"எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்? எல்லோரும் வாழ! எப்படி வாழணும்? ஆடுமாடுகள் மாதிரி, உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழணும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே சாப்பாடு போடணும். அப்ப தான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை; முக்கியமான வேலையுங் கூட. இதை நான் ரொம்ப முக்கியமாக் கருதுகிறேன். அதனால், மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு, இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சையெடுக்க வருவதற்குத் தயாராக இருக்கிறேன்" - 1955ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து அப்போதைய முதல்வர் காமராஜர் சொன்ன வரிகள் தான் இவை.

school children 600'கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!' என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது தமிழ். பிச்சை எடுத்தாவது படித்து விடு, படிப்பை மட்டும் நிறுத்தி விடாதே என்பது இதன் அர்த்தம். பிச்சை எடுத்தாவது படி என்று சொன்ன நாட்டில் கல்விக் கடன் என்ற பெயரில் பிச்சை எடுத்தே படி என்னும் நிலை உருவாகியிருக்கிறது.

கார் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது முக்கியமா? கல்விக்குக் கடன் கொடுப்பது முக்கியமா? என்று கேட்டால் காருக்குக் கடன் கொடுப்பது தான் முக்கியம் என்று நினைக்கிறது அரசு. ஒவ்வொரு மாதமும் இத்தனை பேருக்குக் கார் கடன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கிறது அரசாங்கம். சராசரியாக 10 சதவீதத்திற்குக் கார் கடன் கொடுக்கப்படுகிறது. ஆனால் கல்விக் கடனுக்கோ 11 சதவீதத்திற்கு மேல் வட்டி, அதுவும் அந்தக் கிளையில், இந்த வங்கியில் என்ற அலைக்கழிப்புகளுக்குப் பிறகு! ஏழையின் படிப்பை விடப் பணக்காரனின் காருக்குக் கடன் கொடுப்பது அவசியத் தேவை போல!

சரி! கல்வியைத் தனியாரும் மதுவை அரசும் விற்கத் தொடங்கி விட்ட பிறகு என்ன நடக்கும் என்கிறீர்களா? சரி தான்! படிப்பு என்பதே பணம் சம்பாதிக்கத் தான் என்றாகி விட்ட பிறகு படிப்பதற்குப் பணம் செலவழித்தால் தான் என்ன தவறு என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். படிப்பையும் பணத்தையும் கோத்து விட்டால் என்ன நடக்கும்? கல்வி என்பது வியாபாரப் பொருளாக மாறும். கல்வியை வியாபாரப் பொருளாகப் பார்ப்பது மாணவர்கள் மத்தியில் என்ன விதமான விளைவுகளை உருவாக்கும்?

இருபது வயதிலேயே லட்சக் கணக்கில் கடன் சுமை:

+2இல் நல்ல மார்க் எடுத்து, கல்விக் கடன் வாங்கிப் பொறியியல் போன்ற படிப்புகளைப் படிக்கும் ஒரு மாணவன் படித்து முடிக்கும் போதே குறைந்தது நான்கு லட்ச ரூபாய் கடனாளியாகி விடுகிறான். நான்கு லட்ச ரூபாய்க் கடனை அடைக்க, படித்து முடித்தவுடன் நல்ல வேலை கிடைத்தாலே குறைந்தது நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும். பட்டப் படிப்பு முடித்த கையுடன்ன் இப்படி இளைஞர்கள் தலையில் கடன் சுமையை ஏற்றி வைத்தால் அவர்களுக்கு எந்த வழியிலாவது பணத்தைச் சேர்த்து விட வேண்டும் என்கிற எண்ணம் வருமா? இல்லை, பணம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, ஒழுக்கமாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் வருமா?

குருவித் தலையில் பனங்காயாக, லட்சக் கணக்கான கடனை இளைஞர்கள் தலையில் கட்டி விட்டு, அதன் பிறகு, ‘பிக் பாக்கெட் அடித்த பொறியியல் மாணவன்’, ‘வழிப்பறியில் ஈடுபட்ட சாப்ட்வேர் இஞ்சினியர்’ என்று செய்திகள் வரும் போது மட்டும் ‘உச்’ கொட்டினால் தவற்றுக்கு யார் எல்லாம் பொறுப்பு? மாணவர்களைப் பணத்தின் பின்னால் ஓட வைத்த சமூகமா? இந்தச் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? இல்லை தவறு செய்த மாணவர்கள் மட்டுமா?

அறிவாளிகளைத் தடுக்கும் கடன் சுமை:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் போன்று நாமும் அறிவியல் அறிஞராக வேண்டும் என்ற கனவோடு கல்லூரிக்கு வந்த எத்தனை மாணவர்கள் இந்தக் கல்விக் கடனால் குடும்பத்தின் கடனைச் சுமக்கும் பொதி மாடுகளாக மாறியிருப்பார்கள்?  வாழ்க்கை லட்சியம் ஒரு பக்கம், குடும்ப நெருக்கடி மறு பக்கம் எனச் சிதைந்து போன சிற்பங்களாக அல்லவா அவர்களுடைய வாழ்க்கை வளம் இல்லாமல் போயிருக்கும். இந்த வேதனை வலியோடு வலம் வரும் இளைஞர்கள் எத்தனையோ பேர்!

கல்வி வணிகம் - குற்றவாளிகளை உருவாக்கும்:

முன்பெல்லாம் ஆசிரியர் என்றால் மாணவர்கள் மத்தியில் மரியாதை இருக்கும். அந்த மரியாதை, ஆசிரியரைப் பிடிக்கிறதோ இல்லையோ, அவருடைய அறிவுரையைக் காது கொடுத்துக் கேட்க வைக்கும். இப்போது அப்படியா இருக்கிறது? ‘நான் காசு கட்டிப் படிக்கிறேன். எனக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை. அதை விடுத்து வீணாக அறிவுரைகளைச் சொல்லி நேரத்தை வீணடிக்காதே! இது என் வாழ்க்கை, இதை எப்படி வாழ வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று எகத்தாளமாக ஆசிரியர்களிடம் பேசும் மாணவர்கள் பிஞ்சிலேயே உருவாகத் தொடங்கி விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை வகுப்பிலேயே குத்திக் கொன்ற செய்தியெல்லாம் நமக்கு உணர்த்தும் பாடம் அது தானே! அதைப் பற்றி மதுரையைச் சேர்ந்த மன நல மருத்துவர் ராமசுப்பிரமணியம், “ஆசிரியர் – மாணவர் உறவு என்பது வியாபார நோக்குடைய உறவாகப் போய் விட்டது. ஓர் ஆசிரியர் இல்லை என்றால், இன்னோர் ஆசிரியர் மூலம் மார்க் வாங்கலாம். அதன் மூலம் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என மாணவர்கள் நினைக்கின்றனர்” என்று அப்போது சொன்ன கருத்துகள் இப்போதும் பொருத்தமாகத் தான் இருக்கின்றன.

கல்விக் கடன் தள்ளுபடி தீர்வாகுமா?

கல்விக் கடன் தள்ளுபடி என்பதே இலவசமாகக் கல்வியை அரசாங்கம் தரத் தயாராக இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்வது தான். இந்தியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி ஏறத்தாழ 9 லட்சம் கல்லூரி மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனுக்கு வட்டி மட்டுமே 2600 கோடியாகும். அதாவது, ஒரு மாணவனுக்கு அரசு கட்டிய வட்டி மட்டும் ஏறத்தாழ 29000 ரூபாயாகும். வட்டியே இவ்வளவு என்றால் மூலத் தொகையைக் கணக்கிட்டுப் பாருங்கள். இவ்வளவு பணம் புரளும் லாபம் கொழிக்கும் தொழிலாகக் கல்வித்துறை மாறி விட்டது. சேவையாக இருக்க வேண்டிய கல்வி, தொழிலாகவே இருக்கட்டும் என்று அரசு சொல்லாமல் சொல்வது தான் - கல்விக்கடன் தள்ளுபடி என்பது!

நாட்டை முன்னேற்றும் ஒரு சேவையைத் தொழிலாக மாற்றி விட்டால், தொழில் துறையில் இயல்பாக ஏற்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகக் கடைசியில் பாதிக்கப்படப் போவது ஏதுமறியாத அப்பாவி மாணவர்கள் தாம்! கல்வி நிறுவனங்களின் தொழில் போட்டியில் இளம் பிஞ்சுகளைக் கருக விட்டால் பிறகு நாட்டைக் காப்பாற்றும் நல்ல இளைஞர்கள் எங்கிருந்து வருவார்கள்? எனவே, கல்விக் கடன் தள்ளுபடி என்பது தற்காலிகமாகத் தீர்வு போலத் தோன்றினாலும் நீண்ட கால நோக்கில் பார்த்தால் அது விழலுக்கு இரைத்த நீர் தான்!

எனவே கல்வி என்பது அரசின் கையில் முழுமையாக இருக்க வேண்டும். வெறுமனே இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி கொடுப்பதோடு அரசின் கடமை முடிந்து விடுவதில்லை. முழுமையான இலவசக் கல்வியை, சாதி, மதம், ஏழை, பணக்காரர் வேறுபாடின்றிக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு நழுவினால் இளைஞர்கள் பாதை மாறுவதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விடும்.

(புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூலை 16-31 இதழில் வெளியானது)

- முத்துக்குட்டி