modi in jammu kashmir

காசுமீர் குறித்து மிக முக்கியமான தீர்ப்புகள் அண்மையில் வழங்கப்பட்டிருக்கின்றன.

காசுமீருக்கென்று தனியாக தேசியக் கொடி உண்டு. காசுமீர ஆட்சியதிகாரத்தில் இக்கொடியை பயன்படுத்த வேண்டுமென்றும், இது காசுமீரத்தின் அரசியல் சாசனத்தின் அடிப்படை விதி என்றும், இவ்விதியை மீறுதல் கூடாது என்றும் காசுமீர் உயர்நீதிமன்றம் டிசம்பர் 28, 2015 அன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

காசுமீர் கொடியை அரசு விழாக்களில், அதிகாரிகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில், அலுவலகங்களில் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்று உத்திரவிட்டிருக்கிறது. ஜம்மு-காசுமீர் அரசும், அதன் அரசியல் சாசன நிர்வாகமும் ஜம்மு-காசுமீரத்தின் அரசியல் சாசனத்தின் 144 பிரிவிற்கும், 1979ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரச மரியாதை பாதுகாப்பு சட்டத்திற்கும் உட்பட்டு காசுமீர் கொடியை பயன்படுத்த வேண்டுமென்று சொல்லி இருக்கிறது. ( J& K state government and all constitutional authorities shall adhere to and abide by mandate and spirit of Section 144, Constitution of Jammu and Kashmir, J&K Prevention of Insult to State Honour Act 1979 )

பாஜகவுடன் கூட்டணி அரசு உருவாக்கப்பட்ட பிறகு, பாஜக எம்.எல்.ஏக்கள் காசுமீர் கொடியை பயன்படுத்துவதைத் தவிர்த்து இந்தியக் கொடியை மட்டுமே பயன்படுத்தினர். இது குறித்து காசுமீர் முஃப்டி அரசு எந்த ஆட்சேபணையையும் எழுப்பியதில்லை, மாறாக, கொடியை பயன்படுத்த வேண்டுமென்பது அடிப்படை விதி, அதை வலியுறுத்த வேண்டியதில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னது. இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், அரசின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்று அரசின் முகத்தில் அறைந்து தீர்ப்பினை சொல்லி இருக்கிறது.

முஃப்டி போன்ற காசுமீரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அரசாக இருந்தாலும், பெயரளவுக்கு காசுமீர் தேசியத்தினைப் பேசினாலும், அது உண்மையில் இந்திய அரசிற்கு அடிமையாக நிற்கிறது. அதன் முகமூடியை காசுமீர் உயர்நீதிமன்றம் இப்போது கிழித்தெறிந்திருக்கிறது.

காசுமீர் கொடியை ஏற்றுவது என்பது காசுமீரத்தின் குறைந்தபட்ச இறையாண்மை உரிமை என்று உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இது பாஜகவின் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் கொள்ளலாம்.

kashmir map

இதற்கு முன்பாக ஜூலை 17, 2015ம் தேதியிலும் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இத்தீர்ப்பு மாநில இறையாண்மை, கூட்டாட்சி தத்துவத்தினைப் பேசுபவர்களும் கவனிக்கவேண்டிய ஒன்று.

வங்கிகளில் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த இயலாதவர்களிடமிருந்து கடன் தொகையை மீட்க அவர்களது அசையாச் சொத்துக்களை ஏலம் விடுதல் எனும் சட்டத்தை இந்தியா முழுமைக்குமானதாக இந்திய வங்கிகள் அமுல்படுத்துகின்றன. இதற்கென்று ஒரு சட்டமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சர்ஃபேசி சட்டம் வங்கிகள் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அதிகாரத்தினைக் கொடுக்கிறது. இச்சட்டம் 2002இல் இயற்றப்பட்டது. (The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002, allows banks and financial institutions to auction properties (residential and commercial) when borrowers fail to repay their loans.)

ஆனால் இச்சட்டத்தினை காசுமீரத்தில் அமுல்படுத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பினைக் கூறியது. அதாவது, காசுமீரத்தின் உள்விவகாரங்கள் குறித்த சட்டத்தினை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றினால், அது காசுமீரத்தின் அரசியல் சாசனத்தின் விதிகளுக்கு உட்படாமல் இருக்குமென்றால் அச்சட்டத்தினை காசுமீரத்தில் அமுல்படுத்த இயலாது. ஏனெனில் காசுமீரத்திற்கென்று தனியாக இருக்கும் அரசியல் சாசனம் இறையாண்மை தன்மை கொண்டது. இதன்படி இச்சட்டத்தினை காசுமீரத்தில் நிறைவேற்ற இயலாது.

ஏனெனில் காசுமீரத்தில் அம்மாநிலம் தவிர்த்து பிற இடங்களில் இருப்பவர்கள் சொத்துக்களை, நிலத்தினை வாங்க இயலாது. இதற்கான உத்திரவாதத்தினை காசுமீரத்தின் அரசியல் சாசனம் கொடுக்கிறது. இந்த உத்திரவாதத்தினை அல்லது உரிமையை 370 சட்டப்பிரிவின் மூலம் இந்திய பாராளுமன்றம் மீற முடியாது. இந்திய பாராளுமன்றத்திற்கு காசுமீர் அரசியல் சாசனத்தினை மீறும் அதிகாரம் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் விளக்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் எந்த நிலத்தினையும், சொத்தினையும் இந்திய வங்கிகள் ஏலம் விட இயலாது என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள்.

kashmir flagகாசுமீரத்தின் இந்த குறைந்த பட்ச இறையாண்மையாலேயே இன்னும் காசுமீர் இந்தியப் பெரு முதலாளிகளால் சூறையாடப்படவில்லை, இந்திய அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படவில்லை. இன்றும் அதன் இயற்கை பாதுகாக்கப்படுகிறது. இதை அபகரிக்கவே இந்தியாவின் ராணுவத்தினைக் கொண்டு இந்திய அரசு இன்றளவும் அடக்கி, மிரட்டிக் கொண்டிருக்கிறது. இச்சட்டங்கள் இல்லையெனில் நெய்வேலி, காவிரிப்படுகை போன்ற இடங்களில் வரையறையற்று சூறையாடப்பட்டு தமிழருக்கென்று எந்த பங்கும் கொடுக்கப்படாமல் கொள்ளையடிக்கப்படும் வளங்களைப் போன்று, காசுமீர் சுரண்டப்பட்டிருக்கும். தமிழகத்தின் நதிகளை அழித்தது போல காசுமீர் நதிகள் அழிக்கப்பட்டிருக்கும். சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மலைகள் அழிக்கப்பட்டதைப் போல காசுமீரத்தின் மலைகளில் சுரங்கங்கள் தோன்றி ஜிண்டால் போன்ற கம்பெனிகளால் அழிக்கப்பட்டிருக்கும். இத்தனை சட்டப் பாதுகாப்பிருந்தும் இந்திய அரசின் சூது நிறைந்த தேர்தல் முறைகளில் சிக்கி சீரழியும் காசுமீர் அரசியல்களத்தில் பல போலிகளைப் பார்க்க முடிகிறது. காசுமீர் தேசியத்தினை வாய்கிழியப் பேசும் ஒமர் அப்துல்லா, முஃப்டி போன்றவர்கள் காசுமீர் கொடியை பயன்படுத்த வேண்டுமெனும் காசுமீர் அரசியல் சாசனத்தினைக் கூட முறையாக நிறைவேற்றாத கைக்கூலிகளாக இருப்பதை உயர்நீதிமன்றம் கண்டித்திருப்பதைக் காணமுடிகிறது.

காசுமீரத்தின் இந்த சட்டப் போராட்டம் குறித்து வழக்கம் போல எந்தச் செய்தியும் ‘தி இந்து’ இதழில் காணமுடியாது. தேசிய இனவிடுதலைக்கு எதிரான பார்ப்பனிய சிபிஎம்மின் கொள்கையை தவறாது கடைப்பிடிக்கும் என்.ராமின் கும்பலிடம் எந்தவகையான நேர்மையை நாம் பார்க்க இயலும்.

இந்திய அரசியல் சாசனத்திற்கு தலைவணங்கியவர்கள், காசுமீர் அரசியல் சாசனத்தினை காற்றில் பறக்கவிட்டார்கள். காசுமீர் மக்கள் தொடர்ந்து தங்களது அரசியல் போராட்டத்தின் மூலம் தங்கள் இறையாண்மையை காக்கப் போராடுகிறார்கள்.

மாநில இறையாண்மையை திண்ணையில் இருந்தேனும் கேட்போம் என வியாக்கியானம் பேசிய வாய்சொல் வீரன்கள் தில்லியில் என்ன கிழித்தார்கள் என்பதை ஈழப்படுகொலையின் போதும் , சில்லரை வர்த்தகத்த்தில் அந்நிய முதலீடு, அணு உலை நிலைப்பாடு, மீத்தேன் திட்டம், ஏழு தமிழர் விடுதலை, நீதிமன்றத்தில் தமிழ், முல்லைப் பெரியாறு போன்ற நிலைப்பாடுகளில் பார்க்கவே செய்தோம்... ஈழப்போர் காலத்தில் மேசைக்கடியில் பேரம் பேசிய வீரன்கள், தினம்தோறும் மீனவன் தாக்கப்படும் பொழுதில் ஏதும் பேசாத ஸ்டிக்கர் கட்சியின் 37 முதுகெலும்பற்ற கூட்டத்தினையும் வைத்து என்ன செய்யமுடியும்?

தீவிரமான விவாதமும், அழுத்தத்தினை கொடுக்கும் மக்கள் திரள் அரசியலுமே தமிழகத்தின் இன்றைய அவசரத் தேவை. தேர்தலில் பங்கேற்காத மக்கள் இயக்கங்களின் அரசியலே தமிழகத்தின் அரசியல் எதிர்காலம்.

பார்க்க:

http://timesofindia.indiatimes.com/india/JK-constitution-sovereign-in-character-High-Court/articleshow/48120034.cms

http://indianexpress.com/article/india/india-news-india/govt-must-hoist-state-flag-on-official-buildings-cars-jammu-and-kashmir-hc/

http://www.business-standard.com/article/pf/what-is-the-sarfaesi-act-111061600108_1.html

- திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம்