hardik amit

குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு நேர்ந்த கதி கண்டு ஆடிப் போயிருக்கிறது காவிகள் முகாம். நாடு முழுவதும் குஜராத்தைக் காட்டி பூச்சாண்டி காட்டியவர்கள், இன்று அந்த மாநிலமே தங்களுக்கு எதிராக திரண்டதைக் கண்டு உள்ளூர நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சான்றாக அண்மையில் அவர்களுக்கு அவமான அத்தியாயம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பட்டேல் சமூகத்தில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்வில் அக்கட்சிக்கு வரலாறு காணாத அவமானம் நடந்தேறியுள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தனது உரையைப் பாதியிலேயே முடித்து விட்டு ஓட்டம் பிடிக்கவேண்டிய நிலை.

படிதார் அனாமத் (?)அந்தோலன் சமிதி என்ற பட்டேல் இன சங்கக் கூட்டத்தில் குஜராத் மாநில புதிய முதல் அமைச்சர் விஜய் ரூபாணியும், அமித்ஷாவும் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறையினரும் துணை நிலை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். பாஜகவுக்கும் அமித்ஸாவுக்கும் எதிரான கோஷங்கள் பட்டேல் இன இளைஞர்களால் எழுப்பப்பட்டன. பாஜக எம்எல்ஏ நளின் கொட்டாடியா தலைமையில் 500 பாஜகவினர் கலந்து கொண்டனர். அவர்களை கூட்டத்தினர் சுற்றி வளைத்து கோஷம் இட்டனர். முற்றுகையில் சிக்கித் தவித்தனர்.

முதல் அமைச்சர் ரூபாணியும் அமித்ஷாவும் தம் தம் உரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு 'ஏ பசுபதி எடுறா வண்டியை' என்பதைப்போல சிட்டாகப் பறந்து விட்டனர். பட்டேல்கள் பாஜக வளர்ச்சிக்கும் குஜராத் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர் என்று அமித்ஷா தனது உரையைத் தொடங்கும் முன்னரே நாற்காலிகள் பறந்தன; சரமாரியாக உடைக்கப்பட்டன. ஜெய் சர்தார், ஜெய் பட்டிடார் என்ற கோஷங்களோடு மேடையை நோக்கி வரத் தொடங்கவே உரையை பாதியில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். அரசுப் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் தாக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மொபைல் இன்டர்நெட் சேவைகளை முடக்க சூரத் கலெக்டர் உத்திரவிட்டார்.

பாஜக அரசியல் வாழ்வின் அஸ்தமன ம் தொடங்கி விட்டது என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாஜகவின் வீழ்ச்சி அவர்களால் பெரிதும் புகழ்ந்து மார் தட்டிக்கொள்ளும் குஜராத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அதன் அடையாளமாகவே அமித்ஷா தனது உரையை பாதியில் விட்டு விட்டு ஓட்டம் பிடித்ததைச் சொல்கிறார்கள்

- அபூஸாலிஹ்