உலக முதலாளியம் தனது நெருக்கடிகளின் சுமைகளை எல்லாம் உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிகழ்வுப் போக்கு முன்பு எப்போதையும் விட துரிதமாகி இருக்கிறது. 90 களில் நரசிம்மராவ் தலைமையிலான அரசு 'காட்' ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது தொடங்கி இந்தியாவுக்கும் இது முழு பரிச்சயமே...

sri sri ravishankarமழைநீரை மக்கள் சேமிக்க வேண்டுமென்பதும், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட மானியங்களை மக்கள் விட்டுத்தர வேண்டுமென விளம்பரப் படுத்துவதும், சுற்றுச்சூழலை பாதுகாக்க எல்லோரும் பாடுபட வேண்டும் எனக் கோருவதுமாக நெருக்கடிகளின் சுமையானது அலை அலையாய் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்களில் மக்களுக்கும் அக்கரை வேண்டுமென்பது அவசியம்தான் என்றாலும் அரசு தனக்கான பொறுப்புக்களை தட்டிக் கழிக்கவே இத்தகு பிரச்சாரங்கள் மேற்கொள்கிறது. பிரச்சனைக்கான அடிப்படையை மூடி மறைக்கிறது.

அதிக புகை உமிழ்வதாக 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்களை மக்களிடமிருந்து பறிமுதல் செய்யத்துடிக்கும் இதே மத்திய அரசுதான், கண்ணை மூடிக்கொண்டு பன்னாட்டு வாகன கம்பெனிகளுக்கும், தொழில் தொடர்பான கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் கதவை விரியத் திறந்து விடுகிறது.

திறந்தவெளியில் மலம் கழித்தால் சுற்றுச் சூழலுக்கு கேடு என கூப்பாடிடும் இதே ஆட்சிதான் கார்ப்ரேட் சாமியார்களுக்கு காடுகளையும் நதிகளையும் தாரை வார்த்து வருகிறது.

சமீபத்திய நிகழ்வான கார்ப்ரேட் சாமியார் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் கதையைப் பாருங்கள்....

எப்போதுமே சர்வதேச அளவில் சிந்திக்கும்(!?) சாமியார் (தலாய்லாமாவுடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புக் கழகம் ஏற்படுத்தியது, ஜெர்மனில் இளைஞர் விழிப்புணர்ச்சி மாநாடு என பீலா விட்டது போன்றவை) கடந்த ஆண்டு தனது "வாழும் கலை" இயக்கத்தின் மூலம் மார்ச் 11 முதல் 13 வரை யமுனை நதிக்கரையில் உலக கலாச்சார விழா எனும் பெயரில் ஆடிய ஆட்டம் தொடர்பான விவகாரம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. அண்மையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத்தீர்ப பாய அமர்வு சாமியாருக்கு கடும் கண்டணம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வரும் 9 ம் தேதிக்குள் பதில் அளிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

விழா நடத்துவதற்கு எதிராக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்ட போதும், 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தபோதும், மோடி ஆட்சியின் தாராள கரிசனத்தோடும், மோடி உள்ளிட்ட அமைச்சர் பெருமான்களின் பங்கேற்ப்போடும் விமரிசையாக நடந்து  முடிந்தது விழா. மேடை மட்டுமே 60 ஏக்கர்களுக்கு போடப்பட்ட அந்த விழாவில் 1000 ஏக்கர்களுக்கும் அதிகமான வேளாண் நிலங்களும், காடுகளும் பாழ் படுத்தப்பட்டதாகவும், 100 த்துக்கும் மேற்பட்ட உழவர்கள் தங்களின் நிலங்களில் இருந்து அப்புறப் படுத்தப் பட்டதாகவும், அபூர்வமான தாவரங்களும், அரியவகை உயிரினங்களும் அழிக்கப்பட்டு பல்லுயிர் சமத்துவமே பாதிப்படைந்து யமுனை நதிக்கரையே இடுகாடானதாகவும் புகார் தொடுக்கப்பட்டு இது தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது.

விழாவால் நிகழ்ந்த சேதத்தை மதிப்பீடு செய்ய, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேஷ்கர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தீர விசாரித்து அறிக்கை ஒன்றை கடந்தவாரம் தாக்கல் செய்தது. அறிக்கையின்படி நதிக்கரையில் நிலைமை சீரடைய 10 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்றும், மறு சீரமைப்புக்கான மொத்த மதிப்பு ரூ.42.02 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளது.

தொடக்கத்தில் "சிறை சென்றாலும் செல்வேனே தவிர 1 பைசா கூட அபராதம் செலுத்த மாட்டேன்" என சவடால் விட்ட சாமியார் , நெருக்கடி முற்றுவது தெரிந்து காதும் காதும் வைத்தார் போல கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ரூ.5 கோடியையும் கட்டிவிட்டு வந்துவிட்டார். " சுதர்ஷன் க்ரியா" எனவெல்லாம் பீற்றிக்கொள்ளும் சாமியாரின் சவடால் அவ்வளவுதான் போலும்.

இது ஒரு கலாச்சார ஒலிம்பிக் என்றும், நாங்கள் மரங்களை எல்லாம் வெட்டவில்லை, கொஞ்சமாக நறுக்கத்தான் செய்தோம் என்றும், மேடு பள்ளமான பகுதிகளை சமப்படுத்தி விவசாயிகளுக்கு நன்மை பயக்கிறோம் என்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடிய சாமியார் தனது அத்துனை பராக்கிரமங்களையும் காட்டி விழாவை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி நடத்தி முடித்து விட்டார்.

5 கோடி அபராதம் விதிக்கப் பட்டவுடன் பசுமை தீர்ப்பாயத்தை வசைபாடிய சாமியார் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் தற்போது நிலைமையின் வீரியம் உணர்ந்து " விழா நடத்த அனுமதி அளித்த மத்திய அரசும், தேசிய பசுமைத்தீர்ப்பாயமும்தான் இதற்கு முழு பொறுப்பு வாழும் கலை அமைப்பல்ல" என திடீர் பல்டி அடித்துள்ளார். அதனாலேயே பசுமை தீர்ப்பாய தலைவரான ஸ்வாதந்தர் குமார் தலைமையிலான அமர்விடம் கடும் கண்டனத்தை பெற்றுள்ளார். தனக்கென ஒன்றுவந்துவிட்டால் ஜானென்ன முழமென்ன... சாமியாாின் கூற்றுபடி மோடி அரசு முட்டாளரசாக அல்லவா ஆகி விட்டது......

புகழ்பெற்ற "பைனான்ஸ் டைம்ஸ்" இதழின் தெற்காசியப் பிரிவின் தலைமை ஆசிரியரான எட்வர்ட் லூசே தனது "கடவுளர்கள் இருந்தபோதிலும்"(in spite of the gods) எனும் தனது நூலில் நமது பாபநாசத்து கார்ப்ரேட் காவி ஸ்ரீ ஸ்ரீ பற்றி 'கூடுதலாகவே' குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிக்கையாளரின் பாபர் மசூதி குறித்த கேள்விக்கு சாமியார் பின்வருமாறு பதில் சொலகிறார்...

"இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை தாங்கிக் கொள்வீர்களா? இராமருக்கு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ண செய்கையாக முஸ்லீம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோயில அல்லாவுக்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் சொந்தமாக இருக்கும்." பாருங்க சாமியாரின் சாமார்த்தியத்தை.

ஏழைகள் விறகடுப்பு எரியூட்டுவதைக்கூட சுற்றுச்சூழலுக்கு கேடு என விளிக்கும் இந்தப் பேடிகள்தான் இயற்கையை கபளீகரம் செய்யும் சாமியார்களுக்கு கம்பளம் விறிக்கிறார்கள்.

தனது ஆசிரமத்தைக்கூட தாமரை வடிவில் சும்மாவா கட்டியிருப்பார் நமது கோட்டீஸ்வர சாமியார்... இது கார்ப்ரேட்டுகளின் காலம். காவிகள் கூட கார்ப்பரேட்டுகளாக மாறினால்தான் பந்தையத்தில் முன்னுக்கு வர முடியும்.

கடந்தகாலங்களில் பார்ப்பனர்கள் மக்களிடமிருந்து மன்னர்களுக்கு எதிராக எழுந்த கருத்தியல் ரீதியிலான எதிர்ப்புகளை தங்களின் வேத தத்துவங்களின் மூலம் நீர்க்கச் செய்தது போல தற்போதைய உலகமயச் சூழலில் இனியும் தொடந்து போராடாமலேயே யோகா போல தியானித்தே வாழ்ந்துவிட முடியும் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் வேளையை செவ்வனே செய்கின்றன இதுபோன்ற சாமியார் மடங்கள். கூடவே சில பல கோடிகளை சுருட்டிக் கொண்டு...