அன்பிற்கினிய தமிழக மக்களே!

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. ஐந்து வருடம் தமிழகத்தை குத்தகை எடுத்து கொள்ளையடிக்க பெருமுதலாளிகளின் சுரண்டல் நலன் காக்கும் கட்சிகளான (அரசியல் தரகர்களான) அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசு, பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), தே.மு.தி.க. மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் (அரசியல் தரகர்களும்) பண பெட்டிகளுடனும், கூட்டணி ஆரவாரங்களுடனும் நமது வீதிகளில் கார்களில் ஊர்வலமாக பறக்கின்றனர். வெற்று வாக்குறுதிகளை வாரி... வாரி... வழங்குகின்றனர். சாராயம், பணத்தை தண்ணீராய் இறைத்து வாக்கு சேகரிக்க இரவு, பகலாக மக்களை மொய்த்து வருகின்றனர். பதவியில் அமர்ந்த பின் மக்களை திரும்பி கூட பார்க்காத இத்தகைய கட்சிகளை புறக்கணிப்போம்! பெருமுதலாளிகளின் சுரண்டலை காத்திடும் இந்த அரசியல் தரகர்கள் தமிழகத்திற்கு செய்தது தான் என்ன?

தமிழகத்தின் இயற்கை வளத்தையும் தமிழக மக்களின் உழைப்பையும் கொள்ளையடிக்கும் கார்ப்ரேட் முதலாளிகளின் எடுபிடிகளே அரசியல் தரகர்கள்.

உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்ரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக கொண்டுவரப்பட்ட உலகமயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கள், பொருளாதார கொள்கையின் அடிப்படையில் மீனவர்களின் பல்வேறு போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கூடங்குளம் அனுமின் நிலையத்தை நிறுவினர். அ.இ.அ.தி.மு.க. மீனவர் போராட்டத்தை காக்கி சட்டைகளை கொண்டு அடக்கி அனுமின் திட்டத்தை நிறைவேற்றியது. மக்களின் நலனில் கிஞ்சித்தும் அக்கறையில்லாமல் மமதையுடன் அனுமின் நிலையங்கள் 2 , 3, 4 என நிறுவி வருகின்றனர்.

காவிரி நதிநீர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வை காணாமல் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து வந்த மேற்கூறிய அரசியல் கட்சிகள் (அரசியல் தரகர்கள்) தற்போது கார்ப்ரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக காவிரி டெல்டா விவசாயத்தை அழித்து பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றனர். கெயிலுக்கு எதிரான காவிரி டெல்டா விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தை கண்டு பின்வாங்கிய இந்த முதலாளிய எடுபிடி கட்சிகள்

ஒ. என்.ஜி.சி. மூலமாக திருட்டுத்தனமாக மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனிக்கின்றனர். கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயை தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உச்சி குடுமி மன்றத்தின் முதலாளித்துவ விசுவாச தீர்ப்பின் அடிப்படையில் விவசாய நிலங்களில் புதைத்து வருகின்றனர். நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையை பறிக்கும் “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை” கொண்டு வரத்துடிக்கின்றனர். உரங்கள் மீதான மானியத்தை முற்றிலும் இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகள் படிப்படியாக நடந்து கொண்டிருக்கின்றது. விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிகளுக்கு மறுக்கப்படுகின்றது. கொள்ளைக்கார வியாபாரிகளாலும், அரசாலும் விளைபொருட்கள் குறைந்த விலைக்கு வாங்கப்படுகிறது.

தஞ்சை விவசாயி வாங்கிய டிராக்டருக்கான மாத தவனையை கட்டவில்லை என்று காக்கி சட்டைகள், கொள்ளைக்கார வங்கியின் அடியாட்களாக வந்து விவசாயியை அடித்து உதைக்கின்றனர். 9,000 கோடிக்கு மேல் வங்கியில் கடன் வாங்கி திருப்பிதராத கார்ப்ரேட் தலாளி விஜய் மல்லய்யாவை பாதுகாத்து வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைக்கின்றனர் அரசியல் தரகர்கள். கல்விக்காக, சிறு தொழில் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமல் போனால் பொருட்கள் ஜப்தி செய்யப்படுகின்றது. ஆனால் பெருமுதலாளிகள் வாங்கியுள்ள பல லட்சம் கோடி கடன்கள் வாராக்கடன் என வங்கியால் அறிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றனது. தொழில் உத்தரவாத மின்மை, குறைந்த கூலி, மிக அதிக நேர உழைப்பு சுரண்டல் என தொழிலாளர் மீதான சுரண்டல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக பெண்களின் மீதானஉழைப்பு சுரண்டல் மிக கொடூரமாக நடந்து வருகிறது.

கல்வி, மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகி வருகின்றது. கல்வியும், மருத்துவமும், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கார வணிக மயமாக்கபடுகின்றது. பணமிருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகின்றது. ஏழைகளுக்கு தரமான கல்வி என்பது கனவாக மாறி வருகின்றது. மருத்துவம் தனியார் மயமானதன் மூலம் பணக்காரர்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை உருவாகி வருகின்றது.

நம் தாய் மொழியாம் தமிழ்மொழி ஆங்கில ஆதிக்கத்தாலும், சமஸ்கிருத, இந்தி திணிப்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றது.

இவை அனைத்திற்கும் காரணமான உலகமயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் பொருளாதார கொள்கையை ஆதரித்தும், தீவிரமாக நடைமுறைப்படுத்தியும் வரும் கட்சிகளே தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரசு, பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), தே.மு.தி.க. மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளாகும். இந்த கட்சிகளுக்குள் உள்ள ஒரே வித்தியாசம் சில கட்சிகள் நேரடியாக இப்பொருளாதார கொள்கையை ஆதரிப்பதோடு தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. மக்கள் நலக் கூட்டணியில்... இல்லை... இல்லை.. விஜயகாந்த் கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பதாக நாடகமாடுகின்றனர். சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்) திரிபுவாதிகள் சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவ சுரண்டல் நலன் என்ற அடிப்படையில் இவர்கள் ஆண்ட மாநிலங்களில் இப்பொருளாதார கொள்கையையே நடைமுறைப்படுத்தினர்.

வளர்ந்து வரும் சாதி பயங்கரவாதம்

நமது தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகின்றது. பா.ம.க. ராமதாசின் ஆதிக்க சாதி வெறியை ஏன் சாதி வன்மத்தை தூண்டும் கருத்து பிரச்சாரத்தாலும், சமூக நல கூட்டமைப்பு என்று வன்னியர், வெள்ளாளர், முக்குலத்தோர் உழைக்கும் மக்கள் மத்தியில் தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்மம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

தருமபுரி இளவரசன் படுகொலை மூலம் வன்னியர் சாதி வெறியும், கோகுல்ராஜ் கொலையின் மூலம் கொங்கு வேளாளர் சாதி வெறியும், உடுமலை பேட்டை சங்கரின் கொடூர கொலையின் மூலம் முக்குலத்தோர் சாதி வெறியும், கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக ஆதிக்க சாதியிலுள்ள பெண்ணை தலித் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்யும் போதே ஆதிக்க சாதியினரின் ஆணவக் கொலைகள் அரங்கேற்றபடுகின்றது. தலித் பெண்ணை ஆதிக்க சாதியிலுள்ள ஆண் திருமணம் செய்யும் போது ஆணவ கொலைகள் நடைபெறுவது இல்லை. இதிலிருந்து பெண் மீதான (ஆணாதிக்க) தாக்குதல் என்பதே சாதிவெறியின் வெளிப்பாடாக உள்ளது. தலித் மக்கள் மீதான தாக்குதல் என்பது மேலும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தேர் எரிப்பு, சுடுகாட்டுக்கு செல்லும் வழி மறுப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரத்தில் உரிமை மறுப்பு...

சாதி பயங்கரவாதத்திற்கு முடிவுக்கட்டி, ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்களை சாதிவெறியிலிருந்து மீட்டெடுத்து தலித் மக்களுடன் ஐக்கியப்படுத்தி போராடி சாதி ஒழித்த தமிழகம் படைப்பதற்கான போராட்ட களத்தில் எந்த ஒரு கட்சியும் (அரசியல் தரகர்களும்) துரும்பைக்கூட அசைத்தது கிடையாது.

இந்து மத பயங்கரவாதம்

அரசியலில் ஆட்சியை பிடிப்பதற்கான துருப்புசீட்டாக இந்துத்துவாவை முன்வைக்கும் பா.ஜக. இந்தியாவை இந்து தேசமாக கட்டியமைக்க துடிக்கின்றது. கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடியான பா.ஜ.க வானது. உலகமய  தாராளமய  தனியார்மய கொள்கையை நடைமுறைப்படுத்தவும், இப்பொருளியியல் கொள்கை மூலம் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை அதிகரிக்கவும், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலை (உழைப்பு சுரண்டல், மானியம் துண்டிப்பு, விலைவாசி உயர்வு, வாழ்வாதாரத்தை பறித்தல், கொடூர அடக்குமுறையை ஏவுதல்...) அதிகரிக்கவும் இந்து முஸ்லீம் என்று உழைக்கும் மக்களை பிளவுப்படுத்தி மோதவிடவும், சாதிய மோதலை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடவும், இந்துமத பயங்கரவாதத்தை (இந்து பாசிசத்தை) கட்டியமைக்கின்றது. இத்தகைய இந்து பாசிச கும்பலுடன் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டணி வைத்த கும்பல்கள்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமாகும்.

டாஸ்மாக்கால் தள்ளாடும் தமிழகம்

கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்த்து, சாராயத்தை அரசே ஏற்று நடத்திவருகிறது. வீதிக்கு வீதி டாஸ்மாக் சாராயக்கடைகள். இளையோர் முதல் முதியோர் வரை, மாணவர் முதல் பெண்கள் வரை குடிக்கு அடிமையாகி வருகின்றனர். தமிழகமே போதையில் தள்ளாடுகிறது. பெண்களின் தாலியை பறித்து தாலிக்கு தங்கம் வழங்குகின்றனர். வீட்டில் உள்ள பாத்திர பண்டத்தை எல்லாம் சாராயத்திற்காக பிடுங்கி, மிக்சி, கிரைண்டர் வழங்குகின்றனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி மடிக்கணினி வழங்குகின்றனர். வாய்மூடி மௌனியாய் இருந்த அரசியல் கட்சிகள் தேர்தல் நெருங்க, நெருங்க மதுவிற்கு எதிரான போராட்டம் நடத்துவதாக மார்தட்டி கொள்கின்றனர். மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் இறப்பு ஏற்படுத்திய தாக்கத்தால் தவிர்க்க முடியாமல் சாராய ஒழிப்புக்கு ஆதரவு குரல் எழுப்புகின்றனர்.

ஊழல்  விலைவாசி உயர்வு

ஊழலில் ஊதிப்பெருத்த கட்சிகள் உத்தமர்களாக வேடம் போட்டு நம் வீடு தேடி வருகின்றனர். டான்சி ஊழல், வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு, எல்.இ.டி. பல்வு ஊழல், 2G ஊழல், போபர்ஸ் ஊழல்.. என்று ஊழல் செய்யாத கட்சிகளே இல்லை. இத்தகைய கட்சிகள்தான் ஊழல் எதிர்ப்பு என்று ஊளை இடுகின்றனர்.

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட் (லஞ்சம்) தீர்மாணிக்கப்பட்டுள்ளது. பணி மாற்றத்திற்கு, பணி உயர்வுக்கு, சான்றிதழ் வாங்க, லோன் வாங்க, என்று எங்கெங்கு காணினும் ஊழலடா என ஊழல் மலிந்து கிடக்கிறது. கடவுள் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரோ இல்லையோ ஊழல் தூணிலும், துரும்பிலும் உள்ளது.

விலைவாசியானது கடுமையாக உயர்ந்து மக்களின் அன்றாட வாழக்கையை கடுமையாக பாதித்துள்ளது. 2 வருடத்திற்கு முன் வாங்கிய அரிசி ஒரு கிலோ 25 ரூபாய் என்றால் இன்று 50 ரூபாய். இதே போல் பருப்பு, எண்ணெய் காய்கறிகள் அனைத்தும் 2 மடங்கு, 5 மடங்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்!

காங்கிரசும்  பா.ஜ.க.வும் இந்தியாவை கூறுபோட்டு இந்திய பெருமுதலாளிகளுக்கும், அந்திய முதலாளிகளுக்கும் விற்று வருகின்றனர். இந்தியாவை முதலாளிகளின் சுரண்டல் காடாக்கி வருகின்றனர். இந்திய பெருமுதலாளிகள், அன்னிய முதலாளிகளின் சுரண்டல் நலனுக்கு சேவகம் செய்வதே “தேச பக்தி” என்று பா.ஜ.க. வால் முன்னிறுத்தப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை எதிர்ப்போர் தேச விரோதிகளாக் கப்படுகின்றனர். இந்துத்துவாவை, இந்து தேசத்தை உயர்த்தி பிடிப்போரே “தேச பக்தர்கள்” என்று பா.ஜ.க. காட்டு கூச்சல் போடுகிறது. பன்முகத்தன்மையை உயர்த்தி பிடிப்போர், இந்துத்துவாவை எதிர்ப்போம், சனநாயக வாதிகள், பகுத்தறிவாளர்கள், மக்கள் போராளிகள், புரட்சியாளர்கள், "தேச விரோதிகள்” என முத்திரை குத்தப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுகின்றனர். துப்பாக்கி முனையில் பழங்குடிகளை காட்டிலிருந்து வெளியேற்றி கார்ப்பரேட் முதலாளிகள் கனிம வளங்களை கொள்ளையடிக்க வழிகோளுகின்றனர். கடல் மீன் பிடிப்பை அன்னிய பெரு முதலாளிகளுக்கு உரிமையாக்குவதன் மூலமும், கூடங்குளம், அனுமின் திட்டத்தின் மூலமும் மீனவர்களை கடல் அன்னை மடியிலிருந்து தூக்கியெறிகின்றனர். மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி, பெரு முதலாளிகள் கொள்ளைக்கு வழிகோலுகின்றனர். பொதுத்துறையை அன்னிய நாட்டுக்கு விற்பதோடு, இந்திய பாதுகாப்பு துறையையே 100% அன்னிய முதலீட்டுக்கு விற்க முடிவெடுத்ததன் மூலம் பா.ஜ.க. பட்டவர்த்தனமாக தனது தேசவிரோதத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழக மக்களே யார் தேச பக்தர்கள்? யார் தேச விரோதிகள்? என்று அடையாளம் காண வேண்டிய நேரமிது! இந்த நாடு மக்களுக்கானது! பெரு முதலாளிக்கானது அல்ல! நாட்டை அன்னிய முதலாளிகளுக்கு விற்க அனுமதியோம்! என்று முழங்க தேச விடுதலை போராட்டத்தை ன்னெடுக்க வேண்டிய நேரமிது.

மாநில (தமிழ் தேச) உரிமை பறிப்பு  மத்தியில் அதிகாரம் குவிப்பு

தமிழ் தேசத்திற்கான உரிமைகள் அனைத்தும் ஏற்கனவே பறிக்கப்பட்டு, மிச்ச மிருந்த கொஞ்ச, நஞ்ச உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்படுகிறது. தமிழ் தேசிய குடியரசு  சுதந்திர தேசங்களின் கூட்டரசு என்ற அடிப்படை அரசியலை மழுங்கடித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை முன் வைத்த கட்சிகள் தமிழ் தேச உணர்வை ஓட்டு பொறுக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்திய ஒன்றிய அரசு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ளது. காவிரி, முல்லை, பெரியாறு பிரச்சனைக்காகவும், பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்காகவும், சிங்கள இனவெறி அரசால் நித்தம், நித்தம் பெரும் பாதிப்புக்கும், உயிரிழைப்பிற்கும், உள்ளாகும் தமிழக மீனவர்களுக்காக என்று நம் ஜீவாதார சிக்கல்களுக்காக மத்திய அரசிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலையிலேயே நமது தமிழ் தேச உரிமையுள்ளது. நமது தொப்புள் கொடி, உறவுகள் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இன வெறி அரசுக்கு, இந்திய பெரு முதலாளிகளின் சுரண்டல் நலனுக்காக இந்திய அரசு துணை போனபோதும் அனைத்து கட்சிகளும் இந்திய அரசிடம் கையேந்தி பிச்சை கேட்பதையே தமிழ் தேசிய உரிமை போராட்டம் என நம்மை காயடிக்கின்றனர்.

தமிழ்தேச போராளியாக புது அவதாரம் (அரிதாரம் பூசியுள்ள) எடுத்துள்ள “இனவாத பாசிச கோமாளி” சீமான் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என முழக்கமிடுகிறார். "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என பாசிச ஜெயலலிதாவுக்கு ஈழ ஆதரவு ஓட்டுகளை பொறுக்கி கொடுக்க ஜெயலலிதாவின் தொங்கு சதையாக தன் அரசியல் வாழ்வை தொடங்கி, இன்று தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கிறார். தமிழன் என்றால்  எந்த தமிழன்? தமிழக மக்களின் உழைப்பை சுரண்டும் டி.வி.எஸ். ஐயங்கார், பொள்ளாச்சி மகாலிங்கம், பாரிவேந்தன், செட்டிநாடு குழுமம், முருகப்பா குழுமம், வைகுண்டராஜன் போன்ற இந்திய பெருமுதலாளிகள் தமிழன்தான் என்று ஆள சொல்கிறாரா? சாதி வெறிப்பிடித்த ராமதாஸ், கொங்கு வேளாளர், முக்குலத்தோர் சாதி வெறி அமைப்புகளின் தலைவர்கள் தமிழன்தான் என்று ஆள சொல்கிறாரா? மூப்பனார், வாண்டையார் போன்ற மூலதன சாதி நிலக்கிழார்களை தமிழன்தான் என்று ஆள சொல்கிறாரா? அதிகாரமற்ற சட்ட மன்ற முதலாளித்துவ வடிவம்தான் தமிழகத்தின் அதிகார அமைப்பு என்கிறாரா?

தமிழன் ஆள வேண்டும் என்றால் இந்திய பெருமுதலாளிகள் (டாடா, பிர்லா, ரிலையன்ஸ் மற்றும் தமிழகத்தில் உள்ள டி.வி.எஸ். ஐய்யங்கார், சக்தி குழுமம், பாரிவேந்தர், சன் தொலைக்காட்சி, மீனாட்சி குழுமம்...) ஏகாதிபத்திய முதலாளிகள், மூலதன  சாதி “சாதி நிலக்கிழார்கள் அதிகாரம் வீழ்த்தப்பட வேண்டும், தொழிலாளி வர்க்க தலைமையில் உழவர்கள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்துகள், மீனவர்கள், பழங்குடியினர், மதசிறுபான்மையின மக்களின் அதிகாரம் படைக்க வேண்டும். முதலாளித்துவ சட்டமன்ற வடிவத்திற்கு மாற்றாக சுதந்திர தமிழ்தேசிய குடியரசு அமைய வேண்டும். மக்கள் ஆட்சி மன்றத்தின் மூலம் அதிகாரம் பரவலாக்க வேண்டும். சாதி ஒழித்த தமிழகம் மலர வேண்டும். அப்பொழுதுதான் தமிழன் ஆள முடியும். மற்றபடி சீமான் முதலாளித்துவ எடுபிடியாக நம் காதில் பூச்சுற்ற முயற்சிப்பது தான் “தமிழன் ஆள வேண்டும்” என்ற முழக்கம்.

ஆளும் கட்சிகள் மாறி பயனில்லை அதிகாரம் மாற்றம் வேண்டும்.

சட்டமன்றமும், பாராளுமன்றமும் முதலாளித்துவ வடிவமே, தேர்ந்தெடுக் கப்பட்டவர்களுக்கு இங்கு அதிகாரம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்தால் அவர்களை திரும்ப பெறும் உரிமை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இல்லை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜனாதிபதி நினைத்தால் களைத்துவிடலாம். தொழிலாளர், விவசாயிகள், பெண்கள், தலித்துகள், மீனவர்கள், பழங்குடி மத சிறுபான்மையின மக்கள் என அனைவரின் அதிகாரத்தை, சனநாயக உரிமையை உறுதி செய்திட விகிதாச்சார பிரதிநிதித்துவமும் இல்லை, மக்களுக்காக அதிகாரம் பரவலாக்கப்படாமல்

முதலாளிய சுரண்டல் நலனுக்காக அனைத்து அதிகாரமும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிக்கப்படுகிறது. இத்தகைய சிக்கல்களை தீர்க்க ஆட்சி மாறி பயனில்லை. அதிகார மாற்றமே தீர்வு இத்தகைய இலட்சிய நோக்குடன் போராடி கொண்டிருக்கும் மக்கள் சனநாயக குடியரசு கட்சி கீழ்கண்ட கோரிக்கைகளுக்காக சட்டமன்றம் உட்பட அனைத்து தளங்களிலும் போராட உறுதி பூண்டுள்ளதோடு! மக்களையும் அறைகூவி அழைக்கிறது.

தமிழக மக்களே!

காவிரி டெல்டாவை பாலைவன மாக்கும் மீத்தேன் திட்டத்தை முறியடித்திட! ஓ.என்.ஜி.சி. உட்பட அனைத்து நிறுவனங்களையும் விரட்டியடித்திட!

காவிரி நதி நீர் சிக்கலில் தமிழகத்தின் உரிமைக்காக போராட!

கல்வி, மருத்துவம் அரசே ஏற்று நடத்திட!

தாரளமய  தனியார்மய  உலகமய பொருளியியல் கொள்கையை முறியடித்திட! தமிழ் தேசியத்திற்கென தனி பொருளியியல் கொள்கையை வகுத்திட!

சாதி பயங்கர வாதத்தை ஒழிக்க!

இந்துத்துவ பயங்கர வாதத்தை முறியடித்திட!

மது ஒழித்த தமிழகம் படைக்க!

ஊழலை  விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்திட!

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அதிகாரம்! தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்தால் திரும்ப பெறும் உரிமைக்காக போராட!

தொழிலாளர், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்கள், மீனவர்கள், மதசிறுபாண்மையின மக்கள், பழங்குடிகளின் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் அதிகாரத்தை உறுதி செய்திட!

மத்திய அரசின் அதிகார குவிப்பை எதிர்த்திட!

தமிழ் தேச குடியரசின் கீழ் “மக்கள் ஆட்சி மன்றங்களுக்கே” அதிகாரம் என்று அதிகாரத்தை பரவலாக்கிட!

உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு நம் தேசத்தை ஏலம் போட்டு விற்கும் முதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்!

நோட்டாவில் வாக்களிப்போம்.

-       மக்கள் சனநாயக குடியரசு கட்சி