(சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தமது அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு ‘நல்லொழுக்கச் சங்கத்தின்’ உறுப்பினரைச் சந்தித்தார். இருவரின் உரையாடலும் இங்கே சுருக்கித் தரப்படுகிறது.)

“என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் தொழில் முறையில் பாவம் செய்கிறவன் - அதாவது பாவம் செய்வதே என் தொழில்.’’

“என்ன சொல்கிறீர்கள்?’’

“நான் பாவத்தைத் தொழிலாகக் கொண்டவன். பொதுஜன ஒழுக்கத்துக்குப் புறம்பான பாவ காரியங்களைச் செய்வது என் பிரத்தியேகத் தொழில். நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.’’

“... ....’’
Gorky“பத்திரிகைகளில் ஓர் ஆசாமியைப் பற்றி அதாவது ஒரு குடிகாரனைப் பற்றி ஒரு கதை வெளிவந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கூத்துக் கொட்டகையில் ரகளை செய்தானே; அந்த ஆளைப் பற்றித்தான்!’’

“கூத்துக் கொட்டகையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஆளைப் பற்றித்தானே? மேடையில் மனதைப் பிளக்கும் காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தபோது தொப்பியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு டிரைவரைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டாரே அந்த ஆளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்?’’

“அதே ஆளைப் பற்றித்தான். நான்தான் அந்த ஆள். ‘குழந்தையை அடிக்கும் மிருகம்’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியும் என்னைப் பற்றியதுதான். ‘மனைவியைக் கணவன் விற்கிறான்’ என்ற செய்தியும் என்னைப் பற்றிய செய்தியே. நடுத்தெருவில் ஒரு பெண்ணைக் கொச்சையான மொழியில் பேசி அதன் மூலம் மானபங்கம் செய்தவனும் நானே! பொதுவாகச் சொல்லப்போனால், குறைந்தது வாரத்துக்கு ஒரு தடவை - பொது ஜன ஒழுக்கம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது என்பதை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் “என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.’’

“நேரத்தை இதுமாதிரி செலவிடுவது உங்களுக்குப் பிடித்தமாக இருக்கிறதா?’’

“என் வாலிபத்தில் அது குஷியாகத்தான் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இன்று எனக்கு வயசு நாற்பத்தைந்து, கல்யாணமாகி, இரண்டு பெண்களும் இருக்கிறார்கள். அதனால் ஒழுக்கக் கேட்டின் மூலஸ்தானம் என்று வாரத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் என் பெயர் பத்திரிகைகளில் அடிபடுவது சங்கடமாக இருக்கிறது. அதே சமயத்தில், நான் யாதொரு குறையும் இல்லாமல் என் காரியத்தைக் குறித்த காலத்தில் செய்கிறேனா என்றும் நிருபர்கள் கவனித்தபடி இருக்கிறார்கள்...’’

“உங்களுக்கு இப்பொழுது அது ஒரு நோயாக இருக்கிறது. இல்லையா?’’

“கிடையாது. அது என் தொழிலாக இருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லவில்லையா? என்னுடைய பிரத்தியேக வேலை, தெருக்களிலும் பொது ஸ்தலங்களிலும் சிறு குழப்பங்களை உண்டாக்குவது என்று? எங்கள் சங்கத்தைச் சார்ந்த மற்றவர்கள் இதைவிடப் பெரிய பெரிய பொறுப்பான வேலைகளைச் செய்து வருகிறார்கள். என்னுடைய வேலை சிறு குழப்பங்களை உண்டாக்குவதுதான்.’’

“சின்னச் சின்ன குழப்பங்களை மட்டும்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் அதிருப்திப்படுகிறீர்கள் போலிருக்கிறது.’’

“கிடையாது.’’

“நீங்கள் ஜெயிலுக்குப் போயிருக்கிறீர்களா?’’

“எப்போதும் நான் அபராதத்துக்குட்பட்ட குற்றங்களைத்தான் செய்வதுண்டு. அப்படியிருந்தும் மூன்றுமுறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். அபராதம் விதிக்கப்பட்டால் சங்கம்தான் அபராதத் தொகையைச் செலுத்துகிறது.’’

“சங்கமா?’’

“ஆம்! என்னால் அபராதம் கட்ட எப்படி முடியும்?’’

“அப்படியானால் சங்கம் ஒன்று இருக்கிறதா என்ன?’’

“ஆம்.’’

“சங்கம் ஏராளமான பேரை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறதோ?’’

“நூற்று இருபத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் இந்த நகரத்தில்...’’

“இந்த நகரத்தில்? அப்படியானால் மற்ற நகரங்களிலும் கூட இந்தச் சங்கங்கள் இருக்கின்றனவா?’’

“ஏன்? ஏராளமாக இருக்கின்றன; தேசம் பூராவிலும்தான்.’’

“அந்தச் சங்கங்கள் எப்படி - என்னென்ன - வேலைகள் செய்கின்றன.’’

“ஒழுக்க விதிகளுக்கு விரோதமாகக் குற்றங்கள் புரிவதுதான்.’’

“ஆனால், அதன் நோக்கம் என்ன?’’

“எதன் நோக்கம்?’’

“அதுதான், ஒழுக்க விதிகளுக்கு விரோதமாகக் குற்றங்கள் செய்யும் அந்தச் சங்கங்களின் நோக்கம்.’’

“வாழத்தான்! மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிறான். இல்லையா?’’

“உண்மைதான்!’’

“எதற்காக? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் - அதற்காகத்தானே?’’

“ஆமாம்; அதுவும் உண்மைதான்.’’

“ஒழுக்க விதிகளை உடைக்காமல் எப்படிச் சுகமாக வாழ முடியும்? கொம்மட்டிக் காயை, கார்பாலிக் ஆஸிட்டுடன் கலந்து தின்பதை யார்தான் விரும்புவார்?’’

“நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள எனக்குச் சற்று சிரமமாக இருக்கிறது... ஒரு வேளை, நான் நல்லொழுக்க வாதத்தை ஏற்றுக் கொள்ளும்படிக்கு எனக்கு ஏதாவது சொல்ல முடியுமா?’’

“சுருககமாகவே சொல்லுகிறேன். நீங்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஏன் அதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்? ஏனென்றால் அது உங்கள் வீட்டையும் உங்கள் உரிமைகளையும், உங்கள் சொத்தையும் பாதுகாக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது உங்கள் அண்டை வீட்டாரின் நலன்களைப் பாதுகாக்கிறது. உங்கள் அண்டை வீட்டான் என்றால்? அதுவும் நீங்கள்தான்; வேறு யாருமில்லை. உங்களுக்கு ஓர் அழகான மனைவி இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘பிறன் மனைவியை இச்சியாதீர்கள்’ என்று சொல்லுவீர்கள்.

“ஒருவனிடம் பணம், மாடுகள், அடிமைகள், கழுதைகள் முதலியவை இருந்து, அவன் மடையனாகவும் இல்லாமல் இருந்தால் அவன் ஒரு நல்லொழுக்கவாதியாகவும் இருப்பான். அப்படியில்லாமல் தலையில் முளைத்த மயிரைத் தவிர வேறே யாதொரு உடைமையும் இல்லாதவனாக அவன் இருந்தால், நல்லொழுக்கத்தினால் என்ன பயனும் இல்லை.

“நல்லொழுக்கம் உங்கள் நலன்களின் பாதுகாவலன். அதை உங்களைச் சுற்றிலுமுள்ள ஜனங்களின் உள்ளத்தில் குடியேற்ற நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். தெருக்களில் போலீஸ்காரர்களையும் உளவு சொல்கிறவர்களையும் நிறுத்தி வைக்கிறீர்கள். மனிதனுடைய மூளைக்குள் எத்தனையோ ஒழுக்க விதிகளைத் திணிக்கிறீர்கள். எதற்காக? அவையெல்லாம் அவன் மூளையிலே நன்றாக வேரோடி, அவன் மூளையில் உங்களுக்கு விரோதமாக நின்று போராடும் சகல சிந்தனைகளையும், உங்கள் சம்பத்துகளுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய ஆசைகளையும் நசுக்கிக் கழுத்தை நெரித்து நாசமாக்குவதுக்குத்தான்.