raghuramrajan modi

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு – 1947-இல், தன் அமைச்சரவையில் பொருளாதார வல்லுநர் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியாரை – இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக – இணைத்துக் கொண்டார்.

நேரு யார்? இந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் யார்?

நேரு- காங்கிரசின் தனிப் பெரும் பிம்பம்.

ஆர்.கே.சண்முகம் செட்டியாரோ, இதற்கு நேர் மாறான கருத்துப் பள்ளியைச் (School of thought) சேர்ந்த – Pro British – முத்திரை குத்தப்பட்ட ஜஸ்ட்டிஸ் பார்ட்டியில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதாவது – காங்கிரசுக்கு நேர் எதிர் முகாமில் இருப்பவர்.

தன் சொந்தக் கட்சிக்காரர்களின் எதிர்ப்புக்கும் – கடுமையான விமர்சனங்களுக்கும் செவி சாய்க்காமல் - ஆர்.கே.சண்முகம் செட்டியாரை நிதி அமைச்சராக்கி, நிபுணத்துவம் எங்கிருந்தாலும் – அதைத் தேடிக் கொண்டு வந்து – இந்த இந்திய மண்ணிற்கு அடி உரமாக்கி அர்ப்பணிக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையை விதைத்து விட்டுச் சென்றார்- நேரு.

இது போன்ற உயர்ந்த சிந்தனைகள் எல்லாம் – உருக்குலைந்து உளுத்துப்போய் நிற்கும் காலம் இது. காவிப் பித்து தலைக்கேறி – புழுதிக் காற்றாய்ச் சுழன்றடித்து – குப்பைk கூளங்களைய எல்லாம் வாரி வீசி முகத்திலடிக்கும் காலம். சிங்கம் அமர்ந்து கர்ஜிக்க வேண்டிய இருக்கைகளில் – சுண்டெலிகளைக் கொண்டு வந்து அமரவைத்து – மோடி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் மோசடிக் காலம்.

தகுதியற்றவர்களாக இருந்தாலும், அது பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் - தங்கள் பரிவார ஆட்களைக் கொண்டு- உயராய்வு நிறுவனங்களை நிரப்புவது பா.ச.க ஆட்சியின் கண்ணியமற்ற - அருவருப்பான –திமிரான - போக்காக உள்ளது.

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் தலைவராக அமர்த்தப்பட்ட கஜேந்திர சவுகான்,

இந்திய வரலாற்றுக் கழகத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட சுதர்சன ராவ்,

தேசிய புத்தக ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட பாலதேவ் சர்மா,

திரைப்படத் தலைமைத் தணிக்கையாளராக அமர்த்தப்பட்ட பாலாஜி நிகலானி,

சிம்லாவில் உள்ள ‘இந்திய உயர்கல்வி ஆய்வு மய்யம்’ என்ற அரசு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர கலாபாடியா,

‘தேசிய நூல் அறக்கட்டளை’ என்ற அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பல்தேவ் சர்மா,

இந்திய கலாச்சார உறவுகளுக்கான மய்யத்தின் (ICCR) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் லோகேஷ் சந்திரா போன்றவர்கள்-

அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உரிய தகுதி பெற்றவர் அல்லர். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் என்பது மட்டுமே அவர்களின் தகுதி!

இந்த நிலையில்,வெளியில் செல்லும் ரகுராம் ராஜனையும் – உள்ளே நுழையும் சேட்டன் சவுகானையும் சேர்த்து வைத்துப் பார்க்க நேர்கிறது.

ரகுராம் ராஜன், இந்தியத் தொழில நுட்பக் கழகம்- இந்திய மேலான்மைக் கழகம்- MIT (Massachusets Institute of Technology) போன்ற புகழ் பெற்ற பள்ளிகளில் பயின்றவர். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் “சிகாகோ பொருளியல் பள்ளி”-யில்- பேராசிரியர். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர். உலகறிந்த பொருளாதார நிபுணர். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர். 11 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை- 5 சதவீதமாகக் குறைத்தவர். வளர்ச்சி விகிதத்தை - 5 சதவீதத்திலிருந்து ஏறக்குறைய 8 சதவீதமாக உயர்த்தியவர். ஒளிவு மறைவற்ற பேலன்ஸ்ஷீட்டைத் தந்து வெளிப்படைத் தன்மையை வளர்த்தெடுத்தவர்.

நிறுவனத்தில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களைப் பெருக்கித் தள்ளிக் குத்துவிளக்கேற்றி ஒளிரச் செய்தவர். மோடி ‘இந்தியாவில் செய்வோம்’ என்னும் பொருளாதாரத் திட்டத்தை - நேரடியாகவே விமர்சித்தவர். மோடியின் one man army – எனும் கொள்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் – ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தைக் குறைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்தவர். சிறிது நாட்களுக்கு முன்- இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றிப் பேசும்பொழுது - 'பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் உடையவரே மன்னன்' என்று சொல்லி – காவி தர்பாரின் கடுங்கோபத்தையும் பகையையும் சேகரித்துக் கொண்டவர். ஆர்.எஸ்.எஸ்-ன் வெறித்தனமும் – அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் ஒன்றுபட்டு – இவர் மீது புழுதிவாரித் தூற்றும் கழிசடைப் பேச்சிற்கு ஆளாகி உள்ளவர். கும்பகோணம் பார்ப்பனராகிய ரகுராம் ராஜனுக்கு- சோழவந்தான் பார்ப்பனராகிய சுப்பிரமனியசுவாமி - வில்லலனாக வந்து கொளுத்திப் போட்டிருக்கும் திமிர்த்தனத்திற்கு ஆளாகியுள்ளவர். இறுதியாக - இந்த ஓநாய்க் கும்பல்களிடமிருந்து விடுவித்துக்கொள்ள வழிவகை தேடியுள்ளவர்.

இவர்தான் ரகுராம் ராஜன்

சேட்டன் சவுகான் உ.பி-யைச் சேர்ந்தவர். மட்டைப் பந்து பிடித்து- பரவலாக அறியப்பட்டு-பா.ஜா.க-வுக்குள் நுழைந்தவர். 1991-1998-ல் பி.ஜே.பி. எம்.பி., அதன்மூலம் அர்ஜுனா விருதை அள்ளிக் கொண்டவர். டிடிசிஎ கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவர். கிரிக்கெட் வாரியத்தில் நாற்றமெடுத்துப் பெருக்கெடுத்து வந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அதன் ‘விசிலடிச்சான் குஞ்சாய்’ ஊடகங்களால் பெயர் சூட்டப் பட்டவர். அருண் ஜேட்லியின் – கைபாணமாய் அமைந்து –அமித்ஷா மற்றும் மோடியின் கடைக்கண் பார்வை பெற்று-( நிஃப்ட்) நேஷனல் இன்ஸ்ட்டியுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் – அரிச்சுவடியே தெரியாமல்- அதற்கு- சேர்மன் ஆகி உள்ளவர்.

மொட்டைத் தலைக்கும் – முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல் –புகழ் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனத்திற்கு – மட்டைப் (பந்துப்) புத்தியுள்ள – கிரிமினல் பின்னணி கொண்ட ஒருவரைக் கொண்டு வந்து – சேர்மனாக்கி வைத்திருக்கும் இப்படி ஓர் இழி நிலையை வேறெங்கும் பார்க்க முடியுமா?

அத்தனை தகுதிகள் நிறைந்த ரகுராம் ராஜனை வெளியேற்றுவதும் –தகுதியே இல்லாத சவுகானைக் கொண்டு வந்து – சிம்மாசனத்தில் அமர வைப்பதும் –இந்தக் காவிக் களியாட்டக் கும்பலைத் தவிர உலகில் வேறு யாரால் நிகழ்த்திக் காட்ட முடியும்?

- மு.பழநிச்சாமி