி துள்ளித் துள்ளிக் கோலம் போடுகிறார். பி.பி.சி. ‘ஓசைப்படாமல்’ கூறியதாகக் குருமூர்த்தி எழுதுவதாவது:

“இந்து மக்களின் சரித்திரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சமாக ஆரியப் படையெடுப்பு (கட்டுக்) கதை அமைந்திருந்தது. மாக்ஸ் முல்லர்தான் இந்தக் கட்டுக் கதையை ஆரம்பித்தார். அதன் விளைவாக அடுத்த 120 ஆண்டுகள் ஆராய்ச்சியாளர்கள் பலரால் இந்தக் கட்டுக்கதை உண்மைக்கதை என்று பரப்பப்பட்டு வந்தது. இது இந்து மக்களின் உண்மையான சரித்திரம் என்று உலக அளவில் மட்டுமல்ல பாரத நாட்டிலும் கூட நம்பி ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது, மாக்ஸ்முல்லரும், அவருக்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்களும் கூறிய இந்தக் கதை உண்மையல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள் வெளிவந்திருக்கின்றன” என்கிறது பி.பி.சி. (என்ன அந்த ஏராளமான சான்றுகள்?)

“இந்தக் கட்டுக்கதை எந்த அளவுக்கு நம்மையும் நமது நாட்டையும் கேவலப்படுத்தியது என்றும் பி.பி.சி. வர்ணிக்கிறது பாருங்கள்.” (இங்கே ‘நம்மை’ என்றும், ‘நமது நாட்டையும்’ என்று யாரை, யாருடைய நாட்டைக் குருமூர்த்தி குறிப்பிடுகிறார்?)

பி.பி.சி. வர்ணிப்பதாகக் குருமூர்த்தி எழுதுகிறார்:

“இந்தக் கதை பாரத நாட்டின் பாரம்பரியமான, பூஜைக்குரிய இந்து வேத புத்தகங்களும் சாஸ்திரங்களும் பாரத நாட்டையே சேர்ந்தது அல்ல என்றுகூட வாதிட்டது. அது மட்டுமல்ல பாரத கலாச்சாரம் அவ்வளவு தொன்மையானதல்ல என்று கூறி அந்தக் கலாச்சாரத்தின் மதிப்பைக் குறைக்கச் செய்தது. இந்த ஆரிய படையெடுப்புக்கதை தவறு மட்டுமல்ல - இது ஒப்புக் கொள்ள முடியாத இன வேறுபாடுகளையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் எண்ணங்கள் நிறைந்த விஷமாகவும் மாறியது...”

பி.பி.சி. இவ்வாறு கூறுவதில் ஆடிட்டருக்கு ஆனந்தம் பிடிபடாதுதான். ஆனால் - “பாரத நாட்டின் பாரம்பரியமான பூஜைக்குரிய இந்து வேதங்களும் சாஸ்திரங்களும் பாரத நாட்டைச் சேர்ந்தவையே” என்று கூறும் மடையர்கள் அல்லது மகான்கள், ‘பாரம்பரியமான’ - ‘பூஜைக்குரிய’ வேதங்களையும், சாஸ்திரங்களையும் பார்ப்பனர் மாத்திரமே கற்கவேண்டும். பிறர் - அதாவது இந்திய மக்கள் - ஓதவோ, ஓதும் ஓசையைக் கேட்கவோ கூடாது. மாறாக அவ்வாறு வேதம் பயிலும் பார்ப்பனரல்லாதாரின் நாக்கை அறுக்க வேண்டும். வேத ஒலிகளைக் கேட்ட காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது ஏன்? ஏனென்றால், இந்த வேதங்களும், சாஸ்திரங்களும் இந்தியர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவையும் அல்ல; அவை பூஜைக்குரியவையும் அல்ல.

தாயை, மகளை, குருவின் மனைவியை, மிருகங்களைப் புணர்ந்து அநாகரிகமாய் வாழ்ந்த உங்கள் ஆதி வரலாறு தெரியக் கூடாது என்கிற பயத்தைத் தவிர புனிதமான பூஜைக்குரிய சங்கதி இதிலே எங்கே இருக்கிறது? கோடிக்கணக்கான பக்கங்களில் இலட்சக்கணக்கான புத்தகங்களில் நூறாண்டுகளுக்கும் மேலாகக் கூறப்பட்டு, நம்பப்பட்டு வந்த ‘கட்டுக்கதை’யை இரண்டே பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு சிறுகதையின் மூலம் பி.பி.சி. உடைத்து நொறுக்கி விட்டதாம். ஆயிரம் ஆண்டுகளாய்த் தொடரும் திராவிட - ஆரியப் போரை இரண்டே பக்கங்களில் எழுதி உண்மையையும் பொய்யையும் உலகுக்கு அறிவித்த அந்தச் ‘சிறுகதை’யை எழுதிய ‘அறிஞர்’ அல்லது அயோக்கியர் யார்? குருமூர்த்தி ரசித்துப் பாராட்டும் அந்தச் ‘சிறுகதை’யை எழுதியவரும் ஒரு ‘குருமூர்த்தி’தான் என்பதை மிகச் சாமர்த்தியமாக மறைத்து விட்டார் குருமூர்த்தி.

ஊழல் மலிந்த கணக்கு வழக்குகளை சட்டத்தின் பார்வைக்கு மறைத்து, திரித்து, நியாயப்படுத்துவது ஆடிட்டர் குருமூர்த்திக்குத் தொழில். அந்த முறையில் அது நியாயமாக இருக்கலாம். ஆனால், கணக்கு வழக்குகளைச் ‘சரி’ செய்வது வேறு; வரலாற்றைச் ‘சரி’ செய்வது வேறு. ‘தொழில் முறைத் திறமை’களை வரலாற்றைத் திரிப்பதில் காட்டினால் அது போக்கிரித்தனம். கழிப்பறைச் சுவர்களில் எழுதுகிறவன்கூட மறைக்கப்பட்ட பல உண்மைகளைத் தான் எழுதி விட்டதாகவே நம்புகிறான். ஆனால், அவனை வரலாற்று ஆசிரியர் என்றோ, இலக்கியவாதி என்றோ யாரும் பாராட்டுவதில்லை.

இங்கே போக்கிரிகள் பேராசிரியர்களாக வேடமிட்டுத் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள். திராவிட - ஆரியப் போராட்டம் – கட்டுக்கதை, அன்னியர் பரப்பிய பொய் என்று புரட்டுரை மொழியும் அன்னியர்களுக்கு ஒரே ஒரு கேள்வி: ‘கீதை’யை ஆரியர்களின் அரசியல், பொருளாதார, தத்துவ, பண்பாட்டின் அடையாளமாகவும், திருக்குறளைத் தமிழர்களின் அடையாளமாகவுமே எமது மக்களும் வரலாற்று அறிஞர்களும் கருதுகிறார்கள். குருமூர்த்தி போன்ற அக்கிரகாரக் கம்பெனிகள் எதைத் தங்கள் அடையாளமாகத் தேர்ந்தெடுப்பார்கள்? மொழியில் எதைத் தங்களுடையது என்று கருதுகிறார்கள்? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆரியர்கள் இந்தியர்கள் அல்ல என்பதே வரலாற்று உண்மை!