தமிழக அரசு சில தினங்களுக்கு முன்னால் அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அதில் இனி லஞ்ச- ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது புகார் பதிவு செய்யப்படுவதற்கு அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டு இருக்கின்றது. அதாவது முன்புபோல லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாகப் பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இனி இந்த நபர் லஞ்சம் வாங்குகின்றார் என முதலில் நீங்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உங்கள் புகாரை கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்கள். கண்காணிப்பு ஆணையம் அது தொடர்பாக அரசின் அனுமதி பெற்று அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கும்.

 jayalalitha 252 மேல் நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை 1992 ஆம் ஆண்டு அப்போதைய ஜெயலலிதா அரசால் வெளியிடப்பட்டது. ஆனால் கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் அல்லது ஊழல் குற்றசாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்க  யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம், அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பதவியை வைத்து பாரபட்சம் காட்டக் கூடாது என ஏற்கனவே கூறியிருந்தது. எனவே மேற்கண்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என  வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாகவே தமிழக அரசு இப்படி ஓர் அரசாணையை வெளியிட்டு இருக்கின்றது.

  வழக்கு தொடர்ந்தவரின் நோக்கம் அனைத்து அரசு ஊழியர்களின் மீதும் அரசின் முன் அனுமதி இல்லாமலேயே நடவடிக்கை எடுக்க  அனுமதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் ஜெயலலிதாவின் ஆட்சியில் இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள நினைத்ததுதான் மிகப் பெரிய தவறு. ஜெயலலிதாவே ஒரு  உலக மகா ஊழல் பேர்வழியாக இருக்கும்போது அவர் தலைமை தாங்கும் அரசு மட்டும் எப்படி யோக்கியமாக இருக்கும்?தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலும் லஞ்சமும் புழுத்துப்போய் நாறிக் கிடக்கின்றது. ஒரு வருமானச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் கூட ஐநூறு, ஆயிரம் என இழவெடுக்க வேண்டி இருக்கின்றது.

  பிச்சைக்காரன் கூட  காசு இல்லை என்று சொன்னால் ரோசப்பட்டு போய்விடுவான். ஆனால் பிச்சைக்காரனை விட கேவலமான பல மானங்கேட்ட அரசு ஊழியர்கள் (நாம் நேர்மையான அரசு ஊழியர்களைச் சொல்லவில்லை) இல்லை என்று சொன்னாலும், நம்மை மிரட்டி பணம் பறிக்கும் மாஃபியா கும்பலாக மாறி இருக்கின்றார்கள். எந்த மக்களுக்காக சேவை செய்ய அரசால் நியமிக்கப்பட்டார்களோ, அந்த மக்கள் தனக்கான சேவையைப் பெற வரும்போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கையை நீட்டுகின்றார்கள். நாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால் ‘உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்’ என்று நம்மிடமே சவால் விடுகின்றார்கள். இந்த மாமா பயல்களுக்கு அரசியல்வாதிகள் தான் இப்படி பேசுவதற்கான துணிச்சலைக் கொடுப்பவர்கள். அரசு ஊழியர்களும், அரசியல்வாதிகளும் கூட்டுபோட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

  ஊழல் ராணி ஜெயலலிதா கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்தின் மூலம் இனி அரசியல்வாதிகளையும் இலஞ்ச, ஊழல் குற்றசாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில் பதவியில் இருக்கும் போது எம்.பி, எம்.எல்.ஏக்களும் அரசு ஊழியர்களாகவே கருதப்படுவார்கள். அதனால் இனி அவிழ்த்துவிட்ட கழுதைகளைப் போல ஆட்டம் போடப் போகின்றார்கள். கிரானைட் ஊழல், தாதுமணல் ஊழல் தொடங்கி பருப்பு கொள்முதல் செய்ததில் ஊழல், அரசு பள்ளிகளுக்கு முட்டை கொள்முதல் செய்தலில் ஊழல், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல், போக்குவரத்துத் துறையில் ஊழல் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பாவிகள் ஊழல் செய்யாத துறையே தமிழ்நாட்டில் இல்லை. இந்த ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட எந்த அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு ஊழியர்களையும்  இனி தண்டிக்க முடியாது. அப்படி தண்டிக்க வேண்டும் என்றால் புரட்டுத் தலைவி, கோல்மால் வள்ளியிடம் அனுமதி வாங்க வேண்டும். அதாவது பேயைக் கைது செய்ய பிசாசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

 அனைத்து அரசு ஊழியர்களின் மீதும் பதவி வித்தியாசம் இல்லாமல், அரசின் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுத்தால் எங்கே தம்முடைய நூற்றுக்கணக்கான ஊழல் முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சமே, ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவை இப்படி ஒரு அரசாணையைக் கொண்டு வரத் தூண்டி உள்ளது. மேலும் தேர்தல் வருவதால் அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதும், அதற்காக அரசு ஊழியர்களை தாஜா செய்யவும் ஜெயலலிதா  இந்த அரசாணையைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் நீயும் நானும் ஒண்ணு, மக்கள் வாயில மண்ணு என்று நிரூபித்துள்ளார்.

  மற்றபடி கீழ்நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் மீது கொண்ட பாசத்தால் இப்படியொரு அரசாணையை ஜெயலலிதா கொண்டுவரவில்லை. சாலைப் பணியாளர்களையும், மக்கள்நல பணியாளர்களையும் நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு பின் இருக்கும் அரசியலை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

 தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களையும் இவர்களது குடும்பத்தில் இருப்பவர்களையும் சேர்த்தால் குறைந்தது 35 லட்சம் ஓட்டுக்களாவது இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 5.668 கோடி பேர். இதனுடன் ஒப்பிட்டால் அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் என்பது கனிசமாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி என்பதை உணரலாம். அனைத்து அரசு ஊழியர்களும் எப்படி ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று சொல்லமுடியும், அதில் உள்ள நேர்மையான அரசு ஊழியர்கள் வேறு யாராவதற்குக் கூட ஓட்டு போடலாமே என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக பெரும்பான்மையாக(!) உள்ள அந்த 0.0000001 நேர்மையான அதிகாரிகளின் ஓட்டு ஜெயலலிதாவுக்கு நிச்சயம் கிடைக்காது!.

  ஜெயலலிதாவின் இந்த ஐந்தாண்டுகால பாசிச ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களிடம் மிகப் பெரிய அதிருப்தி நிலவுகின்றது. ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு, பேருந்துக் கட்டணம் உயர்வு, ரேசன் கடைகளில் மானிய விலையில் மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த பொருட்களை இரண்டு மாதத்திற்கு  ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை  என வழங்கி சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து அதிலும் ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் செய்தது, அத்தனை துறைகளிலும் நடந்துள்ள அதிகார முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள், தமிழகம் முழுவதும் பெரும் அளவில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள், மற்றும் தன்னை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களில் லட்சக்கணக்கானோரை தான் நடத்தும் சாராய ஆலையின் லாபத்திற்காக குடிக்க வைத்து கொலை செய்தது என ஒட்டுமொத்த தமிழகத்தையே ‘அமைதிப் பூங்காவாக’ மாற்றி இருக்கின்றார் ஜெயலலிதா.

  அதனால், வரும் தேர்தலில் எப்படியும் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கரியைப் பூசப் போகின்றார்கள் என்பதை உணர்ந்த ஜெயலலிதா அதற்காக ஊழல் பெருச்சாளிகளான அரசு ஊழியர்களுக்கு முதற்கட்டமாக இந்தச் சலுகையை அறிவித்திருக்கின்றார். அடுத்த கட்டமாக கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களையும் கைது செய்ய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என அரசாணை கொண்டு வரப்படலாம். ஜெயலலிதா போன்ற பாசிஸ்ட்டுகள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆனால் எந்த அரசியல் அறிவும் இல்லாத சுயநலவாதத்திலும், அற்பவாதத்திலும் மூழ்கிப் போன பொரும்பாலான சாமானிய மக்கள் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று சொல்லி திரும்பவும்  தங்களை அதிகாரப்பூர்வமாக யார் கொள்ளையடிப்பது என்பதை முடிவு செய்ய வாக்குச் சாவடிகளுக்குப் படையெடுப்பார்கள்.

- செ.கார்கி