முன்னுரை

    தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாய் உள்ளது,தமிழ் மக்களிடையே காணப்படும் ஒற்றுமை இல்லாமையே. இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது சாதி என்னும் கொடிய நஞ்சு.

     ‘’வன்மத்தின் கூர்மையோடே

     எவனோ செய்தான் –சாதியை’’[வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது, பக்கம்-74]

என்ற புதுக்கவிதை வரிகள் உணர்த்தும் வன்மத்தின் ஆணி வேராக விளங்கும் சாதி பற்றியும், அதனை ஒழிக்கும் வழியையும் முன்பே சிந்தித்தவர் பாவலரேறு.

சாதிய இழிவுகள்

      ‘’எப்படியேனும்இத் தமிழகத்தை

      முப்படி உயர்த்திடல் வேண்டும் –என்

மூச்சதற் குதவிடல் வேண்டும்’-  என்று தமிழுக்காகவும் தமிழர் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டவர் பாவலரேறு.

      ‘’சாதிப்புழுக்கள் நெளிந்திடும் ஓர்மொத்தை

      சாணித் திரளையாய் ‘’-வாழ்கிறார்களே என்று பெரிதும் கவலையுற்றவர். சாதி ஒழிப்புத் தொடர்பாக தென்மொழி,தமிழ்ச்சிட்டு,தமிழ்நிலம் –போன்ற இதழ்களில் எழுதியும்,பேசியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

      ‘’பள்ளேன்போம்;பறையென்போம்

           நாட்டா ரென்போம்

      பழிதன்னை யெண்ணாமல் வண்ணா

ரென்போம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எண்ணுங்கள்;நமைத் தமிழர்என்கின் றோமா?-என்ற பாடலின் மூலம் பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்று பிரிந்து கிடக்கின்றீரே –என்றாவது நாம் தமிழர் என்று சிந்தித்ததுண்டா ?

என்ற வினாவை முன் வைக்கிறார்.  

இந்த இழிநிலை மாறி, ஒற்றுமை எண்ணம் ஓங்கும் வரை,

கூசுங்கள் ;நாணுங்கள்;

        தமிழ்நாட் டாரே

என்று வெட்கி தலை குனிய வேண்டிய அவலத்தைச் சுட்டி சிந்திக்க வைக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும், சாதிய இழிவுகளும், சாதிய வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும், நடந்த வண்ணம் தான் உள்ளது. காதலித்து திருமணம் செய்துகொள்ள நினைக்கும் காதலர்களை கொன்றொழிப்பதற்குப் பெயர் ‘’சாதி ஆணவப் படுகொலை’’ [honour killing], இத்தகு சாதியம் பல வடிவங்களில் தீண்டாமையை வளர்க்கிறது.

     ‘’அறிவியல் யுகத்தின்

      வெவ்வேறு வடிவங்களாக

      தொடர்கிறது தீண்டாமை’’-[வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது -74 ]

என்ற புதுக்கவிதை வரிகள் உணர்த்துகின்றன.

அறிவிலும், பொருளாதாரத்திலும் திறமையிலும் முன்னேறி இருந்தாலும் இழிசாதியாகவே பார்க்கப் படுகின்ற கேவலத்தை அதிலிருக்கும் வலியை படம் பிடித்துக் காட்டுகிறது,

கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கவிதை வரிகள்

    ‘’மேடையை விட்டு

     நாமிருவரும் கீழிறங்குகிறோம்

     வரிசை தப்பி மக்கள் அலைகிறார்கள்

     நீ ஊருக்குள் போகிறாய்

     நான் சேரிக்குப் போகிறேன்’’.

சாதியொழிப்புத் திட்டங்கள்

‘’சாதி ஒழித்திடல் ஒன்று –நல்ல

     தமிழ் வளர்த்தல்மற் றொன்று

     பாதியை நாடு மறந்தால் –மற்ற

     பாதி துலங்குவ தில்லை, ’’[பாவேந்தர் பாடல்கள் ]-என்று சாதி ஒழிப்பைப் பற்றி பாவேந்தரும்,

சாதிநிலை வேரறுத்துச் சமயநிலை சீர்திருத்திச்

சமவுடைமைப் பொதுவுணர்வுக் கொள்கை செய்து

 வாழ்ந்தியடா தமிழா, நீ எனவாழ்த்துப் பாடுகின்ற

நாளொன்றை வரவழைப்போம் ;வருவீர் மக்காள் ‘’[பாவலரேறு ]

பல இன மக்கள் வாழ்கின்ற, பல மொழிகள் பேசுகின்ற பெரிய நாடாகிய இந்தியாவில் சாதிகள்,குளங்கள்,கோத்திரங்கள் இன்னும் என்னல்லாமோ சொல்லி சாதிய வன்மத்தால் வேற்றுமை பாராட்டி,இத்தேசம் இரத்தவாடை, பிணவாடை, மலவாடையென நாறித்தான் கிடக்கிறது.

இப்படி பல்வேறு காலக்கட்டங்களைக் கடந்தும் உருவமற்ற ஒன்று சாதி என்ற பெயரில் இன்றளவும் மக்களை கூறுபோட்டுக் கொண்டிருக்கும் சாதியின் வேர் கலையத்தான், அன்றே பாவலரேறு தீர்வுகளை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்.

உண்மையாகவே சாதி மக்களைப் பிடிக்கவில்லை, மக்கள் தாம் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் பிறகு,நன்கு புலனாய்ந்த ஒரு செயல்முறைத் திட்டம் உண்மையிலேயே செயல்பாட்டிற்கு வருமானால் நல்ல பயனைத்தரும்.

சாதியொழிப்புத் திட்டத்தை ஐந்து படிநிலையாக அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளார்.

1. புறநிலைச் சீராக்கங்கள் [முதல்நிலை ஐந்தாண்டு ]

*சாதிப் பெயர்களைத் தம் பெயர்களுடன் இணைத்து எழுதுவதற்குத் தடையிடுவது.

*சாதிப் பெயர்கள் இணைந்த வீட்டுப் பெயர்கள், கடைப் பெயர்கள், தெருப் பெயர்கள் சிற்றூர்ப் பெயர்கள் முதலியவற்றிற்கு தடையிட்டு அவற்றை மாற்றியமைப்பது.

*சமயத் தொடர்பான சாதி விழாக்கள், சாதித் தெய்வம் இவற்றிற்குத் தடையிடுவது.

*சாதிகள் தொடர்பான ஒட்டுமொத்த இணைப்பு முயற்சிகள் கூட்டங்கள், மாநாடுகள், சிறப்பு வெளியீடுகள் முதலியவற்றிற்குத் தடையிடுவது.

* பள்ளிக் கல்லூரிப் பதிவுகளில் சாதிப் பெயர்ப் பதிவுகளை நீக்கி, பின்வரும் திருத்த நிலைகளுக்கு ஏற்பக் குறியீடுகளை இடுவது இவற்றை முதல் ஐந்தாண்டுக்குள் செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும்.

*சலுகை முறைக் கல்வி,தொழில் ஈடுபாடுகளை முதல் ஐந்தாண்டில், அதை விரும்பி வேண்டுவோர் கருத்திற்கிணங்க இன்றுள்ள நிலைகளை அப்படியே தொடரச் செய்யலாம்

2. அகநிலைச் சீராக்கங்கள் [இரண்டாம் நிலை ஐந்தாண்டு]

கல்வி தொழில் முறை ஏற்பாடுகளில், மக்களைக் கீழ் வரும் நான்கு நிலைப் பொருள், இனப் பகுப்புகளாகப் பகுத்து முன்னேறுவதற்குரிய சலுகைகளைத் தருதல்

மிக முன்னேறியவர்கள் [மி மு ஏ]

சாதியாளும்,பொருளியலாலும் முன்னேறியவர்கள், இவர்களுக்கு வகைக்கு இரண்டிரண்டு கூடுதல் எண்களாக [2+2=4]கொடுத்தல் வேண்டும்.

முன்னேறியவர்கள் [மு ஏ]

சாதிப் பொருளியல் இவற்றுள் ஒன்றில் மேம்பட்டு நிற்பவர்கள் [+2]

*பின் தங்கியவர்கள் [பி த ]

சாதி, பொருளியல் –இவற்றில் ஏதாவது ஒன்றில் பின் தங்கி நிற்பவர்கள்[-2]

*மிகப் பின்தங்கியவர்கள் [மி பி த]

இவர்களுக்கு [-2-2=4]கொடுத்தல் வேண்டும்

*இந்த எண்கள் அடிப்படையில் அவர்களுக்குத் திட்டமிடப் பெற்று சலுகைகள் வழங்கலாம்.

* உதாரணமாக1* நலங்கிள்ளி [+4] 2* சேரலாதன்[+2]

3 *நெடுஞ்செழியன்[-4]4*இளங்குட்டுவன்[-2]

3. அகநிலைச் சீராக்கங்கள் [மூன்றாம் நிலை ஐந்தாண்டு ]

இரண்டாம் ஐந்தாண்டுப் பதிவு செய்தவர்களை மறு ஆய்வு செய்து, பிறரை புது முறையிலும், இருநிலை பொருள் இன மக்கள் பகுப்புகளாகப்பிரித்து, முன்பு போலவே எண்கள்குறியிட்டு முன்னேற்றச் சலுகைகள் வழங்குதல் வேண்டும்.

*மிக முன்னேறியோர் –[மி மு ஏ]

   *சாதி+பொருள் =+2

*மிகப் பின் தங்கியோர் –[மி பி த ]

   *சாதி+பொருள் =-2

4. அகநிலைச் சீராக்கங்கள் [நான்காம் நிலை பத்தாண்டு ]

    மூன்றாம் ஐந்தாண்டுப் பதிவாளர்களை, மறு ஆய்வு செய்து, புது முறையில், இருவகைப் பொருள் வகை. மக்கள் பகுப்புகளாகப் பிரித்து, முன்போலவே எண்களைக் குறித்து முன்னேற்றத் தருதல் வேண்டும்.

*அரசுதவி தவிர்த்தோர் [அ உ த ]

    *பொருள் நிலை மட்டும் –[+]

*அரசு உதவி பெறுவோர் [அ உ பெ]

    *பொருள் நிலை மட்டும் –[-]

 இச்சலுகைகள் வளர்ச்சியின் அடிப்படையில், தேவையெனில் தொடர்ந்து வழங்கலாம், தேவையில்லை எனில் நீக்கி விடலாம்.

இந்த திட்டங்கள் செயல்முறைப் படுத்தப்பட்டால் ஆண்டுகளுக்குள் சாதியுணர்வுகளும், பெயர்களுமே ஒழிந்து போய் விடும்.

முடிவுரை

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பேசி எழுதிப் போராடிய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திட்டங்களை செயல் வடிவத்துக்கு கொண்டு வந்திருந்தால், ஒருவேளை அவர் கூறியபடி ஒழிந்திருக்க வேண்டும். ஆனால்,இன்றும் சாதி அதன் கோரமுகத்தைக் காட்டிக்கொண்டிருப்பது.

நாம் அனைவருமே வெட்கப் படவேண்டிய விடயமாகும்.

ஆய்வு நூல்கள்

    *பாவலரேறு –சாதி ஒழிப்பு, தென்மொழி வெளியீடு

    * பாவேந்தர் –பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

    *சிவ. விஜயபாரதி, வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது, குயிலி பதிப்பகம்.

    *சுகிர்தராணி, இப்படிக்கு ஏவாள், காலச்சுவடு பதிப்பகம். 

- சிவ.விஜயபாரதி, முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதி), தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை