நாணயத்தின் இரு பக்கங்கள் போல தான் பொங்கலும், ஜல்லிக்கட்டும். ஜல்லிக்கட்டு, தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. வழிவழியாக தமிழர்கள் வாழ்வியலோடு பிணைந்த பண்பாடு ஜல்லிக்கட்டு என்பது தமிழர்கள் நம்பிக்கை.

jallikattu 315ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 ஜனவரி பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து, தீர்ப்பு வழங்குகிறது. அந்தத் தீர்ப்பில், “ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை”, “அதே நேரத்தில் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்த எந்தத் தடையுமில்லை” என்றும் கூறுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் “ரேக்ளா பந்தயத்தை மட்டும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?” என்று யாரும் கேட்கவில்லை.

விலங்குகள் நல வாரியம் நடிகை ஹேமமாலினி மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மத்திய அரசு மூலம் 2011 ஜூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பிக்கிறார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" யும் புதிதாகச் சேர்க்கிறார். இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆகிறது.

ஆண்டுதோறும் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பாளர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். எந்தக் குறையும் கண்டறிய முடியவில்லை. விலங்குகள் நல வாரியம் 2014-ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் "காளையின் வாலைத் திருகுவது உள்ளிட்ட வதை செய்வதுபோன்ற புகைப்படங்களை" நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்தப் போட்டி மிருகவதைத் தடைச் சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க முடியுமா? என்று எதிர் கேள்வி கேட்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கிறது. இதற்கு தோதுவாக இந்த விஞ்ஞான காலத்திலும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது என்கிறார் மேனகா காந்தி. இதனால் 2015, 2016-ல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது தடைபெறுகிறது.

ஜீவகாருண்யம் அதிகம் பார்க்கும் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே ஜல்லிக்கட்டு விழாவைத் தடை செய்யவில்லை. அப்படியிருக்கும்போது இப்போது மட்டும் பிராணிகள் வதை செய்யப்படுவதாக சொல்வது, தமிழர்களுடைய அடையாளத்தை அளிக்கும் விஷயம்தான் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதற்காக நீதிமன்றத்துக்குப் போனவர்கள், இறைச்சிக் கடைகளை மூடச் சொல்லி போவார்களா? ஆடு, கோழி போன்றவைகள் உணவுக்காக அறுக்கப்படுவது பாவமில்லையா?

சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது. வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 400 லட்சம் கோடி. நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயைத் தடுக்கிறது. காளையை அழித்தால் அயல் விந்து ஊசி மூலம் நாட்டுப் பசுவை அழிக்கலாம், நாட்டு மாட்டில் ஆன்டிபயாட்டிக் என்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த மாடு போடும் சாணம்தான் உரமாகிறது. இந்த நாட்டு மாடு இருக்கும்வரை இயற்கை வேளாண்மையை விட்டு விவசாயி வெளியேற மாட்டான்.

ஜப்பானில் போடப்பட்டதற்கு இணையான அணுகுண்டு மூலப்பொருளில் இருந்துதான் பொட்டாசியம் சல்பேட் போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. டிராக்டர்களை விற்பனை செய்ய வசதியாக பல்லாயிரக்கணக்கான காளை மாடுகளை வெட்டிக் கொன்றனர். பூச்சிக் கொல்லி என்ற ஒன்று தேவையே இல்லை என்கிறார் நம்மாழ்வார். காடுகளில் உள்ள பனை மரங்களில் உள்ள வவ்வால்களே பூச்சிகளைக் கொன்று சாப்பிட்டுவிடும். எனவே பூச்சிக்கொல்லியே தேவையில்லை.

டிராக்டர் வந்த பிறகுதான் அடிமாடாக காளை மாடு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெர்சி பாலால், செரிமானக் கோளாறு, சிறு வயதில் பெண்கள் பூப்படைதல், மார்பகப் புற்றுநோய், சர்க்கரை நோய் உருவாகுகிறது. சர்க்கரை நோயாளிகளால் நமது நாடு நிரம்பிவிட்டது. இதற்கான, இன்சுலின் ஊசியாலும் பல கோடியை வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பாதித்துவிட்டது.

காளை வதை என்று கூறும் என்.ஜி.ஓக்கள், கேரளாவில் யானை அணி வகுப்புக்கும், ஹைதராபாத்தில் குதிரைப் பந்தையத்திற்கும், ராணுவத்தில் குதிரை, ஒட்டகம் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில், காளை மாட்டைப் போல அவை விவசாயிகளுக்கு உதவுவதில்லை.

காளையை சர்க்கசில் பயன்படுத்த மாட்டார்களே, ஏன் காட்சிபடுத்துதல் பட்டியலில் சேர்க்கிறீர்கள், ஏன் அதை வன விலங்கு என பட்டியலில் சேர்க்கிறீர்கள் என்று கூட்டணியில் இருந்த திமுக கேட்கவேயில்லை. இதனால்தான் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாமல் போனது.

PETA (People for the Ethical Treatment of Animals) போன்ற ‘விலங்குகள் நலன்’ என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பன ‘உயர்’ சாதி, மேட்டுக்குடியினராக இருப்பது எதேச்சையானதல்ல. இவர்கள் ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் முன்னிறுத்துவது சக மனிதர்கள் மீது கருணை காட்டாத, விலங்களின் மீது காட்டும் கருணை ‘ஜீவ காருண்யம்’ என்ற இத்துப்போன பார்ப்பனியக் கருத்தாக்கம் தான்.

இவர்கள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கான காரணம் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன, இன்னொரு காரணம், அனைத்து தேசிய இனங்களின் பண்பாட்டையும் அழித்து ஒற்றைப் பார்ப்பனிய இந்து மத அடையாளத்தைப் புகுத்துவதுதான். அதுவும் பார்ப்பனிய எதிர்ப்பிற்கு, சுயமரியாதை இயக்கத்திற்குப் புகழ்பெற்ற தமிழகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

பசுவிற்கு வலிக்கிறது என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம் என்று கேட்டால், பசுவிடமிருந்து 50 சதவீதம் அளவுக்கான பாலை மட்டும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றனவே என்கிறார்கள் நீதிபதிகள். காளைகளுக்குப் பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா என்று எகத்தாளம் பேசுகிறார்கள்.

உச்சநீதி மன்றத்துக்கு காளைகள் மீது திடீர்க் கரிசனை ஏன்? “இது காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு; இதனால் பலருக்குப் படுகாயங்களும் ஒரு சிலர் பலியாவதும் நடக்கிறது” என்று அது நியாயவாதம் பேசுகிறது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றால், அதைவிடக் காட்டுமிராண்டித்தனமான சாதியும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவதைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

- தங்க.சத்தியமூர்த்தி