ஏப்ரல் முதல் நாள் என்பது மற்றவர்களை ஏமாற்றி, முட்டாளாக்கி மகிழும் நாள் என்பதுஎல்லோருக்கும்.தெரிந்தது தான். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளில் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் இணைய தளத்தில், ”செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்” என்ற செய்தியை வெளியிட்டார்களாம். பின்னர் அதை, ஏப்ரல் முதல் நாளுக்காக வெளியிடப்பட்ட ”ஏமாற்று செய்தி” என்றார்களாம். இப்படி ஒரு செய்தியை சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

            2010, ஏப்ரல் முதல் நாளன்று நமது நாட்டின் அப்போதைய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்கள் ”இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இன்று முதல்நடைமுறைப்படுத்துகிறோம்.கல்வி அடிப்படை உரிமை என்பதை அரசியல் அமைப்புச் சட்டத்தில் இணைத்திருக்கிறோம். நமது குழந்தைகளின் கல்விக்கும் எதிர்கால இந்தியாவிற்கும் நாம் ஆற்றியுள்ள தேசியக் கடமையை இது எடுத்துக்காட்டுகிறது” என்று அறிவித்தார். உண்மையில் இதையும் ஒரு ”ஏமாற்றுச் செய்தி” என்று கூறினால் யாராவது ஏற்றுக்கொள்வீர்களா? ஆனால் அப்படிக் கூறுவதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன.

tn govt school

            ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (UNESCO), 2010 ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி குறித்த உலகளாவிய ஆய்வு அறிக்கையை (EFA – GLOBAL MANITORING REPORT - 2010) வெளியிட்டுள்ளது. ”உலகில் 135 நாடுகள் அனைவருக்கும் இலவசமான, பாகுபாடற்ற கல்விக்கான அரசியல் அமைப்புச் சட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளன. அனைவருக்கும் இலவசக் கல்வி என்று சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் தொடக்கப் பள்ளிக்கூடங்களில் கட்டணம் வசூலிப்பது சில நாடுகளில் நடந்துகொண்டுதான் உள்ளது” என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ”உலகில் 15 நாடுகள் மட்டுமே தொடக்கக் கல்வியை முழுவதுமாக இலவசமாக வழங்குகின்றன. உண்மையில், பல நாடுகளில் சட்டம் இருந்தாலும் இலவசப்பள்ளிப்படிப்பு இன்னும் விதிவிலக்காகத்தான் உள்ளது". என்பதை2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் ஆய்வு அறிக்கைசுட்டிக்காட்டியது.

            2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பின் (UNESCO) அனைவருக்கும் கல்வி குறித்த மற்றொரு ஆய்வறிக்கை,நேபாளமும், பூட்டானும் மொத்த நிதிச் செலவினத்தில் இந்தியாவை விட அதிகமான விழுக்காடு நிதியைக் கல்விக்காக ஒதுக்குவதையும் கல்விக்கான நிதியை குறைந்த வருவாய் உள்ள பலநாடுகள்அதிகரிக்கும் நிலையில், கல்விக்கான குறைந்த பட்ச ஒதுக்கீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4% நிதியைக் கூட இந்தியா ஒதுக்காமல் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. புரூண்டி, எத்தியோப்பியா, கானா, கென்யா, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கல்விக் கட்டணம்ஒழிக்கப்பட்டிருப்பது புத்துணர்ச்சி ஊட்டும் வழிமுறையாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 107 நாடுகளில் 94 நாடுகள் உயர் தொடக்கக் கல்வியை இலவசமாக்கி கல்விக் கட்டணத்தை ஒழித்துள்ளன என்ற விவரங்களையும் இவ்வாய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைக்கான சட்டம் இயற்றப்பட்ட பிறகும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் ஆயிரக்கணக்கில்இயங்கிக் கொண்டிருக்கின்றன.வழக்கமான எல்லா சட்டங்களைப் போலவே குழந்தைகளின் கல்வி உரிமைச் சட்டமும் ”ஏட்டுச்சுரைக்காயாக”இருக்கிறது. கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்றிய பிறகும் கல்வி விற்பனைப் பண்டமாக அனுமதிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சட்டமீறலாகும்.

சட்டத்தின் ஆட்சி (WORLD JUSTICE PROJECT, RULE OF LAW – INDEX 2016) குறித்தான உலக நாடுகளின் அட்டவணையில் இந்தியா 66 ஆவது இடம் பெற்றிருக்கிறது. முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள டென்மார்க், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களிடம் நமது ஆட்சியாளர்கள் சட்டத்தின் ஆட்சியை நடத்துவது குறித்தும் குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்வது குறித்தும் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. கல்விக்கென்று கடவுளை வணங்கும் நாட்டில் பணக்காரக் குழந்தைகள் படிக்கும் கல்விக்கோவில்களில் கறுப்புப் பணம் உற்பத்தியாகிறது. அரசுப்பள்ளிகளோ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் இருக்கின்றன. கல்வி உரிமைச் சட்டமோ வெறும் காகிதச் சட்டமாக காற்றில் பறக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம் நிறைவேறியதால் கடந்த ஏழாண்டுகளில் தொடக்கக் கல்வியில் பெரிதாக எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. நாம் ஒரு புறம், ”கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை” என்று குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். மற்றொரு புறம், தனியார் மழலையர் பள்ளிகளின் கல்விக் கட்டணம் முதற்கொண்டு ”கட்டண நிர்ணயக் குழுக்கள்” மூலம் கூடிக்கொண்டே போகின்றன. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நாட்டில், முன் தொடக்கக் கல்வி முதற்கொண்டு விலை நிர்ணயிக்க சட்டப்படியான கட்டணப் பஞ்சாயத்து நடந்து வருகிறது.தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோர்கள் போராடத் தொடங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடும் நடந்திருக்கிறது.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு படிக்கும் ஒரு மாணவர் ஆறாயிரம் ரூபாய் செலவில் மூன்றாண்டு படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட முடியும். ஆனால், சென்னையில் உள்ள எந்தத் தனியார் மழலையர் பள்ளியிலாவது மூன்று வயதுக் குழந்தையை ஆறாயிரம் ரூபாய் கட்டணத்தில் ஓராண்டுக்காவது படிக்க வைக்க முடியுமா? விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி? என்று கேட்ட புரட்சிக் கவிஞன் காலத்துப் பொதுப்புத்தி அறுபது ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டது. சட்டப்படி எது தான் நடக்கிறது? என்ற ஆபத்தான பொதுப்புத்தி ஒட்டுமொத்த மக்களிடம் வளர்க்கப்பட்டுவிட்டது. அதனால் தான், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கட்டணப் பள்ளிகள் இருந்துகொண்டிருப்பதைப் பற்றி ஏன் என்று கேள்வி கேட்காமல் நாமும் அமைதியாக இருக்கிறோம். ”முழுமையானஇலவசக் கல்வியை நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுங்கள்” என்று குரல் எழுப்பாமல் இருக்கிறோம். தொடக்கக் கல்விக்கென்று 2 விழுக்காடு மற்ற வரிகள் மீது கூடுதல் வரி வசூலிக்கும் அரசாங்கத்திடம் நாம் இதைக்கூட கேட்காமல் இருப்பது வெட்க்கக் கேடாக உள்ளது.

சென்னையில் உள்ள ”சிஷ்யா” என்ற தனியார் ”நவீன குருகுலத்தில்” 2021 ஆம் ஆண்டுக்கான ”மழலையர் சிஷ்யா” வகுப்பு சேர்க்கைக்கான முன் பதிவைக் கூட இந்த ஆண்டிலேயேதொடங்கிவிட்டதாக பள்ளியின் இணைய தளத்தில் அறிவித்திருக்கிறார்கள். செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறக்குமா? என்றநிலை பெரும்பாலான இளம் தம்பதியர்களுக்கு இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தை பிறப்பதற்கு முன்பே பள்ளிக் கூடச் சேர்க்கைக்கு முன்பதிவு செய்யுமாறு ஒரு கல்வி நிறுவனம் அறிவிப்பதை ஒரு ஆரோக்கியமான கல்விச் சூழலாக கல்வியின் மாண்புகளை உணர்ந்தவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.?கல்விக் கூடங்களை நடத்துபவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக, அதிகார அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்களாக, கல்வியின் உன்னதமான மாண்புகளை உணராதவர்களாக இருக்கும் வரை இப்படிப்பட்ட மாபாதகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த பின்னர் குழந்தைகளின் தொடக்கக் கல்வி உரிமைக்காக சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடக்கக் கல்வி பெறுவதை குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று அறிவித்த 135 வது நாடாக இந்தியா இடம் பிடித்தது.”சட்டத்தைஉருவாக்குபவர்கள்” என்று சொல்லக்கூடிய அறிவாளிகள் நிரம்பிய மாநிலங்களவையில் கல்வி உரிமைச் சட்டம்நிறைவேற்றப்பட்டபோது, மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர். சட்டத்தின் நிறைகுறைகளைப் பற்றி எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கெடுப்பு மூலமே சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனவே தான்,வழக்கமான எல்லா சட்டங்களைப் போலவே கல்வி உரிமைச் சட்டமும் பல ஓட்டைகளோடு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தில் உள்ள அடிப்படையான குறைகளைப் பட்டியலிடுவோம்.

கல்வி உரிமைச் சட்டத்தில் மேலும் பல குறைகளை நாம் கூறிக்கொண்டே போகலாம். சட்டதில் ஓட்டைகள் அதிகமே தவிர, நிறைகள் மிகக் குறைவே. கடந்த ஏழாண்டு காலமாக சட்டத்தின் .நடைமுறையில் இருந்து மேலும் பல ஓட்டைகள் தெரிய வந்துள்ளதையும் பார்ப்போம்.

கல்வி உரிமைச் சட்டத்தின் நடைமுறையாக்கத்தில் உள்ள நிறை, குறைகள் பற்றி கல்விச் செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரிடமும் கருத்தாய்வு நடத்தினால்மேலும் பல குறைபாடுகள் நமது கவனத்திற்கு வரும். கடந்த வாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த தனியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி அனுமதி குறித்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வி நிலை குறித்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

”5-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறு இல்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. புற்றீசல்போல பெருகியுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத தனியார்”லெட்டர்பேடு” கல்வி நிறுவனங்களும், அங்கு பயிலும் ஆசிரியர்களுமே இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் திறமையான, தகுதியான ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால்தான் தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களோடு கல்வியில் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி வணிக ரீதியிலான தொழிலாக மாறிவிட்டதற்கு வரன்முறை இல்லாத கல்வி நிறுவனங்களும் ஒரு காரணம். இதை இப்போதே அதிகாரிகள் ஒழுங்குபடுத்தவில்லை எனில் ஆசிரிய பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி அவர்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்க நேரிடும்” என்று தனி நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் கூறியுள்ள கருத்தை ஒரு சாமானியனின் கருத்து போல ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு மாநிலத்திற்கும், கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும் மட்டும் பொருந்தக் கூடியதல்ல. இந்திய நாட்டின் கல்விக் கொள்கை வகுப்பவர்கள், கல்விச் சட்டம் இயற்றுபவர்கள் அனைவர் மீதான குற்றச்சாட்டாக கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் கொள்ள வேண்டும். ஆனால், நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை என்று அச்சப்படவேண்டிய நிலை தான் இன்றைக்கும் உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான (2017 – 2018) ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு 2 இலட்சத்து 74 ஆயிரம் கோடிகளை (மொத்த நிதிச் செலவினத்தில் 12.78%) ஒதுக்கிய நமது ஆட்சியாளர்கள் கல்விக்காக வெறும் 79,685.95 ஆயிரம் கோடிகளை (மொத்த நிதிச் செலவினத்தில் 3.32%) மட்டும் ஒதுக்கியிருக்கிறார்கள்.

நாட்டிற்கு இராணுவப் பாதுகாப்புக் காரணங்களால் ஏற்படும் ஆபத்துகளை விட, நாளைய குடிமக்களாக வளரப்போகும் இன்றைய குழந்தைகளுக்கு பாகுபாடற்ற, சமவாய்ப்புள்ள, தரமான கல்வியை அளிக்காமல் துரோகம் செய்வதன் மூலமே மிகப்பெரிய ஆபத்துகளை நாடு சந்திக்கவேண்டி இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். இன்றைய குழந்தைகளை ஏமாற்றுவதன் மூலம் நாளைய சமூகத்திற்கு ஏன் ஆபத்தை உருவாக்க வேண்டும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்.

- சு.மூர்த்தி, அரசுப்பள்ளி ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு