"சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே" என்பதை, வருணாசிரம அதர்மம் மிக மிக எச்சரிக்கையாக உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஆயுதமாக உருவாக்கியது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்த நிலையிலும், உலகின் பிற பகுதிகளுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையிலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற கருத்து வெட்கித் தலை குனிய வேண்டி இருந்தது. ஆனால் கல்வியை அளித்தால் தங்களுடைய ஆதிக்கத்தின் அடித்தளம் பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் விட்ட பாடில்லை. ஆகவே கல்வியை அளிப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அதே சமயம் கல்வியை அளித்து விடவும் கூடாது என்று ஆதிக்கவாதிகள் திட்டமிட்டார்கள். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் வாஜ்பாய் பிரதம் மந்திரியாக இருந்த போது அறிவிக்கப்பட்ட "அனைவருக்கும் கல்வி" (Sarva Shiksha Abhiyan) எனும் திட்டம். இத்திட்டத்திற்கு மைய அரசு 65% நிதியும் மாநில அரசு 35% நிதியும் ஒதுக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

     அவ்வாறே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளிலும், தட்டிக் கேட்க ஆளில்லாப் பகுதிகளிலும்  இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொழுது, பாரதியாரின் கனவை நனவாக்கினார்கள். அதாவது பள்ளித் தலம் அனைத்தையும் கோயில்களாக்கி, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, பஜனைப் பாடல்களைப் பாடுவதற்கும், பிரசாதம் அளிப்பதற்கும் பயன்படுத்தினார்கள். இச்செயல்கள் சமூக நீதி ஆர்வலர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாயின. எவ்வளவு தான் விமர்சனங்கள் எழுந்தாலும், சூத்திரர்களுக்குக் கல்வி அளித்து விடக் கூடாது எனும் வருணாசிரம அதர்ம ஆணையை மீறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் "செயல்படும்" பிரதமர் வரும் வரையில் பொறுமை காத்தது. "செயல்படும்" பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இவர்களும் "செயல்பட" ஆரம்பித்து விட்டார்கள். மைய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியை 65%இலிருந்து 50%ஆகக் குறைத்து விட்டார்கள்.

     இதை எதிர்த்துக் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர். இதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். தமிழக முதல்வரும் 15.11.2015 அன்று பிரதம மந்திரிக்குக் கடிதம் எழுதினார்.

     திடீரென இப்படி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படும் என்று "சில சமூக ஆர்வலர்கள்" கருத்து தெரிவித்து உள்ளனர். அப்படி என்றால் படிப்படியாகக் குறைத்து இத்திட்டத்தை மறந்து விடலாம் என்று கூறுகிறார்களோ? சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பார்பப்னர்களை ஊடுருவ விடுவதால் தான் இது போன்ற கருத்துகள் வெளி வருகின்றன.

     எப்படியோ வெகு ஆராவாரத்துடன் தொடங்கிய "அனைவருக்கும் கல்வி" எனும் திட்டம் மெது மெதுவாக, அமைதியாக, சிதைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

     சமூக நீதி ஆர்வலர்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகள் கவனக் குறைவால் நடக்கின்றன என்றோ, அக்கறையின்மையால் நடக்கின்றன என்றோ நினைத்தால், அவர்கள் பெருந்தவறு புரிகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் (சூத்திரர்கள்) ஆட்சி அதிகாரக் கல்வியின் புற நிழலின் விளிம்பைக் கூடத் தொட்டு விடக் கூடாது என்ற மிக மிகக் கவனமான, மிக மிக அக்கறையான, முரட்டுப் பிடிவாதத்ததுடன் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் செயல்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனர்கள் அதிகார மையங்களில் நிரம்பி வழிவதாலும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் நலன்களுக்கான முடிவை எடுக்கப் போதிய எண்ணிக்கையில் அதிகார மையங்களில் இல்லாததாலுமே இது முடிகிறது. இதற்கு எதிரகப் போராடி ஒடுக்கப்பட்ட் வகுப்பு மக்கள் அதிகார மையங்களில் தங்களுக்கு உரிய பங்கைப் போராடி அடைவதே நம் நலன்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் வழியாகும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.12.2015 இதழில் வெளி வந்துள்ளது)