PRP granite scam

சென்னை உயர் மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பணி நீக்கம் தொடர்பான முடிவுகள் பரபரப்பாக பேசப் படுகின்றன. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் எவர்மீதும் நடவடிக்கை பாயும்போதும் நமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் மேல் அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மேல் பாயுமா என்றால் இல்லை என்பதுதான் பொதுவான பதில்.

அது ஒருபுறம் இருக்கட்டும். நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளுமே சந்தேகத்துக்கு இடமின்றி முறைகேடு செய்திருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

குற்றவியல் நடுவர் மகேந்திர பூபதியின் லட்சணம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிரிப்பாய் சிரிக்கின்றன. கையூட்டு, அதிகார துஷ்பிரயோகம் என்பதையெல்லாம் தாண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  வன்னி அரசு போன்றவர்கள் மகேந்திர பூபதியும், பி.ஆர்.பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான் பி.ஆர்.பி விடுதலை செய்யப்பட்டார் என்ற தொனியில் எழுதுகிறார்கள்.

எல்லா நிகழ்வுகளுக்கும் சாதிச் சாயம் பூசுவது என்ன மாதிரியான மனநிலை என்பது எனக்குப் புரியவில்லை. அது எத்தகு புரிதலை உருவாகும் என்பதும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

குற்றவியல் நடுவரின் தீர்ப்பு என்பது கேவலமான கையூட்டு என்ற உண்மையை நாடே அறியும்.  பணி யிடை நீக்கம் என்பதைத் தாண்டி நிரந்தர பணிநீக்கம் எனும் கோரிக்கைக்கு நாம் போராடவேண்டியது  அவசியம். என்றாலும் இதில் சாதியை நுழைக்க வேண்டிய அவசியம் என்னயிருக்கிறது என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

சரி, வன்னி அரசுவின் வார்த்தைகளிலேயே வந்தாலும் இன்னொரு நீதிபதி (அதுவும் மாவட்ட செசன்ஸ் நீதிபதி) அன்புராஜ் இருக்கிறாரே அவர் கதையையும் வன்னி அரசுகள் சொல்லவேண்டும் அல்லவா?

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அன்புராஜ் அவர்களின் நிரந்தர பணிநீக்கத்துக்கு காரணம், ஒரு கிட்னி திருடனுக்கு மோசடியான முறையில் பிணை வழங்கியதுதான். கிட்னி மோசடியில் ஈடுபட்ட டாக்டர் கணேசனுக்கு அவசர அவசரமாக பிணை வழங்கியதன் காரணம் என்னவாக இருக்க முடியும்? டாக்டர் கொடுத்த பணமாக இருக்குமா அல்லது அவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் இருக்குமா!?

கிட்னி மோசடி வழக்கு தொடர்பாக அய்யாவு என்பவர் அம்மாவட்டத்தில் அப்போது கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கணேசன் என்ற டாக்டரும் கிட்னி விவகாரத்தில் சிக்கினார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் டாக்டர் கணேசன் ஜாமீன் கேட்டு, தர்மபுரி முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி வணங்காமுடி ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஜூன் 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். பின்னர் அவர் விடுமுறையில் சென்று விட்டார். இந்த நேரத்தில் அதே கோர்ட்டில் பணி புரிந்து வந்த மற்றொரு நீதிபதியான அன்புராஜ், முதன்மை செசன்ஸ் நீதிபதி பொறுப்பை கவனித்தார். அப்போது அவர் மிகவும் அவசரமாக செயல்பட்டு டாக்டர் கணேசனின் ஜாமீன் மனுவை முன்கூட்டியே (முந்தைய நாளான ஜூன் 24) விசாரித்து அவருக்கு ஜாமீன் வழங்கினார். இதற்காக அவர் கிட்னி மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வந்த பெண்ணாகரம் கோர்ட்டுக்கு தனது காரை அனுப்பி வைத்து வழக்கு ஆவணங்களை வாங்கி வரச்செய்தார்.

பிணை ஆணை வழங்கிய அன்று வழக்கு பட்டியலில்  டாக்டரின் வழக்கு இல்லவே இல்லை. மேலும் வழக்கு தொடர்பான அரசு வக்கில் வாதம் காற்றில் பறக்கவிடப்பட்டது. ஒரு கிட்னி திருடனின் வழக்கு கோப்புகளை கொண்டு வர நீதிபதியின் கார் பென்னாகரம் நீதிமன்றம் வரை அவசர அவசரமாக பயணிக்கிறது. 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பென்னாகரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்கில் அதேநாள்  மாலை 4 மணிக்கு அன்புராஜால் பிணை ஆணை வழங்கப்பட்டது.

ஊழல் மலிந்த சமுதாயத்தில் எல்லா சாதிகளிலுமே இத்தகு கழிசடைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இன்றய  கார்பரேட் மயமாக்கப்பட்ட  காலத்தால் வளர்ச்சி பெறுகிறார்கள். முடை நாற்றம் எடுக்கும் சமூகத்தில் பெருச்சாளிகளாய் வலம் வருகிறார்கள். மேலே சொன்னவாறு இது அத்தனை சாதிகளுக்கும் பொருந்தும். அவற்றில் விகித மாறுபாடுகள் இருக்கலாம் அது வேறு விஷயம்.

எல்லா சாதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகளையும் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைத்து  இத்தகு தேசவிரோத மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக போராடும் போதுதான் இத்தகு தீ்மைகள் ஒழிக்கப்படுமே அன்றி , எல்லா அம்சங்களுக்கும் சாதிச்சாயம் பூசுவதும், ஆணவக் கொலைபுரிந்த நபர்களின் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோருவது போன்ற அணுகு முறைகளும் வர்க்க சமுதாயத்தை கூறுபோடப் பயன்படுமே அன்றி சாதிய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது.

- பாவெல் இன்பன்