தொட்டு பார்த்தாலும் ஷாக் அடிக்காத பட்டதாரிகளை சமீப காலமாக பார்த்து வருகிறேன்.... அது ஆளில்லாத காட்டுக்குள் கண்ணையும் காதையும் பிடுங்கி விட்டு மூளைக்குள் ரத்தம் கசியும் பின்னிரவு.... சர்ப்பமென ஊர்ந்து கொண்டே இருக்கிறது. வேலை இல்லாத காலத்தில் வேலையைப் பற்றிய பயம் ஒரு போதும் இருந்ததில்லை. வேலை இருக்கும் இந்த நாட்களில்.... அது பற்றிய பயம்... திக் திக் திடுக் திருப்பங்களை அள்ளி அள்ளி வீசுகிறது.

unemploymentஇந்த உலகில் வாழ்ந்து கிடக்க அத்தியாவசியங்கள் அவசியமாகின்றன. அவைகளை எடுத்துக் கொள்ள அதற்கு தகுந்த, ஈடு செய்கின்ற உழைப்பை போட வேண்டி இருக்கிறது. உழைப்பின் நிறம் மாறிக் கொண்டே இருப்பதில்... மானுட நியதிகளும்.....மனித தகுதிகளும் அங்கே காணாமல் போய்க் கொண்டே இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அது, இருக்கிறது என்பதாலேயே தோற்றமாகவும் இருக்கிறது என்று நம்பிக் கொள்ளலாம். நம்பாத தன்மைகளை கொண்டே நம்பிக்கைகளும் கட்டமைக்கப்படுகின்றன என்பதுதான் வாதத்தின் பிரதி.

மனித வள மேலாளரின் மனம் என்னைப் போல இத்தனை மென்மையாக இருக்கக் கூடாதோ என்னவோ...? வேலை தேடி வருகிற பி இ பட்டதாரிகளை கண் கொண்டு காணமுடியவில்லை. அவன் கதறும் மௌனத்தில் உளி செதுக்கும் உச்சக் காயங்களோடு தான் எதிர் இருக்கையில் ஒரு ஜாம்பவானைப் போல அமர்ந்திருக்கிறேன். மனம் கொண்டு உணர முடியும்... எல்லா தவிப்புகளின் தாரகத்தையும் ஒரு சேர கொண்டு எனது எதிர் தன்மைக்குள் என்னையே தேட வைக்கிறது சம்பாசனைகள். தொலைந்து கொண்டேயிருப்பது என்னவோ அவர்கள் தான் என்ற முடிவில் முகம் பார்க்காத ரிஜெக்ட் வெளிப்படுகிறது.

ஆங்கிலமும் முழுதாக தெரியாத தமிழும் முழுதாக தெரியாத ஒரு கூட்டத்தை தினம் தினம் எதிர் கொள்கிறேன்.  ஒன்றும் புரியாத, படிப்பின் ஆழம் தெரியாத... உலகின் கண்கள் அறியாத ஒரு கூட்டம், என்ன படித்தோம், ஏன் படித்தோம், எதற்கு படித்தோம் என்றும் தெரியாமல்.. எதோ வேலை வேண்டும் என்று 7500 ரூபாய்க்கு வரிசையில் வந்து நிற்கும் கோரக் காட்சிகளை... கண்டு விட்ட பிறகு... கண்டிப்பாக நெஞ்சை நிமிர்த்தி என்னால் கூற முடியவில்லை.. நாம் வல்லரசாகிக்  கொண்டிருக்கிறோம் என்று. வளர்ந்து வரும் நாடு என்று முழுதாக ஒப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி ஒப்புக்கொள்ளுதல் சீனாவை போரில் வென்று விடுவோம் என்று நம்புவது போல ஆகி விடும். உண்மையை ஒத்துக்க கொள். பொய்மை விலகி விடும் என்பது என் தத்துவம்.

தரமில்லாத படிப்பையும்.. தரமில்லாத வாழ்க்கை சூழலையும்தான் இப்போது வித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாதி ஆணி கொண்டு அடித்துக் கூற முடியும்.. மீதியை விலக்குகள் கொண்டிருக்கலாம். வீடு முன்னேறாமல் நாடு எப்படி முன்னேறும். நாடு முன்னேறாமல் ஏற்றுமதி எப்படி பெருகும். ஏற்றுமதி இல்லாமல் அந்நிய செலாவணி எப்படி உள்ளே வரும். அது இல்லாமல் பண்டமாற்று எங்கனம் நடைபெறும். ஆக பட்டை தீட்டப் படும் மூளையின் சதவிகிதம் குறைந்து  விட்டதோ என்று அச்சம் ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பி இ பட்டதாரிகள் வேலைக்காக தங்களின் பயோடேட்டாவைக் கொடுத்து விட்டு போகிறார்கள்.. யாரோ ஒருவர் அடித்த பார்மாட் அது. எதன் தொடர்ச்சியென, கட் பேஸ்ட்டில் ஒன்றுமில்லாத சக்கையாக இருக்கிறது நம் கல்வியின் தகுதி. உலகிலேயே கல்வியின் தரத்தில் முதல் தரத்தில் இருக்கும் பின்லாந்தில் 7 வயதில்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். நாம் தாம் 2 வயதிலேயே அனுப்பி.... ஒன்றுக்கும் ஆகாத மனப்பாட மக்குகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவு.... விண்ணப்பங்கள் கூட பூர்த்தி செய்ய தெரியாத பட்டதாரிகள் வரிசையில் நிற்கிறார்கள்.

நிறுவனங்களும் கூலிக்கு ஆள் எடுப்பதைப் போல அடிமாட்டு விலைக்கு எடுத்து மாங்கு மாங்கென வேலை வாங்கி மீண்டும் அந்தக் சக்கையை பிழிகையில் சுயம் இழந்து, தனக்கான சூழல் இழந்து அவமானமும்.. சுய கழிவிரக்கமும் மேலோங்க ஒரு கட்டத்தில் வேலையை விட்டு வெளியேறி மீண்டும் வேறொரு நிறுவன வாசலில் அதே வரிசையில் நிற்கிறான், ஒரு நாயைப் போல பசித்த கோபத்தின் இயலாமையோடு. அதன் நீட்சி வெறுப்பின் துரத்தல்களில் சிக்கி அவனை அவன் இயல்பிலிருந்து தனித்திருக்க வைக்கிறது. கோபத்தின் சாபத்தில் அவன் உழன்று ஒன்றுமில்லாமல் போய்விடுவதுதான் அவனுக்கு இந்த சமூகம் தரும் படித்ததற்கான சான்று. 

எங்கே ஒளிந்து கொண்டன நம் நாட்டின் திட்டங்கள். படித்தவனுக்கு தகுந்த வேலை இல்லை.. படித்த படிப்பை விட்டு விட்டு செய்யும் வேலையில் வீட்டின் வறுமை மட்டுமே இருக்க அவன் சிறகை அவனாகவே உடைத்துக் கொண்டு மூளையில் கணிப்பொறியை மாட்டிக் கொண்டு இரவெது பகலேது என்று தெரியாமல் தட்டிக் கொண்டே இருக்கிறான். அவன் வண்ணக் கதவுகள் திறப்பதே இல்லை. வேலை செய்வது வாழ்வதற்கு. இங்கு என்ன நடக்கிறது...? வாழ்வதே வேலை செய்வதற்கு என்று மாற்றி விட்ட முதலாளித்துவம்... மீண்டும் மீண்டும் கோலோச்சுவதுதான் பொறுத்துக் கொள்ள முடியாத தனி மனித கோபமாக எழுகிறது. 

எனக்கு அரசியல் புரியத் துவங்கிய காலத்தில் இருந்து ஒரு நல்ல அரசியல் நம்மை சூழவில்லை. சூழ நாம் விடவில்லை. மாற்றி மாற்றி சுயநலம் கொண்ட அரசாங்கமே அமைந்து விடுகிறது. அமைத்து விடுகிறோம். ஆசை இருந்தவரை வயிறு நிறைந்தது. பேராசை ஆன பின் மனது நிறையவே   இல்லை. அதன் வெளிப்பாடு.....திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள். கந்துவட்டிக்காரன் முதல் கள்ளக்கடத்தல் செய்பவன் வரை கல்லூரி கட்டுகிறான். அங்கு வேலை செய்யும்... ஆசிரியர்களும் பெரும்பாலும்... கொத்தடிமைகள்தான். எல்லா பணமும் ஒரு பக்கமே குவிந்து, வீங்கி விடும்.. வீக்கத்தின் வலி இது. சமதளத்தில் இயங்காதவரை பூமியின் அச்சு சாய்ந்தேதான் இருக்கும்..  

திரை அரங்குக்குள் உட்கார இடமே இல்லை.. ஆனால் டிக்கட் கொடுத்து உள்ளே அனுப்பிக் கொண்டேயிருப்பது எத்தனை முட்டாள்தனம். அப்படித்தான் இருக்கிறது... இன்றைய படிப்பு சூழல். படித்த சூழல்.  ரசனைகளற்ற ரசிப்புத்தன்மையற்ற, குற்ற உணர்ச்சிகளின் சாயங்களோடுதான் இன்றைய பட்டதாரி தனக்கான இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. கேட்டால் ஓடுகிற குதிரைதான் இன்றைய உலகமயமாக்கலுக்கு சரி என்று உலகத் தத்துவம் சொல்கிறோம். உலகத் தத்துவம்... வாழ்ந்து கிடப்பது. வாழ விட்டு காண்பது. இரண்டுமே இப்போது இல்லை என்று தோன்றுகிறது. பாரதியின் தோற்ற மயக்கத்தின் பின்புறமும் அதே மயக்கம் ஒட்டிக் கொண்டு இருப்பது எத்தகைய விதி? 

படிப்பவனுக்கும் புரிவதில்லை. அப்படிப்பை சொல்லித்தருபவனுக்கும் புரிவதில்லை. படிப்பதை திட்டமிடுபவனுக்கும் புரிவதில்லை. வேட்டை மனது மட்டும் வீடுதோறும் வீதிதோறும் விழித்துக் கொண்டேயிருக்கிறது. எல்லா புள்ளிகளும் இணைந்து மீண்டும் ஒரு பட்டதாரியை உருவாக்கி அவனை என்னை போல் ஒரு வேட்டைக்காரனிடம் அனுப்பி அவனை சம்பந்தமே இல்லாத கேள்விகள் கேட்டு..... அவனுக்கு தெரிந்ததையும் குறைத்து, வேலை இல்லை என்று திருப்பி அனுப்பி அல்லது வெறும் 7500 ரூபாய்க்கு கொத்தடிமையாய் அவனை உள்ளே இழுத்து போட்டு சாவடி அடிக்க வைக்கிறது நம் பொருளாதார தத்துவம்.

எதிலிருந்து எதை எடுத்தாலும் ஏதாவது மிஞ்சும். எதிலிருந்து உழைப்பை எடுத்தாலும் எதுவுமே மிஞ்சாது. இது வேலை தருபவனுக்கும் புரிவதில்லை... வேலைக்கு வருபவனுக்கும் புரிவதில்லை. புரியாத அச்சிலேயே வாழ்க்கை தொடருகிறது. உள்ளுக்குள் புகைந்து கொண்டே தன்  சுயத்தை சனி இரவுகளிலும் ஞாயிறு பகல்களிலும் குடித்து மீட்டெடுப்பதாக நம்புகிறான் காலச் சுழலில் சிக்கிக் கொண்ட மானுடன். 

SURVIVAL OF THE FITTEST...இதை அதிகார வர்க்கம் எடுத்துக் கொண்டு... HUMAN BEING IS A WANTING ANIMAL....இதை முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தள்ளி விட்டன நம் பொருளாதார கொள்கைகள்.

படித்தவன் மட்டுமல்ல. அதிகார வர்க்கமும் பாவம் செய்தால் அயோவென தான் போவான்.  இதோ வரிசையில் இன்றும் நிற்கும் பட்டதாரிகளின் கைகளில் கோப்பாய் இருப்பது அவன் வீட்டின் பசியாகக் கூட இருக்கலாம். நான் அயோவென போய்விடக் கூடாது.... 

-       கவிஜி