britain eu leave camp

18, 19, மற்றும் 20 நூற்றாண்டின் முன் பாதிவரை உலகளாவிய வல்லரசாக விளங்கிய – ஒன்றிணைந்த அரசு – யுனைடட் கிங்டம் – என்ற இங்கிலாந்து, தனது 41 ஆண்டுகால ஐரோப்பிய உறவை துண்டித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மக்களின் கருத்துக்கான வாக்கெடுப்பில், 52 விழுக்காடு மக்கள் இதனை ஆதரித்துள்ளனர். தொடர்ந்து அரசியல் தலைமை மாற்றம் மட்டுமல்ல –யுனைட்டட் கிங்டத்தில் உள்ள ஸ்காட்லாந்து பிரிந்து போகும் சூழலும் உருவாகியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் இங்கிலாந்துடனான இணைப்பைத் தொடர்வது என பொதுவாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து முடிவு செய்திருந்தது. தற்போதைய வாக்கெடுப்பில் 67 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்கவே, ஸ்காட்லாந்து மக்கள் விருப்பந் தெரிவித்துள்ளனர். எனவே திரும்பவும் இங்கிலாந்துடனான இணைப்பைப் பற்றிய முடிவு மறுபரிசீலனைக்கு ஸ்காட்லாந்து வலியுறுத்தலாம். அப்படியொரு பிரிவினை ஏற்படுமானால், உலகின் ஐந்தாவது பெரிய பொருளதாரமாக விளங்கும் இங்கிலாந்து, கடந்த நூற்றாண்டுகளில் பெரிய வல்லரசு என்ற பெயர் சரித்திரமாகிப் போகக்கூடும்.. பின்னடைவையும் இங்கிலாந்து சந்திக்க நேரலாம்.

ஐரோப்பா என்ற ஒன்றியத்திலிருந்து ஒரு நாடு வெளியேறுவது, அந்த நாட்டின் அரசியல் நடவடிக்கை என்பதாக மட்டும் இதன் பரிணாமம் நிற்கவில்லை. இந்த வாக்கெடுப்புக்கான தேவையே சிரியா, ஈராக் நாடுகளிலிருந்து வெளியேறும் ஏதிலிகள் –அகதிகள்- மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்தில் குடியேறும் தொழிலாளர்கள் குடியேற்றத்தினாலேயே வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏதிலிகள் குடியேற்றம் பற்றிய கொள்கை முடிவை இங்கிலாந்து ஏற்பதில் வந்த கருத்து வேறுபாடே வாக்கெடுப்பிற்கு இட்டுச் சென்றுள்ளது.

சிரியாவிலிருந்து வெளியேறும் மக்களின் தொகையும், ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைக்கு அஞ்சி வெளியேறும் மக்கள் தொகையுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பெரிதும் பாதிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளதால், இங்கிலாந்து ஒன்றியத்தின் முடிவை ஏற்க வேண்டியதாகிறது. இது 1,000 ஆண்டுகளாக பாதுகாத்துவரும் தங்கள் அரசியல் தன்னாட்சியை பாதிப்பதாகவும், மற்றொரு நாட்டின் முடிவு தங்கள் மீது திணிக்கப்படுவதாகவும் மக்கள் நினைக்கின்றனர். இங்கிலாந்து பிற நாடுகளை கசக்கிப் பிழிந்து கொள்ளையடித்து வாழ்ந்த காலம் மறைந்து இருதலைமுறைகளுக்கு மேலாகிவிட்டனவே. இந்த முடிவுக்கு இறையாண்மைதான் ஒரே காரணம் என்று சொல்லப்படுகிறது. என்றாலும் இதுவே ஒரே காரணம் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. நாட்டின் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைப்பை ஆதரித்தபோதும் மக்கள் வேறுமுடிவையே எடுத்துள்ளனர்.

நாட்டின் ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள்—அனைத்தும் இணைப்பை தொடரவே பிரச்சாரம் செய்தன. பரிதாபமாக இவர்களையும் மக்கள் புறக்கணித்துவிட்டனர். இதனை செரித்துக் கொள்ள முடியாமல் பி.பி.சி உட்பட ஊடகங்கள் இனி கருத்து வாக்கெடுப்பே வேண்டாம் என புலம்ப ஆரம்பித்துவிட்டன.

நாட்டின் வெளியேற்றம், பெரியதொரு பொருளாதரச் சிக்கலை கொண்டு வரும் என்ற கருத்தியல், வலுவாகவே மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருந்தது. என்றாலும் மக்கள் பிரிந்து போகும் முடிவையே ஆதரித்துள்ளனர்.

இறையாண்மை, பொருளாதாரம், அரசியல் என அனைத்தையும் தாண்டித்தான் இங்கிலாந்து மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் 28 நாடுகளைக் கொண்ட ஒருங்கிணைப்பாகும். இந்நாடுகளுக்கிடையே *பொதுச்சந்தை* என்பதனைத் தாண்டி *ஒரே சந்தை* என்றளவுக்கு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கிலாந்து, நார்வே தவிர மற்ற எல்லா நாடுகளுக்கும், பொதுவான நாணயமே—யூரோ—புழக்கத்தில் உள்ளது. அன்னியச் செலாவணி 28 நாடுகளுக்கும் யூரோவே ஆகும். உலக வர்த்தக அமைப்பு (WTO), உலக நிதியம் (IMF), உலக வங்கி (WB) இவை அனைத்தும் ஒன்றியத்தை ஒரே நாடாகவே பாவிக்கின்றன. உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்காவிற்கு இணையான வலுவுடனே, ஒன்றியம் பல முடிவுகளை எடுக்க முடிகிறது. அது போன்றே உலக வங்கியும், உலக நிதியமும், பிற நாடுகளுக்கு கடன் வழங்கும் “நாணயக்கூடை”யில் (BASKET OF CURRENCY) அமெரிக்காவின் டாலர், இங்கிலாந்தின் பவுண்ட், ஜப்பானின் யென், இவைகளுடன் யூரோவும் உள்ளது. இவைகள் உலக நாணயமாக கருதப்படுகின்றன.

ஆரம்பத்திலிருந்து, இங்கிலாந்து, ஒன்றியத்தின் பொது நாணயத்தினை ஏற்கவில்லை. அதன் பவுண்ட் உலக நாணயமாக பார்க்கப்பட்டது காரணமாகும். உலக தொழில் வல்லரசு நாடுகளாகக் கருதப்படும், G8 நாடுகளில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடாவோடு, ஒன்றியத்தின் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தும் உள்ளன. பொருளாதார வல்லமையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஒன்றியம் விளங்குகிறது. அத்துடன், மதம், பண்பாடு, சரித்திரம் என நீண்டகாலத் தொடர்பும் ஒன்றியத்துடன் இங்கிலாந்துக்கு உண்டு. எனினும் மக்கள் பிரிந்து போகும் முடிவை எடுத்துள்ளனர். இவைகளே ஆய்விற்கு உட்படுகின்றன.

இரண்டு உலகப் போர்களுக்கு மையக் காரணமான ஐரோப்பா 1975ம் ஆண்டில், ஒன்றியம் என்ற முடிவை எடுத்து –மண்டலத்தை- ஒரு நாடாக உருவாக்கும் முயற்சியைத் துவங்கினர்.(ECB) ஐரோப்பிய வங்கி, பாரளுமன்றம் என்ற அமைப்புகளையும் உருவாக்கினார்கள். இதன் தலைமையிடம், *புரஸில்ஸ்* ல் உள்ளது. அது நிர்வாக அமைப்பாக இருக்கிறதே தவிர அரசியல் அமைப்பாக இல்லை (Beuracrtic control over politics ). யூரோ மண்டலத்தில் ஜெர்மனியே பெருமளவுக்கு பொருளாதார வலுவுடன் அதிகாரம் செலுத்தும் நாடாகவுள்ளது. யூரோ ஒன்றிய நாடுகளின் அன்னியச் செலவணி என்பது பல சிறிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியையும் உண்டாக்கியுள்ளது. கீரிஸ் சமீபத்திய உதாரணம். ஒன்றியத்தின் –ஐரோப்பியன் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ்—என்ற நீதித்துறையும் உண்டு. இது *லிஸ்பன் ட்ரீட்டி* என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது. இது ஒன்றிய நாடுகளுக்கிடையேயான வணிக தகராறுகளை மட்டுமல்லாது, ராணுவம், வெளியுறவு, மக்கள் குடிபெயர்வு, உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடுகிறது. இதன் உறுப்பு நாடுகள் அதனை மீற முடியாது.

ஏற்கனவே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவுக்கு கீழ்மட்ட வேலைகளுக்காக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். தற்போது சிரியா, ஈராக் மக்களும் வருவது இந்த அச்சத்தைப் பெரிதாக்கியுள்ளது. இதுவே வாக்கெடுப்பில் முடிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட எரிச்சல்தான் மக்களின் முடிவுக்கு காரணம் என்றும் உலகமயமாக்கலுக்கு எதிராகப் பார்க்க முடியாது என்றும் முன்னாள் தலைமை நிதி ஆலோசகர் ரங்கராஜன் சொல்கிறர். ஆனால், இங்கிலாந்தின் சிறந்த ஊடகவியலாளரான ஜான்பில்ஜர், இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு குழந்தை வறுமைக்கோட்டிறகு கீழே வாழ்வதாகவும், பல லட்சம் குடும்பங்கள் ஒருவர் ஊதியத்தில் வாழ வேண்டியிருக்கிறது, தங்கள் வாய்ப்பை பிற நாட்டினர் எடுத்துக் கொள்வதை மக்கள் விரும்பவில்லை என்று சொல்கிறார்.

இருவரது கருத்தின் அடிப்படை ஒன்றானாலும், அடிப்படையின் காரணமான வறுமைக்கு உலகமயமாக்கல் காரணமா, இல்லையா என்பதனை ரங்கராஜன் விளக்கவில்லை. உலகமயமாக்கலின் ஆரம்பப் புள்ளியே இங்கிலாந்துதான். 1979-80களில் மார்க்ரெட் தாட்சர் தொடங்கி வைத்த தனியார்மயம் என்ற கொள்கைதான் இன்று உலகமயமாக்கலாக உருவெடுத்துள்ளது. தனியார் மயப்படுத்தப்பட்ட பொதுத்துறைகள்தான் இங்கிலாந்து மக்களின் வறுமையாக உருவெடுத்துள்ளது. ’’There is two problem of monopoly public enterprices and monopoly trade unions’’ என்பதே இவரின் சீர்திருத்தமாகும். மின்சாரம், தண்ணீர், தொழில்கள் என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. ‘’socialism for rich and capitalism for poor” என்ற முடிவுக்கு ஆளானது இங்கிலாந்து. வளர்ச்சி சிலரிடத்திலும், வறுமை பரவலாகவும் மாறியுள்ளது.

வளர்ச்சி, வல்லமை, வளர்ச்சி பெற்ற நாடு என்பதெல்லாம் பெரும்பகுதி மக்களைக் கொண்ட முடிவல்ல. தங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பங்கிட்டுக் கொள்ள முடியாத பெரும் பகுதி மக்களின் நிலையைத்தான் வாக்கெடுப்பு காட்டுகிறது. அது போன்றே இளைய சமூகத்தினரின் பன்மை நுகர்வும், ஐரோப்பிய தொடர்பும், பண்டங்களின் வரவும் ஒன்றிய இணைப்பைத் தொடர விரும்புகின்றனர். ‘லண்டன் இங்கிலாந்தல்ல’ என்ற முடிவை பலரும் பிரதிபலிக்கின்றனர். நாட்டின் பங்குச் சந்தை, நாணய மதிப்பு, தொழில் வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சி என்று விவரிக்கப்படும் பொருளாதர கோட்பாடெல்லாம் மக்களைக் கவரவில்லை. கையில் இருக்கும் கொஞ்ச வாழ்வாதரத்தையும், வளர்ச்சி என்ற பெயரால் பெரும் பகுதி மக்கள் இழக்கத் தயாரில்லை என்பது தான் நிதர்சனமாக நிலவும் உண்மை. பணக்கார நாட்டில் ஏழைகளின் முடிவே இறுதியாகிறது. அரசியல் காரணங்களும், பொருளாதாரக் கோட்பாடுகளும், இவர்களின் முடிவுக்கு அடிப்படையல்ல; வாழ்வாதாரமே அடிப்படையகும். எல்லா நாடுகளிலும் இதுவே நிலைப்பாடாக இருக்கும். நுகர்வு பண்பாட்டில் ஊறிப் போயிருக்கும் நடுத்தர மக்களின் பார்வையை எளிய மக்களும் கொண்டிருப்பார்கள் என்ற திரு.ரங்கராஜனின் வாதத்தை சரியானதாக ஏற்க முடியவில்லை.

இரண்டரை நூற்றாண்டு காலமாக கிட்டதட்ட ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளை தனது காலனி நாடக மாற்றி சுரண்டிக் கொழுத்த இங்கிலாந்தின் நடவடிக்கையே இரு உலகப்போருக்கு காரணமாயிற்று. இந்தப் போர்களே காலனி நாடுகளை இழக்கவும் நேரிட்டது. ஆனாலும், ஒவ்வொரு நாட்டிலும், மக்களைப் பிரித்து தொடர் பிரச்சனைகளை உள் வைத்துவிட்டே வெளியேறியது. இரண்டாக இருந்த ஈழம், இலங்கையை ஒன்றாக்கி நிரந்தர சண்டையை உறுதிப்படுத்தினார்கள். பாலஸ்தீனத்தின் எல்லைகளைத் திருடி, இஸ்ரேலை உண்டாக்கினார்கள். ஈராக் நாட்டை சின்னாபின்னமாக்கினர்கள். லிபியாவில் படைகளை அனுப்பி உள்நாட்டுச் சண்டையை உருவாக்கியதும் இங்கிலாந்து. ஈராக், ஆப்கன், சிரியா தலையீடுதான் இன்று இஸ்லாமிய தீவிரவாதத்திறகு அடிகோலியது. இந்த நெருக்கடி தான் இன்று ஏதிலிகள் பிரச்சனையாக இங்கிலாந்தின் மீது திரும்பியிருக்கிறது. ஸ்காட்லாந்து உடன் இருக்குமா என்ற நிலைக்கும் ஆளாகி இருக்கிறது.

 அரசியலார், வளர்ச்சி, வல்லமையை இழந்து விடக்கூடாது எனறு நினைக்கிறார்கள். எளிய மக்களோ இருக்கும் வாழ்வை பெருமைக்காக இழக்கத் தயாரில்லை என்கின்றனர். உலகமயமாக்கல், முன்னதைச் சொல்கிறது. *எல்லைகளற்ற பெரும் சந்தை* என்ற சித்தாந்தத்தை இன்று உலக மயமாக்கலின் தொடக்க நாடே கேளவிக்குறியாக்கியிருக்கிறது.

உலக வர்த்தக அமைப்பின் முடிவுகளை உறுப்பு நாடுகள், தங்கள் நாட்டில் சட்டமாக்க வேண்டும் என்கிறது உலக ஒப்பந்தம். இதனைத்தான் கேள்வியாக இங்கிலாந்து உலகத்தின் முன் வைத்திருக்கிறது.

- சா.காந்தி