jallikattu tamils

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழியானால், தை பிறக்கும்முன் ஜல்லிக்கட்டிற்கு மல்லுக்கட்டு நடக்கும் என்பது புதுமொழியாக மாறிவிட்டது.

2014 ஆண்டு மே மாதம் இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு எனும் காட்டுமிராண்டி கால பழக்க வழக்கத்திற்குத் தடை விதித்ததில் இருந்து, ஜல்லிக்கட்டிற்காக மல்லுக்கட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடக்கிறதோ இல்லையோ, தை மாதம் நெருங்கிவிட்டாலே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனவும், தமிழர் பண்பாட்டை, பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் எனவும் சப்பைக்கட்டு நடந்து கொண்டு வருகிறது.

இணையதளங்களில், அச்சு ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் என எங்கு திரும்பினாலும் ஜல்லிக்கட்டு அலை அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்படி என்ன ஜல்லிக்கட்டில் இருக்கிறது என அறிந்துகொள்ள அனுபவ அறிவு மற்றும் பகுத்தறிவு என்ற இரு கோணங்களில் ஜல்லிக்கட்டோடு மல்லுக்கட்டலாம் என்ற அடிப்படையில் என் வாதங்களை முன்வைக்கிறேன்.

ஜல்லிக்கட்டு தமிழர் அனைவருக்குமான பண்பாடா? மேலும் அறிவியல் வளர்ந்த நிலையில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பண்பாடு என்றால் என்ன?

1) தமிழர் அனைவருக்குமான பண்பாடெனில் தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஏன் நடைபெறவில்லை?

2) மதுரையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில், மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் கலந்து கொள்வது ஏன்?

3) ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு எனில் மாடு மேய்ப்பது ஆப்ரிக்க பண்பாடா? ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு என்று குதிக்கும் கலாச்சார காவலர்கள் மாடு மேய்ப்பதை இழிவாகக் கருதுவது ஏன்?

4) பழைமையான பழக்கவழக்கம், எனவே ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அளவுகோலை மற்றைய பழைய பழக்க வழக்கங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாமா? கோமணம் கட்டுவது தானே தமிழரின் பழைய பழக்கம். அதை பின்பற்ற எத்தனை கலாச்சார காவலர்கள் தயாராக உள்ளனர்?

5) பழையது என்ற ஒரே காரணத்திற்காக இன்றைய நவீன அறிவியல் யுகத்திற்குப் பொருந்தாத பழக்கவழக்கங்களை அனுமதிக்க முடியுமா?

6) 2014 ஆண்டு மே மாத்ததில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு விட்டது. கடந்த ஆண்டுகளில் அமைதியாக இருந்து விட்டு தற்போது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பாஜக களமிறங்குவது ஏன்? 2016 தமிழக சட்டசபைத் தேர்தலைத்தவிர வேறு காரணங்கள் ஏதும் இருக்க முடியுமா?

7) ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளைச்சண்டை உள்ளதே என்பவர்கள் உலகில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில்லை. ஸ்பெயினில், ஜெர்மனியில் காளைச்சண்டையை நிறுத்தி ஆண்டுக்கணக்காகி விட்டன.

8) பழமைதான் என்பதற்காக தமிழ்நாட்டில் மாட்டு வண்டியில் பயணம் செய்ய நாம் தயாரா?

மேற்கண்ட கேள்விகளுக்கு பகுத்தறிவைப் பயன்படுத்தினால் அறிவியலுக்கும், நடைமுறைக்கு ஒவ்வாத எந்தவித பழக்கமும் காலப்போக்கில் வழக்கிழந்து போகும் என அறிந்து கொள்ளலாம். பண்பாடு என்பது பழைமைகளைப் தூக்கிப் பிடிப்பதல்ல, மாறாக பண்படுதல் என்றே பொருள்.

மேலும் தமிழர் பண்பாட்டை நிறுவ 'தமிழனுக்கு' மட்டும் தான் கடமையும் உரிமையும் உள்ளதா? 'தமிழச்சிகளுக்கு' பங்கில்லையா?.

ஸ்பெயினில் காளைச்சண்டை இருக்கிறது, ஜெர்மனியில் ஜெர்சிப் பசு சண்டை இருக்கிறது, தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதென வீரவசனம் பேசும் என் இனிய தமிழ்த் தேசியர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். ஸ்பெயினில் காளைச்சண்டை இருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டை நடத்துங்க. ஆனால் அதே போல் ஸ்பெயினி்ல் சாதி இல்லாமல் இருப்பது போல், தமிழ்நாட்டிலும் சாதி இல்லாமல் இருங்க. உங்களால் முடியுமா? உங்க வீரத்தை இந்த விஷயத்தில காட்ட முடியுமா? சவால் விடுகிறேன்.

இளவட்டக்கல் தூக்குவதும், புலிப்பல் பிடுங்கி வருவதும் தமிழ்ப் பண்பாடு, இக்காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்த பின்னரே பெண்களை மணம் முடித்துத் தருவது அன்றைய தமிழர் பண்பாடு என்கிறார்கள். இன்று தமிழ்ப் பண்பாட்டுக்காக இப்போது புலியை வேட்டையாடினால் மாமியார் வீட்டுக்குப் போகலாம். ஆனால் அந்த மாமியார் வீட்டிற்கு சிறைச்சாலை என்ற பெயர் உள்ளது. மாமியார் வீட்டிற்குப் போக தமிழ் மருமகன்கள் தயாரா?

jallikattu 404

அடுத்த படியாக ஜல்லிக்கட்டின் மூலம் தான் நாட்டு மாடுகளைக் காப்பாற்ற இயலும் என்ற இன்னொரு வாதம் விவசாயிகளின் சார்பில் வைக்கப்படுவதாக, விவசாயிகளின் பிரதிநிதிகளாக சிலர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு வாதம் வைக்கின்றனர். இதை எனது அனுபவத்தின் அடிப்படையில் பகுத்துப் பார்க்க விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எனது கிராமத்தில் வாழ்ந்திருக்கிறேன். விவசாயம் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தோடு நேரடித் தொடர்பு இல்லையெனினும் கிராமத்தோடு தொடர்பில் இருக்கிறேன்.

நான் அறிந்தவரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு, அதன்மூலம் நாட்டு மாடு காப்பாற்றப்பட்டு, அதன்மூலம் தன்னுடைய விவசாயம் செழிக்கும் என என் கிராமத்தில் உள்ள எந்த விவசாயியும் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாருமே விவசாயத்திற்கு நாட்டு மாட்டைத்தான் பயன்படுத்துவோம் என்ற வீண்பண்பாட்டு அல்லது மூட நம்பிக்கையை கடைபிடிக்கவில்லை. எது விவசாய வேலை மற்றும் செலவைக் குறைக்கிறதோ, அதைத்தான் விவசாயிகள் செய்து வருகின்றனர். அடையாளத்திற்காக முதல் விதையை அல்லது முதல் உழவை குறிப்பிட்ட திசையில் ஆரம்பிப்பது என்ற வகையில் மட்டுமே பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகின்றனர்.

விவசாயிகள் மீதும் வீண்பெருமையை, மூட நம்பிக்கையை, தேவையற்ற பண்பாட்டுப் பெருமையை திணிப்பவர்கள் தமிழின் பெயரால் இனவாதம் அல்லது மூட நம்பிக்கையை பேசுபவர்கள் தான். ஜல்லிக்கட்டை ஆதரிப்பது என்பது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய மூட நம்பிக்கையை தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் விவசாயிகளின் தலையில் ஏற்றாதீர்கள். அவர்கள் உங்களை விட முற்போக்கானவர்கள். அவர்களுக்கு தமிழ்ப்பண்பாடு தெரியாது மட்டுமல்ல, தேவையும் கிடையாது.

ஜல்லிக்கட்டை பண்பாடென மல்லுக்கட்டும் தோழர்கள் சற்று பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகிறேன். தமிழர்கள் மட்டுமல்ல உலகினர் அனைவரும் விலங்கோடு தான் வாழ்ந்து வந்தனர், இன்றும் கூட. அதன் காரணமாகவே பண்டைய பண்பாட்டு நடவடிக்கைகள் இன்று ஏற்புடையதாகாது. ஒரு எடுத்துக்காட்டை இப்போது பார்ப்போம். மாடு வைத்து உழும் போது மரத்திலான ஏர்க்கலப்பை பயன்படுத்தினோம். அதனோடே உணர்வுப்பூர்வமாக ஒன்றியிருந்தோம். இன்று டிராக்டர்களின் வருகைக்குப்பின் இரும்புக் கலப்பைகளையே பயன்படுத்துகிறார்கள். பழைய மாட்டுக்கலப்பையை இன்று எந்த கிராமத்திலும் காண இயலாது. மர ஏர்க்கலப்பைக்குப் பூஜை அல்லது மரியாதை செய்வதை பண்பாட்டு நடைமுறையாக வைத்திருந்தவர்கள் இன்று இரும்புக் கலப்பையைக் கொண்டாடும் நடைமுறைப் பண்பாட்டிற்கு வந்துவிட்டார்கள். நாளை இதைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் வருமெனில் அதையும் யதார்த்த விவசாயிகள் உடனடியாக கைக்கொள்வார்கள்.

ஆனால் இனப் பண்பாட்டு பெருமை பேசும் நீங்கள், பாமரப் பகுத்தறிவோடு இருக்கும் விவசாயிகளையும் பின்னோக்கி இழுக்கும் செயலை அப்போதும் இனப்பெருமை என்ற பெயரில் செய்து கொண்டிருப்பீர்கள். இந்த வீண் பெருமையைத்தான் இப்போதும் நீங்கள் பேசி, உங்கள் ஆசையை, பிற்போக்குத்தனத்தை விவசாயிகளின் மீதும், விலங்குகளின் மீதும் திணிக்கும் வேலையைச் செய்து வருகிறீர்கள்.

ஜல்லிக்கட்டை பெரியாரியவாதிகள், பகுத்தறிவாளர்கள் தக்க காரணங்களோடு, ஆதாரங்களோடு மறுத்து தெளிவான விளக்கங்களை பலமுறை அளித்துள்ளனர்.

இதையும் மீறி பண்பாடு என்ற பெயரில் ஜல்லிக்கட்டிற்காக மல்லுக்கட்டுபவர்கள் மூடநம்பிக்கையாளர்கள் அல்லது இனவாதிகளாகத்தான் இருக்க முடியும்.

- சு.விஜயபாஸ்கர்