தமிழகத்தில் வாடிவாசலை அடுத்து, இப்போது நெடுவாசல் எழுச்சி பெற்று நிற்கிறது. நாடு முழுக்க 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் பெட்ரோலிய எரிபொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அளித்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட மறு நாளே பிப்வரி 16-ம் தேதி நெடுவாசலில் அதற்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் மார்ச் 9-ம் தேதியன்று தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய ஆட்சியாளர்கள் இந்தியா முழுக்க அனுமதி அளித்துள்ள 31 இடங்களில் நெடுவாசலில் மட்டுமே அதற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

neduvasal protest 610

     

அன்று வாடிவாசலை திறக்க வேண்டும் என்று இன்றளவும் விவசாய சமூகமாக வாழும் தமிழ் சமூகம் தமிழன் என்ற ஒற்றை அடையாளத்துடன் எழுந்து நின்று போராடி வென்றோம். இன்று நெடுவாசலில் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் உயிராதாராமாக விளங்குவதும், இன்றளவும் 60% மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கும் விவசாயத்தையும், தமிழகத்தையும் காப்பதற்காக எழுந்து நிற்கிறது தமிழ் சமூகம்.

      நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால், தமிழகம் பெரும் அழிவை சந்திக்கும் என கூறுவது, ஏதோ உணர்ச்சி வசப்பட்டோ, மிகைப் படுத்தியோ சொல்வதல்ல. மாறாக முழு உண்மை என்பதை இத்திட்டத்தை ஆதரிப்பவர்களும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிப்பதுதான் இங்கு விசித்திரமானது.

      இந்த நாடு முன்னேற வேண்டுமானால், தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கான தமிழக ’மாமாக்களாக’ நியமனம் பெற்றுள்ள இல.கணேசனும், பொன்.ராதாகிருஷ்ணனும் தங்களையே அறியாமல் இது அழிவுகரமான திட்டம் என்பதை உளறிவிட்டார்கள். இதனோடு நிற்காமல் இத்திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியைப் பற்றி ஆராய வேண்டுமென்றும் பொன்.ராதாகிருஷ்ணன் முன்மொழிந்திருக்கிறார்.

      எதிர்ப்பவர்களின் பின்னணியை மட்டுமல்ல, ஆதரிப்பவர்களின் பின்னணியையும் சேர்த்து ஆராய்ந்தால் தான், இருதரப்பினரும் கூறுவதில் உள்ள உண்மைகளை பற்றி நாம் முழுமையானதொரு புரிதலுக்கும், முடிவுக்கும் வரமுடியும் என்பதால் இரண்டையும் இனி சேர்த்தே பார்ப்போம்.

      ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விவசாயம் பாதிக்கும், வேலைவாய்ப்பின்றி போகும், நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும், காற்று மாசுபடும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும். குறிப்பாக நீரியல் விரிசல் முறையை பயன்படு்த்தி எரிபொருள் எடுக்கும் போது மிக அதிக அளவு நீர் தேவைப்படும், நிலநடுக்கம் ஏற்படும், அதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களாலும், அதன் கழிவுகளாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் வரும் என்று பாதிப்புகளை பட்டியலிடுகின்றனர்.

      மேலே கண்ட பாதிப்புகளை பற்றிய பட்டியலில் மக்களின் நலன்களே முதன்யாக முன்னிறுத்தபடுவதில் இருந்தே, அவர்களின் அக்கறை யாருடைய நலன்களுக்கானது , அவர்களின் பின்னணி என்ன என்பதையும் வெளிப்படுத்துகின்றனர். அதாவது, விவசாயம் தான் எங்களின் வாழ்வாதாரம். இந்த வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள் விவசாயிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும்…………..

      இந்த எரி பொருளுக்கான, ஹைட்ரோகார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்தினால் 62 மில்லியன் மெட்ரிக் டன்கள் எரிபொருள் கிடைக்கும். மொத்தமாக 31 இடங்களுக்கும் சேர்த்து 46,400 கோடி ரூபாய் வருவாய் வரும். அதில் அரசுக்கு 9500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இத்திட்டத்தினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய எரி பொருட்களின் அளவு குறையும். நாட்டை முன்னேற்றும் நவீன அறிவியலை பயத்தாலும், போதிய புரிதல் இல்லாமலும் மறுக்கக் கூடாது. இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கக் கூடாது என்பது இத்திட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதமாகும்.

 சரி, இந்த நாddட்டிற்கு, வருவாயும், வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றமும் வேண்டும் என்கிறார்களே யார் அந்த நாடு? யாருடைய வளர்ச்சி? எவ்வளவு வருவாய்? என்று பார்த்தால், நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தேஸ்வர்ராவ் என்பவரின் ஜெம் லேபாரட்டரீஸ் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.1 இவர்கள் சொல்லும் நாடும் , நாட்டின் நலன் என்பதும் திருவாளர் சித்தேஸ்வர ராவ்ஜி தான் போலிருக்கிறது.

தமிழகத்தின் நெடுவாசலிலும், காரைக்காலிலும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இவர்கள் எடுக்கப் போவதாகச் சொல்லும் எரிவாயுவினால் கிடைக்கப் போகும் மொத்த வருவாய் 300 கோடி ரூபாய். இதில் அரசுக்கு ராயல்டியாக கிடைக்கப்போவது வெறுமனே 40 கோடி ரூபாய்தான். ஆனால் இதே காலத்தில் இப்போது இவர்கள் எரிவாயு எடுக்கப்போகும் பத்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விளை நிலங்களில் இருந்து கிடைக்கும் உணவு தானியங்களையும், அதனால் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்மைகளையும் ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். இந்த திட்டம் தேவையா என்பது! இதனோடு குறிப்பிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்திய விளைநிலங்கள் மட்டுமல்ல அவ்வட்டாரத்தில் உள்ள அனைத்து விளைநிலங்களும் பாழாகிவிடும். இதனோடு இப்பகுதிகளில் உயிர்களே வாழமுடியாத அளவுக்கு நிலமும், நீரும் , காற்றும் மாசுப்பட்டு போகும். இப்போது கூறுங்கள் இத்திட்டம் முன்னேற்றமா? அல்லது பின்னேற்றமா?

சரி, அப்படியே எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்தாலும் இவைகள் இந்த நாட்டின் வளம். எனவே இவற்றை இந்நாட்டின் குடிமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரித்து தரப்போகிறோம் என்பார்களா? நிச்சயமாக அப்படி ஒரு போதும் வாய்தவறி கூட சொல்லமாட்டார்கள்.

ஆனால் இதற்கு நேர் மாறாக, இப்போது வாரா, வாரம் சர்வதேச சந்தை நிலவரம் என்ற பெயரில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றுவதை போன்றுதான், மீத்தேன் வகை எரிவாயு மற்றும் எண்ணெய் விலையையும் ஏற்றத்தான் போகிறார்கள். அதாவது சர்வதேச சந்தை நிலவரம், மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வரிகளையும் சேர்த்து, எப்போதும் போலவே இதன் விலைகளையும் ஏற்றி நம்மிடம் கொள்ளையடிக்கத்தான் போகிறார்கள். இதற்கு எதற்காக நம்முடைய வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் நாம் முதலாளிகளுக்கும், ஆட்சியாளார்களுக்கும் பலிகொடுக்க வேண்டும். எப்போதும் போலவே மக்கள் வாழாத, விளைநிலங்களே இல்லாத அரேபிய பாலைவனங்களில் இருந்து, யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் எரி பொருட்களை வாங்குவது தானே புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்!

எனவே, இந்த மீத்தேன் வகை எரிவாயுத் திட்டம் மக்களுக்கோ , அரசுக்கோ ஆதாயம் தரும் திட்டமில்லை. மாறாக எண்ணெய் நிறுவனங்களுக்கும், இந்த நிறுவனங்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவர்களிடம் இருந்து கோடி , கோடியாய் ஆதாயம் அடையும் அரசியல் வாதிகளுக்கும் , அதிகாரிகளுக்கும் மட்டுமே சாதகமான திட்டம் என்ற முடிவுக்கு, அவர்கள் தரும் விவரங்களில் இருந்தே நாம் தெளிவான முடிவுக்கு வந்து விட முடியும்.

மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த, நிச்சயமாக இது மட்டுமே போதுமான காரணமாக இருக்க முடியாது. உலகமய சூழலில், சர்வதேச சந்தையுடனும் மற்றும் டாலருடனும் இணைக்கப்பட்டுள்ள, எண்ணெய் சார்ந்த இந்த திட்டத்தை, இந்திய எல்லைக்குள் மட்டுமே வைத்து முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு அணுகுவது நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்ப்பதாகும். நம்மில் பெரும்பாலோரும் இதனை சர்வதேச மட்டத்தில் வைத்து பார்க்க தவறுவதை நடப்பு விவகாரத்தை கவனிக்கும் போது நன்கு உணர முடிகிறது.

      அண்மையில் இந்திய அரசு ஷேல் எரிவாயு மீத்தேனை எடுக்கும் கொள்கை முடிவை அறிவித்து, அதை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுத்தி வருகிறது.3 இதனை தமிழகத்திலும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருப்பதாக ONGC தெரிவித்திருக்கிறது. இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நீரியல் விரிசல் முறை தொழில் நுட்பம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு, அந்நாட்டு நிறுவனத்தால் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. அதனாலேயே கொனோகோபிலிப்ஸ் (conocopillips) என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்துடன் தொழில்நுட்ப உதவி பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (memorandum of understanding) செய்து கொண்டிருக்கிறார்கள்.

 இந்த நீரியல் விரிசல் முறையை பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி மிக மேலோட்டமான புரிதலையே நம்மில் பலரும் பெற்றிருப்பதையும், அது அமெரிக்காவில் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகள் குறித்து போதிய அளவு அறிந்திருக்காமலும் இருப்பதை விவாதங்களை பல்வேறு விவாதங்களை கேட்கும் போதே அறிந்து கொள்ள முடிகிறது. இதனால்தான் நீரியல் விரிசல் முறை அமெரிக்காவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி, விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும், இதைப்பற்றி இங்கு எழுதுபவர்களும் , பேசுபவர்களும் நீரியல் விரிசல் முறையினால் பாதிப்புகள் வரலாம், ஏற்படலாம் என்று மழுப்பலாக பேசியும் , எழுதியும் வருகின்றனர்.

       

      இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்திலிருந்து, கடந்த 2016-ம் ஆண்டுவரை ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை இவ்வுலகின் மீது நிலை நாட்டி, தனது நாணயமான டாலரை பெட்ரோலிய வர்த்தகத்துடன் இணைத்து, உலக நாணயமாக வைத்திருக்கிறது அமெரிக்கா. அந்த டாலரை தொடர்ந்தும் உலக நாணயாமாக வைத்திருக்க, உலகின் எல்லா நாடுகளின் எண்ணெய் வளங்களையும், அதன் வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம். ஆகையால், ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள சவுதி அரேபிய எண்ணெய் வளங்களுடன், எஞ்சியுள்ள நாடுகளின் எண்ணெய் வளங்களையும், அவர்களின் சந்தையையும் கைப்பற்றும் முயற்சியில் கடந்த இரு நூற்றாண்டுகளாக அமெரிக்கா அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டாலரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் இந்த முயற்சியின் ஒருபகுதியாக, எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளில் தீராத போர்களை நடத்தி வந்ததுடன், இதனோடு தனது சொந்த மண்ணிலும், இயல்பாக புவிபரப்பிற்கு மேலே இருக்கும் அனைத்து எண்ணெய், எரிவாயுவையும் முழுமையாக உறிஞ்சி எடுத்துவிட்டனர். இதனால் புவியின் அடிப் பகுதியில் உள்ள எண்ணெய், எரிவாயு உருவாகும் மூலப் பாறைகளை உடைத்து எரிபொருளை (ஷேல் காஸ்) உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை (hydraulic fracturing) உருவாக்கி, இதன் மூலம் உலகின் மிகப் பெரும் எரிபொருள் உற்பத்தியாளராக தன்னை ஆக்கிக் கொள்ளும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

 தொடர்ந்த அந்த முயற்சியில் ஷேல் காஸ் உற்பத்தி செய்வதில் உலகின் முதன்மையான நாடாக தன்னை உயர்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல்4, தனது அணி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளை இந்த ஷேல் கேஸ் உற்பத்தியில் ஈடுபட நெட்டித் தள்ளியது. இந்த ஷேல் பாறைகளில் இருந்து எரிவாயு எடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் மட்டுமே இருப்பதால், எல்லா நாடுகளும் அவர்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்படும், தொழில் விரிவடையும், லாபம் பெருகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் அமெரிக்காவின் இந்த கனவை முழுமையாக நிறைவேற விடாமல், அதில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் போலந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா தவிர்த்த ஏனைய நாடுகளில் மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த முறைக்கு தடை விதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.5-8

 மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற போர்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகள், 2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு பிறகு உள்நாட்டு சந்தையின் தேக்கம், மற்ற நாடுகள் டாலரை தவிர்த்து தமது சொந்த நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்ளுதல், குறிப்பாக சீனாவும்-ரசியாவும் தமது சொந்த நாணயத்தில் எரிவாயு வாங்க-விற்க செய்து கொண்ட ஒப்பந்தம் போன்றவைகளின் காரணமாக, சவுதியின் ஆசிய எண்ணெய் சந்தை சரிவுக்குள்ளானது. இதனோடு ஈரானிய அணு ஒப்பந்தம் காரணமாக ஆசிய-ஐரோப்பிய சந்தையில் அமெரிக்க அணி எண்ணெய் வள நாடுகளின் சந்தை இழப்பு, ஈரானின் டாலரை தவிர்த்த எண்ணெய் வர்த்தகம் ஆகியவை எண்ணெயுடன் இணைக்கப்பட்ட டாலருக்கு நெருக்கடியை ஏற்படுத்தின.

இந்த நெருக்கடியை எதிர் கொள்ள பெட்ரோலுக்கு பதிலாக, ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து மின்சக்தியில் இயங்கும் கார்களை (electric cars) அறிமுகப்படுத்துவது, ஆசிய-ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து TPP (Trans Pacific Partnership) ஒப்பந்தம், ஐரோப்பிய எரிவாயு சந்தையை ரசியாவிடம் இருந்து கைப்பற்றும் சிரிய போரில், மறைமுகமாக அல்லாமல் நேரடி மோதலில் ஈடுபடுவது என காயை நகர்த்தினார்கள் உலகமய வாதிகள். இதனோடு ரசியாவை வீழ்த்த சவுதியுடன், அமெரிக்கா கூட்டு சேர்ந்து கொண்டு எண்ணெய் விலையை வீழ்ச்சியடைய செய்தது, வெளி நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி, உற்பத்தி செய்த எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்க கட்டுபாடுகள், குறைவான சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக நெருக்கடியில் அமெரிக்க ஷேல் காஸ் உற்பத்தியாளர்கள் சிக்கிக் கொண்டனர். TPP TPP ஒப்பந்தம், மின் சக்தியில் இயங்கும் கார்கள், siriyaavilsசிரியாவில் நேரடி போருக்கு செல்லுதல் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்பட போகும் இழப்புகள் ஆகியவைகளின் காரணமாக, அமெரிக்காவில் உலகமய தரப்புக்கு, எதிர்த்தரப்பை உருவாக்கியது. இவர்கள் எதிரிக்கு, எதிரி நண்பன் என்ற வகையில் ட்ரம்ப் தலைமையில் ரசியாவுடன் இணைந்துகொண்டு, ஜப்பான், சவுதி, ஐரோப்பிய ஆதரவுப் பெற்ற ஹிலாரி தலைமையிலான உலகமய தரப்பை எதிர் கொண்டனர்.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தரப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், அது உள்நாட்டில் எதிர் தரப்பிடமிருந்து கடும் நெருக்கடியை சந்தித்து வருவதை காண்கிறோம். வெற்றி பெற்றவுடன் ட்ரம்ப் வெளியிட்ட முதல் அறிவிப்பே, எரிசக்தி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்9 என்பதாகும். அவர் பதிவியேற்றவுடன் கையொப்பமிட்ட முதல் கோப்பு TPP ஒப்பந்தthtththaiத்தை ரத்து செய்வதற்கானதாகும்,10 அடுத்து மென்பொருள் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் விதித்ததுமாகும். இதனால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.11 இந்திய வெளியுறவு செயலர் தொடர்ந்தும் ட்ரம்ப் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.12 அதாவது நீ என்ன கொடுப்பாய், நான் என்ன தருவேன் என்பதை, அவர்கள் மொழியில் சொன்னால் இருதரப்பு (bilateral) ஒப்பந்தம், ராஜதந்திர (strategic) உறவு என்கிற வகையில் பேசி வருகின்றனர்.

அமெரிக்காவுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்தான் மோடி 31 இடங்களில் எரிபொருள் எடுக்க அனுமதி அளித்திருக்கிறார். 90-களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்து, இந்திய சந்தையையும், விவசாயத்தையும் பலிகொடுத்து, அதற்கு பதிலாக தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற தொழில் வாய்ப்புகளை பெற்றார்கள். தற்போது விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பலி கொடுத்து, அமெரிக்காவினால் தனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை ஈடகட்ட ஆட்சியாளர்கள் முனைந்திருக்கிறார்கள். சீனாவிற்கு வழங்கி வரும் சந்தை வாய்ப்பை, அதனிடமிருந்து பிடுங்கி தனக்கு வழங்கும் என்ற எதிர் பார்ப்பில் நாக்கை தொங்கவிட்டுக்கொண்டும், வாலாட்டிக்கொண்டும் நிற்கிறார்கள்.13 தனது விசுவாசத்தை இப்படி அமெரிக்காவிற்கு ஆதரவான திட்டங்களுக்கு அனுமதி அளித்தும், இதனோடு ஆசியாவில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாக இருந்து, சீனாவிற்கு எதிராக செயல்படவும் தயாராய் இருப்பதாக அமெரிக்க எசமானனுக்கு சைகை காண்பிக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

      எனவே, நாம் நினைத்துக் கொண்டிருப்பதை போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த நமது இப்போதைய போராட்டம், வாடிவாசல் போராட்டத்தை போன்று அவ்வளவு எளிமையான ஒன்றல்ல என்பது மட்டுமல்ல, இப்போராட்டத்தின் வாயிலாக நாம் எட்டப்போகும் முடிவுதான் நமெக்கென்று ஓர் எதிர் காலம் உண்டா, இல்லையா என்பதை தீர்மானிக்கப் போகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      இத்திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் இந்திய ஆட்சியாளர்களோ 21-ம் நூற்றாண்டு வல்லரசு கனவில் மிதப்பவர்கள். மூவாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை ’ஸ்வாகா’ மந்திரத்தின் மூலமாகவே தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். தமது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக கோடிக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டவர்கள். அவற்றை எவ்வித நெருடலும், கூச்சமும் இல்லாமல் இன்று வரை கடவுளின் பெயரால் கொண்டாடுபவர்கள்.

      கடந்த கால வரலாற்றில் மட்டுமல்ல நடப்பு வரலாற்றிலேயே, ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்தது மட்டுமல்ல, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், உயிரோடவே தாயின் வயிற்றை அறுத்து கருவில் உள்ள சிசுவையும் எடுத்து கொலை செய்துவிட்டு, அதை இஸ்லாமியர்கள் என்ற பெயரால் நியாயப்படுத்துபவர்கள். இப்படி எந்த விதமான கொடும்பாதக செயலையும் செய்யும் ஆற்றல் கொண்டவன் என நிருபித்ததாலேயே, இந்தியாவின் பிரதமராக ஆக்கப்பட்டுள்ள மோடி தலைமையிலான அரசுதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பதை நாம் கனவிலும் மறந்து விடக் கூடாது.

      இவர்கள் உலகலாவிய அளவில் அணி சேர்ந்துள்ள அமெரிக்காவின் வரலாறு, இந்த பார்ப்பனிய கும்பலுக்கு குருவாக இருப்பதற்கான முழு தகுதியும் உடைதாகும்.

      இன்று தம்மை அமெரிக்கர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், அன்று ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க கணடத்திற்குள் நுழைந்த போதே, அம்மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை லட்சக்கணக்கில் ஈவு, இரக்கம் இன்றி கொன்று குவித்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை எரித்து சாம்பலாக்கிய ‘நல்லவர்கள்’. வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் எண்ணிலடங்கா மக்களை கொன்று குவித்தவர்கள், குவித்துக் கொண்டிருப்பவர்கள். அல் கொய்தா, ஐ. எஸ், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயங்கரவாத குழுக்களை உருவாக்கி இவ்வுலகையே பயங்கரவாத பீதியில் ஆழ்த்தி வருபவர்கள்.

      இவைகள்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கும் மற்றும் ஆதாயம் அடைபவர்களின் பின்னணியாகும்.

      ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க இப்போது களத்தில் இறங்கி விட்ட நாம், நம்மை அறியாமலேயே உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத சக்திகளை எதிர்க்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது புலி வாலை பிடித்து விட்டோம்.

      புலியுடன் போராடி அதை வீழ்த்தினால் தான், நமக்கு வாழ்வளிக்கும் இம்மண்ணை காக்க முடியும். இம்மண்ணின் உயிரை காத்தால்தான், இங்கு வாழும் கோடிக் கணக்கான மனிதர்களாகிய நாம் உயிர் பிழைக்க முடியும். ஒரே அடியாக கொன்று, அந்த இடத்தில் உயிர்களே வாழ முடியாமல் செய்யும் அணு குண்டை போலல்லாமல், படிப்படிப்படியாக அணு, அணுவாக நம்மை கொல்லும் நீரியல் விரிசல் முறைக்கு எதிராக, இப்புவியை பாதுகாக்க போராடும் நல்லவர்களோடு நாமும், நம்மை அறியாமலேயே இணைந்து கொண்டுவிட்டோம் என்ற பெருமிதத்துடன் இனி வீறு நடை போடுவோம்.

      நம் முன்னே நிற்கும் நமது எதிரிகள் இருவரும் மிகவும் பலமானவர்கள் மட்டுமல்ல கோரமானவர்களும்தான். ஆனால் வெற்றி கொள்ள முடியாத மாவீரர்கள் இல்லை.

       இன்றல்ல, நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பார்ப்பனிய கும்பலை எதிர்த்துதான் தமிழர்களாகிய நாம் தனித்தன்மையுடன் வளர்ந்தோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த தனித்தன்மையின் காரணமாகத்தான் இந்தியாவிலுள்ள ஏனைய தேசிய இனங்களோடு ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க சமூக விழிப்புணர்வுடன், ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கு, நமது எதிர்ப்புகளை வீரியத்துடன் பதிவு செய்து வருகிறோம். இதன் காரணமாகத்தான் இந்தியாவின் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான திட்டத்தை மத்திய ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். கடந்த 2016 – ம் ஆண்டு இந்தியா முழுக்க நடைபெற்ற மொத்த மக்கள்திரள் போராட்டங்களில் 25% போராட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே நடை பெற்றுள்ளது. இதனால் தான் மத்திய ஆட்சியாளர்கள் நம்மை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆத்திரத்தோடு பார்த்து குமுறுகிறார்கள். வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் நம்மை ஒடுக்க நினைக்கிறார்கள். நாம் கொடுக்கும் தக்க பதிலடிகளினால், அவ்வப்போது அலறுகிறார்கள். இந்தியாவிலேயே ஜனநாயக சமூகமாக முன்னேறுவதில் தமிழ் சமூகமே முன்னோடியாக விளங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஏனைய சமூகங்கள் அனைத்திற்கும் முன்னுதாரணமாகவும் நாம் திகழ்ந்து வருகிறோம்.

      இரண்டாம் உலகப் போரிலிருந்து, இப்போது வரை உலகின் கோடிக் கணக்கான மனிதர்களை கொன்று குவித்த அமெரிக்கா, தான் தொடுத்த எந்த ஒரு போரிலும், எப்போதும் வெற்றி பெற்றதே கிடையாது.

      அமெரிக்காவின் பரப்பளவு மற்றும் ராணுவ வலிமையோடு ஒப்பிடும் போது சுண்டெலி அளவிற்கு கூட பலம் இல்லாத வியட்நாமியர்களிடம் உதைபட முடியாமல் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் பிடித்து ஓடியதுதான் அமெரிக்காவின் வரலாறு. ஈராக்கிலும், ஆப்கனிலும் அம்மக்களிடையே உதை வாங்க தாளாமல், அப்பாடா ஆளை விட்டால் போதுமடா சாமி என்று மூட்டைக் கட்டிக்கொண்டு ஓடிய அலறல் கும்பல்தான் அமெரிக்கா!

      நமது விரோதிகள் இருவரின் பலமே அவர்களின் சூழ்ச்சி மற்றும் நயவஞ்சகம் ஆகியவைகளே ஆகும். இவைகளின் மூலம் மக்களை பிரித்தாளுவதில் தான் இவர்களின் வெற்றிக்கான சூழ்ச்சுமம் அடங்கியுள்ளது. சதி செய்வதும், குடி கெடுப்பதுமே இவர்களுக்கு கைவந்த கலையாகும்.

      இவர்களின் இந்த பலமே நமது பலவீனமாகும். காலம், காலமாக பார்ப்பனிய சூழ்ச்சிக்கு பலியாகி கிடந்ததும், கிடப்பதுமே நம்முடைய சோகமான வரலாறாகும்.

      ஏறு தழுவுதல் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் கருங்காலிகள் பலர் காட்டி கொடுத்ததால் நாம் தமிழகமெங்கும் அடித்து விரட்டப்பட்டோம். இப்போது மட்டுமல்ல, நமது இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் காட்டி கொடுப்பவர்களால்தான், நாம் ஒவ்வொரு பின்னடைவையும் சந்தித்து வந்திருக்கிறோம். இந்த காட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பொதுவான பண்பாடாக விளங்குகிறது. இது மட்டுமே கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர் வரை அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரே பாலமாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல! இந்த, இந்திய தேசிய பண்பாடு சாதி என்பதை உயிர் மூச்சாக கொண்டிருக்கிறது.

      நாம் நமது வரலாற்றில் எப்போதெல்லாம் வெற்றியை பதிவு செய்திருக்கிறோமோ, அப்போதெல்லாம் இந்த சாதி நமது வாழ்வில் பின்னுக்கு தள்ளிவிடப்பட்டது. ஏறுதழுவுதல் போராட்டத்தில் சாதியின் தாக்கம் குறைந்து போனதுதான் நாம் லட்சக்கணக்கில் ஒன்று கூடுவதற்கும், போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு சென்றதற்கும் அடிப்படையாக அமைந்தது.

      ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த நமது இப்போதைய போராட்டத்தையும், வெற்றி என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்கு, நாம் நமது எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் சாதி என்கிற இழிவை பின்னுக்கு தள்ளிவிட வேண்டியது தவிர்க்க வியலாத தேவையாக உள்ளது என்பதை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் மறந்து விடலாகாது.

      ஆனால் நெடுவாசாலில் இருந்து வெளிப்படும் சில தகவல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளதை நமக்கு உணர்த்துகிறது. பார்ப்பனிய சூழ்ச்சிக்கு பலியாகி நாம் இப்போராட்டத்தில் வீழ்வோமேயானால், காட்டிக் கொடுக்கப்படுபவர்கள் மட்டுமல்ல காட்டிக் கொடுப்பவனும் இம்மண்ணில் உயிர்வாழும் வாய்ப்பையே இழந்து போவார்கள்! இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்தில் எப்போதுமே புல், பூண்டு கூட உயிர் வாழ தகுதியற்ற கட்டாந்தரையாக, இத்தனை ஆண்டுகளாக நம்மை வாழவைத்த நம் அன்னை பூமி அழிக்கப்பட்டு விடும்.

      ஆக மீத்தேன், இயற்கை எரிவாயு, ஹைட்ரோ கார்பன் என எந்த பெயரில் வந்தாலும், மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளான, மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பகுதிகள் அது நிலமோ, நீரோ எந்த பகுதியிலும் அனுமதியோம் என முழுங்குவோம், அவர்களை அடித்து விரட்டுவோம்.

நீரியல் விரிசல்முறை குறித்து முழுமையாக அறிவியல் பூர்வமாக எப்படி செயல்படுத்துகிறார்கள், இதனை செயல்படுத்தி பெருமளவு எரிவாயுவை உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் என்னென்ன விளைவுகளை அது ஏற்படுத்தி உள்ளது, அதற்கான அறிவியல் ஆதாரம் என்ன, ஏன் ஐரோப்பியர்கள் அதனை எதிர்த்து தடை செய்திருக்கிறார்கள், அவர்கள் தவிர்த்து வேறு யாரெல்லம் தடை செய்திருக்கிறார்கள்? என்னென்ன காரணத்திற்க்காக தடை செய்திருக்கிறார்கள்? என்பதை அடுத்த பகுதியில் விரிவாக காண்போம்.

- சூறாவளி