jaggi vasedev and modi

ஆண்மை எனத் தனித்ததொரு கருத்துருவாக்கம் நிகழ்ந்தது ஒரு வேடிக்கையான நிகழ்வு.

உண்மையில், எதுவெல்லாம் பெண் தன்மை கொண்டதென அறியப்பட்டதோ, அவற்றினின்று வேறுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் ஆண்மை உருவாக்கம் பெற்றது.

நளினம், மென்மை, அழுகை, அச்சம், வெட்கம் என எதுவெல்லாம் பெண்மைக்குரியதென ஒதுக்கீடு செய்யப்பட்டதோ, அவற்றினின்று முரண்பட்டு நிற்பதே ஆண்மை எனப் பார்க்கப்படுகிறது. ஆண்மையின் பெருமை என்பது, பெண்ணைப் பாதுகாப்பதாகத் துவங்கி, அதிகாரத்திலிருந்து அவளை விலக்கி, அடக்கி வைப்பதில் முடிகிறது.

ஆக... இந்தப் போர் அதிகாரத்திற்கானதாகத் துவங்கியது. ஆதித்தாய் வழிச் சமூகத்தின் தலைமையைக் கைப்பற்றியே ஆண்மையவாதம் நிலைநிறுத்தப் பட்டது.

இயற்கையின் ஆதாரமான படைப்புத் தொழில் என்பது துவக்கத்தில் முழுக்கப் பெண் தன்மை கொண்டதே. இன்றைக்கும் ஒரே உடலில் ஆண், பெண் பாலுறுப்புகளைக் கொண்ட உயிரிகளும், ஆண் துணை இல்லாமலேயே கருவுறுதல் நிகழ்த்தும் உயிரிகளும் உள்ளன. பிற்பாடு பரிணாமத்தில், உயிரினங்களில் புதிய பண்புகளைத் தோற்றுவிக்க இயற்கை செய்த ஏற்பாடே தனி உடலுடன் ஆண்... அதாவது விரிவுபடுத்தப்பட்ட செகண்ட் யூனிட். பிறகு படைப்புத் தொழில் கூட்டணி வேலையாயிற்று.

இதை மறுப்பதே ஆண்களால் நிறுவப்பட்ட மதங்களின் முதல் வேலையாக இருந்தது. ஒரு ஆண் கடவுளால், ஆதாமிலிருந்தே ஏவாள் படைக்கப்பட்டதாகப் பேசுவதும், பிரம்மனே ஆண் பெண் என அனைத்து உயிர்களைப் படைப்பதாகவும் புனையப்பட்ட கதைகளின் பின்னால் பரிணாமத்தையே திருத்தும் முயற்சி இருந்தது.

எனினும் இயற்கையின் நோக்கம் மிகவும் தெளிவானது மற்றும் எளிமையானது. படைப்புச் செயலைப் பொருத்தவரை, அது ஆச்சரியப்படத்தக்க வகையில் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மானுக்குக் கொம்பு, யானைக்குத் தந்தம், சிங்கத்திற்குப் பிடரி, மயிலுக்குத் தோகை என ஆணினத்திற்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் தகுதிகள் யாவும் போட்டி போட்டு , வித்தை காட்டிப் பெண்ணைக் கவர்ந்து கலவியில் ஈடுபடவே.

விலங்குகளில் ஆணினமானது, தமக்குத் தரப்பட்ட உடலின் இந்தக் கூடுதல் தகுதிகளை இயற்கை என்ன நோக்கங்களுக்காக வழங்கியதோ அதற்கே அதிகம் பயன்படுத்துகின்றன.

ஆனால் , மனித இனத்தில் ஆணிற்குக் கிடைத்த வலிமையானது, பெண்ணை அடக்கி ஆளவும், அடிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டதால் வாழ்க்கை கடும் சிக்கல்கள் நிரம்பியதானது.

படைப்பின் நோக்கங்களுடனும், இயற்கையின் இயக்கத்துடனும் முரண்படத் துவங்கிய கணத்திலிருந்தே அவன் தனக்குள் தனிமைப்படத் துவங்கிவிட்டான். ஆணுக்குள் பெண்ணும் , பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் தொடர்புகளை மறுத்துத், தன்னைத் தனிப்படுத்திக் கொண்டு போராடலானான். இப்போராட்டத்தில் மதங்களின் பங்கு அதிகம்.

குடும்பம், குழந்தை என ஒரு வளையத்துள் இயங்கினாலும், அதனின்று விடுபடும் காலம் பற்றிய ரகசியக் கனவு அவனுக்கு உண்டு. அவன் தேடலில் பெரு விருப்பமுடையவனாக இருக்கிறான்.

என்னதான் படைப்பு வேலையில் ஆணின் பங்கு இருந்தாலும், கருப்பையின் ரகசிய நிகழ்வுகளில் ஒரு சிறிதும் தொடர்பின்றி இயற்கை அவனை விலக்கி வைத்திருக்கிறது. அங்கு நிகழும் மாற்றங்கள் குறித்த அறியாமை உணர்வு அவனை அலைக்கழித்திருக்கிறது.

அவன் கேள்விகளால் நிரம்பியவனாக இருக்கிறான். நான் யார்.? உலகம் என்பது என்ன.? அண்டத்தின் மையம் எது.? கடவுள் இருக்கிறாரா இல்லையா.? எனக் கேள்விகள் அவனைத் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்து மதமானது, பிரம்மச்சரியத்தை கிரகஸ்த நிலைக்கும், வனப்பிரஸ்தத்தை சன்னியாசத்திற்குமான ஏற்பாடுகளாகப் பிரித்துள்ளது. அதாவது துறவு என்பது வாழ்க்கையின் இறுதி நிலையாக உள்ளது. துறவென்பது, குடும்பம், செல்வம், உறவுகளைத் துறப்பதாகக் கொண்டாலும் பெண்ணைத் துறப்பதே துறவு. அதுவே உயர்வெனக் கருதப்படுகிறது.

குறிப்பாக, பெண்ணுடலை, அது நினைவூட்டும் காமத்தை அவன் முற்றிலுமாக விலக்கி வைக்க முயலுகிறான். பெண்ணை 'மாயப் பிசாசென உரக்கக் கூவுகிறான். தீட்டு கற்பிக்கிறான். பெண்ணுடலை இழிவுபடுத்தி, கடவுள், மதம், வழிபாடுகளில் புனிதத்தைப் புகுத்துகிறான்.

பெண்ணுடலைத் துறப்பதுதான் இங்கு மாபெரும் சாதனை. அதனை நிகழ்த்துபவன் மதிக்கப்பட வேண்டியவனாகிறான். அவன் காலில் யாவரும் பணிகின்றனர். தனது மனைவியைப் பிரிந்து மீண்டும் பிரம்மச்சரியத்திற்குத் திரும்புபவனுக்கு ஞானம் கிட்டுகிறது. மாறாகக் காட்டுக்கு மனைவியைக் கூட்டிச் சென்றவன் படாத பாடு படுகிறான் என்கின்றன இந்திய புராதனக் கதைகள்.

பெண்ணுடலை ஒதுக்குபவனுக்கு புதிய தேவைகள் காத்திருக்கின்றன. அவனுக்குத் தியானம் வேண்டும், யோகம் வேண்டும், ஞானம் வேண்டும், மரியாதை வேண்டும்... பெண் வேண்டவே வேண்டாமென ஓடுகிறான்.

பெண்ணுடலில் துய்த்த இன்பத்தை விட மேலான பரவசம், ஆனந்த நிறைவு தேடி காடுகளில், மலைகளில் அலைகிறான். மலை முகடுகளில் ஆண் கடவுளர்களை நிறுவி, முடிந்த வரை பெண்கள் அங்கு வருவதைத் தடை செய்கிறான்.

பாலியல் குழப்பங்களும், வன்கலவிகளும், காமம் குறித்த குற்ற உணர்வுகளும் மிகுந்த ஒரு தேசத்தில், துறவியர்கள் எளிதாகப் புகழடைகின்றனர். தன்னைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருப்பதாகத் தானும் நம்பி, பிறரையும் நம்ப வைக்கிறான்.

ஆணே ஞானமடைகிறான். கடவுளின் தூதுவனாகத் தன்னை அறிவித்துக் கொள்கிறான். அவனைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடுகிறது. பெண்ணை ஒரு பிரச்சினையாகக் கருதி ஓடியவனால், தமது வாழ்வின் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென மக்களும் நம்புகிறார்கள். ஒரு புதிய வழி கிடைத்ததாக ஆனந்தமடைகிறார்கள்.

இவர்களுக்காகக் காடுகளும் மலைகளும் மொட்டையடிக்கப் படுகின்றன. தியான லிங்கம்,ஆதியோகி என மக்களின் கவனம் குவிக்கப்படுகிறது. ஈஷா என்பது எல்லையற்ற சக்தியாகக் குறிக்கப் படுகின்றது. ஈஸ்வரனைக் குறிப்பதாக விளக்கம் தரப்படுகிறது. எனினும் ஈஷா எனும் பெயர் பெண் கடவுளான பார்வதியின் பெயராகவும் உள்ளது.

ஆதிசக்தியைப் பெண்ணாக உருவகித்ததற்கு இணையாக, ஆதியோகியை நிறுவுகின்றனர். ஆதியோகி பெண்ணுடலைத் துறந்தோடியவன். இந்த ஆதிகால யோகி மீசை, தாடி வழித்துப் பன்னாட்டு அலுவலகப் பணியாளன் போல் இருக்கிறான். அவன் முகத்தில் பெண்மை வழிந்தோடுகின்றது. சுருள் சுருளான கேசம் தோள் மீது புரளுகின்றது. இந்த ஆதி யோகி... பார்ப்பதற்கு அதிகமும் ஒரு பெண் போலவே இருக்கிறான்.

ஒருவன் எந்தச் சிந்தனையை அதிகம் விலக்க முயற்சிக்கிறானோ அதுவே ஆழ்மனதில் ரகசியமாக அவனை இயக்கத் துவங்கிவிடுகிறது போலும்.

மறுபுறம்... மொட்டையடித்த இளம் பெண் சன்னியாசிகள் நடமாடுகிறார்கள். அவர்கள் துறவின் பெயரால் பழிவாங்கப்பட்ட பெண்மையின் குறியீடுகளாகத் தென்படுகிறார்கள்.

இயற்கைக்கு எதிராகத் திரும்பியும் ஞானமடையலாம் என ஆதியோகி அறிவிக்கிறான். நமக்குத்தான் மிகவும் கவலையாக இருக்கிறது.

- ஜீவகன்