கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டதற்குப் பின், தோல்விக்கான காரணமாக திமுகவினர் கண்டுபிடித்துக் கூறியவற்றில் ஒன்று ‘மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் பிரித்துவிட்டது’ என்பது. இதனையொட்டி மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களை கடுமையான மொழியில் ஏசி, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி அவதூறு செய்தனர். மறந்தும், அதிமுக தங்களை விட பலம் பொருந்திய கட்சியாக - கூட்டணி பலமில்லாமல் - வெற்றி பெற முடிவதையும், நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுமளவிற்கு எதிர்க்கட்சியாக தனது கடமையை திமுக சரிவரச் செய்யவில்லை என்பதையும், பலமான கூட்டணி இல்லாமல் அதிமுகவை வெல்ல முடியாது என்பதையும் திமுகவினர் பேசவே இல்லை.

Thirumavalavan Mutharasan GR

இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. அதிமுக சிதறிப் போய், பலம் இழந்து நிற்கிறது. மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிக, மதிமுக, தமாகா இல்லாமல் முக்கால்வாசி பலத்தை இழந்து நிற்கிறது. ஆனாலும், திமுகவினருக்கு கடந்த தேர்தலின் பயம் போகவில்லை.

மக்கள் நலக் கூட்டணி ஆதரிக்காதா என்ற ஆசையில் அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் நிராகரிக்கவும், கையிலெடுத்த ஆயுதம்தான் ‘சிபிஎம் பொலிட்பீரோவில் பார்ப்பனர்களே இருக்கிறார்கள்’ என்பது. இது என்ன புதிய செய்தியா? பல காலமாக திராவிடர் இயக்கங்களும், தலித் அமைப்புகளும் சுட்டிக் காட்டிய செய்திதானே? இது கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது தோன்றாமல் போனதேன்? இவ்விஷயத்தில் திமுகவினருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், பார்ப்பனர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எந்தக் கட்சியுடனும் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்று தலைமைக் கழகத்தில் இருந்து அறிவித்துவிட வேண்டியதுதானே? அதற்கான தெளிவும், திராணியும் திமுக தலைமைக்கு இருக்கிறதா?

2015ம் ஆண்டு திமுக கூட்டணியில் நீடித்திருக்க, தோழர் திருமாவளவன் கேட்டது என்ன? திமுக கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்பதுதானே! விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுக்கும் பங்கு, தலித் மக்களுக்கு கொடுக்கும் பங்குதானே!

இன்று சிபிஎம் கட்சியில் தலித் மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக 'கண்ணீர்' விடும் திமுகவினர், அன்று விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை நிராகரித்து, கூட்டணியை விட்டுப் போகும் நிலையை உருவாக்கியது ஏன்?

அப்படி என்றால், தலித் மக்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு மட்டும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதானே திமுகவின் நிலைப்பாடும்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் பார்ப்பனர்களே அதிகம் இருந்து வந்திருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடாத புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்களில்கூட இப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனால், இதை வைத்து மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகளை அளவிட முடியாது. அடித்தட்டு மக்களோடு நிற்கிறார்களா, அவர்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளில் வட்டம், மாவட்டப் பொறுப்புகளில் இருப்பவர்கள் யார்? உள்ளூர் ரவுடிகளும், உள்ளூர் கொள்ளையர்களும் (தொழிலதிபர்கள் என சொல்லிக் கொள்வார்கள்) தானே! கட்டப்பஞ்சாயத்து செய்வதுதானே அவர்களது மக்கள் பணி?! ஆனால், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அப்படியா இருக்கிறார்கள்? ஏழை, எளியவர்களின் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு, எத்தனை தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையங்களில் அரசு அதிகாரிகளோடு மல்லுக்கட்டுகிறார்கள்? எத்தனை தோழர்கள் கட்சி கொடுக்கும் சொற்ப சம்பளத்தில் மலைவாழ் மக்களோடும், தலித் மக்களோடும் சேர்ந்து நிற்கிறார்கள்? எத்தனை தோழர்கள் (பார்ப்பனர்கள் உட்பட) புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுத்து, காவல் துறையின் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?

தலைமையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை நிராகரிக்க முடியாது. பார்ப்பனியத்தை ஒழிப்பது என்பது பார்ப்பனர்களை ஒழிப்பதல்ல... பெரியார் எந்நாளும் அதைச் செய்தவரல்ல. 19.09.1926 குடியரசில் எழுதுகிறார்:

"பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறுவளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும் , சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், “பிராமணன்” என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள்.  பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால், நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல."

பெரியார் கொள்கையின் அடிநாதம் சமத்துவம். பார்ப்பனர்களை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் உட்காருவதல்ல பெரியாரின் கொள்கை; 'நமக்கு மேலே பார்ப்பனர்களும் இருக்கக்கூடாது, நமக்குக் கீழே தலித் மக்களும் இருக்கக்கூடாது' என்பதுதான்.

பார்ப்பனியத்தை வெறுத்தவர்கள் பார்ப்பன சாதியிலும் பிறந்திருக்கலாம். அது அவர்கள் தவறல்ல. பார்ப்பனரல்லாத சாதியில் பிறந்த பல பேர் பார்ப்பனியத்தை முழுமூச்சாகப் பரப்புவதை நாம் பார்க்கவில்லையா? பிறப்பு ஒன்றை வைத்தா ஒருவரை அளவிடுவது? ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில் அல்லவா அளவிட வேண்டும்?

'பெரியார் கன்னடர், அதனால் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று சில தமிழ்த் தேசியர்கள் சொல்வதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு?

கோவில்பட்டியில் ஜோதிபாசு என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தோழர். கவுன்சிலர், பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவர். ஆனால், அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக அரசு அதிகாரிகளோடும், காவல் துறையினரோடும் மோதல் போக்கைக் கடைபிடிப்பவர். அவரை காவல் துறை எப்படி பழி தீர்த்தது தெரியுமா? 'தன்னைப் பலாத்காரம் செய்ய முயன்றார்' என்று ஒரு அருந்ததியப் பெண்ணின் மூலமாக பொய்ப் புகார் கொடுக்க வைத்து, அவரைக் கைது செய்து, கொடூரமாகத் தாக்கியது.

அப்போது அந்தப் பகுதி மக்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? "எப்ப பார்த்தாலும் தலித், தலித்னு அவங்களுக்காக ஓடுவான்லே... இவனுக்கு இது வேணும்."

அந்தப் பிரச்சினைக்குப் பின்பு, ஜோதிபாசு மாறிவிடவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். அதனால்தான் அவர் தோழர்.

ஆனால், பெரியார் பெயரைச் சொல்லி கட்சி நடத்துபவர்கள், தங்கள் கட்சியினரில் எத்தனை பேர் சாதிச் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதையும், எத்தனை சாதிக் கலவரங்களில் தங்கள் கட்சி உறுப்பினர்களின் கைங்கரியம் இருக்கிறது என்பதையும் தெரியாதவர்கள் அல்ல... ஆதிக்க சாதியினரைப் பகைத்துக் கொண்டால் வோட்டு கிடைக்காது என்பதற்காக திமுக, அதிமுக கட்சியினர் தலித் மக்களை கைகழுவுகிறார்கள். ஆனால், தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தலித், முஸ்லிம்கள் பக்கம் கம்யூனிஸ்ட்கள் நிற்கிறார்கள். திமுக, அதிமுகவை விட, நிச்சயம் அவர்கள் ஒருபடி மேல்தான்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது விமர்சனமே இல்லையா? இருக்கிறது.

தேசிய இனப் பிரச்சினையில் ஈழத்திற்கு ஓர் அளவுகோலும், பாலஸ்தீனத்திற்கு ஓர் அளவுகோலும் வைத்திருப்பது...

இந்திய சமூகத்தில் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினை என்பதை சுயபரிசீலனை செய்ய 70 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது...

இன்னும் 'பார்ப்பனர்கள், பார்ப்பனியம்' என்ற தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக, பார்ப்பனர்கள் நம் மீது திணிக்கும் 'பிராமணர்கள், பிராமணியம்' என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது...

தீண்டாமை ஒழிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, சாதி ஒழிப்பிற்கும், இந்து மத ஒழிப்பிற்கும் கொடுக்காதது...

கம்யூனிசத்தையும், கம்யூனிசத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தியவர்களின் கருத்து சுதந்திரத்திற்காகப் போராடுவது; கருஞ்சட்டைத் தோழர்கள், தமிழ்த் தேசிய இயக்கத் தோழர்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும்போது அமைதி காப்பது...

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியை காரில் அழைத்துவந்த, இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவோடு நட்பு பாராட்டிய இந்து என்.ராமை தனது மேடைகளில் ஏற்றுவது; காலமெல்லாம் தமிழ் மக்களுக்காகப் போராடும் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கருஞ்சட்டைத் தோழர்களைத் தள்ளி வைப்பது...

பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை 'வறட்டு நாத்திகம்' என்று விமர்சித்துவிட்டு, இதுவரை 'அறிவியல்பூர்வ நாத்திகத்தை' முன்னெடுக்காதது...

தொழிற்சங்க அணிகளை அரசியல்மயப்படுத்தாமல் இருப்பது...

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றத் தேர்தல் பாதையிலேயே முழுமையாகக் கரைந்துபோய், கட்சித் தோழர்களின் உழைப்பை வீணடிப்பது.

இந்த விமர்சனங்களில் ஒன்றிரண்டைத் தவிர மீதி அனைத்தையும் அல்லது இன்னும் கூடுதல் விமர்சனங்களையும் திமுக, அதிமுக மீது வைக்க முடியும்.

இந்த விமர்சனங்கள் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஊரார் சொத்தைக் கொள்ளையடித்து தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணமும், தங்களின் சக்திக்கும், புரிதலுக்கும் உட்பட்டு தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவார்கள் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது. ஆனால், இந்த நம்பிக்கை ஒருபோதும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மீது வராது. ஏனெனில் பதவிக்காக எந்தக் கொள்கையையும் இழக்கத் தயாராகும், யாரையும் பலி கொடுக்கத் துணியும் தலைமைதான் இந்தக் கட்சிகளிடம் இருக்கிறது.

தேர்தல் பாதையை இடதுசாரிகளும், திருமாவளவன், சுப.உதயகுமாரன் போன்றவர்களும் தேர்ந்தெடுத்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அப்பாதையில் கொஞ்சமேனும் பாமர மக்களின் குரலையும், அவர்களது பிரச்சினைகளையும் ஒலிப்பது அவர்கள்தான். அவர்கள் திமுக கூட்டணியில் இணையாமல் புதுக் கூட்டணி அமைப்பதோ அல்லது தனித்து களம் இறங்குவதோ திமுகவிற்கு இழப்பாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எந்தவொரு இழப்புமில்லை.

- கீற்று நந்தன்