இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவில் அம்னஸ்டி அமைப்பு 23 – 02 – 2016 அன்று தமது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த பல்வேறு வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து இந்த அறிக்கையுடன் தெளிவான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மனித உரிமைப் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து கலந்துகொள்ளும் உயர் அதிகாரிகள் இந்த அறிக்கைகள் தொடர்பான சர்வதேச தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.

 (தமிழில் ரா.சொக்கு, மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை)

அறிமுகம் : அம்னசிட்டி இண்டர்நேசனல் என்ற அமைப்பு சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து ஏழு மில்லியன் உறுபினர்களைக் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஆகும். ஐநாவின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதும் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்க பாடுபடுவதும் அம்னஸ்டி அமைப்பின் நோக்கம் ஆகும்.

india violating human rights in occupied kashmir 1

இந்த அமைப்பு 2016 – 17 ஆம் ஆண்டிற்கான அனைத்து நாடுகளிலுமான மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை ஐநாவின் மனித உரிமைக் குழு அமர்வில் அளித்துள்ளது. இதில் இந்தியாவின் மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கையையும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் கடுமையான சட்டங்கள் மூலம் கருத்துச் சுதந்திர உரிமை அமைதியாக நசுக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும், பாதுகாக்கும் நிறுவனங்களும் தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். “பசு பாதுகாப்பிற்க்காக” அமைதியாக போராடியவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு தலித் அமைப்புக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு பாகுபாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான எதிர்ப்பு இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். தொழிலாளர் நலச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்வதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியுள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் வளர்ந்து வரும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து ஒதுக்கப்படுகின்றன. இந்தியா பாகிஸ்தான் உறவுகளில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களால் எல்லைகளில் குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படும் பதட்டங்களின் போது பாதுக்கப்புப் படையினர் அப்பாவி மக்கள் மீது பல்வேறு மனித உரிமை மீறல்களை நிகழ்தத்துகின்றன.

சமீபத்தில் கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட பண ஒழிப்பு மசோதாவால் அப்பாவி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஆயுதப் படைகளின் அத்துமீறல்கள் :

மாவோயிஸ்டுகள் தங்களின் ஆயுதத் தாக்குதல்கள் மூலம் இந்தியாவின் மத்தியப் பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆகிய இடங்களில் பல்வேறு மனித உரிமை மீறல்களை நடத்துகின்றனர். குறிப்பாக சட்டிஷ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேஷம் ஆகிய மாநிலங்களில் அப்பாவி மக்களையும், அரசு அதிகாரிகள் பலரையும் போலீஸ் இன்பர்மார்கள் என நினைத்து வலுக்கட்டாயமாகக் கடத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கொலை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் குழந்தைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து கட்டாயமாக தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர்.

ஆயுதப் படையினர் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய யூனியன் பிரதேசங்களில் சட்டவிரோதமாக ஆள் கடத்துதல் மற்றும் கொலை செய்தல் ஆகிய கொடுஞ்செயல்களில் ஈடுபடுகின்றனர். அசாமில் உள்ள கோக்ராஜ்கர் என்ற இடத்தில் “போடோ லேன்ட் தேசிய ஜனநாயக முன்னணி” என்ற அமைப்பைச் சேர்ந்த 14 பேர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ஜம்மு காஸ்மீர் பகுதியில் சந்தேகப்படுபவர்களை கொன்று விடுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் “ஜெய் இ முஹம்மத்” என்ற ஆயுதக் குழு பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானத் தளத்தை கைப்பற்றி ஏழு பாதுகாப்புப் படை வீரர்களையும், பொதுமக்களில் ஒருவரையும் கொன்றது.

ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளும் தாக்குதல்களும் :

தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான தகவலின்படி 2015 ஆம் ஆண்டில் மட்டும் 45,௦௦௦ தலித்கள் மீதான தாக்குதல்களும், 11,௦௦௦ ஆதிவாசிகள் மீதான தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தலித்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை மேலும் பல்வேறு பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றார்கள்.

கடந்த ஜனவரி மாதம் “ரோஹித் விமலா” என்ற பல்கலைக்கழக மாணவரின் தற்கொலையால் தேசிய அளவில் பல்வேறு போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் ஒலித்தன. தலித் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பல்கலைக் கழகங்களுக்குள்ளேயே பல்வேறு பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர் என்பதை அப்போது நடந்த பல்வேறு போராட்டங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் அறிய முடிந்தது. ரோஹித் விமலா இறப்பைக் கண்டித்து அவர் படித்த ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை போலீஸ் தாக்குதல் நடத்தி கைது செய்தது. கடந்த ஜூலை மாதம் குஜராத்தில் உணா என்ற இடத்தில் “பசு பாதுகாப்புக்குழு” என்ற கும்பல் சில தலித்கள் பசுவைக் கொன்றார்கள் என்று கூறி பெரிய கலவரத்தை ஏற்படுத்தி 4 தலித்களைக் கடுமையான தாக்கினார்கள். கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசி மக்களை வன்கொடுமைகலிலுருந்து பாதுக்காக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான புதிய சட்டத் திருத்தமும் அதற்கான விதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் :

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அரசுத் தகவலின்படி “குழந்தைகள் மீதான தாக்குதல்கள் குறித்த குற்றங்கள் கடந்த 2014 ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் 5% அதிகரித்துள்ளது. மேலும் 16 முதல் 18 வயதுவரையிலான குழந்தைகள் அதி பயங்கரமான குற்றங்களில் ஈடுபடும்போது குழந்தைகளுகளுக்கான சட்டங்களை பின்பற்ற வேண்டியதில்லை என்பதற்கான புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் டெல்லி இளஞ்சிறார் நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை வெளியிட்டது. அதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாத 17 வயதிலான இளைஞர் மீதான புகாரையும், ஆகஸ்ட் மாதம் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்த புகாரையும் இளஞ்சிறார் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்காமால் பொதுவான நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்ததின் படி 14 வயதுவரையிலான குழந்தைகள் வேலைகள் செய்ய கூடாது. அதே சமயம் குடும்பச் சூழ்நிலைகளில் வேலை செய்யலாம் என அனுமதிக்கின்றது. இந்தச் சட்டத் திருத்தத்தில் 14 முதல் 18. வயதிலான குழந்தைகள் உடலுக்கு தீங்கிழைக்கும் சிரமமான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது என்கின்றது. இது பொருளாதார அடிப்படையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான இயக்கங்களும் அதன் தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். இது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறுகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மனித உரிமைக் கல்வி குறித்த எந்தத் திட்டமும் இல்லை.

ஜாதிய மற்றும் இன ரீதியிலான வன்முறைகள் :

குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேஷ் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள “பசு பாதுகாப்புக்குழு” என்ற அமைப்பு பசுக்களைக் கொள்வதை எதிர்த்து சட்டங்கள் வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து போராட்டம் நடத்துகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஜார்கண்டில் இரண்டு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த கால்நடை வியாபாரிகளின் சடலங்கள் ஊரின் மையப்பகுதியில் ஒரு மரத்தில் கொல்லப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தது. ஜூன் மாதம் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளான இரண்டு முஸ்லீம்கள் தான் அவர்கள் என்று சந்தேகம் வந்தது. ஆகஸ்ட் மாதம் ஒரு பெண்ணும் அவருடன் இருந்த 14 வயது குழந்தையும் மாட்டுக்கறி உணவு சாப்பிட்டதாக குற்றம் சாட்டி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். மேலும் கடந்த மே மாதம் மாட்டு இறைச்சி உண்பது குறித்த வழக்கு ஒன்றில் மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய இயலாது என்றும் இது ஒரு குறிப்பிட்ட மக்களின் உணவுக்கான தனி நபர் உரிமையைப் பாதிக்கின்றது. என்றும் மும்பை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்ததுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த படுகொலை மற்றும் கலவரம் குறித்த முடிந்து போன வழக்குகளை மறு விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 77 வழக்குகளை மட்டும் மறு விசாரணை செய்தது. இந்த விசாரணையில் எந்த வெளிப்படைத் தன்மையும் கடைபிடிக்கப்படவில்லை.

இந்தியாவின் பல நகரங்களில் கறுப்பின மக்கள் இன ரீதியிலான கொடுமையான தாக்குதல்களுக்கும், பாகுபாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தான்சானியா பெண்னை கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒரு கும்பல் கடுமையாக அடித்து ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தியுள்ளனர். மே மாதம் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டவர் ஒருவர் புதுடெல்லியில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கார்பரேட் நிறுவனங்களின் பொறுப்புக்கள் :

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சட்டிஸ்கரில் உள்ள அரசால் இயக்கப்படும் குச்முண்டா நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அந்தப் பகுதியில் வாழும் பாதிப்பிற்குள்ளாகும் ஆதிவாசி மக்களின் கவனத்திற்கு இதைத் தெரியப்படுத்தாமலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ச்சியாக நிலங்கள் கையகப்படுத்தும்போது அதற்கான சட்டத்தை மதிக்காமல் ஆதிவாசி மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்கள் மீது குற்றம் சுமத்தி குற்றவாளிகளாக ஆக்குகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் நிலங்கள் கையகப்படுத்தும் சட்டத்தில் குஜராத் அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இதன் மூலம் பாதிக்கப்படும் கிராமங்கள் மற்றும் மக்களிடம் ஒப்புதல் பெறாமலேயே இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயன்றுள்ளது. அதே ஏப்ரல் மாதம் வெளிவந்த ஐநாவின் இருப்பிட உரிமைகளுக்கான சிறப்புப் பிரதிநிதி தமது அறிக்கையில் “இந்தியாவில் நிலங்கள் கையகப்படுத்தும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்” என்கின்றார். ஒரிசாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 12 கிராமப் பஞ்சாயத்து சபைகள் தங்கள் கிராமங்களில் மானிய அடிப்படையில் வேதாந்தா நிறுவனம் மற்றும் அரசு இணைந்து பெற்ற பாக்சைட் தாது எடுப்பதற்கான சுரங்கம் உரிமத்தை ரத்து செய்து தீர்மானம் இயற்றியிருந்தது. இதை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1984 ஆம் ஆண்டு போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்த விசவாயு கசிவு பேரழிவு குறித்த குற்ற வழக்கு போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணையில் அமெரிக்காவின் டாவ் கெமிக்கல்ஸ் - யூனியன் கார்பைடு நிறுவனம் 4 வது முறையாக கடந்தஜூலை மாதம் நடந்த விசாரணையிலும் ஆஜராகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜார்கண்டில் அரசின் நிலக்கரி சுரங்கம் தோண்டும் திட்டத்தற்கு எதிராக போராடிய போராட்டத்தினர் மீது ஜார்கண்ட் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் மூன்று பேரும் உள்ளூர் கிராம மக்கள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காவல்துறையின் (என்கவுண்டர்கள்) மோதல் சாவுகள் :

கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கடந்த 2002 – 2009 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் தாம் மட்டுமே 10௦ க்கு மேற்பட்ட மோதல் சாவுகளை (என்கவுண்டர்கள்) நடத்தியிருப்பதாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் ஆயுதப் படையினரால் நடத்தப்பட்ட1500க்கு மேற்பட்ட (என்கவுண்டர்) மோதல் சாவுகளில் கீழமை நீதிமன்றங்கள் தவறு செய்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் (என்கவுண்டர்) மோதல் சாவுகள் குறித்து விசாரித்த மத்திய புலனாய்வுத்துறை கொலையில் ஈடுபட்ட 47 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இதில் 10 பேர் கடந்த 1991 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசமாநிலம் பிலிபிட் மோதல் சாவில் தொடர்புடைய உயர் அதிகாரிகளாவார்கள். மேலும் சட்டிஸ்கரில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோதல் சாவுகள் அனைத்திற்கும் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆதிவாசி ஒருவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் பாஸ்டர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே மாதம் ஒரிசா மாநிலத்தில் உள்ள ராயகாடாவில் ஆதிவாசி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பேருமே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தான் என்று போலீஸ் தரப்பு அந்தக் கொலையை நியாயப்படுத்துகின்றது. கடந்த ஜுலை மாதம் ஒரிசாவில் உள்ள கந்தமாலில் பாதுகாப்புப் படையினர் ஒரு பச்சிளங் குழந்தை உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றனர். மாவோயிட்கள் மீதான தாக்குதல் நடந்துகொண்டிருந்த போது தவறுதலாக இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். கடந்த நவம்பர் மாதம் மத்தியபிரதேசம் - போபால் போலீசார் தாங்கள் விசாரணைக்காக சிறைக் காவலில் வைத்திருந்த எட்டு நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதால் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார்கள்.

ஒன்று கூடுவதற்கான உரிமை :

மத்திய அரசு தொடர்ச்சியாக “வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகள் பெறுவதற்கான சட்டத்தை” பயன்படுத்தி சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மிரட்டி முடக்கி வைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற நிறுவனப் பதிவு உரிமையை தற்காலிக நீக்கம் செய்து அதன் பிறகு டிசம்பர் மாதம் முழுமையாக பதிவு ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 25 நிறுவனங்களின் பதிவை மறுத்து எந்தவித காரணமும் இன்றி ரத்து செய்துள்ளது. குறிப்பாக கிரீன்பீஸ் இந்தியா, நவ்சராஜன், அன்ஹாடு ஆகியவற்றைக் கூறலாம். மேலும் மனித உரிமைக் காப்பாளர்களான டீஸ்டா செடல்வாட் மற்றும் ஜவேது ஆனந்த் ஆகியோர் “தங்கள் நிறுவனங்கள் அரசு விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதால் அரசு ரத்து செய்துள்ளதாக அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்”. கடந்த ஏப்ரல் மாதம் ஐநாவின் சுதந்திரமாகக் கூடுவதற்கான மற்றும் சங்கம் சேர்வதற்க்கான உரிமைகள் குறித்த சிறப்புப் பிரதிநிதி தமது அறிக்கையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கான சட்டப்படி அவர்களை ரத்து செய்வது சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரண்பாடானது ஆகும் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜூன் மாதம் ஐநாவின் மனித உரிமைப் பாதுகாப்பாளர்களுக்கான உரிமைகள் குறித்த சிறப்புப் பிரதிநிதி மற்றும் கருத்துச் சுதந்திர உரிமைகளுக்கான சிறப்புப் பிரதிநித் ஆகியோர் இந்திய அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரங்கள் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தங்களின் கடிதத்தை மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளனர். கர்நாடகாவில் மத்திய அமைச்சர் பற்றி கருத்துத் தெரிவித்த சினிமா நடிகர் ஒருவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி தவறாக சித்தரித்து புகைப்படம் ஒன்றை இணையதள வலைத் தளத்தில் வெளியிட்டதற்காக தகவல் தொழில் நுட்ப சட்டங்களின்படி கைது செய்வதாக இரண்டு நபர்களை கைது செய்தனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை :

கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக கருத்துச் சுதந்திர உரிமைகள் மறுக்கப்படுகின்றது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி போலீசார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறி மூன்று மாணவர்களை தேச துரோக வழக்கில் கைது செய்தனர். அதே போல அரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறி தேசதுரோக வழக்கில் கல்வியாளர் ஒருவரையும் கைது செய்தனர். கேரளாவில் இணையதள முகநூலில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் பகுதியை முழுமையாகக் குறிப்பிடாதது தேசதுரோகம் என்ற குற்றச்சாட்டின்படி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

india violating human rights in occupied kashmir

கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் போலீசார் அம்னஸ்டி இன்டெர் நேசனல் நிறுவன பிரதிநிதி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்..

மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் :

பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கருண்மிஸ்ரா என்ற பத்திரிக்கையாளர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தாது, சுரங்கம் கொள்ளைகளுக்கு எதிராக எழுதியதால் இவரைக் கொலை செய்துள்ளார்கள் என்று மாநில காவல் துறையே கூறுகின்றது. அதே போல கடந்த மே மாதம் பிகாரில் உள்ள சிவான் என்ற இடத்தில் பத்திரிகையாளர் ராஜ்தேவ்ரஞ்சன் என்ற பத்திரிக்கையாளர் தாம் நேரில் கண்ட “ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு கொலை”யைப் பற்றி எழுதியதால் அரசியல்வாதிகளால் மிரட்டப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியன் என்பவரை குடியிருந்த வீட்டிலிருந்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் அவர் வீட்டின் உரிமையாளர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கின்றார். பாஸ்டர் நகரில் பிரதாப்சிங் என்பவர் இணையத்தளம் மூலமாக உயர் காவல் அதிகாரிக்கு நேரடியாக புகார் அனுப்பியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதேவூரில் மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுபவரும் ஆராய்ச்சியாளருமான பேலாபாட்டியா என்பவர் சமூகவிரோதக் கும்பல்களால் மிரட்டப்பட்டுள்ளதுடன் பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆதிவாசிகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சோனிசோரி அவர்களின் முகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் திராவகம் வீசியுள்ளனர். சட்டிஸ்கரில் உள்ள ஜகதல்பூரில் ஆதிவாசி மக்களுக்கு இலவச சட்டஉதவி செய்துவந்த மனித உரிமை வழக்கறிஞர்கள் சிலர் கட்டாயமாக அந்த வீட்டின் உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

பத்திரிக்கையாளர் சந்தோஸ்யாதவ் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு இறுதியில் குற்றவாளியாக்கி தண்டிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீசார், தலித் உரிமைகளுக்கான எழுத்தாளர் துரைகுணா மற்றும் தலித் இயக்கப் போராளி பூபதிகார்த்திகேயன் ஆகியோர் மீது பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்தனர். கடந்த ஜூலை மாதம் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஈசன் கார்த்திக், முத்துசெல்வன் மற்றும் பியுஸ்மனு ஆகியோர் ரயில்வே பாலம் கட்டியதை எதிர்த்து அமைதியாகப் போராடியதற்காக தமிழகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

மணிப்பூர் இரோம் சர்மிளா மத்திய அரசின் பாதுகாப்புபடையினர் அதிகாரங்கள் குறித்த சட்டத்தை எதிர்த்து மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை 16வது ஆண்டில் முடித்துக்கொண்டார். இதனால் உள்ளூர் நீதிமன்றமும் அவர் மீதான தற்கொலை முயற்சி வழக்குகளை தள்ளுபடி செய்தது. ஆனால் உள்ளூர் போலீசார் தகவல் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அவரை சிறையிலேயே வைத்திருந்தனர்.

ஜம்மு காஷ்மீர் :

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலவைர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது பாதுகாப்புப் படை நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 8௦ பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 14 பேர் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படை ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிசூடு நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள் கண்பார்வை இழந்தனர். பல இடங்களில் பாதுகாபுப் படையினர் மிகவும் மோசமான தாக்குதல்களை நடத்தி அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கலைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சாபிர் அஹமத் என்கின்ற கல்லூரி ஆசிரியர் ராணுவ வீரர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவின்படி தனியார் வீடுகளின் தொலைபேசி இணைப்புக்கள், கைபேசி இணைப்புக்கள் மற்றும் கைபேசிகளின் இணையதள இணைப்புக்கள் ஆகிய அனைத்து தகவல் தொடர்புகளும் சில வாரங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்தது. மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தத் தகவல்களும், புகார்களும் கூட யாராலும் அனுப்பவோ பெறவோ முடியவில்லை. மேலும் அவசர மருத்துவ உதவிகள் கூடப் பெற முடியவில்லை.

மேலும் கடந்த ஜுலை மாதம் மூன்று நாட்களுக்கு உள்ளூர் செய்தித் தாள்கள் கூட தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் குராம் பர்வீஜ் என்ற மனித உரிமைகளுக்காக போராடும் நபர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். மேலும் அவர் ஸ்விட்சர்லாந்து, ஜெனீவாவில் நடைபெறவிருந்த ஐநாவின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கபட்டது. கடந்த அக்டோபர் மாதம் அரசு உத்தரவின்படி ஸ்ரீநகரில் உள்ள ஒரு செய்தித்தாள் நிறுவனத்தின் வெளியீடுகளையும், நிறுவனத்தையும் அரசு முடக்கி வைத்துள்ளது. போலீசார் கலவரத்தை அடக்குவதாகக் கூறி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை சட்டவிரோதமாக நெருக்கடியான இடங்களில் அடைத்து வைத்தனர். அங்குள்ள பள்ளிக் கட்டிடங்கள் சிலவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

மூன்றாம் பாலினம் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் :

கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதி மன்றம் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 377 ன்படியான ஓரினச் சேர்க்கையாளர்களின் செயல்பாடுகள் குறித்த வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்தது. கடந்த ஜூன் மாதம் ஓரினச் சேர்க்கையாளர்கள் அமைப்பின் ஐந்து பேர் கொண்டகுழு பிரிவு 377 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் மத்திய அமைச்சரவை மூன்றாம் பாலினத்தவர் குறித்த உரிமைகளுக்கான மசோதாவை அங்கீகரித்துள்ளது. ஆனால் இந்த மசோதாவில் மூன்றாம் பாலினம் குறித்த சரியான விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. மேலும் அவர்களை இந்த சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற 2014 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பும் நடைமுறைப்படுத்தஎந்த வித முயற்சியும் இந்த சட்டத்தில் எடுக்கவில்லை என்று மூன்றாம் பாலினத்தவர் கூட்டமைப்பின் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்:

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 3,27,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் விளிம்பு நிலையில் இருப்பதால் சமூகத்தில் கடைபிடிக்கப்படும் பாகுபாடுகளினால் தங்கள் மீதான பாலியல் மற்றும் பல்வேறான வன்முறைகளுக்கெதிராக புகார் கொடுக்க வருவதே சிரமாகவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சட்டிஸ்கரில் பாதுக்காப்புப் படையினர் தங்கள் கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்துவதாகக் கூறி தங்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இரண்டு ஆதிவாசி பெண்கள் குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு புகார்கள் குறித்தவிசாரணையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா, பெங்களூரில் ஆடைத் தயாரிப்பில் உள்ள பெண் தொழிலாளர்களை காவல் துறையினர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்துள்ளனர். கடந்த மே மாதம் கேரளாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தமது வீட்டில் இருந்த பொழுதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேற்கண்ட புகார்களில் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் காவல்துறை சாதிய ரீதியிலான பாகுபாட்டுடனே இந்த குற்றங்களை விசாரணை செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆள் கடத்தலுக்கு எதிரான வரைவு மசோதா ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த மசோதா சம்மந்தப்பட்ட யாருடனும் கலந்தாலோசிக்காமல் அவசரகதியில் வெளியிடப்பட்டுள்ளது. காவல் துறையினர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைப் பொது இடங்களில் பார்க்கும்போது இந்தியச்சட்டங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீது பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி மீண்டும் மீண்டும் பொய்யான வழக்குகளைப் சிறையில் அடைக்கின்றனர். அங்கு காவல் துறையினர் அந்த அப்பாவிப் பெண்கள் மீது பல்வேறு மனித உரிமை மீறல்களை நிகழ்த்துகின்றனர்.

தமிழாக்கம் - ரா.சொக்கு, மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை