Nanjil Sampath Sasikala

இன்று தமிழ்நாட்டில் மீம்ஸ் வெறியர்களின் தாக்குதலுக்கு மிகப்பெரிய இலக்காகி இருக்கின்றார் நாஞ்சில் சம்பத். அவரை ஏதோ இலட்சிய பேச்சாளராக, கொள்கைக் குன்றாக பார்த்துப் பார்த்து நேசித்தவர்கள் ‘மனிதன் மிக மட்டமான பேர்வழி’ என்று காறித் துப்புகின்றார்கள். தேர்தல் அரசியல் ஒருவனை எவ்வளவு தரம்தாழ்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு நாஞ்சில் சம்பத் ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டார். திமுக, பிறகு மதிமுக, அப்புறம் அதிமுக, அப்புறம் மறுபடியும் அதிமுக. அப்படி எழுதினால்தான் சரியாக இருக்கும் என்றும் தோன்றுகின்றது.

பொதுவாக நாஞ்சில் சம்பத்தை ‘மானஸ்தன்’ என்ற நிலையில் வைத்து நாம் விமர்சனம் செய்யத் தேவையில்லை. அது எப்போதுமே அவரிடம் இருந்ததும் இல்லை. அவரிடம் மட்டும் அல்ல பொதுவாக தமிழகத்தில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் என அறியப்படும் பலபேர் அந்த மானஸ்தன் ரகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை. பணத்திற்காகவும், பதவிக்காகவும் தங்களுடைய நாக்கை சுழற்றும் சூழ்ச்சிக்காரர்கள் தான் இங்கு அதிகம். அவர்கள் ஈழப்பிரச்சினை பற்றியோ, இல்லை முல்லைபெரியாறு, காவிரி பிரச்சினை பற்றியோ, இல்லை டாஸ்மாக் பிரச்சினை பற்றியோ மணிக்கணக்கில் ஆவேசமாக, கேட்பவர்கள் ‘மனுசன் என்னமா பிச்சி ஒதறுரான் பாரு’ என்று சொல்லும் அளவுக்குப் பேசுவார்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் யாரைக் கழுவிக் கழுவி ஊற்றினார்களோ அவர்களின் காலையே கழுவுவார்கள். தங்களது பேச்சில் இருக்கும் வீரமும், கம்பீரமும் பொறுக்கித் தின்பதற்கான வழியாகவே அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

 நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இது போன்று பொறுக்கித் தின்பதற்காகவே தங்களை பேச்சாளர்களாக மாற்றிக் கொண்டவர்கள். திமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக இருந்து பின்னர் வைகோ திமுகவில் இருந்து துரத்தப்பட்டபோது அவருடன் சென்றார். மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக முக்கிய பேச்சாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். நீ பெரியவனா? இல்லை நான் பெரியவனா? என்ற அதிகாரப் போட்டியில் அங்கிருந்து புறப்பட்டு புரட்சித்தலைவியின் காலடியில் விழுந்து, துணைக் கொள்கை பரப்புச் செயலாளராக ஆனார். நாஞ்சில் சம்பத்திடம் என்ன சிறப்பு என்றால், அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் எதிரணியினரை வறுத்தெடுக்கும் அவரது மனத்திடம்தான். திமுகவில் இருந்தால் அதிமுகவை வறுத்தெடுப்பார், மதிமுகவில் இருந்தால் அதிமுகவையும், திமுகவையும் வறுத்தெடுப்பார், அதிமுகவில் இருந்தால் மதிமுகவையும், திமுகவையும் இன்னும் பிற ‘சும்மானாச்சி’ கட்சிகளையும் வறுத்தெடுப்பார். அந்தளவுக்கு மனிதருக்கு தொழில் சுத்தம்.

  என்ன பேசுகிறோம் என்பதைவிட பேசுவது எதுகை மோனையாக இருக்கின்றதா என்று பார்த்துப் பார்த்துப் பேசுவார். சென்னையில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது அதிமுக பொதுக்குழுவை ஆடம்பரமாக நடத்த வேண்டுமா என ஊடக நிகழ்ச்சியில் கேள்வி கேட்டால் ‘ “ஒரு வீட்டில் துக்கம் நடந்ததற்காக அடுத்த வீட்டில் கல்யாணம் நடக்கக்கூடாதா?” என்றும், “எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்க முடியுமா?” என்றும் கேள்வி கேட்டவர். துக்கம்- கல்யாணம், எறும்பு-யானை அவ்வளவுதான். இதில் பொருள் இருக்கின்றதா என்றெல்லாம் நாம் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி தேட ஆரம்பித்தால் கையிலே செருப்பை எடுத்துக்கொண்டு நாஞ்சில் சம்பத்தைத் தேட ஆரம்பித்து விடுவோம்.

 வைகோவின் அடிச்சுவட்டில் தன்னை வளர்த்துக் கொண்ட நாஞ்சில் வைகோவை போலவே அரசியல் பிழைப்புவாதத்தில் கரைகண்டவர். ஜெயலலிதாவின் கூலிப்பேச்சாளர்களின் பட்டியலில் இருந்த நாஞ்சில், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னால் தனக்கான அதிகாரம் இனி சசிகலா கும்பலிடம் இருந்து கிடைக்காது என்பதை ஊகித்துக் கொண்டு வண்டியை வேறு இடத்திற்கு ஓட்டிச் செல்ல ஆயத்தமானர். அதன் முன் அறிகுறிகளாக ஜெயலலிதா தனக்கு வாங்கிக் கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். “எனக்கு சசிகலாவைத் தெரியாது, நான் சந்தித்ததும் இல்லை, சசிகலாவிற்குத் தகுதி இருக்கின்றதா என்பதும் தெரியாது. சசிகலா தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்” என்று ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். போதாத குறைக்கு ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சசிகலாவிற்குப் பேதி வேறு கொடுத்தார். உண்மையில் நாஞ்சில் சம்பத் ஒரு அப்பட்டமான பிழைப்புவாதி என்பதும், காசுக்காக நாக்கை சுழற்றும் அற்பவாதி என்பதும் அரசியல் வட்டாரங்களில் நன்றாக அறியப்பட்ட ஒன்று. எனவே நாஞ்சில் சம்பத்தை திரும்பவும் அதிமுக கூலிப் பேச்சாளர்கள் பட்டியலில் சேர்ப்பது அவ்வளவு பெரியவிஷயம் இல்லை என்பது சசிகலாவிற்குத் தெரியும்.

 சசிகலாவின் கணவர் நடராஜன் மூலம் நாஞ்சில் சம்பத்திடம் பேசப்பட்ட பேரம் படிந்துபோகவே நாஞ்சில் சம்பத் திரும்பவும் அதிமுகவிற்குத் திரும்பி இருக்கின்றார். நாஞ்சில் சம்பத்திற்குத் தேவையான ‘அனைத்தையும்’ சின்னம்மா செய்துகொடுப்பார் என்ற உறுதியின் பேரில் அவர் மீண்டும் புத்தெழுச்சியோடு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். சசிகலாவைப் பற்றி இப்படி கேவலமாகப் பேசிவிட்டு திரும்ப அவர் காலையே கழுவப் போகின்றோமே, ஊர் உலகம் நம்மை காறித்துப்பாதா என்று அவர் கொஞ்சம் கூட வேதனைப்படவில்லை. ஏனென்றால் அவருக்கு கம்பெனியாக வைகோவும் இப்போது அதிமுக கூலிப்பேச்சாளர்கள் பட்டியலில் நடராஜனால் சேர்க்கப்படிருக்கின்றார். ஏற்கெனவே அன்புச்சகோதரியிடம் ‘நிறைய அன்பை’ வாங்கி பழக்கப்பட்ட வைகோ தற்போது மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சசிகலாவின் பாதத்தை தன்னுடைய ஆனந்தக் கண்ணீரால் அபிசேகம் செய்யத் தயாராகி இருக்கின்றார். சென்னையில் நடைபெற்ற காசி ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழாவில் நடராஜனுடன் மேடை ஏறிய வைகோ “ நான் நடராஜனுக்கு நன்றியுள்ளவன். நன்றியை ஒருபோதும் மறக்கமாட்டேன்” என்று கலங்கி இருக்கின்றார். பல வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்காமல் காய்ந்து கருகிக் கிடக்கும் தனது கட்சிக்கு இந்தப் பேச்சால் புது உற்சாகத்தை வழங்கியுள்ளார். எனவே வைகோவையே தள்ளிக்கொண்டு வந்த நடராசனுக்கு நாஞ்சில் சம்பத் எல்லாம் எம்மாத்திரம்.

 நாஞ்சில் சம்பத்தாக இருக்கட்டும், இல்லை அதிமுகவில் இருந்து வெளியேறிய மற்ற பேச்சாளர்களாக இருக்கட்டும், இவர்கள் எல்லாம் இன்று அதிமுகவில் இருந்து விலகுவதற்குக் காரணம் ஜெயலலிதா மீது உள்ள அன்பினால் அல்ல. இனி இந்தக் கட்சியில் இருந்தால் எதிர்காலம் கிடையாது என்பதால்தான். இப்போதே கட்சி மாறினால் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் வேறு ஆதாயம் கிடைக்கும் கட்சியில் ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால்தான் அவர்கள் கட்சி மாறுகின்றார்கள். இன்னும் சிலபேர் அதே கட்சியில் தொடர்வதற்குக் காரணம் தமிழக மக்கள் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கைதான். எப்படியும் காசுகொடுத்து அடுத்த தேர்தலில் எதிர்ப்புக் கூட்டத்தை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கைதான் அவர்களை சசிகலாவை ஆதரிக்க வைக்கின்றது. நாஞ்சில் சம்பத், வைகோ போன்றவர்கள் அரசியலில் வெட்கம், மானம் போன்றவற்றைத் துறந்தவர்கள். அவர்களுக்கு கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் எதுவும் கிடையாது. எங்கு அதிகம் வரும்படி கிடைக்குமோ, அங்கு நின்று கொண்டு நாக்கைச் சுழற்றுவார்கள்.

 சசிகலாவை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் மிகக் கீழ்த்தரமான மட்டமான அயோக்கியர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் பொறுக்கித் தின்பதற்காகவே கட்சி நடத்துபவர்கள். சசிகலா தமிழ்நாட்டை கொள்ளையடித்துச் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிசத்தில் தமக்கும் ஒரு பங்கு கிடைக்காதா என நாக்கில் எச்சில் ஒழுக போயஸ்கார்டன் வாசலில் நின்றுகொண்டு இருக்கின்றார்கள். நடராஜன் போன்ற அரசியல் தரகர்கள் இது போன்று எச்சில் ஒழுக நின்றுகொண்டு இருக்கும் நாய்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் வரும் வேலையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் காலங்களில் இன்னும் எத்தனை நாய்கள் போயஸ் கார்டன் வாசலில் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை நாஞ்சில் சம்பத் போன்றவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை வார்த்தையாகப் பார்க்காமல் அவர்களது மலமாகப் பார்த்து தூர ஒதுங்கி நிற்போம்.

-       செ.கார்கி