யானையை காட்டுக்குள் பார்த்திருக்கிறீர்களா....அதன் கம்பீரத்தை அதன் இடத்தில் பார்க்கையில்... அது ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். யானைகள்... காட்டின் குறியிடுகள்... ஒரு வாரமாகவே யானை பற்றிய சிந்தனை வந்து கொண்டே இருக்கிறது... எனக்கு யானையுடனான அனுதாபவம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதன் காதின் அசைவுக்குள் இருக்கும்.. தீரா யோசனையின் விளிம்பில் ஒரு மலை மீது நடக்கும் சிறுவனின் குதூகலத்தோடு யானையை நெருங்குகிறேன்...

10 வருடங்களுக்கு முன்...

என் நண்பனின் அக்கா பொண்ணு. 5 வயதிருக்கும்.... ஒவ்வொரு மிருகமும் எப்படி கத்தும் என்று சொல்லிக் கொண்டே வந்தவள் யானை என்று வந்ததும் பட்டென நிறுத்தி விட்டாள். நானும் நண்பனும் அவளை சற்று கூர்மையாகவே நோக்கினோம்.. கண நேர யோசனைக்குப் பின்....

"யா........ன........ன்ன்ன்ன்ன்ன்ன்னு கத்தும்" என்று முடித்துக் கொண்டாள். இன்றும் சிரிக்க வைக்கும் சம்பவம் அது.

elephant 620

ஒரு பதினையானது வருடங்களுக்கு முன்...

ஆனைமலை காடு...

ஒரு கூட்டம் மிளகு திருடப் போகிறது. இரவுதான் உலகம் போல அத்தனை இருட்டு. டார்ச் வெளிச்சத்தில் அந்த குழு...மெல்ல மெல்ல நகர்கிறது. திடும்மென கூட்டம் சிதறுகிறது... சத்தமும் போட முடியாது. மிளகு விஷயம் வெளிய தெரிந்து விடும். கூட்டம் கால் போன திசையில் சிதறி ஓடுகிறது. அதில் ஒருவன்.. ஓடிய வேகத்தில் ஒரு மரத்தில் வேகமாக முட்டி மனநிலை பிறழ்ந்து 5 வருடங்களுக்கு முன் செத்துப் போனான். அவன் சாகும் வரை எதைப் பார்த்தாலும் "யானை.... யானை" என்றே சொல்லிக் கொண்டு திரிந்தான்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த இரவில் அங்கு யானை வரவே இல்லை. மரத்தைப் பார்த்து யானை என்று பயந்து ஓடி இருக்கிறார்கள்.

மிளகின் சாபம் என்பது பொதுக் கருத்து.

ஒரு 4 வருடங்களுக்கு முன் இன்னும் இரண்டு சம்பவம்.

சம்பவம் ஒன்று.

காட்டுக்குள் செல்ல நடந்து கொண்டிருக்கிறான்.

"டேய் ஆறுமுகம்... அண்ணாச்சிங்க வந்திருக்காங்க... உள்ள போகாத" என்று இதுவரை நால்வர் வழியெங்கும் சொல்லி விட்டார்கள்... (யானைக்கு செல்ல பெயர் அண்ணாச்சி )

"இதே ஊர்ல பொறந்து வளந்தவன் நான்... என்கிட்ட இந்த யானை பாச்சால்லாம் பலிக்காதுண்ணே... பார்த்துருவோம்" என்றபடியே காட்டுக்குள் போனான் ஆறுமுகம். வெகு நேரம் ஆகியும் அவன் திரும்பவில்லை. ஊர் மக்களுக்கு சந்தேகம் வலுத்தது. தீ பந்தம் பற்ற வைத்துக் கொண்டு காட்டுக்குள் சப்தமிட்டுக் கொண்டே தகரம் வைத்து அடித்துக் கொண்டே செல்ல ஒரு புதருக்குள் மயங்கிய நிலையில் காணக் கிடைத்தான் ஆறுமுகம். அவன் கால் ஒடிந்திருந்தது.

அவனை தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதன் பின் அவன் பிழைத்துக் கொண்டான். ஆனால் இன்னமும் கால் கொஞ்சம் ஊனமாகத்தான் இருக்கிறது.

நடந்த கதையை அவனே இப்போது கதை கதையாக விவரித்துக் கொண்டிருக்கிறான்.

அன்று நேராக யானையின் தும்பிக்கைக்கே சென்று அகப்பட்டுக் கொள்ள.. அது அவனை பிடிக்க முயல அதற்குள் சுதாரித்துக் கொண்டவன் அருகே இருந்த தேயிலை புதருக்குள் விழுந்து நகர்ந்து நகர்ந்து பின்னால் மண் குகை போல முட்டும் அளவுக்கு சென்று விட்டான். யானையால் குனிந்து அந்த புதருக்குள் வர முடியவில்லை. மூன்றடிக்கும் குறைவான உயரத்தில் வேர்களால் சூழப்பட்டு இறுகி கிடந்த புதருக்குள் தும்பிக்கையை மட்டும் உள்ளே நீட்டி நீட்டி அவனை வெளியே இழுத்து போட முயற்சித்திருக்கிறது. ஆனால் அவன் ஒரு இன்ச் இடைவெளியில் தும்பிக்கைக்கு மாட்டாமல் பின்னால் பயந்து அழுது புலம்பி... மரண பயத்தில் கிட்டத்தட்ட ஜன்னி வரும் நிலையில் கிடந்திருக்கின்றான்.

அப்போது அவனின் வலது கால் ஒரு தடிமனான வேருக்குள் மாட்ட...பயத்தில் காலை பின்னால் இழுப்பதற்காக மேல் நோக்கி வேக வேகமாய் எடுக்க முயற்சித்ததில் கால் உடைந்து நொறுங்கி அதன் பிறகு மயங்கி இருக்கிறான்.

இதிலும் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால் காலை சற்று கீழ் நோக்கி அழுத்தி பின்னோக்கி இழுத்திருந்தால் சுலபமாக எடுத்திருக்கலாம்.

யானை.... அவனுள் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது இன்றும்.

சம்பவம் இரண்டு

"i have a licenced gun yaa....no problem."

அந்த மேனேஜர் புல்லட்டில் சீறி பாய்ந்தார். இரவு ஒரு 7 மணி இருக்கும்.. புல்லட்டின் முகப்பு வெளிச்சம் காட்டையே விலக்கிக் கொண்டு போனது. புல்லட் சப்தம்... காட்டையே அதிர வைத்துக் கொண்டு போனது.

ஒரு வளைவு தாண்டி நிமிரும் நொடியில் எதிரே ஒரு பாறை நகர்ந்து வருவதை போல வந்திருக்கிறது.. சற்று பெரிய யானைதான் என்று பின்பு அவர் கூறினார். யானையை அத்தனை கிட்டத்தில் அதுவும் முகப்பு வெளிச்சம் மட்டுமே இருக்கும் சூழலில் பார்க்க கை தானாக ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கி விட, புல்லட்டை யானை மீதே அடித்து கீழே விழுந்து விட்டார். எதுவோ வந்து மோதியதில் மிராண்ட யானை பயங்கரமாக பிளிறிக் கொண்டு கீழே கிடந்த அவரை முட்டுவதற்கு தரையில் தலையை வைத்து அங்கும் இங்கும் ஆட்ட....அதன் இடைவெளியில் செய்வதறியாது கையை ஆட்டி ஆட்டி யானையோடு சண்டையிட முயற்சிக்க......

கை சரியாக யானையின் வாய்க்குள் மாட்ட நாக்கைத் பிடித்துக் கொண்டார். என்னதான் யானையாக இருந்தாலும் ஒரு 80 கிலோ பாரம் இருக்கும் மனிதனின் எடையை தன் நாக்கால் தாங்க சற்று தடுமாறிப் போனது. வலியில் யானை தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி தப்பிக்க முயற்சிக்க...... இதுதான் வழி என்று நாக்கை இன்னும் பலம் கொண்டு இறுக்கி பிடித்து தூரி ஆடுவது போல ஆட.. ஒரு கட்டத்தில் யானை வேகமாய் அவரை நாக்கோடு வழுக்கிக் கொண்டு இடப்பக்கம் தூக்கி போட்டு விட்டு காட்டுக்குள் கத்திக் கொண்டே ஓடி மறைந்தது. அதன் பின் ஆறு மாத சிகிச்சைக்குப் பின் மாற்றம் வாங்கிக் கொண்டு அவர் ஊருக்கே போய் விட்டார். இன்னமும் ஊருக்குள் இந்தக் கதையை சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யானை.... பலம் கொண்ட மிருகம். அது பயணித்துக் கொண்டே இருக்கும் குணம் கொண்டவை. காடுகளை அழித்துக் கொண்டே நாம் போனால் அவை குழம்பி வழி மாறி ஊருக்குள் வரத்தான் செய்யும். யானைகள் காடுகளின் அழகு. அதைக் கண்டு நாம் ஒதுங்கிச் சென்றால் நம்மைக் கண்டு அவைகள் ஒதுங்கிச் சென்று விடும். சுற்றுலாவாசிகள் நிறைய பேருக்கு யானைகளை பற்றி பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை... காடு மலை என்று ட்ரெக்கிங் செல்பவர்கள் "நாங்க யானை பாக்க போறோம்" என்று தனியாகவோ கூட்டாகவோ காட்டுக்குள் போவது நல்லதல்ல. யானை நாம் நினைப்பது போல... கோவிலில் பிச்சையெடுக்கும் அவல நிலையில் இல்லை. அது ஒரு பிரம்மாண்டம். காட்டுக்குள் கம்பீரத்தோடு அவைகள் நடக்கையில்... மிரட்சி தானாக வந்து விடும். குட்டி யானைக்கு காவல் காப்பது இயற்கையின் அதிசயம்.

யானையின் தீனியும்.. தாகமும் பெரியது. அதற்கு நாட்டுக்குள் பற்றாது. காட்டுக்குள் மட்டும் நாம் போகாமல் இருந்தால் போதும். மற்றவை அது பார்த்துக் கொள்ளும். மரத்தை வெட்டாமல் நாம் இருந்தால் போதும். நீரை அது பார்த்துக் கொள்ளும். குடித்து விட்டு போத்தல்களில் உடைத்தலை காட்டுக்குள் செய்யாமல் இருந்தால் போதும். அது தன் உயிரைக் காத்துக் கொள்ளும்.

வேலந்தாவளம் மலை அடி வாரத்தில் இருக்கும் புதுப்பதி என்றொரு கிராமத்தில் ஒரு பாட்டி ஒரு முறை சொன்னாள். ரயிலில் அடிபட்டு இறந்த யானை ஒன்று இன்றும் பேயாக சுற்றிக் கொண்டிருக்கிறது என்று.

ஆன்மா பொதுவானது.

"தானென்று கத்துவதில்
யானையாகிறது
பலம்...."

- கவிஜி