muslim children

கல்வியறிவு குறைந்தவர்களாக 43 சதவீத முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் நாட்டில் சமூக நலன் நாடும் நடுநிலையாளர்களை கவலையுற செய்துள்ளது. வெறும் 57 சதவீத முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.

ஜெயினர்கள் 86 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றுள்ளனர். சமய அடிப்படையில் இவர்களே அதிகமானோர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7 வயதிற்கு மேற்பட்டோர் கல்வி அறிவு பெறாதோர் வெறும் 13.5 சதவீதத்தினர் மட்டுமே. இது ஜெயின் சமயத்தினரின் கல்வி நிலை. ஆனால் முஸ்லீம் சமூகத்தினர் 42.72 சதவீதத்தினர் கல்வி அறிவு குறைந்தவர்களாக உள்ளனர். ஹிந்துக்கள் 36.40, சீக்கியர்கள் 32.49, பவுத்தர்கள் 28.7 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் 25.66 கல்வி அறிவு அற்றவர்கள் சதவீதம் என்ற நிலையில் முஸ்லீம் சமூகத்தினரின் நிலை மிக மிக கவலைக்குரிய நிலை என்பதில் ஐயமில்லை.

பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி கற்றோர் விகிதத்தில் ஜைனர்கள் முதலிடத்தில் உள்ளனர் 25.65 சதவீதத்தினர் கிறிஸ்த்தவர்கள் 8.85 சதவீதத்தினர், சீக்கியர்கள் 6.40, பவுத்தர்கள் 6.18 சதவீதத்தினர், ஹிந்துக்கள் 5.98 சதவீதத்தினர் உயர் கல்வி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள், ஆனால் இந்த சர்வேயில் முஸ்லிம்களின் சதவீதம் எவ்வளவு தெரியுமா ? வெறும் 2.76 சதவீதம் மட்டுமே. மத சமூக, பொருளாதார நிலையில் மட்டுமல்ல கல்வி நிலையிலும் முஸ்லிம்கள் மிக பரிதாபகர நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்விநிலையையும் அண்மைய நிலையையும் நோக்கும்போது 2001 முதல் 2011 வரை ஒப்பு நோக்கும்போது ஹிந்துக்களின் கல்வி விகிதம் 54.92 சதவீதம் முதல் 63.60 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. கிறிஸ்த்தவர்களை பொறுத்தவரை 69.45 முதல் 74.34 வரை மேம்பட்டுள்ளது. சீக்கியர்களின் கல்வி அறிவு பெற்றவர்களின் வளர்ச்சி விகிதம் 60.56 முதல் 67.51 சதவீதமாகவும் பவுத்தர்கள் கல்வி அறிவு பெற்றவர்களின் நிலை 62.16 என்ற விகிதத்தில் இருக்கும் நிலையில் முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றவர்களின் நிலை 48.05 முதல் 57.28 வரை மட்டுமே.

முஸ்லிம்களில் பட்டம் மற்றும் தொழில் கல்வி பெற்றவர்களின் விவரம்:

முஸ்லிம்களில் 2,76 சதவீதம் மட்டுமே பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் செல்கிறார்கள். 0. 44 சதா வீதத்தினர்.தொழில் கல்வி மற்றும் தொழில் கல்வி பட்டய படிப்பினை படித்தவர்கள்.. மேல்நிலை கல்வி வரை 4.44 சதவீதத்தினர், மட்டுமே முஸ்லிம்கள் கற்கின்றனர். உயர் நிலை கல்வியில், 6.33 சதவீதமும் நடுநிலை பள்ளி லெவலில் 9.73 சதவீதமும் ஆரம்பக்கல்வியில் 16.08 சதவீதமும் ஆரம்ப கல்விக்கும் கீழே 14.32 ம் உள்ளது.

ஆரம்பக்கல்விக்கும் கீழான நிலையில் ஹிந்துக்கள் 11.83 சதவீதத்தினரும், பிரைமரி நிலையில் 15.11 என்ற நிலையில் கல்வி விகிதம் உள்ளது. நடுநிலை பள்ளி நிலையில் 11.27 சதவீதமும் மெட்ரிகுலேஷனில் 9 சதவீதமும் மேல் நிலை பள்ளியில் 6.62 சதவீதமும் உள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

உயர்கல்வியில் முஸ்லிம்கள் குறைந்த அளவே சேர்க்கின்றனர். தலித் மற்றும் தலித் பழங்குடியின மக்களை விட முஸ்லிம்களின் நிலை மோசமாகவே உள்ளது.

2010ம் ஆண்டின் இறுதியில் முஸ்லிம்களில் உயர் கற்றோர் விகிதம் 5.2 சதவீதத்தில் இருந்து 13. 8 சதவீதமாக உள்ளது. இது தேசிய அளவான 23.6 மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் விகிதமான 22.1 மற்றும் தலித் மக்களின் சதவீதமான 18.5 சதவீதத்தில் இருந்து எத்துணை குறைவாக உள்ளது என்பதை பார்த்தீர்கள்.

உயர்கல்வி சேரும் முஸ்லீம் மாணவர்கள் எண்ணிக்கை (18 ல் இருந்து 23 வயது வரை உள்ளவர்கள் ) மிக வரும் குறைவு.

2014-2015 ஆண்டின் ஆல் இந்தியா சர்வே ஆன் எஜுகேஷன் ரிப்போர்ட் குறிப்பிட்டுள்ள படி மக்கள் தொகையில் 14 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் முஸ்லிம்கள் உயர் கல்வியில் 4.4 சதவீதம் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாகவே நிலைமை இவ்வாறு இருப்பதாக நீதிபதி சாச்சாரின்அறிக்கை கூறியதை இங்கு நினைவு கூர்க.

20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட தலித் மற்றும் பழங்குடி மக்கள் இந்த அரை நூற்றாண்டு காலகட்டத்தில் கல்வி மேம்பாட்டில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் முஸ்லீம் சமூகம் கடந்த 50 ஆண்டு காலகட்டத்தில் இரண்டு மடங்கு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் படி முஸ்லிம்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 6.84 முதல் 13. 8 என்ற அளவில் காட்டப்படும் அளவு அகில இந்திய அளவைவிட குறைவானதாகும்

தலித் சமூகம் 147 சதவீதமும்,, தலித் பழங்குடி சமூகம் 96 சதவீதமும் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து விதத்திலும் பின்தங்கி இருக்கும் முஸ்லீம் சமூகத்தை கை தூக்கிவிட எத்தகைய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தேசிய அளவில் வழங்கப்படவேண்டும். கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை அதிகரிக்க சமூக மற்றும் கல்வி நிலையங்களில் பின்தங்கிய நிலையை கணக்கில் வைத்து சட்டத்தை திருத்து சம வாய்ப்பு வழங்கு என கேட்டுக்கொள்வோம்.

விடுதலைப்போராட்ட செரு களத்தில் காந்தியார் கேட்டுக்கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக கல்வியை துறந்து கல்லூரிகளை விட்டு வெளியேறி (கண்ணியத்திரு காயிதே மில்லத் உட்பட) லட்சக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் குதித்தனர். அத்தகைய உடனடி சர்வ தியாகத்திற்கும் தயாரான ஒரு திரு சமூகத்திற்கு கல்வி நிலையில் இத்தகைய பின்னடைவு என்றால் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவர் இதயத்திலும் நிச்சயம் ரத்தம் கசியும். முஸ்லிம்களுக்கு முறையான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் கேரளா மற்றும் கர்நாடகாவில் முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு மூன்று மடங்கு எழுச்சி பெற்றுள்ள நிலையில் முழுமையான முறையான இட ஒதுக்கீடு மத்திய மாநில அளவில் செயற்படுத்தப்படவேண்டும் ( தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்); அதிகரிக்கப்பட வேண்டும்.