ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மோடி அவர்கள் ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அப்படி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றிய மோடி கருப்புப்பணம் தொடர்பான கணக்குகளைத் தாமாகவே முன்வந்து தாக்கல் செய்ய, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை சிறப்புச் சலுகை வழங்கப்படும் என்றும், அதற்குள் தாங்களாகவே முன்வந்து கணக்கை தாக்கல் செய்பவர்களிடம் எவ்வித விசாரணையும் செய்யப்பட மாட்டாது எனவும் உறுதிமொழி அளித்துள்ளார்.

 modi 329மோடி அரசு இப்படி வாக்குறுதி கொடுப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னும் பலமுறை சிறப்புச் சலுகைகளை அளித்துள்ளது. ஏற்கனவே சென்ற ஆண்டு இதே போல ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்றால் 120 சதவீத வரி விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிவரை அது நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. அது மீண்டும் 2018 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லையே என மானமுள்ள மனிதர்களாக இருந்தால் வெட்கப்படுவார்கள். ஆனால் மோடி!.

 ஒவ்வொரு முறையும் கருப்புப்பணம் பதுக்கியவர்கள் மீது செல்லமாக கடிந்துகொள்வதும், அதன்மூலம் நாட்டு மக்களிடம் தான் இன்னும் கருப்புப் பணத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் காட்டிக் கொள்கின்றார். தாம் பதவியேற்று இரண்டாண்டுகள் முடிவடைந்து விட்ட சூழ்நிலையில் கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றிய பட்டியலைக்கூட வெளியிட துப்பில்லாத தனது இயலாமையை நினைத்து மோடி இதுவரை வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்கும் மோடியின் லட்சணம் இவ்வளவுதான்.

 மோடி என்ன தான் கருப்புப் பணம் பற்றி உதார் விட்டுக் கொண்டு இருந்தாலும் கருப்புப் பணத்தை நிச்சயமாக ஒழிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். காரணம் மோடி சொல்வது போன்று கருப்புப் பணம் வெளிநாட்டில் எல்லாம் கிடையாது என்பதுதான் உண்மை. அது இந்திய பங்குச் சந்தையில் தான் பெருமளவு முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்திய பங்குச் சந்தையில் புழங்கும் பணத்தில் பாதிக்கும் மேல் கருப்புப் பணம் என்பதுதான் உண்மை. வரியில்லா சொர்க்கங்களில் பதிவு செய்யப்படும் லெட்டர்பேட் கம்பெனிகள் மூலம் அது திரும்ப இந்தியாவிற்குள் பார்டிசிபேட்டரி நோட்ஸ்( பி- நோட்ஸ்) என்ற முறை மூலம் கொண்டுவரப்படுகின்றது. இந்தப் பணமே இன்று இந்திய பங்குச் சந்தையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளது.

 பி-நோட்ஸ் மூலம் இந்திய பங்குச் சந்தையில் ஏறக்குறைய 2.12 லட்சம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இது மொத்த அந்நிய முதலீட்டில் 9.3 சதவீதம் என்றும் செபி தலைவர் யூகே சின்ஹா தெரிவித்து இருக்கின்றார். இது 2007 ஆம் ஆண்டு மொத்த அந்நிய முதலீட்டில் 55 சதவீதமாக இருந்ததாம். அப்படி என்றால் மோடியின் ஆட்சியில் இந்திய பங்குச்சந்தையில் கருப்புப் பணம் புழங்குவது பெருமளவு தடுக்கப்பட்டிருக்கின்றதா? என நீங்கள் நினைக்கலாம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. மன்மோகன் ஆட்சிக் காலத்தில் கருப்புப் பணமாகவே இருந்த அது மோடியின் நல்லாட்சியில் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதன் விளைவுதான் மோடியின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியானது 7.6 என்ற இலக்கத்தைக் காட்டிக் கொண்டு இருக்கின்றது. இந்திய பெரும் முதலாளிகளின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்து இருக்கின்றது.

 வாஷிங்டன்னில் உள்ள சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வில் 2004 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 34 லட்சம் கோடிகள் வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. இதில் பெருமளவு கருப்புப் பணமும் மோடி பிரதமராக பொறுப்பேற்ற உடன் திரும்ப இந்தியாவிற்குள் வந்துவிட்டது. அதனால் தான் அந்நிய நேரடி முதலீட்டில் 55 சதவீதமாக இருந்த கருப்புப் பணம் 9.3 சதவீதமாக குறைந்துள்ளது. இப்போது வெளிநாட்டில் இருப்பதாக கருதப்படும் கருப்புப் பணம் என்பது அற்ப அளவே ஆகும். ஆனால் அதையும் கூட மோடி அரசால் இந்தியாவிற்குள் கொண்டு வர முடியாது என்பது வேறு கதை.

 ஏற்கனவே பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய 500 இந்தியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. எப்போது பார்த்தாலும் மோடியும், அருண்ஜெட்லியும் யாரும் தப்ப முடியாது, யாரும் தப்ப முடியாது என்றுதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் விளைவு என்ன என்று பார்த்தால் ஒரு கருமமும் இல்லை.

 இந்தியாவில் உள்ள வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி டிமிக்கி கொடுத்தவர்களிடம் இருந்தே அதை வசூலிப்பதற்குத் திராணியற்ற இந்தப் பேர்வழிகள் தான் வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தைக் கொண்டு வரப் போகின்றார்களா? 9000 கோடிகளை ஆட்டையைப் போட்டுவிட்டு வெளிநாடு ஓடி போன விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியா கொண்டு வரவே முடியாத மோடி அதிகபட்சமாக விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தும், ரேசன் அட்டையை ரத்து செய்தும் தான் தனது வீரத்தைக் காட்டிக்கொண்டார்.

 இந்தியாவிலேயே வேகாத பருப்பை வெளிநாட்டில் கொண்டுபோய் வேக வைக்கப் போகின்றேன் என்று மோடி சொன்னால் நம்புவதற்கு நம் மக்கள் என்ன முட்டாள்களா? இல்லை பைத்தியக்காரர்களா? மோடி என்ன தான் ‘மான் கி பாத்’ போட்டாலும் சரி மான் கராத்தே போட்டலும் சரி அதை இனிமேல் இந்திய மக்கள் நம்பத் தயாராக இல்லை. மோடி இந்திய மக்களின் ‘மான் கி பாத்தை’ எப்போதாவது கேட்க வேண்டும். அது தினம் தினம் கதறிக் கொண்டு இருக்கின்றது. அது சொல்கின்றது “நீங்க கருப்புப் பணத்தைக் கொண்டுவாங்க, கொண்டுவரமா போங்க, நீங்க யோகா செய்யுங்க, செய்யாம போங்க, நீங்க ஒபாமா கிட்ட ஹாட்லைனில் பேசுங்க பேசாம போங்க அது உங்க விருப்பம். தயவு செஞ்சி எங்கள உயிரோடவாச்சும் இருக்க விடுங்க. சாப்பிடறத்துக்கு ஒரு வேளை சாப்பாடும், மானத்தை மறைக்கறதுக்கு ஒரு துணியும், காலுல போட்டுகிறதுக்கு ஒரு ஜோடி செருப்பும் வாங்கறதே பெரும்பாடா இருக்கு, ஏன் எங்க தாலிய அறுக்குறீங்க” என்று அவர்களின் மான் கி பாத் சொல்கின்றது. மோடி அவர்களே, நன்றாக காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள் அவர்கள் சொல்வது உண்மை என்பது உங்களுக்குத் தெரியும்.

- செ.கார்கி