“அடிடா அவள.. ஒதடா அவள..  

விட்ரா அவள.. தேவையே இல்ல….”  

மேலே நான் கூறியுள்ளது ஏதோ கொலைகாரன் ஒருவனால், கொலை செய்யும் நேரத்தில் உதிர்த்த வன்ம வார்த்தைகள் அல்ல!

sexual abuse“மயக்கம் என்ன?” என்ற திரைப்படத்தில், அப்படத்தின் இயக்குநர் செல்வராகவன், காதலை மறுக்கும் பெண்ணை என்ன செய்ய வேண்டும் என்று பொருள்படும் படியாக, ஊரறிய – உலகறிய எழுத வெளிவந்த “பாடல்” வரிதான் இது!

காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்கள் மீது வன்மம் கக்கும் வகையிலான “ஒய் திஸ் கொலவெறி?” என்ற இன்னொரு “தத்துவ”ப் பாடலை எழுதிப் பாடிய காரணத்துக்காக - நடிகர் தனுசுக்கு, அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், விருந்து வைத்துப் பாராட்டினார் என்பது இன்னொரு செய்தி!

இப்படி பாடல்கள் மட்டும் தானா? காதலை ஒரு பெண் ஏற்கவில்லையெனில், அந்தப் பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி காதலை ஏற்க வைப்பதே ஒரே பணி என பல்வேறு சாகசங்களில் இறங்கிச் செயல்படுபவரே இன்று பல திரைப்படங்களின் “கதாநாயகர்கள்” ஆக காட்சி தருகின்றனர்.

அதை இரசித்துக் கைத்தட்டுவார் மனத்தில் மெல்ல வளர்த்தெடுக்கப்படும் ஆணாதிக்கம், “பொருள் ஈட்டுவதே வாழ்க்கை – இலட்சியம்” என போதிக்கும் உலகமய வாழ்க்கையுடன் இணையும் போது, பெண்களையும் நுகர்வுப் பொருளாகக் கருத வைக்கிறது.

நுங்கம்பாக்கம் சுவாதி, சேலம் வினுப்பிரியா, காரைக்கால் வினோதினி, சூளைமேடு அருணா என இன்றைக்கு ஆண்களால் வெட்டுப்பட்டும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டும், அமிலம் வீசப்பட்டும், வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் கொல்லப்படுகின்ற பெண்களிடம் உள்ள ஒற்றுமையை நாம் கவனிக்க வேண்டும்.

காதலிக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்கள், பணம் நகைக் கொள்ளையின் போது எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்கள், தன் விருப்பத்தின்படி வேறு சாதி ஆணோடு காதலித்து மணம் முடித்து வாழ்ந்து காட்டும் பெண்கள், கணவனின் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்கள்…

இப்படி கொல்லப்படும் பெண்கள் அனைவருமே, தங்கள் மன உணர்வின்படி – விருப்பத்தின்படி செயல்பட முற்படுபவர்கள் ஆவர்.

பெண்களின் உணர்வை – விருப்பத்தை – கருத்தை, ஏற்றுக் கொள்ள விரும்பாத ஆணாதிக்கவெறி மனம் அவர்களைக் கொலை செய்யும் அளவிற்கு வன்மமாக மாறுகின்றது.

தமது இலாப வேட்டைக்காக - “அத்தனைக்கும் ஆசைப்படு” என உலகின் எல்லாப் பொருட்களையும் வாங்கித் துய்த்தெறியும் – நுகர்வு மனப்பான்மையை நம் எல்லோரிடமும திட்டமிட்டு விதைக்கும் உலகமயப் பொருளியல்,பெண்களையும் அவ்வாறான பயன்படுத்தித் தூக்கியெறியும் பொருளாகக் கருத வைக்கிறது. மழலையின் சிரிப்பு முதல் மாதரின் உடற்சதை வரை இங்கு அனைத்தும் நுகர்வுப் பொருளே எனக் கருத வைக்கிறது. “பயன்படுத்தித் தூக்கியெறி” என்ற நுகர்விய மோக முழக்கம், பெண்களையும் குழந்தைகளையும் அவ்வாறே தூக்கியெறியும் மனநிலையையும் விதைக்கின்றது.

இந்த உலகமயப் போக்கிற்கு ஊக்கமளிக்கும் வகையில், ஊடகங்களும், திரைத்துறையும் பெண்களுக்கு எதிராகக் கக்கும் ஆணாதிக்கவெறிச் சிந்தனைகளும், பிறரைக் கொன்றாவது முன்னேறு என வன்மம் விதைக்கும் முதலாளிய வாழ்வியல் சிந்தனைகளையும், மனத்தளவில் பலரை கொலை வெறியர்களாக்குகிறது.

பருவ வயத்தில் ஏற்படும் இயல்பான காதல் உணர்வை, இந்த நுகர்விய மோகமும் பாலியல்வெறித் தூண்டலும் சிதைத்து சின்னாபின்னமாக்குகின்றது.

பொதுவாகவே பெண்களை சுமையாகக் கருதுகின்ற ஆணாதிக்க மனநிலை, நம் பிள்ளைகளின் வளர்ப்பு முறையிலும் எதிரொலிக்கிறது. பெண்களின் உடலியல் சிக்கல்கள் இயல்பானவை எனப் புரிந்து கொள்ளாமல் வளர்த்தெடுக்கப்படும் ஆண் குழந்தைகள், கமுக்கமாக வைக்கப்படும் அவற்றை – கமுக்கத்தின் காரணமாக ஏற்படும் ஈர்ப்பின் காரணமாக - பின்னாட்களில் தாங்களே அறிந்து கொள்ள முற்படுகின்றனர்.

சாதாரண பெண்ணுடல் சார்ந்த உடலியல் சிக்கலாகப் புரிந்து கொள்ள வேண்டியவற்றை, பின்னர் “கிளர்ச்சி”க்குரிய சாகசமாகவும் அவர்களைப் பார்க்க வைக்கிறது. இப்பருவ வயது ஆண்கள் மீது திரைப்படங்களும், விளம்பரங்களும் ஏற்படுத்தும் தாக்கம், அவர்கள் மனத்தில் வேறுவகை மனப்போக்கை வளர்த்தெடுக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக உருவான இணையம், கைப்பேசிகள், மெமரி கார்டு போன்றவற்றின் தவறான பயன்பாடு,இந்த மனப்போக்கை வக்கிரமாக மாற்றுகின்றது.

தம்மை தவறாகப் பேசினாலோ – ஆபாசமாக சித்தரித்தாலோ – நிராகரித்தாலோ, அதை செய்பவன்தான் தரக்குறைவானவன் என அம்பலப்படுத்தாமல், அந்த சூழலை பக்குவத்தோடு எதிர்கொள்ள முடியாமல், தம்மை அரவணைக்கும் பக்குவம் இல்லாத சுற்றத்தாரிடமிருந்தும் மன அமைதி பெற முடியாத நிலையில், இந்த ஆணாதிக்கக் கட்டமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிக் கொண்டே, விஷ்ணுப்பிரயா முதல் வினுப்பிரியா வரை பெண்கள் “தற்கொலை“ என்ற பெயரில், இச்சமூக பொது ஒழுங்கிற்கு”நரபலி”யாக்கப்படுகின்றனர்.

பொருளியல் அழுத்தம் காரணமாகவும், கல்வி – வேலை வாய்ப்பில் கிடைத்துள்ள புதிய வாய்ப்புகள் காரணமாகவும்,இன்று பரந்துபட்ட அளவில், பெண்கள் சமூக வெளியில் வரத் தொடங்கியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில்,ஆண்களைப் போலவே கணிசமான அளவில் பெண்களும் நுகர்விய மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் அவலமும் உள்ளது.

நீண்டகாலமாக சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம், பெண்களை ஆண்களுக்கு அடங்கிய நுகர்வுப் பொருளாகப் பார்க்க வைக்கிறது. ஆனால், அதை பக்குவ நிலையில் எதிர்கொள்வதற்கு மாறாக, ”பெண்ணியம்” என்ற போலியான பெயரால் ஆண்கள் நுகர்வதற்கு “ஏற்ற” நவீனப் பொருளாக தங்களை அணியப்படுத்திக் கொள்வதையே பெண்கள் சிலர் நோக்கமாக்கிக் கொண்டனர்.

ஆண் ஆயினும் பெண் ஆயினும், தங்களுடைய எதிர் பாலினரால் கவனிக்கப்படும் அளவுக்கு எடுப்பானத் தோற்றத்தோடு இருக்க வேண்டும் எனக் கருதுவது இயல்பானதுதான். ஆனால், அதைத் தாண்டி பல பெண்கள் – தங்கள் உடலை தானே பண்டமாகக் கருதும் மனப்போக்கில் வீழ்ந்து கிடக்கும் சூழல் நிலவுகின்றது.

திரைப்படங்களிலும் காட்சி ஊடகங்களிலும் படித்து பட்டம் பெற்று பணியாற்றும் அழகானப் பெண்ணை,முரட்டுத்தனமான – உடல் ஒப்பனைக் குறைவான ஆண்கள் காதலிப்பது போலவும், அவர்களையே அந்தப் பெண்கள் விரும்புவது போலவும் காட்சிகள் படைக்கப்படுகின்றன. இயல்பு வாழ்க்கையில் இது இவ்வாறே  நேர வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், இதை உணராத ஆணும் சரி, பெண்ணும் சரி, எதிர்காலம் குறித்த சிந்தனைகள் இன்றி “காதல்” எனும் பெயரில் - காலம் தள்ளுகின்ற மனநிலையும், “இராம்குமார்” போன்றவர்களுக்கு வாய்ப்பளித்து விடுகின்றது. ஏடுகளில் கசிந்து வருகிற ராம்குமாரின் வாக்குமூலங்களே இதற்குச் சான்றாகும்.

இவ்வாறு ஆணாதிக்கம் – நுகர்விய மோகம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள சமூக அமைப்பில்,ராம்குமார் – சுரேஷ் – தினேஷ் போன்றோர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதை நாம் என்றைக்குக் கேள்விக்கு உள்ளாக்கப்போகின்றோம்?

திரும்பத் திரும்ப ராம்குமார்களையும், சுரேசுகளையும் தூக்கிலிட்டுக் கொல்வதால், இந்த சமூக நிலை மாறவே மாறாது. இவர்களைத் தூக்கிலிட்டுக் கொல்வதுதான் நீதி என்றால், பழிக்குப் பழி கொலை செய்யும் பக்குவமற்ற மனிதர்களாக சமூகத்தில் பார்க்கப்படும் ரவுடிகளைப் பற்றி பேச, நமக்கு எந்த யோக்கியதையும் கிடையாது!

இன்னொரு இராம்குமாரோ – சுரேசோ இந்த சமூகத்தில் உருவாகக்கூடாதெனில், நம் சமூக மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

குழந்தைகள் வளர்ப்பில் மாற்றம் வர வேண்டும். நுகர்விய மோகத்தை விதைத்து - வளர்த்தெடுக்கும் உலகமயப் பொருள் சூழலுக்கு மாற்றாக, தற்சார்பு பொருளியல் - தற்சார்பு வாழ்வியல், மாற்று திரைப்பட சூழல் என சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் மாற்றுப் பாதையை வளர்த்தெடுக்க வேண்டும்.

- க.அருணபாரதி