பார்ப்பனிய கருத்தியல்களைப் பரப்புவதற்கென்றே தமிழ் தி இந்து ஒரு குழுவை வைத்திருக்கின்றது போலும். வாரம் வராம் ஒன்றோ இரண்டோ அதைப் பற்றி கட்டுரையைப் போட்டு தனது அக்கிரகாரத்து விசுவாசத்தைக் காட்டிக் கொண்டே இருக்கின்றது. அப்படி கடந்த வாரம் தனது அக்கிரகாரத்து விசுவாசக் கட்டுரையாக சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தியாகம் டெல்லியைச் சென்றடையுமா? என ஏக்கத்தோடு கேட்டிருக்கின்றது. மேலும் "… ஆங்கிலேயரை எதிர்த்துத் தீரச்செயல் புரிந்ததில் பஞ்சாபைச் சேர்ந்த பகத்சிங்குக்கும் முன்னோடி ஆனவர் இவர். பஞ்சாபில் யாரும் பகத்சிங்கை ‘பஞ்சாபின் வாஞ்சிநாதன்’ என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால் தமிழகத்தில்தான் போட்டித் தேர்வுக்கான பொது அறிவு நூல்கள் வாஞ்சிநாதனை ‘தமிழ்நாட்டின் பகத்சிங்’ என்று தமிழக மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுகின்றன….” என்று புலம்புகின்றது.

Vanjinathanதமிழ் இந்துவைப் போல நமக்கும் வெட்கமாகத்தான் இருக்கின்றது. பகத்சிங்குடன் வாஞ்சிநாதனை ஒப்பிட்டுப் பகத்சிங்கை கேவலப்படுத்தி விட்டார்களே என்று. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக மாற்றி துணிவுடன் தூக்கு மேடை ஏறிய பகத்சிங் எங்கே, சுட்டுவிட்டு ஒரு கோழையைப்போல கக்கூசிலே போய் ஒளிந்து கொண்டு மாட்டினால் அடி குமுறி விடுவார்கள் என்று பயந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்ட வாஞ்சிநாதன் எங்கே? இருவரையும் ஒப்பிடுவதே முதலில் தவறு.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பார்ப்பன வாஞ்சிநாதன் பற்றிய கட்டுரைக்கு மேலும் சிறப்பூட்டுமாறு அமைந்துள்ளது வாஞ்சி இயக்க நிறுவன தலைவர் பி.ராமநாதன் கூறியுள்ள கருத்துக்கள். அவர் “நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் சாவர்க்கரின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல வாஞ்சிநாதனின் உருவப்  படத்தையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாவர்க்கர் தனது காலாபானி (கருப்புத் தண்ணீர்) என்ற நூலில் வாஞ்சிநாதனின் தியாகத்தையும், தீரத்தையும் புகழ்ந்து எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கருடன் இணைந்து போராடிய மேடம் காமா, அப்போது பிரான்ஸில் ஆசிரியராக இருந்துகொண்டு வெளியிட்டு வந்த வந்தே மாதரம் என்ற தனது பத்திரிகையில், வாஞ்சிநாதனின் தியாகத்தை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார்” என்று கூறுகின்றார்.

வாஞ்சி அய்யர் சாதிவெறி பிடித்த ஒரு சனாதனி என்று நாம் கூறும் கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே பி.ராமநாதனின் கருத்து அமைந்துள்ளது. காரணம் ‘வீர’ சாவர்க்கரே ஒருவரைப் புகழ்கின்றார் என்றால் நிச்சயம் அந்த ‘வீர’மான நபர் ஒரு பார்ப்பனராகவோ இல்லை பார்ப்பனியத்தின் கருத்தியல்களை ஏற்றுப் பார்ப்பனனுக்கு சொம்புதூக்கும் பேர்வழியாகவோ தான் இருப்பான்.

வாஞ்சிநாதன் தனது வீரத்தைக் கழிப்பறையில் வைத்துக் காட்டினான் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். ஒருவேளை அப்படியில்லாமல் காவல்துறையிடம் சரணடைந்து இருந்தால் எப்படி நடந்துகொண்டிருப்பார் என்று நினைக்கின்றீர்கள்? அதை பி.ராமநாதன் பெருமையாக கூறிய ‘வீர’ சாவர்க்கரே செய்து காட்டி இருக்கின்றார் பாருங்கள்.

கொலைக் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சாவர்க்கர் 1911 ஜூலை 4 ஆம் தேதி அந்தமான் சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றார். அங்கிருந்து தன்னை விடுதலை செய்யும் படி இரண்டு முறை கருணை மனுவை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த வீர சாவர்க்கர். அந்த கருணை மனுவில் "…இந்தியாவிலும் மனித குலத்தினதும் நன்மையை மனத்தில் கொண்டுள்ள எந்த மனிதரும் குருட்டுத்தனமாக அந்தப் பாதையில் இனி அடியெடுத்து வைக்க மாட்டார். எனவே பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால் அரசியல் சட்டவகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன். இந்த விசுவாசம்தான் முன்னேற்றத்துக்கான நிபந்தனை. மேலும் அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறிவந்துள்ளது இந்தியவிலும் வெளி நாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்துவந்த , வழி தவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்த வகையில் நான் அரசாங்கத்திற்குப் பணி புரிய வேண்டும் என்று அது விரும்புகின்றதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன்……”( இந்து இந்தியா: எஸ்.வி.ராஜதுரை)

பிரிட்டிஷ் அரசின் காலை நக்கியே தனது காலத்தை தள்ளிய இந்த சாவர்க்கர் இதுபோல பலதடவை மன்னிப்பு கடிதங்களை எழுதி இருக்கின்றார். ஆனால் எழுதியவன் ஒரு சித்பவன் பார்ப்பனனாயிற்றே அதனால் அவர் ‘வீர’சாவர்க்கர் என அம்பிகளால் அன்று முதல் அன்போடு அழைக்கப்பட்டார். ஒரு பார்ப்பனன் எக்கேடு கெட்ட இழி பிறவியாக இருந்தாலும் அவனை ஏற்றியும் போற்றியும் பேசுவது நமது பார்ப்பன மரபு. இந்தப் பின்னணியில்தான் நாம் வாஞ்சிநாதனை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆஷ் துரையை நமது வாஞ்சி அய்யர் 1911 ஆன் ஆண்டு ஜூன் 17 காலை 10:35 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்துப் போட்டுத் தள்ளுகின்றார். அங்கு கூடியிருந்த மக்கள் இந்த மகிழ்ச்சியான சம்பவத்தைப் பார்த்து ‘பாரத் மாதா கீ ஜே’ என்றோ இல்லை ‘வந்தே மாதரம்’ என்றோ சொல்லி மகிழாமல் வாஞ்சி அய்யரை கொலைவெறியோடு துரத்துகின்றார்கள். பதறிப் போன வாஞ்சி தலைதெறிக்க ஓடுகின்றார். பாவம் தயிர்சோறும், புளியோதரை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துவந்த அந்த ஜீவனால் அதற்குமேல் ஓட முடியவில்லை. எனவே அருகில் இருந்த கழிவறையில் புகுந்த வாஞ்சி அய்யர் ஆழமாக யோசித்தார். சுட்டபின் காவல்துறை துரத்தும் என்று பார்த்தால் பொதுமக்களும் சேர்ந்தே துரத்துகின்றார்கள். மாட்டினால் அடித்தே கொன்று விடுவார்கள் என்று பயந்த வாஞ்சி அய்யர், பெருமானின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ‘வீர’ மரணம் அடைந்தார். அவர் இறந்த பின் அன்னாரது பாக்கெட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தான் எதற்காக ஆஷ் துரையை சுட்டேன் என எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கி கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சன் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகின்றான். எங்கள் ராமன், ஜிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George v) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகின்றது, அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்

R. Vanchi Aiyar of shencotta

என்று எழுதி இருந்தது. இதை தமிழக சூழலில் வாஞ்சியைப் பற்றியும், ஆஷ் கொலையைப் பற்றியும் எழுதிய பலபேர் தங்களுடைய சாதிய சார்புக்கு ஏற்றவாறு பொருள்கொண்டனர். சில எழுத்தாளர்கள் குறிப்பாக பெ.சு. மணி போன்றவர்கள் திட்டமிட்டே மேற்குறிப்பிட்ட வாஞ்சியின் கடிதத்தை திருத்தி வாஞ்சியை ஒரு விடுதலைப் போராட்ட வீரனாக காட்ட முற்பட்டனர். பஞ்சமன் என்ற வார்த்தையை பஞ்சையன் என்றும் கோமாமிசம் என்பதை எருது மாமிசம் என்றும் மாற்றி வாஞ்சி கொலை செய்ததற்கான கரணத்தை திரித்தனர். இதை ஏற்கனவே தோழர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றார். பெ.சு. மணி மட்டும் அல்ல இன்னும் பல பேர் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக தன் விரும்பம் போல கடிதத்தின் வார்த்தைகளுக்குப் பொருள் கொடுத்தனர்.

வாஞ்சி அய்யர் மூளையில் அன்று ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது கோடான கோடி இந்திய மக்களின் விடுதலை உணர்வு அல்ல என்பதும், அது இந்திய தேசிய இயக்கம் என்ற பெயரில் அன்று செயல்பட்டுக் கொண்டிருந்த பிராமணனால் சபாவின் கொள்கைகள் என்பதும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள ஸனாதன தர்மத்தின் மீதான அவரின் ஆவலும், ராமன், ஜிவாஜி, கிருஷ்ணன், குரு கேவிந்தர், அர்ஜூனன் போன்ற இந்து குறியீடுகள் போன்றவற்றின் மீதான பற்றும் அதைவிட மேலாக பஞ்சமன் என்று சொல்லி, இந்து மதத்திற்கு உள்ளேயே வரத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட மாட்டுக்கறி தின்னும் மக்கள் மீதான வாஞ்சியின் வெறுப்பும் இந்தக் கடிதத்தில் அப்பட்டமாகவே காணப்படுகின்றது.

மாட்டுக்கறி தின்னும் தலித் மக்களை மட்டுமே அன்று குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சமன் என்ற வார்த்தையை தலித் மக்களைப் போலவே மாட்டுக்கறி தின்னும் பிரிட்டிஷாரை குறிக்க வாஞ்சி அய்யர் பயன்படுத்தி இருக்கின்றார். ஆனால் சில பார்ப்பன சார்பு வரலாற்றாளர்கள் பஞ்சமன் என்பது ஐந்தாம் ஜார்ஜை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்புகின்றனர். அப்படி வாஞ்சி அய்யருக்குச் சாதிவெறி இல்லை என்றால் அவர் ‘கோமாமிசம் தின்னக் கூடிய’ என்ற சொல்லை பயன்படுத்தி இருக்க மாட்டார்.

இந்தப் பார்ப்பனக் கண்ணோட்டம் வாஞ்சி அய்யருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல அன்று தன்னை சுதந்திர போராட்ட வீரராக காட்டிக்கொண்ட பெரும்பாலான நபர்களுக்கு இந்தக் கண்ணோட்டமே இருந்தது. பாரதி கூட தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஈனப் பறையரேனும்’ என்று எழுதி இருப்பார். இந்து சனாதனவாதிகளால் இந்து மதத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள் அல்லது அதைக் கடைபிடிக்காதவர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் ‘மிலேச்சன்’ என்கின்ற வார்த்தையை வாஞ்சி அய்யர் பயன்படுத்தியது போன்று பாரதியும் தன்னுடைய பாடலில் ‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’ என்று பயன்படுத்துகின்றார். புரட்சி பார்ப்பனர்களிடம் எவ்வளவு ஒற்றுமை என்று பார்த்தீர்களா!.

ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து வென்றெடுத்து தனது பழம் பெருமைகளையும், இழந்த தனது அதிகாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பிய பார்ப்பனர்களின் புகலிடமாகவே அன்றைய பெரும்பாலான தேசிய இயக்கங்கள் இருந்தன. மக்கள் மீதான பிரிட்டீஷ் அரசின் ஒடுக்குமுறையைப் பார்த்து சுதந்திர போராட்டத்தில் குதித்த பார்ப்பனர்களை விட சனாதன தர்மத்தைக் காப்பாற்ற சுதந்திர போராட்டத்தில் குதித்த பார்ப்பனர்களே அதிகம். அதில் வாஞ்சி அய்யரும் விதிவிலக்கில்லை.

வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை சுட்டதற்கான காரணத்தை நேரடியாகவே எழுதி வைத்திருக்கின்றான். ஆனால் அதை ஒதுக்கிவைத்து விட்டு அவன் வ.உ.சி நடத்தி வந்த சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நடத்தவிடாமல் ஆங்கில அரசாங்கம் தடுத்ததும், வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்களை ஆங்கில அரசாங்கம் கைது செய்ததும்தான் இந்தக் கொலைக்கு முக்கிய கரணம் என்று சில வரலாற்றுப் புரட்டர்கள் வேண்டுமென்றே எழுதுகின்றார்கள். அப்படி சுதேசி கப்பல் கம்பெனிக்காகவும் வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா கைது செய்யப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஆஷ்துறையை வாஞ்சி அய்யர் சுட்டிருந்தார் என்றால் அதை வெளிப்படையாகவே தனது கடித்ததில் வாஞ்சி அய்யர் குறிப்பிட்டு இருந்திருப்பார். ஆனால் வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை சுட்டதற்கும் வ. உ.சியின் சுதேச கப்பல் கம்பெனிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையே அவரது கடிதம் தெளிவாக காட்டுகின்றது.

ஆஷ் கொலைவழக்கில் அப்ரூவரான சோமசுந்தரம் பிள்ளை இதே கருத்தையே அதாவது சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் ஆஷ் தலைமையேற்றதால் அவரை கொல்ல வேண்டும் என்று வாஞ்சி தன்னிடம் கூறியதாக அவர் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்த போதும் நம்மால் அதை ஒரு வலுவான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் வாஞ்சியின் கடித்தத்தில் இல்லாத ஒன்றையே சோமசுந்தரம் பிள்ளை வாஞ்சியின் கருத்தாக கூறுகின்றார். மேலும் இந்தக் கொலை வழக்கில் சதி அம்சம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது இறுதியான முடிவு என்னவென்றால் வாஞ்சி அய்யர் சனாதன தர்மத்தை வெள்ளையர்கள் மீறுகின்றார்கள் என்ற பார்ப்பன கோபத்தின் விளைவாகவே ஆஷ் துரையைச் சுட்டார் என்பது. மற்ற படி அவர் பிரிட்டீஷ் ஆட்சியால் இந்திய மக்கள் அடைந்த துன்பத்தைப் பார்த்து வேதனைப்பட்டு அதைக் களைய வேண்டும் என்ற உந்துசக்தியின் விளைவாக எல்லாம் பிரிட்டீசாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தவில்லை. இந்த மையமான கருத்தைப் புரிந்து கொள்வதில்தான் உண்மையான புரட்சியாளர்களுக்கும் போலி சனாதன புரட்சியாளர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

- செ.கார்கி